புதன், 6 ஏப்ரல், 2011

வாங்க பேசலாம் வாங்க...

நேற்று என்பது முடிந்து போன ஒன்று…. நாளை என்பது நம் கையில் இல்லாத ஒன்று….. இன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒன்று…. ஆதலால் நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் நமக்கானதாய் எண்ணி நாம் விரும்பிய வண்ணம் ரசித்து கொண்டாடுவோம்….”

சமீபகாலங்களில் இப்படிப்பட்ட வாசகங்களும்….அறிவுரைகளும் அல்லது சிந்தனைகளும் நமக்குள் அதிகப்படியாக செலுத்தப்பட்டு வரப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த ‘CORPORATE’ சாமியர்களே இதனை அதிகம் வலியுறுத்தி வருபவர்களாக இருக்கிறார்கள்.

சரி! இதில் என்ன தவறு என்கிறீர்களா….?

இதைத்தான்….

”எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”.- என்கிறான் வான்புகழ் வள்ளுவன்.

இந்த வாசகத்தை மேம்போக்காக பார்த்தால் நம்மீது அக்கறை கொண்ட ஒருவரின் அன்பான வழிகாட்டுதலாகவே தோன்றும். இன்றைய இயந்திரமயமான வாழ்வில் நாம் நமக்காக செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவாகிப் போனபடியால் நமக்கு இப்படிப்பட்ட ஆலோசனைகள் மிகவும் கனிவான ஒன்றாகவே தெரியும். ஆனால் இது போன்ற கரிசனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ‘அரசியலை’ நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்வது என்னவென்றால்…..

”எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்……

முந்தைய வரலாறுகளை, தியாகங்களை, படிப்பினைகளை முடிந்தனவைகளாய் கொள்ளுங்கள்……

எதிர்கால சமூகத்தைப் பற்றியோ அல்லது சக மனிதனைப்பற்றியோ கவலைப்படாமல் உங்கள் தேவைகளையும்,ஆசைகளையும் பிரதானமாக்கிக் கொண்டு சுயநலமாய் வாழுங்கள்……”

இதைத்தான் இவர்கள் நம்மிடையே விதைக்க விளைகிறார்கள்.

சரி! இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் என்கிறீர்களா?

முதலில் இவர்கள் யார்? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித் புரிந்து கொண்டால் தான் இவர்களது பிரசங்கங்களுக்கு பின்னால் இருக்கும் இலாப நோக்கம் நமக்கு புரிய வரும்.

இந்த ‘CORPORATE’ சாமியார்கள் பெரும்பாலும் பெருமுதலாளிகளின் ’ஆசிபெற்ற’ அடிபொடிகளே! இந்த சாமியார்களின் ‘டிரஸ்ட்’ வரவுகள் எல்லாம் பெரும்பாலும் பினாமி வகையறாக்களே! அன்னிய செலாவணிகளை குறைத்தருளும் வல்லமை படைத்த “உண்டியல்”கள் இவர்கள்! இப்படிப்பட்ட மேன்மையான நோக்கத்திற்கு படைக்கப்பட்ட இந்த "தூதுவர்கள்" வேறு எப்படி பிரசங்கம் செய்வார்கள்…?

தோழர்களே!

’மனிதன்’ என்பவன் ஒரு சமூக மிருகமே! அவனால் இங்கு எதையும் சுயம்புவாய் உருவாக்கிட முடியாது. நாம் சகமனிதர்களை சார்ந்தே நம் வாழ்வை எதிர் கொண்டிட முடியும். ஆகவே மனித இனம் கூட்டாகவே வாழ்ந்தாக வேண்டும். அப்படி கூட்டமாய் வாழும் போது ‘சுயநலமாய்’ இருப்பது எப்படிச் சரியாகும்?

நமது மூதாதையர்களும், முந்தைய தலைமுறையினரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை நமக்கு பாடமாக்கியிருக்காவிட்டால் நமக்கு இந்த வாழ்க்கை சாத்தியமாய் ஆகியிருக்குமா? இத்தனை எளிதாய் நம்மால் இயற்கையையும் அதன் பேரிடர்களையும் எதிர்கொண்டிட முடிந்திருக்குமா? இத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்திருக்காவிட்டால் நம்மால் இத்தனை சுகமான வாழ்வை கொண்டிருக்க முடியுமா? இப்படியொரு சுதந்திர வாழ்வையாவது நாம் கண்டிருப்போமா?

அவர்களது அந்த தேடல்களுக்கும்….தியாகங்களுக்கும்….. பின்னால் ஒளிந்திருந்தது அவர்களது வருங்காலங்களான நம்மைப் பற்றிய கவலைகள் அல்லவா?


இப்படிப்பட்ட முந்தைய வரலாறுகளையும், சரித்திரங்களையும் முடிந்து போனவைகளாக எடுத்துக் கொள்வது எப்படிச் சரியாகும்?

இயற்கை என்பது நம் அனைவருக்கும் பொதுவானது அல்லவா?. அதிலிருந்து நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளும் போதோ அதனால் நமது சக மனிதனுக்கோ அல்லது எதிர்கால தலைமுறைகளுக்கோ எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையல்லவா?

அப்படி இருக்கும் போது நாளைய சந்ததிகளைப் பற்றி

கவலைப்படாமல் இன்றைய கணத்தை மட்டும் சுயநலமாய் அனுபவத்து வாழ்வது எப்படி நியாயமாகும்…?



2 கருத்துகள்:

hariharan சொன்னது…

சந்நியாசம் என்பது இந்து மதத்தில் வாழ்க்கை முறையில் கடைசியாக ஒவ்வொரு இந்துவும் பின்பற்றவேண்டியது. எந்த இந்து பின்பற்றுகிறார், அது ஒரு பக்கம்.

இந்த சாமியார்கள் எதிலும் பற்றில்லாமல் வாழ்வேண்டும், ஆனால் இவர்களிடம் கல்லூரிகள்,மருத்துவமனைகள், குளிர்சாதான மடங்கள், கார்கள் . எல்லாம் போலிகல் என்பதை விட மக்களை போதையில் ஆழ்த்துவதர்கும் பயமுறுத்துவதற்கும் இந்த சாமியார்களை ‘கார்ப்பரேடுகள்’ உருவாக்குகிறார்கள்.

இவர்களுக்கு விளம்பரமும் கிடைக்குது.

சாமக்கோடங்கி சொன்னது…

நியாயமான வாதம்.. அட்லீஸ்ட் ஒரு மரத்தையாவது நட்டு வெச்சுட்டு தான் போகணும்.. மனுசனா பொறந்தா..