சனி, 13 மார்ச், 2010

எனது பார்வை...


தோழர்களே! நான் தோழர்.தமிழச்செல்வனின் (தமிழ்வீதி) ”மகளிர் தினமும் இரண்டு கதைகளும் என்னும்” என்ற பதிவையும் வெண்ணிற இரவுகளின் ”நீதிக்கு தண்டனை” என்னும் பதிவையும் நேற்று படித்தேன். அவர்களிருவரும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்பு ஒன்றை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் எனது முரண்பாடை நான் தோழர்.தமிழ்செல்வனுக்கு பின்னூட்டமாக எழுதிவிட்டு அதை முடித்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது எனது ’அன்புமாமா’ காமராஜ் (அடர் கருப்பு) போன்றவர்களும் மேற்கூறிய அதே விமர்சனத்தையே கொண்டுள்ளார்கள் என்பதால் நான் எனது இந்தப் பதிவை அதன் தொடர் பதிவாக இடுகிறேன்.....இது எனது சொந்த கருத்துக்கள்.....இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்க்கப்படும் எனவும் நம்புகிறேன்....

முதலில் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வோம்......’சுஷ்மா’ இவள் உத்திரபிரதேச மாநிலத்தவள்.தற்போது மும்பையில் வசிக்கும் 25 வயது இளம் யுவதி. பிராமண சாதியம் பூசிக்கொண்ட குடும்பத்தவள். இவள் கேரளத்தின் ’கீழ்சாதியான’ ஈழவ சமூகத்தை சார்ந்த பிரபு என்கிற இளைஞனை காதலித்து இருக்கிறாள். அவர்களது அந்த அழகான காதல் கல்யாணமாகவும் மலர்ந்திருக்கிறது. இல்லறத்தை துவக்கிய அந்த இளம் பிஞ்சுகளின் வாழ்வை சாதியவெறி அழித்தொழித்திருக்கிறது. ஆம்! சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். அந்த நேரத்தில் கெட்டதிலும் ஒரு சிறு நல்லதாக கர்ப்பிணியான சுஷ்மா வெளியே சென்றிருந்திருக்கிறாள். அப்போது அந்த கொலைவெறி கும்பல் பிரபுவையும்...அவனது தந்தையையும், அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று குவித்து தங்களது சாதியவெறிக்கு இரையாக்கி இருக்கிறது.

அப்போது சுஷ்மா அந்த கொலையாளிகளை எதிர்த்து மும்பை கோர்ட்....மராட்டிய உயர்நீதி மன்றம்....என போராடி அவளது அண்ணனுக்கு தூக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறாள். அவன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறான். உச்சநீதி மன்றமுமோ அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கிறது. மேலும் தனது தீர்புக்கு வலு சேர்க்கும் விதமாக கீழ்கண்ட வற்றை காரணமாகவும் கூறுகிறது. அது......

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

”ஒரு குடும்பத்தில் ஒரு இளைய சகோதிரி வழக்கத்திற்கு மாறான ஒரு செய்கையில் ஈடுபட்டால்...அதாவது சாதிய மறுப்பு திருமணத்திலோ,அல்லது மதமறுப்பு திருமணத்திலோ அல்லது ரகசிய காதல் திருமணத்திலோ என்றால் இந்த சமூகம் அவளது மூத்த சகோதரனையே அத்தகைய செய்கையை தடுத்து நிறுத்தாதற்கான பொறுப்பாளியாக கருதும்.”

மேலும்:”அதாவது அவனே தனது செயல்களுக்கு முழுமுதற் பொறுப்பாளி என்றாலும் இந்த வழக்கை பொறுத்தவரை மரண தண்டனை என்பது சற்று அதிகபட்சமானது தான்....ஏனென்றால் சாதியம்,இனம்,மதம், போன்றவகளின் பிடிப்பு நியாயப்படுத்த முடியாத ஒன்றானாலும் அதன் தாக்கங்கள் தற்போதைய யதார்தமே...”என்கிறது.

இப்போது இந்த மேற்கண்ட தீர்பே பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது உயர் சாதிய மனோபாவத்திற்கு துணை போகும் தீர்ப்பு என்றும் பெண்ணியத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்க பட்டு வறுகிறது. மேலும் சுஷ்மா இந்த தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமான பதிவுகளே இங்கு பதியப்பட்டு வருகிறது.

தோழர்களே!

இங்கு ஒரு சில விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதி என்பது தனிமனிதனை போல் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட கூடாது. அது தான் ஆபத்தானது. இங்கு சுஷ்மா வேண்டுவது என்ன? தன் கணவனையும்,அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்ற தன் அண்ணனுக்கு மரண தண்டனை வேண்டுமென்பதே.

இதில் உச்சநீதிமன்றத்தின் பார்வை மிகச்சரியான ஒன்றுதான். அது திலீபின் மரண தண்டனையை 25ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறது. அவனை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யவோ அல்ல அவனது கொலைகளை நியாயப்படுத்தவோ செய்யவில்லை.ஆனால் அவனது செய்கைக்கான காரணிகளை சமூக யதார்த்தத்தோடு முன்வைத்து அலசியிருக்கிறது. எந்த ஒரு கொலைக்கும் கொலையாளியை விட அதற்கான காரணிகள் தான் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இங்கும் அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.... இப்படி ஒரு சாதிய கட்டமைப்பில் உருவாகும் இளைஞர்கள் வேறு எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியையும் இந்த கொலைகளுக்கான காரணிகளாக சாதிய கட்டமைப்பையும் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது. ஆகவே நாம் ரௌத்திரம் கொள்ள வேண்டியது இந்த சாதிய கட்டமைப்புகளுக்கு எதிராகத்தானேயொழிய இது போன்ற தனிநபர்களுக்கு எதிராக அல்ல.

ஒரு பேச்சுக்கு அப்படியே மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டால் இனிமேல் இது போன்ற திலீப்களை இந்த சாதிய சமூகம் உருவாக்காமல் விட்டு விடுமா? இதுதான் இது போன்ற கொலைகளுக்கு தீர்வா? கொலைக்கு கொலை தீர்வாகுமா? மரணம் என்பது ஒரு தண்டனையா?

பொதுவாக தண்டனைகள் என்பது தனிமனிதர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைய வேண்டும். அது தனிமனித வன்மத்தின் வடிகால்களாக அமைந்து விடக்கூடாது.

மரணதண்டனைகள் நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னும் அது தொடர்வது கொடுமையானது. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதே தவிற குறைந்து விடவில்லை. இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மரணதண்டனையின் மூலம் எந்த தாக்கத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தி குற்றங்களை குறைத்து விடமுடியாது என்பதே!

அதனால் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் ’மரணம்’ என்பது ஒரு தண்டனையாக தொடர்வதை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி! இது போன்ற நிகழ்வுகளுக்கு என்னதான் தீர்வு?

தனிமனிதர்களால் உருவானதே சமூகம். அதனால் தனிமனித மாற்றங்களால் தான் இதை சரி செய்ய முடியும்.ஆம்! நாம் நமது அடுத்த தலைமுறையையாவது சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது சாதிய அடையாளங்கள் நம்மோடு ஒழிந்து போட செய்ய வேண்டும்.

சரி இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம்....சாதிய அடையாளங்களை தொலைத்து விட்டால் நமது குழந்தைகள் பொதுப் பிரிவில் அல்லவா சேர்க்கப்படுவார்கள்? அப்படியென்றால் இடஒதுக்கீட்டு சலுகைகளை நம் குழந்தைகள் இழந்து விடுவார்களே?

ஆம்! உண்மைதான்.... பல நூறு ஆண்டுகளின் கழிவை சிறு சிறாய்ப்புகள் கூட இல்லாமல் இங்கு சரி செய்ய முடியாது. பல லட்சம் பேர் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் செய்த தியாகத்தின் விளைவுதான் இன்றைய நமது சுதந்திர சுவாசம்.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்... சாதிய அடையாளத்தை துடைத்து எறிவோருக்கு என்று புதிய....ஏன் எந்தப் பிரிவினருக்கும் இல்லாத அதிக சலுகைகளை கோரி இயக்கங்கள் நடத்தலாம். இதை முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சார்ந்த சாராத அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடலாம்.ஆனால் இதுவெல்லாம் ஒரே இரவில் நடைபெறக் கூடிய ஒன்றல்ல......என்பது யதார்த்தம்.

ஆனால் அதேநேரத்தில் இங்கு நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் மாபெரும் போராட்டங்களின் விளைவாகவே உருவாக்கப்பட்டவை (உதாரணம்: தொழிற் தாவா சட்டங்கள்).....என்பது சரித்திரம்.

நாம் ஒன்றிணைவோமா.....? புரிந்து கொள்வோமா....?

12 கருத்துகள்:

Sindhan R சொன்னது…

நண்பரே, நான் உங்களது கருத்துக்களையும், தமிழ்ச்செல்வன் அவர்களது கருத்துக்களையும் படித்தேன். மரணம் ஒரு தண்டனையா? என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பெரிய விவாதமே நடத்த வேண்டியிருக்கிறது.

ஆனால் இன்றளவில் மரண தண்டனை அமுலில் இருக்கும் பட்சத்தில், விவாதம் தீர்ப்பு குறித்ததே. அதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எப்படியான தொனியில் சொல்லப்பட்டிருக்கின்றன...?

நீதிபதி மரண தண்டனையை தவிற்பதற்கான நியாயமாக எதனை முன் வைக்கிறார்...?

சாதி உணர்வுகள் நடைமுறையில் இருப்பதால் ... அது சார்ந்த வன்முறையும் .. கொலையும் இயல்பானதாக ஏற்க முடியுமா?

younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair

இந்த வார்த்தைகளை கூர்ந்து படியுங்கள். சாதி மறுத்து திருமணம் செய்துகொண்டால், அதனை தடுக்காததற்கு அண்ணன் மீதும் குற்றம் சுமத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.

அண்ணன் மீது ஒரு பரிவான பார்வை காட்டும் நீதிபதி, உண்மையில் அந்த தங்கையின் நிலை குறித்தல்லவா பரிவு காட்டியிருக்க வேண்டும்.

--

மரண தண்டனை, சாதி ஒழிப்பு குறித்த தங்கள் கருத்துக்களுக்கு வேறு ஏதேனும் செய்தியை எடுத்து உதாரணம் காட்டியிருக்கலாம் .. என்று தோன்றுகிறது. நண்பரே.

Unknown சொன்னது…

அன்பிற்குரிய தோழர் சிந்தனுக்கு,
//சாதி உணர்வுகள் நடைமுறையில் இருப்பதால் ... அது சார்ந்த வன்முறையும் .. கொலையும் இயல்பானதாக ஏற்க முடியுமா?//
என்கிறீகள்..

வன்முறைகளுக்கு எந்த காலத்திலும் நாம் வக்காளத்து வாங்க முடியாது. ஆனால் வன்முறைகளுக்கான காரணிகளான சாதிய வேர்களை பிடுங்காமல் வெறும் கிளைக்கருவிகளான மனிதர்களை கொன்றழித்து விட்டால் சாதிய வன்முறைகள் ஓய்ந்து விடுமா? என்பதே என் கேள்வி.

இங்கு சாதியத்தையும்,மதங்களையும் இயல்பாக இந்த சமூகம் ஏற்கொண்டதால் அதன் விளைவுகளையும் நாம் உறுதியோடு எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சாதிய வேறுபடுகள் இங்கு ஒழியும் வரை நாம் அதற்கான இரைகள் தான்.

//அண்ணன் மீது ஒரு பரிவான பார்வை காட்டும் நீதிபதி, உண்மையில் அந்த தங்கையின் நிலை குறித்தல்லவா பரிவு காட்டியிருக்க வேண்டும்.// என்கிறீர்கள்.

இதில் நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

உச்சநீதிமன்றத்தில் தனக்கு உயர்நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யகோரி மேல் முறையீடு செய்கிறார் குற்றவாளியான திலீபன். அதனால் உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை மனுதாரரின் மேல் பரிவு காட்டப்படுவது இயல்பானதே. அதேவேளையில் உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் அவரது செய்கையை நியாயப்படுத்தவில்லை.மாறாக அவர் பரிவு காட்டப்பட்டதன் காரணத்தையே தனது தண்டனை குறைப்புக்கான விளக்கமாக உச்சநீதிமன்றம் பயன்படுத்துகிறது.

மேலும் சர்சைக்குரிய பகுதி ஒரு தீர்ப்பல்ல....அது ஒரு விளக்கம் மட்டுமே. உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைத் தான் பொதுவாக மற்ற வழக்குகளின் எடுத்துக்காட்டுகளாக வழக்கறிஞர்கள் தரப்பில் மேற்கோள் காட்டி எடுத்துரைப்பார்களேயொழிய அதன் விளக்க உரைகளை அல்ல.

மேலும் மரணதண்டனை குறித்தான விவாதங்களுக்கு நாள் குறித்து கொண்டு காத்திருக்க முடியாது. அது இது போன்ற சமயங்களில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

விவாதிக்கலாம்....காத்திருக்கிறேன்....

Sindhan R சொன்னது…

ஆனால் வன்முறைகளுக்கான காரணிகளான சாதிய வேர்களை பிடுங்காமல் வெறும் கிளைக்கருவிகளான மனிதர்களை கொன்றழித்து விட்டால் சாதிய வன்முறைகள் ஓய்ந்து விடுமா? என்பதே என் கேள்வி.//

கண்டிப்பாக முடியாது. ஆனால் சாதிய ஒழிப்புக்கான ஆயுதமே கலப்பு மணங்கள் தான். அத்தகைய கலப்பு மணம் புரிந்தவர் மீது விழுந்த தாக்குதல்தான் மேற்சொன்ன கொலை .. எனவே, மரண தண்டனை இன்று நடைமுறையிலிருக்கும் பட்சத்தில்.. ஒரு மரண தண்டனை பெற்ற குற்றவாளியின் மேல் முறையீடு குறித்த விளக்கம் .. அவர் மீது பரிவு காட்டுவதாக அமைவதை நீங்கள் சரி என்கிறீர்கள் ..

நானோ அது அந்த செயலுக்கு, (சாதியத்தை உயர்த்திப்பிடிக்கும் சமூக குணத்தின் மேல்).. உணர்ச்சி வயப்படக் கூடாத நீதி பதி காட்டிய பரிவு தவறு என்கிறேன் நான்.

நமது சாதியம் குறித்த விவாதத்தில் நான் சொல்ல வரும் கருத்து மேற் கூறியதே ...

எனவே ...

சாதியத்தையும்,மதங்களையும் இயல்பாக இந்த சமூகம் ஏற்கொண்டதால் அதன் விளைவுகளையும் நாம் உறுதியோடு எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். //

இந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடே...

மரண தண்டனையைப் பொருத்த மட்டிலும், அது சரியானதொரு தண்டனை என்று படவில்லை. குற்றவாளிகள் திருந்த வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அடுத்தவர் குற்றம் செய்யக் கூடாது என்ற நோக்கிலேயும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், ஒரு விசயத்தைக் கண்டு பயப்படுவதன் மூலம் ஒருவரை தவறு செய்யாமல் வைத்திருப்பதை விட .. தவறுகள் குறித்த விவாதங்களை எழுப்புவதே தண்டனைகளின் பலனாக இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில் மரண தண்டனையால் தற்காலிக வடிகாலாக மட்டுமே செயல்பட முடியும். அந்த தண்டனையின் உட்பொருள் “பலிக்கு பலி” என்பதாக, ஆரோக்கியமற்ற விவாதத்திற்கான வித்தாக அமைந்துவிடுகிறது.

எனவே, வேரு வடிவங்களை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய முதலாளித்துவ உலகின் மனோ இயல்பு அத்தகைய உயர்ந்த பக்குவத்தை அடைவது கேள்விக் குறியே.

அன்புடன்,
இரா.சிந்தன்.

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

மரண தண்டனை என்று ஒன்று இல்லை என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படி
இருக்கும் பட்சத்தில் அதுவும் ஜாதியின் பெயரால் கொலை செய்ததை மன்னிக்க முடியாது. இங்கே அம்பானி 1000 கோடி திருடினால் வெறும் 90 லட்சம் பைன், ஒரு பிக் பக்கெட் 10 ருபாய் திருடினால் மரண அடி கொடுக்கும் தேசம்...............!!!!ஒருவன் கற்பழிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அவன் கற்பழிப்பது ஒரு வடிக்காலாக தான் அவனுக்கு காமம் கிடைக்கவில்லை என்று நியாய படுத்த முடியுமா ...........................?????

தவறுகளுக்கு காரணி இங்கே கோபம் மட்டும் அல்ல அதற்க்கு உள்ளே இருக்கும் ஜாதி வெறி .......?????????
அது மிக தவறு.

Prabhakaran சொன்னது…

தோழரே மிகத் தெளிவாக கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். உண்மையை சொல்லப்போனால், உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை. நமது சமூகம் சாதி கட்டமைப்புகளில் தான் இன்னும் உள்ளது.
தன் தங்கை ஒருவனோடு ஓடிவிட்டாள் என்ற நிலை வரும்போது, எந்த ஒரு அண்ணணுக்கும் கோபம் வருவது இயல்பு தான். அதிலும் சாதி மாறி சென்றுவிட்டாள் என்றால் சொல்லவா வேண்டும். அவள் தனது காதலுக்காக, சுகத்துக்காக ஓடி விட்டாள்.
அந்த நேரத்தில், அவளுடைய அண்ணணின் நிலையை யோசித்து பாருங்கள்.
அவள் ஓடிப்போன தகவலை அறிந்ததும் அந்த அண்ணன் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருப்பான். மரண தண்டனையை விட மிக கொடூரமான வலியை, வேதனையை அடைந்திருப்பான்.
குற்றம் செய்தவனை விட அதைச் செய்ய தூண்டியவனுக்கே தண்டனை அதிகம். எனவே, மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றால் அந்த தங்கைக்கு தான் கொடுக்க வேண்டும். நியாயப்படி அவனை விடுதலை செய்வதுதான் மிகச் சரியானது.

Unknown சொன்னது…

அன்பிற்கினிய சிந்தன்,

ஒரு நிறைவான விவாதத்திற்கு வழி செய்ததற்கு முதலில் உங்களுக்கு எனது நன்றிகள்....

//எனவே, வேரு வடிவங்களை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய முதலாளித்துவ உலகின் மனோ இயல்பு அத்தகைய உயர்ந்த பக்குவத்தை அடைவது கேள்விக் குறியே.//என்கிறீர்கள்

ஆம்! அது போன்ற மனோநிலைகள் இயல்பாக அமைந்துவிடாது. ஆனால் அதற்கான முயற்சிகளில் நாம் இறங்காமல் இருக்கமுடியாது....

வெண்ணிற இரவுகளுக்கு,

முதலில் உங்களது வருகைக்கு என் நன்றிகள்...

//மரண தண்டனை என்று ஒன்று இல்லை என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அப்படி
இருக்கும் பட்சத்தில் அதுவும் ஜாதியின் பெயரால் கொலை செய்ததை மன்னிக்க முடியாது.//

தோழா...இது போன்ற நிகழ்வுகளை கேட்கும் போதும் பார்க்கும் போதும் நமக்குள் ரௌத்திரம் வருவது இயல்பானதே!

சாதியின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை நம் போன்றவர்களால் சகித்து கொள்ள முடியாமல் இருப்பதும்.....அதற்கெதிராக அணிதிரள நினைப்பதும் ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் நமக்கான நியாயமே பொது நியாயம் ஆகிவிடாது என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பொது நியாயம் என்பது காலத்திற்குகாலம் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டு கொண்டே தான் இருக்கும். நாம் இந்த சமூகத்தில் தான் வாழ்கிறோம். இதன் இயல்புகள் நமக்கு புதிதல்ல. நாம் இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சனாதானங்களுக்கு எதிராக புதிய மாறுதல்களை புகுத்தும் போது நமக்கான எதிர்வினைகளை இந்த சமூகம் தந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் நாம் அழித்தொழிக்க கிளம்பி விடமுடியாது.

அந்த எதிர்வினைகளை ஏற்றுக்கொண்டே தான் நாம் நமது பாதையில் முன்னேற வேண்டும்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கசடுகளை சிறு சிராய்ப்புகள் கூட இல்லாமல் களைந்து விட முடியாது.

பத்து ரூபாய் திருடிய திருடனிடம் உங்களுக்கு ஏன் பரிவு வருகிறது?

அவனது இந்த நிலைக்கு சுரண்டிப்பிழைக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் காரணம் என்று புரிவதால் தானே?

அப்படி இருக்கும் போது பல ஆயிரம் வருடங்களாக இந்த சமூகத்தில் ஊரிப்போன சாதியத்தின் தாக்கத்தால் சுயபுத்தியை இழந்துவிட்ட ஒருவனின் மேல் ஏன் குறைந்த பட்ச மனிதாபிமானத்தை கூட காட்ட மறுக்கிறீர்கள்?

அன்பிற்கினய பிரபாகரன்...

//அவள் தனது காதலுக்காக, சுகத்துக்காக ஓடி விட்டாள்.
அந்த நேரத்தில், அவளுடைய அண்ணணின் நிலையை யோசித்து பாருங்கள்.
அவள் ஓடிப்போன தகவலை அறிந்ததும் அந்த அண்ணன் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருப்பான். மரண தண்டனையை விட மிக கொடூரமான வலியை, வேதனையை அடைந்திருப்பான்.
குற்றம் செய்தவனை விட அதைச் செய்ய தூண்டியவனுக்கே தண்டனை அதிகம். எனவே, மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றால் அந்த தங்கைக்கு தான் கொடுக்க வேண்டும். நியாயப்படி அவனை விடுதலை செய்வதுதான் மிகச் சரியானது.//

என்ன சொல்ல வருகிறீர்கள்? இவ்வளவு தான் உங்களால் காதலை கொச்சை படுத்த முடிந்ததா? இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்களை குடும்பத்தின் மரியாதை சின்னங்களாக மட்டுமே தான் பார்ப்பீர்கள்? அவளும் ஒரு உயிர் என்று உங்களை போன்றவர்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? உணர்வுகள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது என முடிவு செய்துவிட்டீர்களா? அவளுக்கான உலகை...அவளுக்கான மனிதர்களை அவள் தேர்வு செய்வது அத்தனை தவறானதா? சுதந்திரம் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களது உலகம் எப்போதும் இருட்டறையாக மட்டும் தான் இருக்க வேண்டுமா?

காலங்கள் மாறுகிறது...கவனமாய் வார்த்தைகளை சிந்துங்கள்...உங்களது சமூகம் சார்ந்த பார்வையில் அதிகப்படியான கோளாறுகள் உள்ளது. ஊடகங்களும்,உங்களை சுற்றி இருப்பவர்களும் அதிகம் உங்களை குழப்பி உள்ளது புரிகிறது.இதற்கு மருந்து....முற்போக்கான புத்தகங்களை படியுங்கள்....சரியான மனிதர்களை தேர்வு செய்து பழகுங்கள்....தமிழ் சினிமாக்களை அதிகம் பார்க்காதீர்கள்...உலகம் என்பது நாம் பள்ளிக்கூடங்களில் பார்த்த கையடக்க பந்தல்ல என்பது அப்போது புரியும்.

Joe சொன்னது…

அருமையான, ஆழமான இடுகை.

"யதார்தமே, தீர்பே, சகோதிரி, வறுகிறது, தவிற" என எழுத்துப் பிழைகள் அதிகம் தோழரே! அவசர கதியில் நீண்ட கட்டுரை எழுதியதன் விளைவோ? தயவு செய்து சரி செய்யவும்.

ஏற்கனவே நான் ஒரு இடுகையில் சொன்னது போல, மரண தண்டனை அளிப்பது தவறானது. ஒரு மனிதனை கொல்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது.

பின்னூட்டங்களில் பகிர்ந்து கொண்ட கருத்துகள், இடுகையை விட சுவாரஸ்யமாக இருந்தது.

Unknown சொன்னது…

ஜோ! உங்கள் வருகைக்கும்,ஆலோசனைகளுக்கும் நன்றி...அவசரமாக இடுகைகள் இடுவதால் இது போன்ற பிழைகள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது....மீண்டும் மீண்டும் சொல்வதாய் கொள்ள வேண்டாம்...திருத்திக்கொள்கிறேன்.

காமராஜ் சொன்னது…

அன்பு மாப்பிள்ளை இது இன்று வெளியாகியுள்ள உச்சநீதி மன்றத்தீர்ப்பு.இது யாருக்கு, எந்த இந்தியர்களுக்கு. அண்ணன் கள் இல்லாத தங்கைகளுக்கு மட்டும் இது பொருந்துமா என்கிற
விளக்கங்கள் இல்லை.தெளிவானால் உன் கட்டுரையில் இருக்கும் சின்ன கேள்விக்கும் விடை இருக்கும்.

“When two adult people want to live together what is the offence. Does it amount to an offence? Living together is not an offence. It cannot be an offence,” said a bench comprising Chief Justice K G Balakrishnan, Justice Deepak Verma and Justice B S Chauhan.

neyvelivichu.blogspot.com சொன்னது…

உங்கள் கருத்து முதல் பார்வையில் சரியாகத் தோன்றினாலும் குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் கருணை மனுவின் அடிப்படையிலோ அல்லது ஒரு தலைவரின் பிறந்த தின கொண்டட்டதிர்காகவோ விடுதலை செய்யப்படுவது அரிதானதல்லவே ...

மேலும் குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப் படாத வரை தண்டனை களின் பயம் குற்றம் இழைப்பவருக்கு இல்லாமல் போகலாம்.

அன்புடன் விச்சு

Unknown சொன்னது…

அன்பிற்கினிய விச்சு...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்துரைக்கும் முதலில் நன்றி...

என்ன சொல்ல வருகிறீர்கள்?

குற்றங்கள் தண்டனைகள் கொடுப்பதன் மூலமாக குறைந்து விடும் என்கிறீர்களா?

எனக்கு தெரிந்து பலநூறு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுப்பது மனிதகுல வரலாற்றில் இருந்து வரும் வழக்கம்.அப்படியிருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை அளவு குறைந்து விட்டதாய் எனக்கு தெரியவில்லை.மாறாக குற்றங்களின் எண்ணிக்கை கூடிப்போய்தான் உள்ளது. கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் அரபு நாடுகளில் கூட குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. இதற்கான ஆதாரங்களை கூகுள் மூலம் இணையத்திலே கூட அதிகம் பார்க்கலாம்.

குற்றங்களுக்கான வேர்களை கண்டறிந்து அதை களையெடுக்கும் வரை குற்றங்கள் குறையாது.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in