ஞாயிறு, 7 மார்ச், 2010

நான் பேசுகிறேன்...


சமீபத்தில் நடந்தேறிய ஒரு மூன்று சம்பவங்களும் அதன் விளைவாக இந்த சமூகத்தில் ஏற்பட்ட சில அதிர்வுகளும் நிச்சயம் விவாதிக்கபட வேண்டியது. விவாதங்களும் பெரும் அளவில் நடைபெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மையான விவாதங்களில் நடுநிலைத் தன்மை என்பது காவு வாங்கப்பட்டு தனிமனித அரசியலும்,மூடத்தனங்களும் மேலோங்கி இருப்பதாய் எனக்கு படுவதால் நான் இந்த பதிவை இடுகிறேன்.....

முதலில் அந்த சம்பவங்கள்.....

1.உத்திரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர்.சீனிவாச ராமச்சந்திரா சிராஸ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக “புகார்” கூறி அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

2.தோழர்.டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணம்.

3.நித்தியானந்த சாமிகளின் ”லீலைகள்”.

முதலாவது சம்பவம் ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்’ (VNI) என்னும் இந்தி சேனலின் நிருபர்கள் குழு ஒன்று ரகசிய கேமிரா மூலம் பேராசிரியரின் படுக்கை அறையை பதிவு செய்து அவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வெளியிட்டு உள்ளார்கள். இந்த மாபெரும் ”சமூக சேவை”யின்
விளைவு....பேராசிரியர் குற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறார்....சஸ்பெண்ட் செய்யபடுகிறார்....ஓரின சேர்க்கை தேசிய குற்றமாக மலினபடுத்த பட்டு விவாதங்கள் அரங்கேறுகிறது.

ஆனால் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக களமிறங்கிய கயவர்கள் சமூக ஆர்வலர்களாக மாறிப் போகிறார்கள்....ரகசிய பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வர்த்தகமாக்கப்படுகிறது.

இதில் எது குற்றம்? ஓரினச் சேர்க்கையா? அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான வர்த்தக அராஜகமா?

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது பாசிச பார்வையே ஆகும். இயற்கையை ஏற்க மறுக்கும் மூடத்தனம். நாம் அணிதிரள வேண்டியது இந்த வர்த்தக அராஜகத்திற்கு எதிராகத்தான்.பத்திரிகை சுதந்திரம்...எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித அந்தரங்கங்களை படமாக்கும் அபத்தக்களுக்கு எதிராகத்தான்.

இரண்டாவது சம்பவம்...

தோழர்.டபிள்யு.ஆர். வரதராஜனின் மரணம். அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எதிராக ஏந்திய கடைசி ஆயுதம் “மரணம்”.ஆனால் நாம் அதையும் சர்ச்சையாக்கி அரசியல் ஆதயம் தேடும் தொடர் முயற்சியில் இறங்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை. உழைக்கும் வர்க்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்த அந்த அற்புத தோழர் தனது மரணத்தை தன் தரப்பு நியாயங்களுக்காக அர்பணித்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பெண் ஒருவருக்கு ‘தகாத குறுந்தகவல்கள்’ அனுப்பினார் என்பதே. அவர் அப்படி அனுப்பியதாய் வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று எனக்கு புரியவே இல்லை. வன்புணர்ச்சி குற்றம்...தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதுமா குற்றம்?

அந்தந்த காலகட்டத்தின் தனிமனித ஒழுக்கங்களாய் ஒரு சமூகம் கொண்ட வரையறைகளை மீறியவர் என்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட இந்த சமூகமும் அவர் சார்ந்த கட்சியும் வரையறுத்த ஒழுக்க நெறிகளை மீறியவர் என்றும் குற்றம் சாட்டலாமா? இப்படி எந்த விரலை நீட்டி குற்றம் சாட்ட முயற்சித்தாலும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முயற்சித்ததை குற்றமாக எப்படி பாவிக்க முடியும்? குற்றம் எவர் செய்தாலும் குற்றமே! என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்பளித்து விட்டோம். இனி சிதறியவை மாணிக்க பரல்கள் எனத் தெரிந்தால் என்ன செய்யலாம்?”யானோ அரசன்?யானே கள்வன்?”என உயிர்(பதவி) துறந்திடுவோமா? நிச்சயம் மாட்டோம்.

பொதுவாக மரணத்திற்கு மௌனத்தை அஞ்சலியாக செலுத்துவது நமது மரபு.ஆனால் அதை கூட நாம் அந்த அற்புத தோழனுக்கு தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?

மூன்றாவது சம்பவம்.....

காவி துறந்து காமம் தழுவிய ‘சாமியாரின்’ கதை. இதில் எனக்கு நித்தியானந்தரின் மேல் எந்த கோபமும் இல்லை. அவர் நிச்சயம் புத்திசாலிதான். சொல்பவன் பேச்சை கேட்டு கேட்பவன் மதியை இழந்தால் குற்றவாளி சொல்பவனா? கேட்பவனா? இந்த நேரத்தில் எனக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது....

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு என் பக்கத்து வீட்டுகாரரிடம் பந்தயம் கட்டி இரண்டாயிரம் ரூபாய் இழந்துவிட்டேன்.

நண்பர்: யாராவது ஒரு மேட்சிற்கு இரண்டாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுவார்களா?

சர்தார்ஜி: நான் என்ன முட்டாளா? நான் ஆயிரம் ரூபாய்தான் ஒரு மேட்சிற்கு பந்தயம் கட்டினேன்.

நண்பர்: பின்பு எப்படி இரண்டாயிரம் இழந்தீர்கள்?

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடைபெற்ற மேட்சிற்கு ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினேன். மறுநாள் மேட்சில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நேற்று ஹைலைட்சிலாவது ஜெயிப்பார்கள் என நம்பி மீண்டும் பந்தயம் கட்டி இந்தியாவை நம்பி மோசம் போனேன்....என புலம்பினானாம்.

இப்படித்தான் இருக்கிறது நம்மவர்களின் கதைகள். எத்தனை தடவை பட்டாலும் நமக்கு உறைக்காது. முதலாவது சம்பவத்தை போலவே செய்திதாள்களும், டி.வி சேனல்களும் இதை பரபரப்பாக்கி விற்பனை செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எந்தவித சமூக சிந்தனையும் இவர்களுக்கு கிடையாது. வியாபாரம் ஒன்றே தான் இவர்களது குறிக்கோள். நாமும் தொடர்ந்து இவர்களது வியாபார தந்திரந்திற்கு பலியாகி வருகிறோம். நாம் நியாயப்படி கோபப்பட வேண்டியது இவர்களைப் போன்ற வியாபாரிகளை பார்த்தும்....நமது முட்டாள்தனத்தை நினைத்தும் தான்.

தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது காமம் குறித்து இந்த சமூகத்தின் புரிதல்களே ஆகும். காமம் ஒரு இயற்கையான உணர்வு. பாலின பேதம் காமத்திற்கு இல்லை. அது ஒரு உயிரின உணர்வு. அதற்கான வடிகால்களும் இயல்பானதே! எந்த ஒரு உயிரையும் வன்புணர்ச்சி செய்வதே இயற்கைக்கு மாறானது. அதுதான் கண்டனத்திற்கு உரியது. எல்லா உயிரினமும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்கிறது. காமமும் அது போலத்தான். தனக்கான இணையை தானே முடிவு செய்வது தனிமனித சுதந்திரம். காமத்திற்கான பொதுவிதிகளை வரையறுக்க இங்கு தனிமனிதருக்கோ அல்லது ஒரு சமூக அமைப்பிற்கோ உரிமை கிடையாது. ஆனால் நாம் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.

விவிலியத்தில் ஒரு சம்பவம் உண்டு விபச்சாரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை கல்லால் அடிக்க முற்படுவர். அப்போது இயேசுநாதர் அவர்களை தடுத்து,”உங்களில் எவன் குற்றமற்றவனோ அவனே முதல் கல்லை எறியட்டும்” என்பார் உடனே தங்கள் கைகளில் உள்ள கற்களை வீசியெறிந்து விட்டு அனைவரும் கலைந்து செல்வதாய் ஒரு கதையுண்டு.

இதைத்தான் நாமும் இங்கே சொல்ல விரும்புவது மேலே சேற்றை வாரி இறைக்கவும்....நீதி சொல்லவும்.....சேதப்படுத்தவும் செய்வோரெல்லாம் யோக்கியர்கள் தானா? இல்லை குற்றமற்ற மகாத்மாக்களா?

தவறுகள் தான் மனிதன்.அதனால் தண்டனைகள் தந்து தலையறுப்பதை விட. மன்னித்து அரவணைப்பதே மனித செயல். நாம் மனிதர்களாக மாறுவோமா?

3 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

அன்பு மாப்பிள்ளை.
நல்லா வந்திருக்கு.
அடிக்கடி வரணும்.

மாதவராஜ் சொன்னது…

அன்புத்தம்பி!

இன்னும் ஆழமாகப் பேசப்பட வேண்டிய விஷயங்கள் என நினைக்கிறேன். தொடர்ந்து பேசு.

ஒரு மாசத்துக்கு ஒருதடவைதான் விடியுமோ ... (கொக்கரக்கோ...)
:-))))))

Gopi சொன்னது…

ஆழமான கருத்துக்கள், மிகச் சிறந்த இடுகைகள், தொடரட்டும் தங்களின் பணி.