சனி, 8 ஆகஸ்ட், 2009

ஒரு தங்கப்பெட்டியும்...ஆயிரம் முத்தங்களும்...


தனது எட்டு வயது மகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை ஜோடனை செய்ய தான் வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட தங்கத்தாள்களை கிழித்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது.அவர் எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் கிழித்தும்,அதை வைத்து விளையாடிக் கொண்டும் இருந்ததை கண்டு குழந்தையை சரமாரியாக அடித்து திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.வெகு நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வருகையில் அவரது மகள் தூங்கிவிட்டிருந்தாள்.

அழுது வீங்கியிருந்த குழந்தையின் முகத்தை கண்டவுடன் தனது தவறையுணர்ந்து அதை வாஞ்சையுடன் தடவி கொடுத்தபடி அவரும் தூங்கிவிட்டார்.

அதிகாலையில் ஏதோ பிஞ்சு விரல்கள் தன்னை வருடுவதாக உணர்ந்தவர் விழித்து பார்க்கையில் அவரது மகள் கையில் அழகான ஒரு சிறு தங்கப்பெட்டியுடன் அவரது பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லி அந்த தங்கப்பெட்டியை பரிசளித்தது.தனக்கு பரிசளிப்பதற்காக தான் அந்த தங்கத்தாள்களை நேற்று தனது மகள் கிழித்து கொண்டிருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் கண்கள் பனிக்க தனது மகளை வாஞ்சையுடன் அனைத்து கொண்டு மன்னிப்பு கேட்டார்.

அந்தப் பெட்டிக்குள் தான் மிக விலையுயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றை வைத்திருப்பதாக அவரது மகள் சொன்னவுடன் ஆசையோடு அந்தப்பெட்டியை திறந்து பார்த்தவருக்கு அதில் ஒண்ணும் இல்லாததை கண்டவுடன் ஏமற்றம் ஏற்பட்டது.தனது மகள் தன்னை ஏமாற்றி விட்டதாக கோபப்பட்டவரிடம் அழுது கொண்டே அவரது மகள்,”அப்பா!உங்களுக்காக அதில் நான் ஆயிரம் முத்தங்களை வைத்திருந்தேனே அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...”என்றது.

இப்போது அந்தப் தங்கப்பெட்டிக்குள் இருக்கும் முத்தங்களை அவரால் நன்றாக பார்க்க முடிந்தது.ஆனால் காலனின் கொடுங்கரங்கள் அந்தப் பிஞ்சு மொட்டினை பறித்துவிட்டிருந்தது.பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவருக்குள் அவரது குழந்தையின் குரலே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க... கண்களில் நீர் உருண்டோட அவரது மகளின் நினைவிடத்தில் நின்றபடி இருந்தவருக்கு அந்தப் பெட்டிக்குள் இருக்கும் முத்தங்கள் தான் இப்போது ஆறுதலாய்.....

எப்போதோ படித்தது இந்த ஆங்கிலச் சிறுகதை.

நாம் எப்போதும் இப்படித்தான்....

நம்மை சுற்றியுள்ள அற்புதங்கள் நமது கண்களுக்கு தெரிவதேயில்லை அதை நாம் தொலைக்கும் வரை.பிரியும் கணங்களில் தான்
உறவின் ஆழம் உணர்கிறோம்.உண்மை உணர்கையில் யாருமற்று தனித்து விடப்படுகிறோம்.

ஆதலால் காதல் செய்வோம்.... நம்மையும் நமது வாழ்வின் அற்புதங்களான நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும்.....

5 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

அந்தப்பிஞ்சு விரல்கள் எவ்வளவு வலிமையானது.
கடக்க முடியாத சோகம்.

மாதவராஜ் சொன்னது…

கண்கலங்க வைத்த கவிதை. அற்புதங்களை சேமிக்கத் தெரியாத மொணைகளாய்த்தான் நாம் பல நேரங்களில் இருக்கிறோம். குழந்தைகளின் காலடியில் அவை கொட்டிக்கிடக்கின்றன.

Unknown சொன்னது…

உங்கள் இருவரின் கருத்துரைகள் தான் என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது.....

நான் என்ன செய்தேன் உங்கள் இருவருக்கும் ஏன் என் மீது இவ்வளவு அக்கறை.மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்...

venu's pathivukal சொன்னது…

அபாரம் அண்ட்டோ...அபாரம்...
அணி கொள் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்கிலார்
என்றான் மகாகவி......

நமது அவசரங்கள், ஆத்திரங்கள்,
பொறுமையற்ற கணங்கள்
பிஞ்சுக் கவிதைகளை அன்றாடம்
கிழித்துப்போட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆனால், குழந்தைகளோ
நாம் அவர்களைக் கீறிய இடங்களைத்
தமது புன்னகையாலேயே குணமாக்கிக் கொண்டு
நாம் நம்மைக் கிழித்துக் கொண்டு தவிக்கிற
இடங்கள்மீது முத்தம் போட்டு
வசப்படுத்துகிறார்கள்...

அவர்கள் பார்ப்பதில்லை, நாம் வெட்கமுற்றுத்
தவிக்கும் நேரங்களை -

மன்னிக்கத் தெரிந்தவர்கள் குழந்தைகளே என்று
பலமுறை நான் நினைப்பதுண்டு...
பழுதுபட்ட கோபக்காரர்களே அற்பமாக
மன்னிக்கும் வள்ளல்களாக மாறுவதும் சாத்தியம்
குழந்தைகளுடையவை சினமல்ல,
ஒரு மின்னல் வெட்டு முரண்படல் அவ்வளவே.....

எழுதிக் கொண்டே இருங்கள் ஆண்ட்டோ
எங்களுக்கான இதமான வருடல்களை.............

எஸ் வி வேணுகோபாலன்

Unknown சொன்னது…

நன்றி தோழர்.வேணுகோபால்..உங்களது கருத்துரை எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.இது போன்ற அங்கீகாரங்கள் தான் என்னை மேலும் மேலும் எழுதச் சொல்லி தைரியம் தருகிறது.