ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜமீலாவும்…. நானும்….!!!


ஜமீலா…. கடந்த மூன்று நாட்களாய் எனக்குள் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். நான் ஒன்றும் அத்தனை பலவீனமானவன் அல்ல…. ஆனாலும் அவளது நினைவுகளால் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது மனைவியிடம் கூட அத்தனை இயல்பாய் என்னால் நடந்து கொள்ள முடியவில்லை…. அதற்காக ஒரு துளி குற்றவுணர்வும் எனக்குள் எழவில்லை. ஆம்! அந்தத் துணிவைவும் ஜமீலாவே எனக்கு தந்தருளியுள்ளாள்.

ஸ்டெப்பி புள்வெளிகளில் ஜமீலாவுடன் கரம் கோத்துக் கொண்டு ஏகாந்தமாய் திரிகிறது மனம்…. எங்கோ மறைவாய் நின்று கொண்டு (கிச்சினே) பாலா எங்களை தன் தூரிகையில் ஓவியமாக்க கூடும் என எண்ணும் போதே எத்தனை இன்பமாய் இருக்கிறது.

நினைக்க நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது….. வாழ்வின் எந்த கணத்தில் இது போன்ற இன்பங்கள் பூக்கும் என யாரால் அறுதியிட்டு கூறமுடியும்? முதன் முறையாய் ஒரு நீர்க்குமுழியை தீண்டிய ஒரு குழந்தையின் விரலைப் போல் தவிக்கிறது மனம். உங்கள் விரல்களுக்கும் ஜமீலாவை புரட்ட ஒரு வாய்ப்பு கிட்டுமானால் நீங்களும்…. என்னைப்போல் அல்ல என்னைவிட மோசமாக அவள் நினைவுகளில் அலைகழிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயம்.

ஜமீலா…. ஒரு பெருங்கொண்ட குடும்பத்தில் வாக்கப்பட்டவள் தான். அவளது கணவனோ நாட்டுக்காக யுத்தகளத்தில் ஆயுதமாகிப் போனான். ஜமீலாவும் ”ஒழுக்கம்” என போதிக்கப்பட்ட….படும் ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூக கட்டமைப்புகள் குறித்த ஐயவுணர்வும், நம்பிக்கையும் கொண்டவள் தான். ஆனால் காதல் இவை எல்லாவற்றையும் கடந்த அற்புதமான உணர்வல்லவா? காதலை உந்துவது வெறும் காமம் தான் என்றால் காதலுக்கு இத்தனை எதிர்ப்புகள் இராது. காதலில் காமம் ஒருநிலை! ஆனால் காமத்தின் நிறைவால் காதல் வடிவதில்லை.
”கிச்சினே” பாலாவுக்கும் தன் அண்ணன் மனைவியான ஜமீலா மீதிருந்தது காதல் தான். அந்தக் காதல் தான் அவளை காடையர்கள் சீண்டுகிற போது அவனை சினம் கொள்ளச் செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் தோள்களில் சாயும் போது அவனை ரசிக்க செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் கரம் பற்றி ஊரைவிட்டு செல்லும் போது துடித்து தவித்து உடைந்து வெளிப்படுகிறது.

காதல் அரும்பும் கனங்களும் ஆராய்ச்சிக்குரியவை தான். நெஞ்சத்து படபடப்பும், பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகளும் மட்டுமே காதலை உணர்த்தும் கனங்களாய் எல்லோருக்கும் இருப்பதில்லை. இயல்பான பகடிகளும், நேர்மையான அலட்சியங்களும் ஏன் சிலருக்கு காரணங்களற்ற வெறுப்பும் கூட காதல் அரும்பும் கனங்களாய் மாறிவிடுவதுண்டு.
ஜமீலாவுக்கும் அப்படித்தான் ஒரு புரியாத கணத்தில் தானியார் மேல் காதல் அரும்பிப் போகிறது. தானியாரின் அலட்சியமும், உணர்வுகளை வெளிப்படுத்தாத குணமுமாய் அவரைப் பற்றிய அவளது பிம்பங்களை ஸ்டெப்பி புள்வெளிகளில் அந்த ஏகாந்தமான மாலைப் பொழுதில் அவர் தன் பாடல்களால் உடையச் செய்யும் போது அவள் தன் காதலை உணர்கிறாள். இத்தனைக்கும் அவர் காதல் பாடல்களை பாடவில்லை…. பெரும்பாலும் உணர்வுகளைத் தூண்டும் தேசபக்தி பாடல்களே அவை. காதல் ஒரு புரியாத புதிர் தான்!

மனித நம்பிக்கைகளையும், சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்தெரியும் காதல் இழிவாய் பார்க்கப்படுவதும் ஒருவித மூடநம்பிக்கையே! குடும்பம் என்ற அமைப்பின் மிகப்பெரும் பலவீனமே அது பல நேரங்களில் தனிமனித உணர்வுகளை வடிகால்களின்றி முடங்கச்செய்யும் சிறைக்கூடங்களாகிப் போவது தான்.

சிங்கிஸ் ஐத்மத்தேவ் படைத்த ”ஜமீலா” என்னும் அந்த நாவல் எனக்குள் எழுப்பிய கேள்விகள் ஏராளம். எத்தனை வக்கிரமாய் ஒரு ஆண் நம் சமூகத்தில் வளர்க்கப்படுகிறான் என்பதை ஜமீலாவை படித்த பிறகு என்னால் உணர முடிந்தது. இங்கு ஒழுக்கம் என கற்பிக்கப்படும் விஷயங்கள் எத்தனை விஷமமானவை என்பதை ஐத்மத்தேவ் எந்தவித பிரச்சார நெடியுமின்றி மிக நேர்மையாய்….. எளிமையாய் புரியவைத்து விடுகிறார்.

“கள்ளக்காதல்” என்றொரு பதத்தை மிக நைச்சியமாய் நம் பேச்சுவழக்கில் சில மலிவான ஊடகங்களால் எளிதில் கலந்துவிட முடிகிறது. நாமும் சமூக மனிதனாய் அதன் உள் அரசியல் புரியாமல் அதனை அப்படியே வழக்கில் ஏற்றிக் கொள்கிறோம். ஆனால் பெண்களுக்கெதிரான மிகத் தந்திரமான அடிமை அஸ்திரகளில் ஒன்றாய் இதனை யாரும் பார்க்கவில்லை. நான் உட்பட. ஒருநல்ல புத்தகம் நம் விழிகளை விசாலமாக்க வேண்டும். அதனை ஐத்மத்தேவின் “ஜமீலா” செய்கிறாள்.

வாய்ப்பு கிடைத்தால்…. அல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு ஜமீலாவை ஒருமுறை படியுங்கள்!  நீங்கள் ஒரு ஆணாய் இருந்தால் நிச்சயம் ஜமீலாவிடம் காதலில் விழுவீர்கள்…. நீங்கள் ஒரு பெண்ணாய் இருந்தால் ஜமீலாவாய் மாறிப்போவீர்கள்….. நீங்கள் யாராய் இருந்தாலும் ஜமீலாவை நேசிப்பீர்களேயன்றி நிச்சயம் பரிகசிக்க மாட்டீர்கள்!!!!