ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜமீலாவும்…. நானும்….!!!


ஜமீலா…. கடந்த மூன்று நாட்களாய் எனக்குள் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். நான் ஒன்றும் அத்தனை பலவீனமானவன் அல்ல…. ஆனாலும் அவளது நினைவுகளால் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது மனைவியிடம் கூட அத்தனை இயல்பாய் என்னால் நடந்து கொள்ள முடியவில்லை…. அதற்காக ஒரு துளி குற்றவுணர்வும் எனக்குள் எழவில்லை. ஆம்! அந்தத் துணிவைவும் ஜமீலாவே எனக்கு தந்தருளியுள்ளாள்.

ஸ்டெப்பி புள்வெளிகளில் ஜமீலாவுடன் கரம் கோத்துக் கொண்டு ஏகாந்தமாய் திரிகிறது மனம்…. எங்கோ மறைவாய் நின்று கொண்டு (கிச்சினே) பாலா எங்களை தன் தூரிகையில் ஓவியமாக்க கூடும் என எண்ணும் போதே எத்தனை இன்பமாய் இருக்கிறது.

நினைக்க நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது….. வாழ்வின் எந்த கணத்தில் இது போன்ற இன்பங்கள் பூக்கும் என யாரால் அறுதியிட்டு கூறமுடியும்? முதன் முறையாய் ஒரு நீர்க்குமுழியை தீண்டிய ஒரு குழந்தையின் விரலைப் போல் தவிக்கிறது மனம். உங்கள் விரல்களுக்கும் ஜமீலாவை புரட்ட ஒரு வாய்ப்பு கிட்டுமானால் நீங்களும்…. என்னைப்போல் அல்ல என்னைவிட மோசமாக அவள் நினைவுகளில் அலைகழிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயம்.

ஜமீலா…. ஒரு பெருங்கொண்ட குடும்பத்தில் வாக்கப்பட்டவள் தான். அவளது கணவனோ நாட்டுக்காக யுத்தகளத்தில் ஆயுதமாகிப் போனான். ஜமீலாவும் ”ஒழுக்கம்” என போதிக்கப்பட்ட….படும் ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூக கட்டமைப்புகள் குறித்த ஐயவுணர்வும், நம்பிக்கையும் கொண்டவள் தான். ஆனால் காதல் இவை எல்லாவற்றையும் கடந்த அற்புதமான உணர்வல்லவா? காதலை உந்துவது வெறும் காமம் தான் என்றால் காதலுக்கு இத்தனை எதிர்ப்புகள் இராது. காதலில் காமம் ஒருநிலை! ஆனால் காமத்தின் நிறைவால் காதல் வடிவதில்லை.
”கிச்சினே” பாலாவுக்கும் தன் அண்ணன் மனைவியான ஜமீலா மீதிருந்தது காதல் தான். அந்தக் காதல் தான் அவளை காடையர்கள் சீண்டுகிற போது அவனை சினம் கொள்ளச் செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் தோள்களில் சாயும் போது அவனை ரசிக்க செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் கரம் பற்றி ஊரைவிட்டு செல்லும் போது துடித்து தவித்து உடைந்து வெளிப்படுகிறது.

காதல் அரும்பும் கனங்களும் ஆராய்ச்சிக்குரியவை தான். நெஞ்சத்து படபடப்பும், பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகளும் மட்டுமே காதலை உணர்த்தும் கனங்களாய் எல்லோருக்கும் இருப்பதில்லை. இயல்பான பகடிகளும், நேர்மையான அலட்சியங்களும் ஏன் சிலருக்கு காரணங்களற்ற வெறுப்பும் கூட காதல் அரும்பும் கனங்களாய் மாறிவிடுவதுண்டு.
ஜமீலாவுக்கும் அப்படித்தான் ஒரு புரியாத கணத்தில் தானியார் மேல் காதல் அரும்பிப் போகிறது. தானியாரின் அலட்சியமும், உணர்வுகளை வெளிப்படுத்தாத குணமுமாய் அவரைப் பற்றிய அவளது பிம்பங்களை ஸ்டெப்பி புள்வெளிகளில் அந்த ஏகாந்தமான மாலைப் பொழுதில் அவர் தன் பாடல்களால் உடையச் செய்யும் போது அவள் தன் காதலை உணர்கிறாள். இத்தனைக்கும் அவர் காதல் பாடல்களை பாடவில்லை…. பெரும்பாலும் உணர்வுகளைத் தூண்டும் தேசபக்தி பாடல்களே அவை. காதல் ஒரு புரியாத புதிர் தான்!

மனித நம்பிக்கைகளையும், சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்தெரியும் காதல் இழிவாய் பார்க்கப்படுவதும் ஒருவித மூடநம்பிக்கையே! குடும்பம் என்ற அமைப்பின் மிகப்பெரும் பலவீனமே அது பல நேரங்களில் தனிமனித உணர்வுகளை வடிகால்களின்றி முடங்கச்செய்யும் சிறைக்கூடங்களாகிப் போவது தான்.

சிங்கிஸ் ஐத்மத்தேவ் படைத்த ”ஜமீலா” என்னும் அந்த நாவல் எனக்குள் எழுப்பிய கேள்விகள் ஏராளம். எத்தனை வக்கிரமாய் ஒரு ஆண் நம் சமூகத்தில் வளர்க்கப்படுகிறான் என்பதை ஜமீலாவை படித்த பிறகு என்னால் உணர முடிந்தது. இங்கு ஒழுக்கம் என கற்பிக்கப்படும் விஷயங்கள் எத்தனை விஷமமானவை என்பதை ஐத்மத்தேவ் எந்தவித பிரச்சார நெடியுமின்றி மிக நேர்மையாய்….. எளிமையாய் புரியவைத்து விடுகிறார்.

“கள்ளக்காதல்” என்றொரு பதத்தை மிக நைச்சியமாய் நம் பேச்சுவழக்கில் சில மலிவான ஊடகங்களால் எளிதில் கலந்துவிட முடிகிறது. நாமும் சமூக மனிதனாய் அதன் உள் அரசியல் புரியாமல் அதனை அப்படியே வழக்கில் ஏற்றிக் கொள்கிறோம். ஆனால் பெண்களுக்கெதிரான மிகத் தந்திரமான அடிமை அஸ்திரகளில் ஒன்றாய் இதனை யாரும் பார்க்கவில்லை. நான் உட்பட. ஒருநல்ல புத்தகம் நம் விழிகளை விசாலமாக்க வேண்டும். அதனை ஐத்மத்தேவின் “ஜமீலா” செய்கிறாள்.

வாய்ப்பு கிடைத்தால்…. அல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு ஜமீலாவை ஒருமுறை படியுங்கள்!  நீங்கள் ஒரு ஆணாய் இருந்தால் நிச்சயம் ஜமீலாவிடம் காதலில் விழுவீர்கள்…. நீங்கள் ஒரு பெண்ணாய் இருந்தால் ஜமீலாவாய் மாறிப்போவீர்கள்….. நீங்கள் யாராய் இருந்தாலும் ஜமீலாவை நேசிப்பீர்களேயன்றி நிச்சயம் பரிகசிக்க மாட்டீர்கள்!!!!

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டம்;மீனவ மக்கள் இனி என்ன செய்ய வேண்டும்?


ஊடகங்களின் வியாபாரப் பசிக்கு இனி பஞ்சமே இல்லை….. அரசியல் கூத்தாடிகளுக்கும் ஆளும் கட்சியை விமர்சித்து தள்ள மிகப்பெரும் வாய்ப்பாய் கூடங்குளம் மாறிப்போனது. ஆனால் இந்த தேசத்தின் பழங்குடி இனமான மீனவ சமூகத்திற்கோ இது மிக முக்கியமான போராட்டக் காலமிது.

ஓர் ஆண்டுக்கும் மேலான அவர்களது நெடிய போராட்டப் பயணத்தின்  எதிர்கால திசையை அவர்கள் மிகச் சரியாக கனித்து இயங்க வேண்டிய காலகட்டமிது. சு.ப.உதயகுமார்… என்னும் அந்த இளம் மனிதனின் மனித நேயமிக்க சமூக அக்கறையினாலும் அவரின் சளைக்காத வலிமையான மக்கள் தொடர்பின் காரணமாகவும் இன்று மீனவ சமூகத்தின் பெரும்பான்மைக்கும் அதிகமான மக்கள் அவரின் வழிகாட்டுதலின் பெயரில் ஓரணியில் திரண்டு கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று மிகப்பெரும் அரசியல் அனுபவமிக்க இடதுசாரிக் கட்சிகள் போன்ற முற்போக்கு சக்திகளால் கூட அணிதிரட்டப் பட முடியாத அல்லது முனையாத மக்களை மிகக்குறுகிய காலத்தில் இத்தனை உறுதியாக களம் காணச் செய்தது நிச்சயம் சு.ப.உதயகுமாரின் ஆளுமை தான். அதுவும் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் விசுவாசமான ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக…..

மாபெரும் எதிரிகளை மாபெரும் நோக்கத்திற்காக எதிர்க்கும் போது மாபெரும் திட்டமிடல் அவசியம். வெறும் உணர்ச்சிமிக்க போராட்டங்களால் மட்டுமே வெற்றிகள் சாத்தியமாகிவிடாது. எதிரிகளின் பலத்தை முழுவதுமாய் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த தேசமெங்கும் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்தும் அவைகளை இந்திய ஆட்சியாளர்கள் அணுகும் முறை குறித்துமான ஒரு புரிதல் அவசியமாகும்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சிறப்பு ராணுவச் சட்டத்தை நீக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா என்னும் ”இரும்புமங்கை” கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அது 2 நவம்பர் 2000 அன்று மலோம் நகரில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த பத்து அப்பாவிப் பொதுமக்களை அசாம் ரைப்பிள் பிரிவினர் அநியாயமாய் தங்கள் கொலைவெறியை தனித்துக் கொள்ள சுட்டுக் கொன்றனர். இது போன்ற கோரச்சம்பவங்களை துணிந்து அரங்கேற்ற வழிவகை செய்யும் சிறப்பு ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய அரசாங்கத்தை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். அதாவது தீவிரவாதிகள் என சந்தேகப்படும் யாரையும் எந்தவித விசாரணையுமின்றி சுட்டுக் கொல்லலாம் என்பதே அச்சட்டத்தின் அடிப்படை சாராம்சம். இப்படி ஒருச்சட்டம் தான் மிகப்பெரும் ஜனநாயக தேசம் என மார்தட்டிக் கொள்ளும் இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

இதை எதிர்த்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவை படம்பிடித்து…. செய்திகளாக்கி பரபரப்பூட்டி தங்கள் வியாபார வெறியை தனித்துக் கொண்டு ஊடகங்களும் ஓய்ந்து போய்விட்டது. அரசியல் கட்சிகளும் ஆளும் அரசாங்கங்களை எதிர்த்து வீராவேசமிக்க உரைகளை நிகழ்த்தி ஓய்ந்து போய்விட்டார்கள். ஆனால் ஐரோம் ஷர்மிளா மட்டும் தன் இருப்பத்தி எட்டு வயதில் தொடர்ந்த போராட்டத்தை ஒரு பெண்ணிற்கான அடிப்படை உடலியில் பிரச்சனைகளையும், கோளாறுகளையும் தாங்கிச் சகித்தபடி தன் இளமையையும், காதலையும் தன் நாட்டிற்காக தியாகம் செய்தபடி நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

இன்றும் டெல்லியில் ஜந்தர் மந்திர் பகுதிக்கு போய் பார்த்தால் தெரியும் இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் தத்தமது பிரச்சனைகளை கடைவிரித்தபடி நம்பிக்கையோடு ஏராளமான மக்கள் போராடிக் கொண்டிருப்பதை காணலாம்.

மக்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய தன்னாலான அனைத்து அஸ்திரங்களையும் நமது ஆட்சியாளர்கள் பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். இதில் கட்சி பேதமில்லை. இந்திய தேசத்தின் ஆட்சியை ஒரு கட்சி பிடிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். முதலாவதாக அது ஏகாதிபத்திய நாடுகளின் ஏவல்களை சிரமேற் கொண்டு செய்வோராய் இருத்தல் அவசியம். இரண்டாவதாக உள்நாட்டு, வெளிநாட்டு பெரும்முதலாளிகளின் நலன் பொருட்டு எந்தவித முடிவையும் தயக்கமின்றி எடுப்போராய் இருத்தல் வேண்டும். அது வெகுஜன நலனுக்கு எதிராகவோ அல்லது அழிவிற்கு காரணமாகவோ இருந்தாலும் பராவாயில்லை. மூன்றாவதாக மாஃபியாக்களை கண்டும் காணாமல் அனுசரித்து போவோராய் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு போராடும் மக்கள் தேசவிரோதிகளாகவும், அந்நிய சக்திகளாகவும் ஏன் தீவிரவாதிகளாகவுமே தெரிவார்கள். போராடும் மக்களை ஏனைய பொதுமக்களிடமிருந்து தனித்து போகச் செய்யவே இந்த தந்திரங்களை அவர்கள் கையாள்கிறார்கள்.
பொதுமக்களிடமிருந்து போராட்ட களத்தை துண்டாக்கி அதை கலவரபூமியாக காட்சி படுத்த போராட்டங்களின் கட்டுப்பாடுகளை குழைக்க துவங்குவார்கள். அதற்கு போராளிகளின் உணர்வுகளை தூண்டிவிட்டு வன்முறையை நோக்கி நகர்த்தி அவர்களால் பொதுச் சொத்துகளுக்கும், ஏனைய பகுதி மக்களுக்கும் இடையூறு என சித்தரித்து தனது ஊடகங்களைக் கொண்டு ”நடுநிலைமை” என்னும் மாயையை பரவச் செய்து போராட்டங்களின் நோக்கத்தை சிதைக்க துவங்குவார்கள்.

இது போன்ற ஒரு கட்டத்தில் தான் தற்போது கூடங்குளத்தின் போராளிகளும் நிற்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்த போராட்டக் குழு தலைவர்களை கைது செய்து மேலும் கடற்கரை பகுதிமக்களின் உணர்வுகளை தூண்டி கலவரங்களில் ஈடுபட செய்து ஒட்டுமொத்த கடற்கரை பகுதியையும் துண்டாக்கி அடக்குமுறையால் போராட்டத்தை திசைமாற்றி வென்று விடவே ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்.

இதிலிருந்து மீண்டும் இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டுமானால் மீனவ மக்கள் முதலில் மேற்கொண்டு புதிய போராட்டங்களை அறிவிக்காமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மீனவ மக்களையும் ஒருசேர ஓர் இடத்தில் ஒன்று கூடச் செய்து தங்களது போராட்ட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்பந்தலிலே அணுஉலைக்கு எதிரான தீர்மானம் உட்பட தங்களது ஏனைய பொதுப்பிரச்சனைகளையும் சேர்த்து பொதுப்பட்டியலிட்டு இதனை ஒரு அரசியலியக்கமாக முன்னெடுப்பதே மிகச்சரியான முடிவாக இருக்கும்.

அரசியல் இயக்கமாய் மக்கள் மன்றத்தில் போய் நிற்பதனால் போராட்டங்களை ஒரு குறுகிய பகுதியில் முடக்காமல் அதை நாடு முழுவதற்குமாய் பரவச் செய்வதற்கும், ஒத்த சிந்தனை உள்ளவர்களை ஓரணியில் ஒரு மிகப்பெரும் நோக்கத்திற்கான மிக நீண்ட பயணத்தில் இணைக்கவும் அரசியல் இயக்கமே சரியானது.

முதலில் எதார்த்தங்களை ஒரு போராளி புரிந்து கொள்ள வேண்டும். உடனடிச் சாத்தியங்கள் எவை? நீண்ட பயணத்திற்குப் பின்பே சாத்தியமாகுபவை எவை? என்னும் புரிதலோடுதான் போராட்டப் பயணத்தை இலக்கை நோக்கி நகர்த்திச் செல்ல முடியும். ஏனெனில் காத்திருக்க மறுப்பவன் ஜனநாயகத்தின் எதிரியாவான்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக தேசத்தில் முதலில் அதிகாரத்தில் பங்கெடுப்பதே அதிக இழப்புகள் இன்றி ஒருகுறுகிய காலத்தில் நம் இலக்குகளை வென்றெடுப்பதற்கான எளிய வழியாகும். ஆனால் அந்த ”எளிய வழியை” அடைய ஆகப்பெரும் ஒழுக்கமும்,பொறுமையும் அவசியம்.
                                                       

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு உலையும்…. மீனவ மக்களின் போராட்டமும்:


நம் மூதாதையர்கள் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்து தொழிலும் அது சார்ந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் கொண்டிருந்தனர். நம் மண்ணையும் மண்ணில் வாழும் உயிர்களையும் தமிழ்மொழி திணை கொண்டே வகுத்து வைத்தது. அப்போதே மனிதர்கள் யாவரும் ஓர் திணையே என்றும் அஃது யாவும் உயர்திணையே எனவும் கொள்ளப்பட்டது. முடைநாற்றமெடுக்கும் சாதியப் பிரிவுகளால் தமிழ் மனிதர்களை பிரிக்கவில்லை.

நம் மண்ணையும் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை மற்றும் பாலைத் திணை என்றே வகுத்து வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் ஆரிய வருகைக்குப் பின் வர்ணாசரமத்தின் அடிப்படையில் ஜாதியின் பெயராலும், மொகலாயர்கள், போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பின்னால் மதத்தின் பெயராலும் பிளவுண்டு போனோம். இப்படியாக இந்த தேசம் சுதந்திரத்திற்கு முன்னால் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வந்தேறிகளாலும் சுதந்திரத்திற்குப் பின்னால் சுயநலமும், பதவிவெறியும் பிடித்த இருந்தேறிகளாலும் சுரண்டப்பட்டு அவர்கள் தம் அதிகாரவெறிக்கு இரையாக்கியப் பின் மண் சார்ந்த வாழ்வும் நிலம் சார்ந்த தொழில்களும் அழித்தொழிக்கப் பட்டு வருகிறது.

இதோ மின்சாரத்தின் பெயரால்…… மற்றுமொரு அரசாங்க பயங்கரவாதம் இந்த மண்ணின் பூர்வ குடிகளில் ஒன்றான மீனவ மக்களின் மீது பாயத்துவங்கியுள்ளது.

மின்சாரம் மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிப் போன விஷயம் தான். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பசிக்கின்றது என்பதற்காக தாயின் முலை அரிந்து யாரும் உண்ணுவதில்லை. சரி! அணு உலைகள் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை விவாதமாக்கும் முன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது…..

பல ஆயிரம் வருடங்களாக தலைமுறை தலைமுறையாய் இம் மண்ணில் வாழும் மனிதர்கள் எம் மக்கள். வங்கக் கடலைத் தவிர வேறு எந்த வாழ்வும் எத் தலைமுறையின் கனவிலும் இதுகாலும் யோசித்து அறியாதவர்கள். இந்த மண்ணிற்காக எம் மக்கள் இதுவரை இழந்தவைகள் வேறு எந்த இனமும் இந்த அகண்ட பெருந்தேசத்தில் இதுவரை இழந்திராதவை.

ஏன்?.... யூதர்கள் இஸ்ரேலுக்காகவும் அராபியர்கள் பாலஸ்தீனத்திற்காகவும் இழந்ததை காட்டிலும் மிக அதிகமாகவே எம் மக்கள் இழந்துள்ளார்கள். அப்படி என்ன இழந்துள்ளார்கள் என்கிறீர்களா?
காலத்தின் சக்கரத்தை ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக சுழலச் செய்து பார்த்தால் தெரியும் இந்த ஆகப்பெரும் தேசத்தின் வரலாற்றினை தத்தமது விருப்பு வெறுப்புகளை மையமாக கொண்டு எழுதி குவித்த வரலாற்று ஆசிரியர்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத அல்லது முக்கியத்துவமின்றி சொல்லப்பட்ட எம் மக்களின் செந்நிற இரத்தம் தோய்ந்த மண்ணிற்கான போராட்டங்களை…….

இன்று அணு உலைக்காக இந்திய அரசு காவு கேட்கும் இதே மண்ணிற்காகத் தான் எம் மக்கள் தாங்கள் காலம் காலமாய் வழிபட்டு வந்த கடவுளர்களையே விட்டுக் கொடுத்தார்கள். எம் மக்களுக்கு கடவுளைக் காட்டிலும் இம்மண்ணே மேலானது. இம்மண்ணிற்காகத் தான் தங்களது வம்ச அடையாளங்களையே மாற்றிக் கொண்டார்கள் எம் மக்கள்.
முகமதியர்களின் வருகைக்கு முன்னால் ஏகபோக கடலாடிகளாக வங்கக்கரையையே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் எம்மக்கள். இந்த தேசத்தின் முதல் அந்நிய வருவாயை ஈட்டியவர்களும் எம் மக்களே! (இன்று அந்நிய முதலீட்டுக்கே நம் தேசத்தை அடமானம் வைக்க துடிப்பவர்கள் தான் எம்மக்களுக்கு தீவிரவாதி பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள்)

முகமதியர்களின் வருகைதான் தமிழக மீனவர்களின் பொருளாதார வாழ்வையும் ஏகபோக கடலாடிகள் என்னும் நிலையையும் மாற்றி அமைத்தது. அதிலும் குறிப்பாக குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளில் முத்துக்களின் விளைச்சல் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. தூத்துக்குடி தான் முத்துக்குளித்துறையின் தலைநகரைப் போல் அப்போது விளங்கியது. இந்த அபரிவிதமான முத்துக்களின் விளைச்சல் தான் மீனவர்களின் மாபெரும் இழப்புகளுக்கு காரணம். முகமதியர்கள் அதிகம் இப்பகுதியில் குடியேறியதற்கும் இம் முத்துக்களின் விளைச்சலே காரணம்.

குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளை அப்போது இரண்டு பேரரசுகள் கோலோச்சி வந்தார்கள். குமரியில் இருந்து புன்னைக்காயல் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும் அங்கிருந்து மன்னார் வரை விஜய நகர பேரரசனின் ஆளுகையிலும் இருந்தது. மீனவ மக்களின் வாழ்வு குறித்த கவலைகள் ஏதுமின்றி முத்துக்குளித்துறையிலிருந்து வரும் வருவாயை மட்டுமே எதிர்நோக்கி ஆட்சி நடத்து வந்தார்கள். குமரியிலிருந்து வேம்பார் வரையிலான பகுதிகள் பரதவர்களின் கட்டுப்பாட்டில் ஏழு கடற்கரை கிராமங்களின் தலைமையில் இருந்தது. அவை மணப்பாடு, புன்னைக்காயல், வீரபாண்டியபட்டணம், தூத்துக்குடி,வேம்பார்,திருச்செந்தூர் மற்றும் வைப்பார். இந்த ஏழு ஊர்களின் தலைவரை பட்டங்கட்டியார் என்று அழைத்து வந்தார்கள். அவர்தான் பரதவமக்களின் தலைவராகவும், அப்போது இருந்தார்.

முகமதியர்களின் ஆதிக்கம் வங்கக்கறையில் ஓங்கத் துவங்கியது….. முத்து வாணிபம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்களும் முத்துக் குளித்துறையை கைப்பற்ற காத்துக் கிடந்தார்கள். முகமதியர்களுக்கும், பரதவர்களுக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கத் துவங்கியது. மீண்டும் பரவர்கள் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்த போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தசமயத்தில் தான் ஒரு பரதவனுக்கும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அந்த பரதவனின் கடுக்கன் அணிந்த காதை இஸ்லாமியர் கடித்து துப்பியுள்ளார்.

பரதவன் ஒருவனின் காது கடித்தெறியப்பட்டது பரதவ இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாய் கருதப்பட்டது. ஆகவே இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகக் கடுமையான தாக்குதலை பரதவர்கள் தொடுத்தார்கள். அடிபட்ட புலியாய் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் அண்டை ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை குவித்து பரதவ இன அழிப்பை துவங்கினர், ஒரு பரதவனின் தலைக்கு ஐந்து பணம் என அறிவிக்கப்பட்டு பரவர்கள் கொல்லப்படலாயினர். பரதவ இனமே அழிவின் விளிம்பிற்கு சென்றது. பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் செய்வதறியாமல் திகைத்து நின்றார், அப்போது குமரியில் குதிரை வாணிபம் செய்து வந்த ஜான்.டி.குரூஸ் என்பவரது வழிகாட்டுதலின் பெயரால் பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்.

ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை காத்திருந்த போர்ச்சுகீசியர்களும் பரதவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஒருநிபந்தனையுடன்…….ஆம்!! அது மதமாற்றம் தான்.

1535 ஆம் ஆண்டு…..

தம் மண்ணில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தாங்கள் இதுவரை வழிபட்டு வந்த குமரியம்மனையும், பெண் எடுத்த கடவுளாக நம்பப்பட்ட திருச்செந்தூர் முருகனையும் தத்தமது ஆதி தெய்வங்களையும் சிலுவையில் அறைந்துவிட்டு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரதவர்கள் ஒரே சமயத்தில் கிறுத்துவத்தை தழுவினர். 

கருத்தனுக்கும், வேலாயிக்கும் போர்ச்சுகீசியன் ஞானத் தந்தையாக நியமிக்கப் பட்டதால் கருத்தன் சிலுவை பர்னாண்டோ ஆனான் வேலாயி ஹெலன் ரொட்ரிகோவாக மாறினாள். சரி மண்ணிற்காக இத்தனை இழந்த பின்பாவது அவர்களது நிலை மாறியதா என்றால்? அதுவும் இல்லை….. முன்னிலும் மோசமானது. அடுப்பில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுந்த கதையாக மீனவர்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்யத் துவங்கினார்கள் போர்ச்சுகீசியர்கள்…. பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்தச் சமயத்தில் தான் போர்ச்சுகல்லில்  இருந்து சேசு சபையினர் கிறுத்துவம் போதிக்க வரலாயினர். அப்படி சேசு சபையால் அனுப்பப்பட்டவர் தான் சவேரியார். இவர் இங்கே வெறும் போதகராக மட்டும் இல்லாமல் போர்ச்சுகீசிய ஆளுகையின் கீழான இப்பகுதியின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.  கொஞ்சம் மனிதாபிமானம் நிறைந்த மனிதராக கடற்கரையோரும் வலம் வந்தவரால் மீனவ மக்களின் மரியாதைக்குரிய மனிதராகவும் இருந்துள்ளார். இவர் போர்ச்சுகீசியர்களின் அடாவடித்தனங்களை கொஞ்சம் அடக்கவும் செய்துள்ளார்.

மதுரையை ஆண்டு வந்த விஜயநகர பேரரசின் பிரதிநிதிகளான வடுகர்களுக்கு பரதவர்களின் மதமாற்றத்தால் முத்துக்குளித்துறையின் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அவ்வப்போது பரதவர்கள் மீது படையெடுப்புகள் நடத்தி அவர்களது குடியிருப்புகளை சூறையாடுவதும் பெண்களை மானபங்கப்படுத்துவதும் தொடர்ந்து நடந்துள்ளது.

முகமதியர்கள், போர்ச்சுகீசியர்கள், வடுகர்கள், டச்சுகாரர்கள் அதன் பின்னர் ஆங்கிலேயர் என தொடர்ந்த படையெடுப்புகளில் சிக்கி தவித்த போதும் சரி…. இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது வாரிக் கொடுத்த பின்பும் சரி….. எம்மக்கள் ஒருபோதும் இம்மண்ணை யாருக்காகவும் எத்தகைய நிலையிலும் விட்டுக் கொடுத்ததில்லை.

தங்கள் வாழ்வையும் வளத்தையும் வங்கக்கரைக்கே வாரிக் கொடுத்துவிட்டு இருண்டு போனவர்களின் வாழ்வில் சுதந்திரம் அடைந்த பிறகாவது விடியல் பிறந்ததா? என்றால்….. இல்லை!!! தொடர்ந்து இந்த தேசம் எம்மக்களை வஞ்சித்தே வந்துள்ளது.

பரவன்….. என்பது ஒரு ஜாதியல்ல…. அது ஒரு பழங்குடி இனம். ஆனால் இந்த தேசத்தில் பரதர்கள் பட்டியலினத்தவராய் கொள்ளப்படாமல் மிகவும் தாழ்த்தபட்டவர்களாகவே இடமளிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். வெறும் வாக்கு வங்கியாகவே பார்க்கப் படும் எம்மக்களின் கல்வித்தரம் குறித்தோ அல்லது சுகாதாரம் குறித்தோ அல்லது அடிப்படை கட்டமைப்புகள் குறித்தோ இந்த தேசத்தின் எந்தத் தலைவனுக்கும் அல்லது கட்சிக்கும் கவலையில்லை. இன்னும் கிறுத்தவ சபைகளின் கட்டுப்பாடுகளில் தான் எம் மக்களின் பெரும்பகுதி வாழ்ந்து வருவதாவது தெரியுமா?

இந்த தேசத்தின் கரைகளில் தம்மை தாமே ஒதுக்கிக் கொண்டவர்களை ஒட்டுமொத்த தேசமும் இதுவரை தீண்ட மறுப்பதற்கு பெயர் என்ன?

இப்படியாக தொடர்ந்து சமூகநீதி மறுக்கப்பட்டு வந்தபோதும் எம்மக்கள் எதர்காகவும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி இத்தனை உக்கிரமாய் போராடியதில்லை. இதுதான் எம்மக்கள் செய்திட்ட மாபெரும் தவறும் கூட. ஆனால் இன்று பல நூறு ஆண்டுகள் கழித்த போதும் தம் மண்ணிற்கு அணுவின் பெயரால் ஆபத்து என்னும் போது தம் பேதங்கள் கடந்து இணைந்துள்ளார்கள்.

மண்ணுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கும் அஸ்திரங்கள் அனைத்தையும் ஆளும் அதிகாரவர்ககம் போராடும் மக்களுக்கு எதிராக ஏவி வருகிறது. இவர்கள் கனம வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்காக சுரண்டுவதை எதிர்த்தால் நக்சலைட்டுகள் என தீவிரவாத முத்திரை குத்தப்படும். அணு உலைக்கு எதிராக போராடினால் அந்நிய நிதியுதவியின் தயவால் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என மீண்டும் அதே தீவிரவாதி முத்திரை.

இப்படி போராடும் பொதுமக்களை “தீவிரவாதி” என்று சொல்லி அச்சுறுத்தும் முதலாளித்துவ அடியாட்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இதில் உள்ளது….

எம்மக்கள் தம் மண்ணிற்கு ஆபத்து என்னும் நிலை ஏற்படுவதை உணர்ந்து கொண்டால் தங்கள் மண்ணைக் காப்பாற்ற எத்தகையை தியாகமும் செய்வார்கள் என்பதே அது!!!

சனி, 8 செப்டம்பர், 2012

கோல்கேட்டும்,கோட்னானியும்.....


இந்தியர்கள் உண்மையாகவே ‘பெருமை’ப்படலாம்!

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அகராதியில் சேர்பதற்கு மொழியியல் ஆய்வாளர்கள் கூடி முடிவெடுப்பார்கள். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகள் அடுத்த ஆண்டிலிருந்து அகராதியில் இடம்பெறும். பாலிவுட்,கோலிவுட் போன்ற வார்த்தைகள் செல்லமாக இப்படித்தான் இடம் பிடித்தன. அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் வெள்ளைமாளிகையிலிருந்து கொண்டே ரகசிய டேப் மூலம் வாட்டர் கேட் வளாகத்தில் உள்ள DNC கூட்டத்தை ஒற்றறிந்ததால் அவமானப்பட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து 1974ல் விலக வேண்டி வந்தது. அதிலிருந்து ‘வாட்டர்கேட்’ என்றாலே ஊழல் என்றாகிவிட்டது. அந்த வார்த்தை அகராதியிலும் இடம்பிடித்தது.

அதேபாணியில் “கோல்கேட்” (COALGATE) என்றால் ‘நிலக்கரி ஊழலுக்கு’ செல்லப்பெயர். கோல்கேட் என்றவுடன் கூடவே ‘கனிம ஊழல்’, இந்தியா, மன்மோகன்சிங் என்ற இணைப்பான்களையும் கணினியும், கணினி மூலம் சேகரமான அகராதிகளும் காட்டும். மன்மோகன் ‘வரலாற்று நாயகராகப்’ பதிவு செய்யப்பட்டு விடுவார்!

இந்தியாவின் அனைத்து கார்டூனிஸ்ட்டுகளுக்கும் ‘தீனி’ கிடைத்து விட்டது! இந்தியப் பிரதமர் பற்றிப் போடாத கார்டூன்படமில்லை ஆனாலும் டாக்டர் மன்மோகன் சிங் அசரவில்லையே!.....வழக்கம்போல். ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை. கவலைப்படவேண்டிய ஆழமான விஷயம்.
மாநில அரசுகளுக்கும் தனியார் முதலைகளுக்கும் மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஜூலை 2004 முதல் வெளிப்படையாக தெரிவிக்கப்படாதது புதைக்கப்பட்டு கிடக்கும் மர்மங்கள் இந்திய கண்ட்ரோலர்/ஆடிட்டர் ஜெனரலையே ஆட வைத்து விட்டது! 142 நிலக்கரி ப்ளாக்குகள் ஒதுக்கீட்டில் தனியார் அடித்த கொள்ளை லாபத்தைக் கேட்டால் தலைசுற்றும். அதாவது,ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு! விவரங்கள் வெளிப்படையாகவும் இல்லை;நியாயமாகவும் இல்லை. ஏலப்போட்டி முறையாக நடத்தப்படாததே இந்த முறைகேட்டுக்குக் காரணம். அதற்கான வழிகாட்டுதல்களும் இல்லை. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்தான் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பு என்னும்போது இன்னும் திடுக்கிட வைக்கிறது.

கனிமவளத்தைக் கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனங்கள் பற்றி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தில் இதை விசாரிக்க இடம்கொடுக்காமல் ரகளை செய்து வெளிநடப்பு செய்கின்றனர். விசாரணை வந்தால் பா.ஜ.க காலத்திலிருந்தே விசாரிக்க வேண்டி வருவதால் இதை மழுப்ப அவர்கள் வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மெகா ஊழல்கள் உட்கட்சிப் பூசலில் முடிந்து முடைநாற்றமடிக்கிறது.
வங்கி ஊழியர்களோ இதிர தொழிலாளர்களோ வேலை நிறுத்தம் செய்ய துவங்கினால் அரசு மீடியாக்களும்,கார்பரேட் நிறுவனங்களும்,சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்புகளும் இதனால் அரசுக்கு ஏற்படும் ‘தேசிய இழப்பு’ பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் ‘அநியாயத்தை’ பற்றியும் முதலைக் கண்ணீர் வடித்து தங்கள் கருத்தை இதர பிரிவு மக்களின் மீது திணித்து மூளைச்சலவை செய்வார்கள்.

2ஜி ஊழல் ரூ.1.76 லட்சம் கோடி என்றால்,அதைவிடவும் கூடுதல் இழப்பை தேசம் நிலக்கரி ஊழல் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தை மாற்ற இயலாது ‘புறக்கடைவழியாக’ நிலக்கரித் துறையையும் தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சத்தனம் இதில் வெளிப்படுகிறது. பொதுமக்கள் அக்கறையுடன் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் கூடாது என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களும் போதிப்பதன் ரகசியம் இதுதான். அதாவது இந்த “ஊழல் அரசியல்” குட்டு வெளிப்பட்டு விடும் என்ற ‘போபியாதான்’!

“அண்ணன் எப்போது சாவான்….திண்ணை எப்போது காலியாகும்” என்ற பழமொழியைப் பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.க.வுக்குப் பலத்த அடி!
”அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான்,பாருங்கள் இந்தியாவிலேயே மாடல் அரசு இதுதான்.” என்று விளம்பரம் செய்து வந்த குஜராத் மாநில அரசு பற்றிய ‘யோக்கியதை’ அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

2002 கோத்ரா சம்பவத்தை காரணமாக்கி குஜராத்-அகமதாபாத்-நரோதாபாடியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டது. இப்படியாக இனக்கலவரத்தைத் தூண்டி கூலிப்படையை வைத்து 97 பேரைக் கொலை செய்து பிணங்களை கிணற்றில் அள்ளிப்போட்டதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது யார் யார் என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்தது; அதன் அடிப்படையில் குஜாராத் சிறப்பு நீதிமன்றம் திருமதி.மாயாபென் கோட்னானி (28 ஆண்டுகள் சிறை) உட்பட 32 பேருக்குத் தண்டனை விதித்துள்ளது.

கலவரம் நடத்தி படுகொலை செய்த கோட்னானி எம்.எல்.ஏ 2004-ல் அமைச்சரானார்! அதுவும் மகளிர்/குழந்தைகள் நலத்துறை பொறுப்பு! குழந்தைகளையும்,பெண்களையும் கொல்லத் தலைமை ஏற்றிருந்த கோட்னானி பார்த்துக் கொண்டிருந்த தொழில் மகளிர் உடல்நல மருத்துவர்!... விசுவாசிக்குப் ‘பொருத்தமான பரிசளித்தவர்’ முதல்வர் நரேந்திர மோடி! கோட்னானியுடன் தண்டனை அடைந்தவர்களில் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப்பரிவார அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.


பத்தாண்டுகள் தாமதமானாலும் கூட, சோர்வடையாது போராடி இத்தீர்ப்பு வெளியாவதற்கு இடதுசாரிக் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டா செடல்வத் (பெஸ்ட் பேக்கிரி விஷயத்தை வெளிக் கொண்டு வந்தவர்) ஹர்ஷ் மந்தர் உள்ளிட்டோர்,”பைனல் சொலூஷன்” (இந்த ஆவணப் படம்தான் குஜராத் 2002 இனக்கலவரம் நடந்த பின் உடனடியாக, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகளைப் பதிவு செய்தது. பா.ஜ.க. தலைமை வகித்த மத்திய அரசு இப்படத்துக்குத் தடை விதித்தது. ஆனால், சளைக்காது இயக்குனர் ராகேஷ் ஷர்மா இதை உலகத் திரைப்பட விழாக்களில் திரையிட்டு உண்மையை உணர்த்தியதால் சங்கப்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்து வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது.
UPA அரசு தடையை விலக்கி இப்படத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கியது.)

ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா போன்றோர் காரணமாக அமைந்தனர். குஜராத் கலவரங்கள் விசாரணை மூலம் எவ்வாறெல்லாம் வன்முறை காலத்தில் அதுவரை சமூகத்தில் பாச நேசத்துடன் பழகிவந்த சிறுபான்மை மக்கள், திடீரென ‘இதரர்களாகப்’ பாவிக்கப்பட்டு பிரித்தொழிக்கப்படுவார்கள் என்ற படிப்பினைகளை நாம் பெற முடியும்.(காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே வேண்டுமென்றே தன் கையில் “இப்ராஹீம்” எனப் பச்சை குத்தியிருந்தான்! அவன் நினைத்தவாறே புணே, மும்பையில் உடனடியாக கலவரங்கள் நிகழத் துவங்கின! நேரு அரசு நல்லவேளையாக உடனடியாகத் தலையிட்டு கலவரத்தைக் கட்டுப்படுத்தியது.) எல்லாக் காலங்களிலும் சமூக நல்லிணக்கம் பேணுவது நமது தலையாய கடமை.

(நன்றி : BANK WORKERS UNITY/SEP’12 ISSUE)

புதன், 5 செப்டம்பர், 2012

”வெற்றி என்றால் என்ன?”


சமீபகாலங்களில் நம் வாழ்க்கைப் பாதையையே தீர்மானிக்கும் ஒற்றைச் சொல்லாய் ஆகிப்போய் இருக்கிறது இந்த ”வெற்றி” என்னும் வார்த்தை.
மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்….. கேள்விகளற்று பொருள் சேர்க்க மனிதக் கூட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது. “வெற்றி” என்னும் மாயச் சொல் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.

’வாழ்க்கையில் “வெற்றி” பெற நினைப்பது நியாயம் தானே? அப்படிப்பட்ட வெற்றியை அடைய தியாகங்களும் தேவைதானே? இதில் தவறெங்கே வந்தது?’

‘நேர்மையான உழைப்பால் முன்னேறி இவைகளை அடையும் ஒருவனது செயலை அல்லது “வெற்றியை” எப்படி தவறென்பது?’

இந்தக் கேள்விகளை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் தர்க்க நியாயம் உள்ள கேள்விகளாகவே தெரியும். ஆனால் இங்கே தவறு “வெற்றி” என்ற சொல்லுக்கு நமக்கு கற்பிக்கப்பட்ட அர்தத்தில் தான் இருக்கிறது. ஆம்! அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியை அடைவதும் அதன் மூலமாக அபரிவிதமான பொருள் குவிப்பதும் நம் நுகர்வு வெறிக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் தடங்கலற்ற ஒரு வாழ்க்கை அமையப்பெறுவதுமே இங்கே ”வெற்றி” என சொல்லப்படுகிறது.

இது தான் ஒட்டுமொத்த மனித சமூகத்தையே தனித்தனி தீவுகளாய் மாற்றி “தான், தன் குடும்பம், தன் உலகம்” என இயங்கச் செய்கிறது. சக மனித வாழ்வைப் பற்றியோ அல்லது தான் வாழும் சமூகத்தைப் பற்றியோ எந்தவித கவலையுமின்றி தன் இருத்தல் குறித்த ஒற்றைச் சிந்தனையோடு மட்டுமே ஒருவனை பயணிக்க செய்கிறது.
”மனிதன் என்பவன் சமூக மிருகம்” இதுதான் இயற்கையின் நிதர்சனம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்….. இந்த உலகில் உயிர்களே இன்றி ஒற்றை மனிதனாய் நாம் வாழ நேர்ந்தால்….. நம்மால் அப்படி எத்தனை மணித்துளிகள் வாழ்ந்துவிட முடியும்?

CAST AWAY என்றொரு ஆங்கிலப்படமுண்டு அதில் கதையின் நாயகன் ஒரு விபத்தின் காரணமாய் மனிதர்களே இல்லாத ஒரு தீவில் கரையொதுங்க நேரிடும். அப்படி தீவில் தன்னந்தனியாக வாழ நேர்ந்தவன் அடையும் இன்னல்களும்,தவிப்புகளுமே அந்தக் கதையின் முக்கிய பகுதியாகும். ஒருவேளை உணவுக்காக அவன் நடத்தும் போராட்டங்களும், மனிதர்களற்ற தனிமையை அவன் கடக்க முடியாமல் எவருடனும் உரையாட முடியாமல் தவியாய் தவித்து ஒருகட்டத்தில் ஒரு பந்திற்கு மனித முகம் வரைந்து அதனுடன் அவன் உரையாடத் துவங்குவான். அதனை ஒரு உயிராகவே பாவித்து தன் வாழ்நாளை அதுனுடன் கழிக்கத் துவங்குவான். மிகப்பெரும் போராட்டத்திற்கு பின்பு தன் உயிரையும் பணயம் செய்து ஒருவழியாக ஒரு மரக்கலம் ஒன்றை உருவாக்கி உக்கிரமான அந்தக் கடலில் செலுத்தி மனிதக் கரையை நோக்கி பயணிக்கத் துவங்குவான். இதுதான் மனிதன். இங்கு தனித்திருத்தல் சாத்தியமற்றது. சகமனிதர்களோடு சேர்ந்து சமூகமாகவே ஒருவனால் வாழ முடியும்.

ஆனால் நாமோ எவ்வளவு குரூரமாய் வாழப்பழகிக் கொண்டோம்……
ஊருக்கே உணவழித்த உழவன் வயிறு காய்ந்து வாழ நம்பிக்கையற்று செத்து மடியும் போது கூட அதனை ஒரு செய்தாய் நம்மால் இயல்பாக கடந்து செல்ல முடிகிறது. அன்றாடம் நாம் பயணிக்கும் பாதையில் கந்தல் மனிதர்களாய் இந்தச் சமூக ஓட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு தாம் செய்வதையே என்னவென்று பகுத்து அறியமுடியாத நிலையில் வீதிகளில் அலைந்து திரியும் ஜீவன்களை எந்தவித குற்ற உணர்வுமின்றி அருவருப்புடன் நம்மால் கடந்து செல்ல முடிகிறது.
கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்பர். ஆனால் அதனினும் கொடிது வண்ணக் கனவுகளோடு துள்ளித் திரிந்து ஓடியாடி பயில வேண்டிய பருவத்தில் வறுமையின் பெயரால் ஏட்டுச் சுரக்காயும் எட்டாக் கனியாகிப் போன குழந்தைப் பருவமன்றோ? அப்படிப்பட்ட கோடிக்கணக்கான நம் தேசத்து குழந்தைகளை பற்றி என்றாவது நாம் சிந்தித்துள்ளோமா?

இந்த தேசத்தின் சாபமான சாகா வரம் பெற்ற சாதி என்னும் கொடூரனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாய் பிரிந்து கிடக்கும் அவலத்தைக் கூட பெருமையாக அல்லவா கொண்டாடித் தொலைகிறோம்.
அரசியலின் பெயரால், அதிகாரத்தின் தயவால்,பெரும் முதலாளிகளின் லாப வெறியால் தினம் தினம் நாம் சுரண்டப்படுவதை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு வாழப்பழகி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாய் மனிதன் என்னும் சமூக மிருகம் சுயநல மிருகமாய் மாறிக் கொண்டு வருகிறது.

“இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்குக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”- பாரதி.

இந்த ரௌத்திரத்தை அல்லவா தொலைத்து விட்டு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்? சக மனிதனைப் பற்றியோ அல்லது நாம் சார்ந்த நம் சமூகத்தைப் பற்றியோ சிந்திக்க விடாமல் வெற்றி என்னும் மாயையை நாம் துரத்திச் செல்ல காரணமான கயவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டாமா? நம் வாழ்வின் அற்புதங்களை உணரவிடாமல் பொருள் குவிப்பதை நோக்கி நம்மை திசைமாற்றிய சதிகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இதையெல்லாம் புரிந்து கொள்ளவோ அல்லது சரி செய்யவோ யாருக்கும் நேரமின்றி அவரவர் வாழ்வை சுமந்து கொண்டு வேகவேகமாய் ”வெற்றி”யை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்தியாவில் இந்த வெற்றியை நோக்கிய ஓட்டம் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதார கொள்கையின் புகுத்தலுக்குப் பின்பே அதிவேகப் படுத்தப் பட ஆரம்பித்தது.
நாட்டின் குடிமக்கள் நுகர்வோராய் மாற்றப்பட துவங்கிய காலக்கட்டமது. வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கும் போக்கிலிருந்து ஆசைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகரும் வெறியை நமக்குள் ஊடகங்களின் துணை கொண்டு உருவாக்கியது பெரும் வர்தக நிறுவனங்கள்.

இந்தச் சந்தைப்படுத்தலை எதிர்கொள்ளவும், பெருகிப் போன தேவைகளை ஈடு செய்யவும் நாம் “வெற்றி” என்னும் வெறியோடு ஓடிக் கொண்டிருப்பது அவசியம் என நம்பவைக்கப் பட்டுள்ளோம்.

தனி மனித சொத்து குவிப்புகள் சமூக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். அது சமூக ஏற்றத் தாழ்வுக்கே இட்டுச் செல்லும். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் சமூக நியாயங்கள் சீர்குலைந்து போவது இயல்பாய் அரங்கேறத் துவங்கும்.

ஒரு ஜனநாயக தேசத்தில் தன்னைச் சுற்றி அரங்கேறும் சமூக அவலங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தம் சுயதேவையே பிரதானம் என இயங்குவதற்கு பெயரும் “தீவிரவாதம்” தான்.

ஆம்! இப்படி வெற்றி வெறி பிடித்து ஓடும் ஒவ்வொருவரும் தீவிரவாதிகள் தான். இந்த உலகம் நமக்கே நமக்கானது மட்டும் அல்ல. நாம் மட்டுமே உலகமும் அல்ல. நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர மூச்சிற்கு பின்னால் இரத்தமும்,சதையுமான தியாகங்கள் நிறைந்த மிகப்பெரும் வரலாறுகள் மறைந்திருக்கிறது. தம் வருங்கால சந்ததிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டி தம் வாழ்வைப் பற்றியோ அல்லது தன் இன்பங்களை பற்றியோ சுயநலமாய் சிந்திக்காமல் செத்து மடிந்த லட்சகணக்கான தியாகிகளுக்கு செய்யும் துரோகம் அல்லவா இந்த சுயநலப் பயணம்?

வாழ்க்கை என்பது போட்டியல்ல போராடி வென்று தீர்பதற்கு. வாழ்க்கை என்பது ஒரு கூட்டு இயக்கம். நம்மை வாழவைக்கும் நம்மோடு வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நம் வாழ்வில் பங்கு உள்ளது. ஒட்டுமொத்த சமூக மேம்பாடே தனிமனித வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நிலையான வழி. அதுதான் சரியானதும் கூட.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!-பாரதிதாசன்.

சனி, 26 மே, 2012

என்று தணியும் எந்தன் சுதந்திர தாகம்

அன்பானவர்களுக்கு

தியாகமே வாழ்வாகி விடுதலைப் போரிலும், இடதுசாரிகள் இயக்கத்திலும் பெரும் பங்களிப்பு செய்த வீராங்கனை, எளிய தாயுள்ளம் கொண்ட உன்னதத் தோழர் மீனா கிருஷ்ணசாமி தமது 90 ம் வயதில் இன்று காலை பிரியா விடை பெற்றார்.....
மகத்தான அந்தத் தோழர் நினைவுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்..

                                           

தேசியத்தின் விளைநிலமான மதுரையில் 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தேன். அக்கால கட்டத்தில் மதுரையின் தேச பக்தி வெள்ளம் யாரையும் தனக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ருக்மணி லெட்சுமிபதியும், சரோஜினி நாயுடுவும் தங்கள் தோளில் கதரைப் போட்டுக் கொண்டு, கெஜக்கோலுடன் வீடு வீடாகச் சென்று கதர்த் துணியை விற்பனை செய்து வந்த காலமது.

எனது தந்தையார் கோபால்ராவ் எனது சிறுவயதின்போதே காலமாகிவிட்டதால், தாயார் லக்ஷ்மிபாயே குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

எனது தாயார் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்திலும், சுதேசி துணி மறியலிலும் (அந்நிய துணி பகிஷ்காரம்) தீவிரமாக ஈடுபட்டவர். ஒரு முறை எனது தாயார் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டபோது அவரையும் அவரது தோழி சொர்ணம்மாளையும் தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி கைது செய்து வேனில் ஏற்றினான. வேன் ஊருக்கு வெளியில் வரும்வரை அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தான் கோவிந்தன். பிறகு அவர்களைப் பிறந்த மேனியாக்கிக் காட்டில் ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டுச் சென்று விட்டான். இருவரின் அலறலையும் கேட்டு ஓடிவந்த கிராமவாசிகள், அவர்களின் மானம் மறைக்கத் துணி கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட எனது தாயார் தேசியப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இத்தகைய தேசபக்தி மிகுந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததால், எனக்கும் இயற்கையாகவே தேசிய உணாச்சி அதிகமிருந்தத

வாழ்க்கையில் ஜான்சிராணி லக்ஷ்மிபாய், சிட்டகாங் வீராங்கனை கல்பனாததைப் போன்று நானும் சாதனைகள் செய்யவேண்டும்; வெள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று சபதமெடுத்தேன்.

தேசிய உணர்ச்சி அதிகமிருந்ததால் பன்னிரெண்டு வயதாக இருக்கையில் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டேன். நீதிபதியிடம் 'பதினாறு வயது' என்று பொய் சொல்லிச் சிறை சென்றேன். பத்து நாட்கள் மதுரை சிறையில் வாசம் செய்த பிறகு கேரளம் கண்ணனூர் சிறைக்கு மாற்றினார்கள்.

நிலாவே வா!

கண்ணனூர் சிறையில் வெளியுலகத்தையோ, வானத்தையோ பார்க்க முடியாது. ஒரு நாள் வார்டன் அம்மாவிடம், "நிலாவைப் பார்க்க ஆசையாக இருக்கிறது" என்று சொன்னேன். மனிதாபிமானமிக்க அந்த வார்டன் எல்லோரும் உறங்கியபிறகு கதவைத் திறந்து எனக்கு நிலாவைக் காண்பித்து எனது ஆசையை நிறைவேற்றினார்கள்.

மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது சுதேசி இயக்கத்திற்காக என் காதில் போட்டிருந்த சிறு கம்மலைக் கழற்றி அவரிடம் தந்தேன். அவர், "இனிமேல் நீ நகையே போடக் கூடாது" என்று என்னிடம் சொன்னார். அதன் பிறகு நானும் நகைகள் அணிவதையே நிறுத்திவிட்டேன்.

அப்போது காந்தி காதர், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி படித்தல் ஆகிய தன் நான்கு அம்சத் திட்டத்தை நாடெங்கும் பிரயாணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார். அந்த திட்டத்தின்படி, இந்தி படிக்க தலைவர்கள் என்னைத் தேர்வு செய்தார்கள்.

ஞானயாத்திரை

பி.ராமமூர்த்தி வழிகாட்டுதல்படி 'ஞானயாத்திரை' என்ற பெயரில் நானும் சில இளைஞர்களும் பிரபல இந்தி கவிஞரான மகாதேவி வர்மா நடத்தி வந்த 'மகிலா வித்யா பீடத்தில்' சேர்ந்து இந்தி படிக்க அலகாபாத் சென்றோம்.

மகாதேவி வர்மா, பதினான்கு வயதான நான் இந்தி படித்தால் மட்டும் போதாது என்று கூறி, முறையான கல்வியும் பயில்வதற்காக ஆறாம் வகுப்பில் சேர்த்தார். ஏழு ஆண்டுகள் அலகாபாத்தில் கல்வி பயின்று, பனாரஸ் மெட்ரிக்கில் தேறினேன். இந்தியில் உயர் பட்டமும் பெற்றேன்.

வாழ்க்கைப் பயணத்தில் எனது துணைவராக இணைந்த திரு எஸ் கிருஷ்ணசாமி அப்போது காசியில் உள்ள பனாரஸ் சர்வகலாசாலையில் தேசிய கல்வி பயின்று வந்தார். என்னை சந்தித்துப் பேச அவர் சில சமயம் அலகாபாத்திற்கு வருவதுண்டு.

காந்தி ஆசிரமம்

1939ம் ஆண்டு மதுரைக்குத் திரும்பினேன். அப்போது வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காந்தி ஆசிரமத்தில் சேவை புரிந்தேன். பல தேசிய தலைவர்களை அருகிலேயே பார்க்கவும், அவர்கள் உரையைக் கேட்கவும் அறிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

ஒருமுறை நேருஜி சீனப் பயணம் செய்துவிட்டு வருகையில் ஒரு பேனாவிற்குள் அடங்கும் பட்டுத் துணியை வாங்கிவந்து எங்களிடம் காண்பித்து எங்களை அசர வைத்தார்.

செய் அல்லது செத்துமடி!

1942ம் ஆண்டு ஆகஸ்டு கிளர்ச்சியில், காந்தி கைதாகும்போது அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினோம்.

'செய் அல்லது செத்துமடி' (Do or Die) என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வார்தாவின் வீதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களுக்குக் கிளர்ச்சியூட்டினோம்.

1942
ல் 'வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு ஜபல்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். பதின்மூன்று மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 1943ல் விடுதலையாகி மீண்டும் மதுரைக்கு வந்தேன்.

காங்கிரசிலிருந்து கம்யூனிசத்திற்கு

அச்சமயம் மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். ராட்டையும், கதரும், தீண்டாமையும் மட்டும் எப்படி சுதந்திரத்தை வாங்கித் தரும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர். அக்கேள்வி என்னுள்ளும் எழுந்தது. சிறையிலிருக்கையில் பொதுவுடைமை நூல்களை நிறைய படித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின்பால் மெல்ல மெல்ல பற்று உண்டாயிற்று.

தோழர் எஸ் கிருஷ்ணசாமி அப்போது மதுரையில் சோஷியலிஸ்ட் கட்சியின் கிளையினை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றி வந்தார். காலத்தின் கட்டாயத்தால் சோஷியலிஸ்ட் கட்சியே மெல்ல மெல்ல 'கம்யூனிஸ்ட்' கட்சியாக உருவானது. நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, சுரண்டல் இல்லாத சமுதாயம் உருவாக்க உறுதி கொண்டேன்.

பெப்பர்மின்ட் கல்யாணம் !

1944ல் மதுரையில் வைத்து எனக்கு திருமணம் நடந்தது. கல்யாண நாளன்று காலையில் மறியல், ஆர்ப்பாட்டம், மாலையில் கல்யாணம் என்று முடிவு செய்திருந்தோம். அன்று காலை மறியலில் ஈடுபட்டதற்காக வேண்டுமென்றே கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டேன்.

 அன்று மாலைப் பொழுதில் எனக்கும், எஸ் கிருஷ்ணசாமிக்கும் தோழர் பி ராமமூர்த்தி தலைமையில் கே பி ஜானகி அம்மாள் மாலை எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது. திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் நாங்களிருவரும் மாலை மாற்றிக் கொண்டோம்.

M.R.S. மணி என்ற தோழர் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பெப்பர்மின்ட் வாங்கி வந்து கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்து விழாவை நிறைவு செய்தார். எங்கள் கல்யாணம் எளிமையான கல்யாணம்.

அன்றிரவு அம்பாள் ஓட்டலில், எனக்கும் எனது கணவருக்கும் தலைவர் பி ராமமூர்த்தி ஒரு தோசையும், காப்பியும் வாங்கித் தந்து கல்யாண விருந்து வைத்தார்.

பஞ்சும் பசியும்

1944 , 45 ல் கே.பி ஜானகி அம்மாளுடன் சேர்ந்து ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரிசி, பருப்பு, விறகு, மண்ணெண்ணெய்க்காகப் போராட்டங்கள் நடத்தினேன்.

குறிப்பாக பெண்களின் பசியைப் போக்க, மதுரை ஹார்வி மில்லில் பனி புரியும் பெண் தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு குறிப்பிட்ட தினத்தன்று ஊர்வலத்திற்கு வர ஏற்பாடு செய்தோம்.

 ஏற்கெனவே சொல்லிவைத்தபடி, மில்லின் பெண் தொழிலாளர்கள் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு தங்களது ஷிப்டு முடிந்ததும் தலைகளை உதறாமல் அப்படியே பஞ்சுத் தலையுடன் ஊர்வலமாகத் திரண்டு வந்தனர்.

 மதுரை ஆற்றுப் பாலம் முழுவதும் வெண்பஞ்சுத் தலைகளாக இருந்தது. அந்த பஞ்சுத் தலைகள் பனித்தலைகளாகத் தெரிந்தன.அந்த ஊர்வலத்தைப் பார்க்கையில், இமயமலையே நகர்ந்து வருவதைப் போலிருந்தது. ஊர்வலமாகச் சென்று நாங்கள் கலெக்டரைச் சந்தித்துப் பேசி கஞ்சித் தொட்டிகளைத் திறக்கச் செய்தோம்.

 மக்களின் தோழன்

 பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று அவர்களின் துயரங்களைத் துடித்தது அன்று கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. ஒவ்வொரு நாளும் விடியற்காலை ஆறு மணிக்கே ரேஷன் கடைக்குச் சென்று ஏழைகளுக்கு அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிப்போம். அரிசி மூட்டைகளும், எண்ணெய் டின்களும் காலியான பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம். இந்த இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர் எம்.ஆர்.வெங்கட்ராமன்.

இந்த இயக்கங்கள் தான் கம்யூனிஸ்டுகள் தேச விரோதியல்ல, மக்களுக்காக உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள், கண்ணியமானவர்கள் என்ற எண்ணப் போக்கை மக்களிடம் தோற்றுவித்தது.

1945ல் எனது கணவர் எஸ் கிருஷ்ணசாமி பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகையில் ஹார்வி மில்லில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் கலந்து கொள்கையில் எனது மகன் மோகனுக்கு ஒரு வயது. மேலும் என் வயிற்றில் மூன்று மாதக் கரு. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எனக்கு கருச் சிதைவு ஏற்பட்டது. ஹார்வி மில் நிர்வாகத்தின் தாக்குதலைத் தடுத்தபோது, ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்குதான் பிற்காலத்தில் மதுரை கம்யூனிஸ்ட் சதி வழக்கு என்று அறியப்பட்டது. இந்த வழக்கிற்காக கட்சியின் முக்கிய தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித் தேடி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஆறேழு மாதங்களாகச் சிறையிலிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி பெண்களால் தான் நடத்தப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் விடுதலையாகி வரும் வரை, ஆறேழு மாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றி அதன் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்த பெருமை பெண்களையே சாரும்.

செங்குருதிப் புனல்

1948-50 காலகட்டத்தில் இந்தியாவெங்கும் எதேச்சதிகாரம் கோலோச்சியது. தமிழகத்தின் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து இரத்தம் சிந்திய காலமது. குறிப்பாக கடலூர் சிறையில் கம்யூனிஸ்டுகளின் செங்குருதி புனலாக ஓடியது. கட்சியின் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

வறுமையும் சிவப்பும்

1950ல் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து பார்த்தால், கட்சியிடமே பணமில்லை; எங்களிடமும் பணமில்லை; வயிறு காய்ந்தது; வறுமை துரத்தியது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை அதிகமானது.

 இந்தி பிரச்சார சபாவில் டீச்சர் வேலை கேட்டுச் சென்றேன். கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதி அதில் என்னைக் கையெழுத்திடச் சொன்னார்கள். கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு வெளியே வந்தேன். வறுமையும், பசியும் நிழலைப் போல் எங்களைப் பின் தொடர்ந்து வந்த காலமது. இந்தி ட்யூஷன் எடுத்துக் குடும்பத்தை சில காலம் ஓட்டினேன். பின்னர் எனது கணவர் ஜனசக்தியிலும், நியூ செஞ்சுரி புத்தக நிலையத்திலும் நிர்வாகியாகப் பணியாற்றினார். நிலைமை சிறிது சீரானது.

 நல்ல டீச்சர்

 எனக்கும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் உதவியால் அவரது சிந்தாதிரிப்பேட்டை ஹை ஸ்கூலில் இந்தி டீச்சர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளியிலேயே இருபத்தியெட்டு ஆண்டுக்காலம் பணியாற்றி 1980ல் ஓய்வு பெற்றேன். அந்த வருடத்திலேயே எனது கணவரையும் இழக்க நேரிட்டது.

 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டபோது நானும் எனது கணவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே எங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தோம். கொள்கைகளில் மாறுபட்டாலும், எங்களுடன் எம் ஆர் வெங்கட்ராமனும், பி. ராமமூர்த்தியும் இறுதிவரை நட்புறவோடு தான் பழகி வந்தனர்.

 சுதந்திர தாகம்

 காலங்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்காகவும், பாட்டாளிகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்ட எனக்கு இன்று கட்சி இயக்கங்களில் பங்கு பெறாமல் இருப்பது சந்தோஷத்தைத் தரவில்லை. கண்ணொளி பாதிக்கப்பட்டு இருப்பதால், எனது குடும்பத்தினர் நான் தனியாக வெளியே போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர். அவர்களுக்கு என்மேல் அவ்வளவு அக்கறை.

 ஆனால் சின்னப் பிள்ளைகளை வெளியே போகக் கூடாது என்று சொல்லும்போது அவர்களுக்கு வருமே கோபம், அதைவிட பல மடங்குக் கோபம் எனக்கு வருகின்றது. என்ன செய்வது? காந்தி வாழ்ந்த காலத்தில் பிறந்த எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சுதந்திர தாகம் தணிந்து விடுமா?

 எழுத்தாக்கம்: ராஜன் பாபு (இந்தியன் வங்கி)

நன்றி: பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி: ஆகஸ்ட் 2006
தொகுப்பு : எஸ் வி வேணுகோபாலன்