வியாழன், 11 மார்ச், 2010

தோழர் ஆனேன்...6

இது ஒரு தொடர் பதிவு.....

புத்தருக்கு ஞானம் தந்த போதிமரத்தின் வேர்கள் பாய்ந்த மண்ணிற்கு பயணிக்கிறோம் என்ற நினைப்பே பெரும் ஆவலை எங்களுக்குள் தூண்டுவதாய் இருந்தது. பயணக் களைப்பையும் மீறி ஒருவித ஆர்வத்தோடு பயணித்தோம். நாங்கள் பயணித்த பாதையின் இருபுறங்களிலும் பச்சைபசேல் என இருந்த வயல்வெளிகள் அந்த மக்களின் உழைப்பை எங்களுக்கு சொல்லியது. ஆனால் அத்தகைய அளப்பெரிய உழைப்பிற்கு சொந்தகாரர்களான மக்களின் வாழ்நிலையோ சூன்யம் நிறைந்து இருப்பதை எங்களால் காண முடிந்தது.

கட்டுகட்டாய் கடைவிரிக்கப்பட்டிருந்த பற்துலக்கும் குச்சிகளும்.....ஐந்து ரூபாய் கூலிக்கு மைல் கணக்காய் கை ரிக்‌ஷா இழுக்க முண்டியடித்த மனிதர்களும்....மின்சாரக் கம்பிகளின் நிழல்களை கூட கண்டிராத தெருக்களும்.....களிமண்ணை தவிற வேறு எதையும் கொண்டிராத குடிசை சுவர்களும்....என நாங்கள் பார்த்ததெல்லாம் நவீன நாகரீகத்திற்கு குறைந்தது ஒரு அரை நூற்றாண்டு காலம் பின் தங்கிய அவலக் கோலமே!

நாங்கள் மாநாட்டு பந்தலுக்கு சென்று இறங்கிய போது எங்களது உற்சாகமும்,ஆவலும் வடிந்து விட்டிருந்தது. அந்த மக்களின் வாழ்நிலை குறித்த ஆதங்கம் மட்டுமே எங்களிடையே அப்போது பேசு பொருளாய் இருந்தது. மாநாட்டு பந்தலருகே புதிதாய் கட்டப்பட்டிருந்த ஒரு பௌத்த மடாலயத்தில் தான் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அது ஒரு கல்லூரி விடுதியை போல் இருந்தது. அங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த வந்திருந்த தோழர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் குறைந்தது இருபது பேர் தங்கும் அளவிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கவைக்கப்பட்டோம்.

மாநாட்டிற்கு முந்தைய நாளே சென்றுவிட்டோம் என்பதால் கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.....

புத்தகயாவிற்கு இருவித தோற்றங்கள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. அது போதி மரத்தை காண வரும் வெளிநாட்டினருக்கும்....வெளிமாநிலத்தவருக்கும்... சகலவித வசதிகளும் கொண்ட ஒரு சுற்றுலா தளமாக இயங்கிய அதேவேளையில் சொந்த மக்களை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வஞ்சிக்கவும் செய்வதாய் இருந்தது. உழைக்கும் வர்கத்து பிரதிநிதிகளாக சென்றிருந்த நாங்களும் வழக்கம் போல் புலம்பியபடி ஊர் சுற்றலானோம்.

ஆசையே அழிவிற்கு காரணம் என்ற ஞானத்தை புத்தருக்கு தந்த போதியின் ஒரு இலையாவது கிடைக்காதா என ஆசையோடு போதியை சுற்றி அலைந்தோம். போதியை சுற்றவரும் மக்களை சுற்றி வியாபாரம் செய்தபடி ஒரு பெருங்கூட்டம் அலைந்தது. இப்படி அலையும் எல்லாவற்றையும் மௌனப் புன்னையோடு புத்தரும் பார்த்துக்கொண்டிருந்தார்.(பாவம்! அவரால் வேறு என்ன செய்ய முடியும்?!)

புத்தகயாவில் இருந்து....ராஜ்கிர்...நாலந்தா என எங்கள் சுற்றுலா தொடர்ந்தது. ராஜ்கிரில் அழகான மலை மீது கட்டப்பட்ட பௌத்த ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்திற்கு ரோப் காரில் தான் செல்ல வேண்டி இருந்தது. மிகவும் விறுவிறுப்பான பயணம் அது. ராஜ்கிரில் சுற்றி அலைந்து விட்டு நாலந்தா சென்றோம்.....

நாலந்தா பல்கலைகழகம் 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமையும்,பெருமையும் கொண்டது. அங்கு ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்திருக்கிறார்கள்..... இரண்டாயிரத்திற்கும் மேலான ஆசிரியர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்....கணிதம், வானசாஸ்திரம்,இலக்கணம்,தத்துவம்,வேத சாஸ்திரங்கள் என பல பாடப்பிரிவுகள் இருந்துள்ளன.குப்த அரசர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அந்த பல்கலைகழகம் கி.பி.1200களின் போது கில்ஜி அரசர்களின் படையெடுப்பினால் அழிவை சந்தித்துள்ளது. அங்கிருந்த மாபெரும் நூலகங்களையும் தீக்கிரையாக்கி உள்ளனர். இடிந்து போன அந்த பல்கலைகழகத்தின் எச்சங்களை காணும் போதே அதன் கட்டுமானத்தின் பிரம்மாண்டம் தெரிந்தது.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் கில்ஜி அரசர்களின் வாரிசுகளைப் போல் இன்றும் பீகாரின் அதிகார வர்க்கம் செயல்படுவது கண்கூடாய் தெரிந்தது. ஏனென்றால் புத்தகயாவிலிருந்து நாங்கள் பயணித்த நாலந்தா வரை கல்விக்கூடத்திற்கான சுவடுகளே எங்கள் கண்ணில் படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மண்வெறியாலும்,அதிகார வெறியாலும் தரைமட்டமாக்கப்பட்ட மக்களின் கல்விக்கு இன்று வரையிலும் அங்கு தீர்வு காணப்பட்டதாய் தெரியவில்லை.மொத்ததில் போதியை அனுமதித்த ஆளும் வர்க்கம் மக்களிடையே ஞானத்தை மட்டுமே வளர அனுமதிக்கவில்லை என புரிந்தது.

அப்படியே நேரம் காலம் மறந்து சுற்றி கொண்டிருந்த எங்களை மாலை 5.00மணி நெருங்கியவுடன் எங்களது இடத்திற்கு கிளம்ப சொல்லி வேன் டிரைவர் படபடத்தார். அவரை கொஞ்சம் நிதானப்படுத்தி விசாரித்த போது அவர் கூறிய விஷயம் எங்களுக்கு படபடப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.

அதற்கு காரணம்......

மாலை 6.00மணிக்கு மேல் அங்கு உலவுவது பாதுகாப்பானது இல்லை என்றும்....எந்த நேரத்திலும் எந்த முனையில் இருந்தும் தாக்குதலுக்கான ஆபத்து இருப்பதாக சொல்வதாய் எங்கள் அனைவருக்கும் இருந்த இந்தி புலமையை வைத்து புரிந்து கொண்டோம்.. ஆதனால் எதற்கு வம்பு என வண்டியில் ஏறி தவ்வி எங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தோம்.

அது ஒரு மூன்று நாள் மாநாடு. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் எங்களது அகில இந்திய சங்கத்தின் கிராம வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளாகவும், பார்வையாளர்களாகவும் வந்திருந்தார்கள். அப்படி ஒரு மாபெரும் மனித சங்கமத்தை நான் அதுவரை கண்டதில்லை.

ஆனால் அத்தனை பெரிய மகாசமுத்திரமே ஒரு ஒற்றை மனிதனின் விரலசைவுக்கு கட்டுபட்டது. அப்படியொரு கம்பீரமும்,மிடுக்கும் அவரிடம் மிளிர்ந்தது....எழுபதை கடந்த வயது ஆனால் தோல்களின் சுருக்கத்தையும் மீறி வசீகரித்தார்.....எப்போதும் சுறுசுறுப்புடனும்,பரபரப்பாகவும் காணப்பட்டார். அவர் பார்த்தவைகளில் எல்லாம் அவரால் திருத்தங்கள் சொல்ல முடிந்தது. அதேநேரத்தில் அதை உறுதி கலந்த கனிவுடன் கூறி நடைமுறை படுத்துவதையும் காண முடிந்தது.

தயவு தாட்சண்யம் இல்லாமல் அவரால் விமர்சனங்கள் செய்ய முடிந்தது. அதேநேரம் யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு அதை இயல்பாக கடந்து செல்லவும் முடிந்தது. அவரை அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் ”தாதா...தாதா...”என அன்போடு அழைக்க கண்டேன். இதையெல்லாம் பார்த்த நான் அப்போது எனக்கிருந்த உலக ஞானத்தை கொண்டு அவரை ஏதோ பீகாரின் ’வேலுநாயக்கர்’ என நினைத்துக் கொண்டு இருக்கையில்... என்னை அவரிடம் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார்கள். அப்போது தான் தெரிந்தது அவர்தான் எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர்... திலிப்குமார் முகர்ஜிஎன்று.முதல் நாள் பெண்கள் மாநாட்டுடன் எங்களது 10ஆவது முப்பெரும் அகில இந்திய மாநாடு கோலாகலமாய் துவங்கியது.இரண்டாம் நாள் பிரிதிநிதிகளின் மாநாடு....அதன் பின்பு பொதுச்செயலாளர் அறிக்கை....அதன் மீதான காரசார விவாதங்கள் என பகல் பொழுதில் அனல் பறந்த மாநாட்டு பந்தல் இரவுகளில் கலைநிகழ்ச்சிகளால் களைகட்டி கலகலப்பானது. மூன்றாம் நாள் பொதுச்செயலாளரின் பதில்களும்...தீர்மானங்களும்.....அதனை தொடர்ந்து புதிய அகில இந்திய செயற்குழுவும்,பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒரு பிரம்மாண்டமான கனைவைப் போல் இருந்தது அந்த மாநாடு.

வெவ்வேறு மாநிலங்கள்....வெவ்வேறு மொழிகள்...வெவ்வேறு கலாசாரம் என வேறுபாடுகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் AIRRBEA.....என்றவுடன் எல்லோரும் ஒருமித்த உணர்வுடன் ஒரே குரலாய் ஜிந்தா...ஆஆஆஆபாத்.....!!!! என ஆர்பரித்த போது தான் எனக்கு புரிந்தது உழைக்கும் வர்கத்திற்கு ஜாதியில்லை....மதமில்லை...மொழியில்லை....என்று.

அந்த மாநாடும் அதற்கான பயணமும் என்னை வெகுவாக மாற்றியிருந்தது. அந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அத்தனை காலமாய் நான் ஒரு சிறு கூட்டிற்குள் என்னை சிறைவைத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ உலகத்திலே அதிகமான சுமைகளுக்கு நான் தான் சொந்தக்காரன் என்ற எனது எண்ணம் எவ்வளவு அபத்தமானது எனவும் புரிந்து கொள்ள துவங்கியிருந்தேன். அந்த பயணம் மற்றுமல்ல சில விலைமதிக்க முடியாத உறவுகளையும் எனக்கு பெற்று தந்தது.

அது.....

----தொடரும்.......

3 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

தொடருங்கள் சுவாரசியமாக

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடருங்கள்...

hariharan சொன்னது…

உங்கள் “தோழர் ஆனேன்” பயணம் நன்றாக செல்கிறது.. தொடரட்டும்.