வியாழன், 7 ஜனவரி, 2016

ஒரு ஆண் எப்போது பிறக்கிறான்?
அவளது தொப்புள் கொடியில்
இருந்து பிரித்தெடுக்கும் போதா?-அல்லது
முலைக்காம்பை பிடித்து
பால் அருந்த துவங்கிய பின்பா?
ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்?

விரல் சூப்பியபடி வழியும் எச்சிலோடு
திரியும் போது அவள் காக்கா கடி கடித்து
தரும் மிட்டாயை திங்கும் போதா?-அல்லது
’கல்லா மண்ணா விளையாடுவோமா’ என்னும் போது
அவள் ‘வேணாப்பா நொண்டி லாடுவோம்பா’ என்னும் போதா?
ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்?

‘எக்கா கவிதா இருக்கா?’
‘இல்ல தம்பி அவ அப்பா ஏசுவாங்க’ என நாசுக்காய் சொல்லி
படாரென்று கதவை சாத்தியவளிடம்.
‘ஏம்மா இப்படிச் சொன்ன?’ என கேட்கும் மகளிடம்
‘இரு எய்த்து பேசுர வாய கிழிச்சு உப்பு வைக்கிறேன்’ என்பது  
கதவிடுக்குகள் வழியே நம் செவிக்குள் நுழையும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

குருகுருவென ரோமங்கள் துளிர்விடும் போதா?
குரலுடைந்து நண்பர்களோடு
‘எல உனக்குமால?’- என வினவும் போதா?-அல்லது
‘இத்துணூண்டு கெடந்தவ நேத்து வயசுக்கு வந்துட்டாளாமே-ல?
என கிசுகிசு பேசும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

’எல அவ ஏன் ஆளு….
நீ மரியாதையா சோலியப் பாரு’ என மிரட்டும் போதா?-ஆல்லது
‘எப ஒம் பிரண்டு புரிஞ்சிக்க மாட்டாளா…
நா அவள எவ்ளோ லவ் பண்ணுரம்னு’
‘நீ வேற தேவையில்லாம ஏடகூடமா பேசாத…
அவ அந்த டைப் இல்ல…
இனும எங்கிட்ட இதுமாறி பேசாத..’என்றபடி
தோழி தன் கண்ணீரை மறைக்க முயன்று
தோற்றுப்போகும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

‘எம்மா… உனக்கு வேற வேலையே இல்லயா
எப்ப பாரு நொய்யி நொய்யின்னு..
மனுச(ன்) இருக்குற கடுப்பு புரியாம’ என்றபடி
அவள் தந்த சோற்று தட்டை விசிறி அடிக்கும் போதா?-அல்லது
‘என்னடீ உம்மவன் போக்கே சரியில்ல’- என தந்தை தாயிடம்
எச்சரிக்கும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

’ஏண்டா கல்யாணம் வேண்டாம் வேண்டாமுங்குற?
எவளையாவது லவ் கிவ்வு பண்ணி தொலைக்கிறியா?’
‘எல மாப்ள வீட்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு
ஒரே டார்ச்சர்-ல..’
‘ஏம் மாப்ள செல்பு எடுக்கலையா?’ என நண்பன்
கேலி செய்யும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

‘சார் எங்க வீட்ல அவளுக்கு ஆள் நாத்தமே ஆவ மாட்டைக்கு..
எங்கம்மாளும் புரிஞ்சிக்காம நைய்யி நைய்யின்னு வாராக
ரெண்டுக்கும் நடுவுல நான் கெடந்துகிட்டு லோல்படுறேன்’
என சகாவிடம் புலம்பும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

வீடு வாங்க கையில் கழுத்தில் கிடந்ததை
அடகு வைக்கும் போதா?-அல்லது
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க
கால்கடுக்க தவம் கிடக்கும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

சுருட்டி விட்டு அழகுபார்த்த மயிர்
மண்டையை சொட்டையாக்கி சென்ற பின்பா?-அல்லது
உருக்கு போன்று இருந்த உடலை கவனிக்க நேரமின்றி
வீங்கிப் பெருத்து தொந்திகள் தொங்கிய பின்பா?-அல்லது
மருத்துவர் வளைத்து வளைத்து எழுதிய மருந்துகள்
மூன்று வேளை உணவாய் மாறி
சர்க்கரையும், உப்பும் சமநிலை தவறி
விடியலின் பொழுதை
‘தஸ்ஸு புஸ்ஸென’ நடை பயிற்சியோடு
எதிர் கொள்ளும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

ஊராரிடம் சான்றிதழல் வாங்க…
கழுத்து முட்டும் கடனெடுத்து
தாம்தூமென திருமணமெடுத்து
பார்த்து பார்த்து வளர்த்த மகளை
கண்ணீர் வடிய பிரியும் கணத்திலா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

காலம் புணர்ந்து முதமை தரித்து
வெள்ளிக் கம்பிகள் கலைந்த பொழுதில்
‘இந்தாங்க இந்த மாத்துரைய சாப்பிடுங்க…
மொதல்ல அந்த கைய மொறையில இருந்து எடுங்க…
என்னத்த யோசிச்சுகிட்டு கெடக்கீங்க’ என்றவளிடம்
கரங்களைப் பற்றி….
அவள் முகத்தை வாஞ்சையோடு ஏறிடும்போது
அந்த மெல்லிய புன்னகையை
உதட்டின் ஓரம் ஒதுக்கிவிட்டு
‘இது என்ன…? புள்ள இல்லா வீட்ல கிழவன்
துள்ளி வெளாடுன கதையால்ல இருக்கு’ என
பொய்கோபம் கொள்ளும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

நிச்சயமாய் தெரியவில்லை… ஆனால்
ஒன்று மட்டும் நிச்சயம்!!
ஒரு ஆண் பிறக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்…
நிஜமாகவோ… நினைவாகவோ….
ஒரு பெண் அவனுக்குள் பிரவேசிக்கின்றாள்!!
ஒருபோதும் பெண்ணின் தயவின்றி ஆண் பிறப்பதில்லை!!
ஏனெனில் ஆணின் உள் வடிவம்
அவனுளிருக்கும் பெண்மையாலே கட்டப்பட்டுள்ளது !!!!