வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சிம்ம சொப்பனம்...


எங்கள் வங்கியில் தற்போது ஊழியர்களுக்கு ”C.B.S” (core banking solution) என்ற மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைதான் சிம்மசொப்பனமாய் விளங்கிவருகிறது. ஆம்! தங்களது கிளையை CBS-ஆக மாற்ற ஆள் வருகிறார்கள் என்றால் ஏதோ காலரா ஊசிபோட ஊருக்குள் மருத்துவர்கள் வருகிறார்கள் என்பது போல் ஊழியர்கள் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்? நாங்கள் பார்க்காத CBS-ஆ? என இப்போது தோன்றலாம். ஆனால் கிராம வங்கி ஊழியர்களான எங்களுக்கோ இன்று மிகப்பெரும் பிரச்சனையே இதுதான். மாற்றங்கள் என்பதை படிப்படியாக எதிர்கொள்ளும் போது நாம் அதற்கு இயல்பாகவே பழக்கமாகிவிடலாம். ஆனால் மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படும் போது நாம் திகைத்துபோவதே இயற்கை. அப்படித்தான் ஆகிப்போனது தற்போது எங்களது நிலையும்.

எங்கள் வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற வங்கித்தலைவர் அவர்கள் எந்த சாமிக்கு கற்பூரம் ஏற்றி வாக்கு கொடுத்தாரோ தெரியவில்லை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் எங்கள் வங்கியின் அனைத்து கிளைகளையும் CBS-ஆக்கிவிட வேண்டும் என நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளார். சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகளும் இயந்திரமாய் சுழல தற்போது நூற்றிக்கும் மேற்பட்ட கிளைகள் CBS-ஆகிவிட்டது.

எல்லாமே வணிகமயமாகிப் போன இக்காலத்தில் பலம் நிறைந்த போட்டியாளர்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது யதார்த்தம்தான். ஆனால் அதற்குமுன் ஊழியர்களுக்கும் அத்தகைய புதிய தொழில்நுட்பம் குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியதும் நிர்வாகத்தின் கடமைதானே?

ஆனால் அதை பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி தான் எடுத்த முடிவுகளை நிறைவேற்றுவதே முக்கியம் என நாலுகால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது எங்கள் நிர்வாகம். இதன்விளைவாக தற்போது ஊழியர்கள் மட்டுமின்றி வங்கியின் வாடிக்கையாளர்களும் வெகுவாக அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கமான நடைமுறைகள் அடியோடு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர் சேவைகளில் காலதாமதம் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது.

பிள்ளைபேறுக்கு கூட பத்துமாதம் காத்திருப்பதை அநாவசியமாக கருதும் இந்தக் காலத்தில் வங்கிச் சேவையில் ஏற்படும் இது போன்ற காலதாமதங்களை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இதனால் அந்தந்த கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களின் மீதே வாடிக்கையாளர்கள் தங்களது கோபத்தையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ”உரலுக்கு ஒரு பக்கம்னா மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி” என்னும் சொலவடைக்கு இலக்கணமாய் எங்கள் நிலையாகிப் போனது.

எங்கள் வங்கியில் பெரும்பான்மையான கிளைகளில் ஒரு அலுவலர், ஒரு எழுத்தர் மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் ஆக மொத்தம் மூன்றே மூன்று நிரந்தர ஊழியர்கள் மட்டுமே! இதைவிட மிகவும் மோசமாக கடைநிலை ஊழியரே இல்லாத கிளைகளும் ஏராளம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் கிளைகளை CBS-ஆக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு அலுவலர்….ஒரு எழுத்தர்…. இவர்கள் இருவர் மட்டுமே மொத்த வர்த்தகத்தையும் இயக்க வேண்டும். அந்த இருவரில் எவருக்கேனும் உடல் நலக்குறைவோ அல்லது வேறு ஏதாவது அத்தியாவசிய காரணங்களுக்காக விடுப்பு தேவைப்பட்டால் அவர்களது நிலை திரிசங்கு சொர்க்கம்தான்!

பல கிளைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைவிட அங்கிருக்கும் கணினிகளின் எண்ணிக்கையே அதிகம். ஏனென்றால் கிளைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்துபோனாலோ அவர்களது இடத்திற்கு வேறு நபர்களை எங்கள் நிர்வாகம் பணிநியமனம் செய்யமாட்டார்கள். அடிமைகளைப் போல் வேலைபார்த்து வரும் தற்காலிகப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்யமாட்டார்கள். ஆனால் கிளையின் வர்த்தகத்தை மட்டும் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டும் அதனை மேலும் அதிகரிக்க வைக்கவும் செய்யவேண்டும். ஆளும் தரமாட்டார்கள்….அம்பும் தரமாட்டார்கள் ஆனால் போரில் மட்டும் வெற்றிவாகை சூடவேண்டும்.

இவற்றையெல்லாம் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பியது எங்கள் நிர்வாக குறைபாடுகளை சுட்டுக் காட்டுவதற்காக மட்டும் அல்ல. இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குமேயாகும். ஏன் என்றால் இது எங்கள் வங்கியில் நிலவும் நிலை மாத்திரம் அல்ல. இங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நிலவும் நிலையும் இதுதான். இது ஏதோ தற்செயலாக ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை அல்ல. இதற்கு பின்னால் பெரும் முதலாளிகளும் அவர்களது அடிவருடிகளான அதிகார அரசியல் விற்பன்னர்களும் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் அரசியல் ஒன்று உள்ளது.

ஆம்! தோழர்களே!

அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகரித்து போன வேலைப்பளு மனச்சிதைவை உண்டாக்கும் அதனால் ஒன்று ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோருவார்கள் அல்லது தமது வேலைப்பளுவினை குறைத்துக் கொள்ள தற்காலிகமாய் ஒருவரை குறைந்த வருவாய்க்கு பணி அமர்த்திக்கொள்வார்கள். ஊழியர்களை பொறுத்தவரை தங்களது பிரச்சனை தீர்ந்தால் போதும். ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் போராடிப் பெற்ற தமது தொழிற்சங்க உரிமைகளை அடுகு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று.

அதேநேரத்தில் வாடிக்கையாளர்களான பொதுமக்களையும் அரசு இயந்திரங்களை குறைகூற செய்து தனியார் நிறுவனங்களே மக்கள் சேவைக்கு உகந்தது என்னும் கருத்தையும் ஆளமாக அவர்களுக்குள் விதைக்கிறார்கள். இதனால் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு பொதுமக்களின் அதரவு கரங்கள் நீழுவதில்லை. இப்படித்தான் நம் கைகளைக் கொண்டே நமது கண்களை குத்திக் கொள்ளவைக்கிறது முதலாளித்துவ வர்க்கம்.

பெரும்முதலாளிகளின் வியாபாரபசிக்கு பொதுத்துறைகளை இரையாக்க அதிகாரவர்க்கத்திற்கு பெரும் இடஞ்சலாய் இருப்பது தொழிற்சங்கங்கள் மட்டுமே!

இன்று ஜனநாயகத்தின் கடைசி குரலாய் எஞ்சி இருப்பதும் தொழிற்சங்கங்கள் மட்டுமே! அதன் ஆணிவேரே அரசு மற்றும் பொதுத்துறைகளின் ஊழியர்கள் தான்.

அதனால் தொழிற்சங்கங்களை நீர்த்துப் போகவைக்கவும் செயலிழக்க செய்யவும் இது போன்ற நரித்தனங்களை செய்துவரும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டியது அவசியம். தொழிற்சங்க வாடையே படியாமல் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி அடிமைபடுத்தி விடலாம் என மனப்பால் குடிக்கும் மக்கள் விரோத கூட்டத்தை இனம் கண்டு போராட வேண்டியது நம் கடமை.


2 கருத்துகள்:

டக்கால்டி சொன்னது…

அருமையான விளக்கம்...சிந்திக்குமா அரசு? மாற்றம் கொண்டு வர நல்ல திட்டமிடுவார்களா மேலாளர்கள்?

Unknown சொன்னது…

ungalathu katturai miga sirappaga ullathu.........
vangiyin andrada nilamayai alzhuthamaga pathivu seithu ullathu.

SAR