இது ஒரு தொடர் பதிவு.....
நாட்கள் சென்றன....நான் இரெகுநாதபுரத்திலிருந்து ஓட்டப்பிடாரம் கிளைக்கு எமது சங்கத்தின் பரிந்துரையின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்டேன். ஓட்டப்பிடாரம்....இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் விளைநிலமாக விளங்கிய வீரபூமி. பரங்கியர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய வ.உ.சி அவதரித்த புண்ணிய பூமி. ஆனால் அதுவெல்லாம் அப்போது எனக்கு பெரிதாய் தெரியவில்லை.
எனக்குள் அந்த கிளை சம்பந்தமான ஆர்வத்தை தூண்டிய ஒரே விஷயம் அது என் தாய் மேலாளராக பணிபுரிந்த கிளை என்பதே! எத்தனை பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் வாய்க்கும் என தெரியவில்லை.ஆனால் எனக்கு கிட்டியது. அவள் அமர்ந்த இருக்கைகளில் நான் அமரப்போகிறேன்..... அவள் பார்த்து பழகிய மனிதர்களிடம் நானும் பழகப்போகிறேன்...... என்பன போன்ற பல எண்ணங்கள் எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது.
அங்கு நான் பணிபுரிந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை. என்னை பொறுத்தவரை அது வெறும் அலுவலகம் அல்ல. நான் புடம் போடப்பட்ட பட்டறை அது. அப்போது அங்கு ஜோசப் ரூபன் விக்டோரியா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு எங்கள் வங்கியில் கறார் பேர்வழி எனப் பெயர். யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுத்து போகத் தெரியாதவர்.
அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டேன்.ஆனால் நானோ எனக்கு அறிவுரை சொல்லியவர்களிடம் நானா? அவரா? என பார்த்து விடுவேன் என சூளுரைத்து வந்திருந்தேன். ஓரிரு நாட்கள் இயல்பாக சென்றது. ஒரு நாள் அவசர விடுப்பொன்று எடுத்தேன். எனது அந்த விடுப்பையும் என் வீட்டில் வேலை செய்த அக்காவின் மூலம் மேலாளரிடம் சொல்ல சொல்லிவிட்டு வெளியூருக்கு பயணமானேன்.
மறுநாள் நான் பணிக்கு திரும்பியவுடன் அவர் எனது முறையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக என்னை கடிந்து கொண்டார். நான் செய்தது தவறு எனப் புரிந்தாலும் அவரை எப்படியாவது வேறு வழியில் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காத வண்ணம் அவர் நடந்து கொண்டதோடு என்னை மெல்ல மெல்ல வாஞ்சையான வார்த்தைகளால் நெருங்கவும் செய்தார்.
கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் இருந்த வன்மம் குறைந்து நான் அவரை புரிந்து கொள்ள துவங்கினேன்....
எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராய் இல்லாதவர். ஆனால் ஆழமான தொழிற்சங்க பார்வையும்,சமூகத்தின் மேலான அக்கறையும் அவரிடம் நான் கண்டதுண்டு. தனக்கு சரி என்று பட்டால் தயங்காமல் பாராட்டவும், தனக்கு தவறு எனப்பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டிக்காட்டுவார். அதேசமயம் மிகவும் மென்மையான மறுபக்கம் கொண்டவர். இசையின் மேல் அளப்பறிய காதலும் ,ஞானமும் அவருக்கு உண்டு. அது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
நான் அவரிடம் பல விஷயங்கள் குறித்து கருத்தாடி இருக்கிறேன். அவரும் சளைக்காமல் எனக்கு பதிலளித்து கொண்டு இருப்பார். எங்கள் சர்வீஸ் ஏரியாவில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குழு கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்ல ஆரம்பித்தார். இந்த சமூகத்தின் கடைகோடி மக்களையும் அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள இது போன்ற கூட்டங்கள் எனக்கு பெரிதும் உதவியது. வங்கி அதிகாரிகள் என்பதால் அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையை பார்த்த போது என் பணிமீதான காதலும்,கர்வமும் எனக்குள் அதிகரித்தது.
வங்கித்துறை குறித்த தெளிவான பார்வை அவருக்கு உண்டு. எந்த ஒரு வேலையையும் அதன் அர்த்தம் புரிந்து செய்திட வேண்டுமென்பார். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் மேலாளர்--எழுத்தர் என்பதையும் தாண்டி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவே எங்களுக்குள் இருந்ததாய்.....இருப்பதாய்....உணர்கிறேன்.
இப்படியாக சென்று கொண்டிருந்த எனது அன்றாட வாழ்க்கையில் என் வாழ்வை திசைமாற்றிய அந்த பயணத்திற்கான அழைப்பு எங்கள் சங்கத்திலிருந்து வந்தது.......
தொடரும்..........
1 கருத்து:
தங்களின் நல்ல பக்கங்களை விரித்துக்காட்ட யாருக்கும் லேசில் வாய்ப்பு ஏற்படுவதில்லை.பொது மனிதர்கள் அங்கிருந்துதான் வித்தியாசமாகிறார்கள். இசை எல்லா கடினத்தையும் கரைக்கும் வல்லமை கொண்டது. இல்லையெனில் வாழ்தல் பயனற்றுப்போகும். இந்தப்பகுதி மிக நுட்பமாக வந்திருக்கிறது மாப்பிள்ளை.
நெகிழ்வும் அர்த்தமும் இன்னும் வலுச்சேர்க்கிறது.
கருத்துரையிடுக