வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இனி இவர்கள்...நம் தோழர்கள்...


அவர்களிடம் நாம் ஜாதி,மதம்,இனம்,மொழி எதையும் பார்பதில்லை.....

ஏன்? அவர்களை நாம் உயர்திணையாக கூட பார்ப்பதில்லை.....

அஃறிணைகளிடம் காட்டும் பரிவையும்,அக்கறையையும் கூட அவர்களுக்கு நாம் வழங்கியதில்லை.....

அவர்களை நமது கேலிப் பேச்சுக்களைத் தவிற வேறு எதுவும் தீண்டுவது இல்லை......

குடும்ப உறவுகள் துவங்கி.... நண்பர்கள்,சுற்றம் ,சமூகம் என திரும்பிய பக்கமெல்லாம் இவர்கள் எதிர் கொள்வது எல்லாம் கேலியும்,கிண்டலும், நிராகரிப்புமே !

வேற்றுமையில் ஒற்றுமை என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஜனநாயகத்தின் எந்தக் கதவுகளையும் அவர்களுக்காக நாம் இன்று வரை மறந்தும் கூட திறந்து விடவில்லை.....

இத்தனைக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குற்றம் என்று கூறும் எதையும் அவர்கள் செய்துவிடவில்லை.மனிதர்களாக பிறந்ததை தவிற......

பின் ஏன் இவர்கள் திரும்பிய திசையெல்லாம் நிராகரிக்கப்பை சந்திக்கிறார்கள்...?

நிராகரிப்புக்கு நிகரான வலியை மரணம் கூட மனிதனுக்கு தருவதில்லை.ஆனால் ஏன் இவர்களுக்கு இந்த நிலை...? யார் இவர்கள்...?

மிகச் சமீபத்தில் இந்த சமூகத்தால் திருநங்கை என்னும் ‘திரு’ நாமம் சூட்டப்பட்டு ஆதரவற்ற அபலைகளாக வாழும் எம் தோழர்களே..இவர்கள்

நமது திசுள்களில்(CELLS) இருபத்தி மூன்று ஜோடி நிறப்புரிகள்(CHROMOSOMES) இருக்கும்.அதில் உள்ள இருபத்திமூன்றாம் ஜோடி நிறப்புரியே நமது பாலினத்தை முடிவு செய்யும்.அதாவது XX-என்று இருந்தால் அது பெண்.XY-என்று இருந்தால் அது ஆண்.ஆனால் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு நிறப்புரிகள் கருவின் வளர்ச்சி நிலையின்(MEIOSIS) போது சரியாக பிரிக்கப் படாமல் மிக அதிக அளவிலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பிரிக்கப்படுவது உண்டு.இதை NON-DISJUNCTION என்று சொல்வார்கள்.அதன் விளைவாக DOWN SYNDROME,PATAU SYNDROME,EDWARD SYNDROME,KLINEFELTER SYNDROME,TURNER SYNDROME,TRIPLE X SYNDROME,XYY SYNDOME போன்ற பலவகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

X அல்லது Y நிறப்புரிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது தான் அவர்களது உடல் அளவிலான மாற்றங்களுக்கு காரணம்.இது ஒரு வகை பாலின ஊனம் மட்டுமே.ஆனால் இதற்காக அவர்களை ஏதோ பெரிய குற்றம் செய்தவர்களை போல நடத்துவது கொடூரம்.இந்த அநீதி அவர்களுக்கு நேற்று இன்று இழைக்கப்பட்டதல்ல.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் புரியும் நாம் இவர்களை எவ்வளவு இழிவாகவும்,கேவலமாகவும் பதிவு செய்தும் நடத்தியும் வந்துள்ளோம் என.....

நிப்ரூ(NIBRU) என்னும் திருநங்கையை நின்மா(NINMAH) என்னும் பெண் தெய்வம் களிமண்ணை கையில் பிடித்து உருவாக்கியதாகவும் அவன் பிறப்புறுப்பு எதுவும் இல்லாது இருந்ததால் அவனை அரசனுக்கு தலைமை அடிமையாக நியமித்ததாகவும் ஒரு புராணக்கதை சுமேரியன் நாகரீகத்தில் நம்பப்பட்டது.அதாவது சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

அதேபோல் மகாபரதத்திலும் ஒரு கதையுண்டு....பாண்டு மைந்தர்களில் ஒருவரான அர்ஜூனனால் கவரப்பட்டு கர்பமாகிறாள் வேடுவப்பெண்ணான நாகக்கன்னி.அதன் விளைவாக அவளுக்கும்,அர்ஜூனனுக்கும் அரவான் பிறக்கிறான்.

குருஷேத்திர யுத்ததில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணங்களும் பொருந்திய ஒருவனை மனிதப்பலியாக கொடுக்க வேண்டும் என அரூடம் கூறப்படுகிறது.

அதற்கிணங்க சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்தியவர்களாக மூவர் முன்னிறுத்த படுகிறார்கள்.அவர்கள் அர்ஜூனன்,கிருஷ்ணர் மற்றும் அரவான்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மகன் செத்தாலும் பரவாயில்லை தான் வென்றால் போதும் என அர்ஜுனன் ஒதுங்கி கொள்கிறான்.முக்காலும் உணர்ந்த... எல்லாவற்றையும் தீர்மானம் செய்ய கூடிய... உலகிற்கே கீதாஉபதேசம் செய்த... கடவுளின் அவதாரமான கிருஷ்ணரே கூட ஜெகா வாங்கிக் கொண்டுவிட.... அப்பாவி அரவானை பலியிட முடிவு செய்கிறார்கள்.

அரவானும் அதை ஒத்துக்கொள்கிறான் ஒரு கண்டிஷனோடு....அதாவது அவன் தனது இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒருநாள் இல்லற வாழ்வு நடத்த விரும்புவதாக தெரிவிக்கிறான்.ஆனால் அவனை மணக்க மூன்று லோகத்திலும் ஒருத்தி கூட சம்மதம் தெரிவிக்கவில்லை.கடைசியாக ”பரமாத்மாவான” கிருஷ்ணரே மோகினியாக அவதாரமெடுத்து அவனுடன் இணைகிறார்(ஏதோ அவரால் முடிந்தது).ஒருவழியாக ஒருநாள் இல்லற வாழ்வு முடிந்து மறுநாள் பலிகளம் செல்கிறான் அரவான்.

இந்த புராணக்கதையை அடிப்படையாக கொண்டு தான் இன்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமியன்று பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் ஒன்றுகூடி தங்களையே மோகினியாக சித்தரித்து கொண்டும் முந்தைய நாளில் தங்களுக்கு தாங்களே தாலி கட்டிக்கொண்டும் மறுநாளில் அந்த தாலியை அறுத்து கொண்டும் அழுகிறார்கள்.....

புராணங்கள் கூட தேவலாம் என்ற அளவில் தான் இவர்களது வாழ்வின் யதார்த்தமான நடைமுறைகள் இருந்து வருகிறது.

ஆம் தோழர்களே!....

மண்வெறி பிடித்த மன்னர்களால் படையெடுக்க படும் போது போரில் தோற்ற மன்னருக்கு வாரிசுகள் இல்லையென்றால் இடைக்கால பலி ஆடுகளாக திருநங்கைகளை நியமிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.அதேபோல் அந்தப்புரங்களில் “நம்பிக்கைகுரிய” காவலர்களாகவும் நியமிக்கப் பட்டார்கள். நல்ல அரசுச்சம்பளம்... நிம்மதியான வருவாய்... என நினைத்து வறுமையில் வாடிய பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் ஒன்றை உறுப்பறுத்து அரண்மனைகளுக்கு அனுப்பி வைத்த சம்பவங்களும் வரலாற்றில் உண்டு.மேற்கித்திய நாடுகளில் பதினாறாம்,பதினேழாம் நூற்றாண்டுகளில் கூட மன்னர்களுக்கு மூத்திரசட்டி ஏந்துவது போன்ற பல கொடுமையான பணிவிடைகளுக்கு திருநங்கைகள் உபயோகப் படுத்தப்பட்டதாக வரலாறுகள் உண்டு.எந்தவித மயக்க மருந்துகளும் இன்றி பிறப்பு உறுப்பிகளை அறுத்து பாலின மாற்றம் செய்யப்படும் கொடூரங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக அடிமைகளாகவும்,பலியாடுகளாகவும் தான் எல்லா இனக்கூட்டங்களிலும்....எல்லா நாகரீகங்களிலும்.... எல்லா காலக்கட்டங்களிலும்... நடத்தப்பட்டு வந்துள்ளார்கள்.

அந்த காலம் தொட்டு இன்றுவரை இவர்களை அந்தப்புர காவலர்களாகவே இந்த சமூகம் சித்தரிக்க முயல்கிறது.பாலியல் தொழில் செய்வதற்கே இவர்கள் பிறப்பெடுத்துள்ளார்கள் என இன்னும் பல மூடர்கள் நம்புவதே அதற்கு காரணம்.ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்று தனது பாடல்களால் சமத்துவ வேள்வி சமைத்த முண்டாசுக் கவிஞன் கூட “அலிகளுக்கு இன்பமுண்டோ...” என்றே வினவினான்.அந்தோ பரிதாபம் அறியாத மூடர்கள் என் செய்வர்...ஆனால் அவர்களது மூடத்தனத்திற்கு மூட்டை கட்டும் விதமாக பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தங்களது சமூக அங்கீகாரத்திற்காக மிக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் எமது தோழர்கள்.

ஒரு சிறு உதாரணம்...

பல இன்னல்களையும்,அவமானங்களையும் கடந்து ஏன் பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் கூட தனது தன்னம்பிக்கையாலும்,விடாமுயர்சியாலும் பரதகலையில் பல சாதனைகள் புரிந்து வரும் நர்த்தகி நடராஜ் என்பவர் தான் திருநங்கை என்னும் முத்திரையோடு முதல் கடவுச் சீட்டு(PASSPORT) வாங்கியவர்.அதாவது இருபத்தியோரம் நாற்றாண்டில் தான் மூன்றாம் பாலினம் இருப்பதாக இந்த சமூகம் ஒத்துக்கொள்ள முனைகிறது....இதைவிட எமது தோழர்களின் நிலை சொல்ல வேறு உதாரணங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தோழர்களே!

இப்படியாக காலம்காலமாக வெறும் அவமானங்களையும்,கேலிகளையும் மட்டுமே சரித்தரங்களாக சுமந்து கொண்டு வாழ்வில் சமத்துவத்திற்காக ஏங்கும் அந்த எளிய ஜீவன்களின் மேல் நாம் எப்போது கவனம் செலுத்தப் போகிறோம..?.உலிகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க முனைவோர் கூட இவர்களை வெறும் கேலிச் சித்திரங்களாக பார்க்கும் கொடுமை எப்போது தீரும்...?

வாருங்கள்! பஞ்சமா பாதகர்களின் ஏய்ப்புகளுக்கு பலியாகி கிடக்கும் எம் தோழர்களின் வாழ்வு மலர......அவர்களை மனிதர்களாக காண வாருங்கள்....

இனி இவர்களும் நம் தோழர்கள் தான்....

7 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

நல்ல பதிவு தம்பி. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, கோஷம் போட்ட மாதிரி இருக்கு.

Unknown சொன்னது…

அண்ணா!உங்கள் கருத்துரையில் எனக்கு முழு உடன்பாடு உண்டு அதனால் சிறு மாற்றங்கள் செய்துள்ளேன்.மீண்டும் ஒரு முறை படிக்கவும்...

ganesh சொன்னது…

கைகள் உயருகையில் எனது கையும் அதில் இணைந்திருக்கும், தோழரே...

Unknown சொன்னது…

கைகள் தானாய் உயர்வதில்லை..
நாமாய் உயர்த்தும் வரை...

உங்கள் வருகைக்கும்,உணர்வு ரீதியான பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றி...தோழர் கணேஷ்.

அன்புடன் அருணா சொன்னது…

ரொம்ப நல்ல பதிவு!...பூங்கொத்து!

நிலாமதி சொன்னது…

தற்போது இவர்களுக்கு அதிக முக்கியம் கொடுத்து , தினசரி படிக்கிறோம். துணிந்து ஒருவர் ( ரோஜா என நினைக்கிறேன் ). டி வீ க்களில் நிகழ்ச்சி நடத்து கிறார். இவர்களும் மனிதர்கள். இவர்களையும் மதிப்போம். நட்புடன் நிலாமதி

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும், நீங்கள் அளித்த பூங்கொத்திற்கும் நன்றி...தோழர்.அருணா

நிலாமதி...உண்மைதான் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நமது தோழர்களைப் பற்றிய அவலங்களை அக்கறையோடு இந்த சமூகம் பார்க்க துவங்கியுள்ளது....அவர்களுக்கான சமத்துவம் மலர நாம் இன்னும் அதிகம் பயணிக்க வேண்டியுள்ளது...

உங்கள் வருகைக்கும், நட்புக்கும் நன்றி தோழர்.நிலாமதி