புதன், 21 செப்டம்பர், 2011

பிடுங்கப்பட்ட சுதந்திரம்……


குழந்தை பல்பத்தை தன்

எச்சிலால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது

நான் கோபமாக பல்பத்தை அதனிடமிருந்து

பிடுங்கி எறிந்தேன்

குழந்தை அழ ஆரம்பித்தது……..

நான் ஏதேதோ சமாதானம்

சொல்லிப் பார்த்தேன் ஆனால்

அது தன் அழுகையை நிறுத்துவதாயில்லை

வேறு வழியின்றி மீண்டும்

பல்பத்தை அதன் கையில் கொடுத்தேன்

இப்போது……..

பல்பத்தை வாங்கிய குழந்தை அதை

தரையில் வீசியெறிந்தது

அப்போது தான் எனக்கு உரைத்தது

நான் அதனிடமிருந்து பிடுங்கியது

பல்பத்தை அல்ல……..

அதன் சுதந்திரத்தை என்று!!!!!!

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஐரோம் ஷர்மிளா ஒரு போராளியின் காதல்...


இளவயதின் சலனங்களோ
மயக்கப் பொழுதுகளோ
உயிரியலின் இயல்பான தூண்டுதல்களோ கூட
மறுத்துக் கொண்ட வாழ்வு உனது

பேருந்துக்குக் காத்திருந்த
அப்பாவி மனிதர்களை
இராணுவ துப்பாக்கிச் சனியன்கள்
பலிவாங்கிப் பழி தீர்த்துக் கொண்ட நாளொன்றில்
பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கியது உனது போராட்டத் தவம்.

உனது நாக்குக்குப் பதில் சொல்ல முடியாத அரசு
மூக்கு வழியாக உணவளித்து
உனது பட்டினிப் போரை எதிர்கொண்டு தவிக்கிறது
சிறப்பு ஆள்தூக்கி இராணுவச் சட்டத்தை
உரித்தெறிய மறுபபோர்முன் நீயும்
உடைத்தெறிய மறுக்கிறாய் உனது தவத்தை

'அன்னா' விரதத்தின் பக்கமிருந்து நகர மறுத்த
ஊடக வலைப்பின்னல்கள்
உனது உண்ணாவிரதத்தைச் சொல்வதே இல்லை மக்களிடம்

"அமைதியின் நறுமணத்தில்" ***
கவிதைகளால் பேசியிருந்தாய்
உனது திட சித்தத்தை..

வாய் திறந்திருக்கிறாய் போராளியே
முதன்முறை உனது காதலைப் பற்றி
இனியேனும்
என் வழியே என் வாழ்வை நடத்தவிடு என்னும்
உனது குரலில் யாசகமில்லை
சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டுமெனும்
நிபந்தனையின் மீது தான் நிற்கிறது
உனது காதல் தூரிகை

வெட்கமற்ற ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளட்டும்
போராளிகளுக்கும் காதல் உண்டென்பதை
அவர்களது முதல் காதல்
போராட்டக் கோரிக்கைகள் என்பதை -
அமைதி வாழ்க்கைக்கான வாசலை அடைத்திருக்கும்
இரும்புக் கதவுகள் உடைபடுமுன்
திறப்பது நல்லது என்பதை!
எஸ் வி வேணுகோபாலன்

*** (அமைதியின் நறுமணம்: ஐரோம் சர்மிளா அவர்களின் கவிதை தொகுப்பு. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது)
இந்தியாவைச் சார்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவரைத் தாம் காதலிப்பதாகவும், சிறப்பு இராணுவச் சட்டம் எடுக்கப்பட்டுவிடுமானால் தாம் அவரை மணந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும் ஐரோம் சர்மிளா அண்மையில் பத்திரிகையாளர் ஒருவரிடம் சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அம்பேத்கர் பார்ட்டி


ஏப்ரல் 14ம் நாளாகிய இன்றிரவு மகாராஷ்டிர மாநிலத்தின் சேரிப்பகுதிகளில் ஒரு பார்ட்டி - கொண்டாட்டம் நடத்த இருக்கிறோம் நாங்கள். ஒரு பெரிய களியாட்டத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமோ அவை அத்தனையும் எங்கள் கொண்டாட்டத்தில் உண்டு. குத்துப் பாட்டுக்கள் முதற்கொண்டு லாவணிப் பாடல்களை வரை ரீ-மிக்சிங் செய்து இடையே இடையே ஆங்கில வரிகளையும் ஓடவிட்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் எங்கள் கலைஞர்கள் போடும் அட்டகாச நடன மெட்டுக்கள் கருத்த பெரிய ஒலிப் பெருக்கிகளிலிருந்து தெருக்களையே அதிரடித்துக் கொண்டிருக்கும்.

எங்கள் பெண்கள் தமது உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டும், முகங்களில் பவுடர் அப்பிக் கொண்டும், கூந்தலில் மலர்களை அள்ளிச் சூடிக் கொண்டும் டிரங்க் பெட்டிகளிலிருந்து தேடி எடுத்த இருப்பதிலேயே உயர்ந்த ஆடைகளை அணிந்த வண்ணம் தோன்றுவார்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் மிக மட்டமாகத் தோன்றினால், நீங்கள் சரியாய்த் தான் கவனித்திருக்கிறீர்கள் என்று பொருள். கழித்துக் கட்டப்பட்ட, குறைபாடுகள் உள்ள துணிமணிகளைத் தள்ளுபடி விலையில் விற்கும் மலிவு விலைக் கடைகளில் இருந்து தான் இந்த அலங்காரப் பொருள்களையும், ஆடை வகைகளையும் அவர்கள் வாங்கி வைத்திருக்கின்றனர். இந்தத் திருநாளில் அணிவதற்கென்றே எத்தனையோ நாட்கள் தமது ஆசைகளை அடக்கிக் கொண்டு தொடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் காத்திருந்தனர்.

எங்கள் குழந்தைகளுக்கோ இதைவிடவும் மட்டமான ஃபிரில் வைத்த செயற்கை இழை ஆடைகளை அணிவித்திருக்கின்றனர். கருத்த அவர்களின் முகங்களில் முகப் பூச்சு பளிச்சென்று எடுப்பாய்த் தெரிகிறது. எங்கள் ஆடவர்களோ, மூச்சில் தெறிக்கும் மட்ட ரக சாராயத்தின் நெடியோடு எப்போது எல்லாம் மறந்து வெறித்தனமாக ஓர் ஆட்டம் போடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். முரட்டுத் தனமிக்க எங்கள் இளவட்டங்களோ எந்தக் காலத்திலும் ஒழுங்காக நடந்து கொண்டதாக சரித்திரமில்லை. இன்றைக்கோ எல்லா எச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, குமரிப் பெண்கள் ஒதுங்கி நின்று வெட்கத்தோடு தங்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதைக் கவனித்தபடி கோமாளிகள் போல் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான எங்கள் வீடுகளில் மாட்டுக் கறி வெந்து கொண்டிருக்கும்; ஆட்டுக் கறியை விடவும், கோழிக் கறியை விடவும் அதுதான் மிகவும் விலை மலிவு என்பதால் உங்களது மத உணர்வுகள் குறித்தெல்லாம் நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்களது இந்தக் கொண்டாட்டத்தின் எல்லா அம்சங்களும் மலிவு விலையில் திரட்டப்பட்டதாக நீங்கள் கவனித்தால், அப்படியே கோடி டாலர் மதிக்கத் தக்க இன்றைய எங்களது முக மலர்ச்சியையும் நினைவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி என்னதான் இன்று விசேஷம் என்கிறீர்களா? ஏப்ரல் 14 : இன்றைக்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் நங்கள்.

எனக்குத் தெரியும், எங்களையும், எங்களது செயல்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் வெறுப்பது. ஆனால், இந்த நாள் எங்களது நாள். எங்களை நீங்கள் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். சகித்துக் கொண்டால் தான் என்ன என்று கேட்கிறேன்...கால காலமாக நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் , ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துத் தானே வருகிறோம். எனவே அப்படி ஒரு மாதிரி எங்களைப் பார்ப்பதை இன்றைக்காவது கை விடுங்கள்.

எங்கள் சேரிகளின் வழியே நடக்க நேரும்போது துர்நாற்றம் தாளாமல் உங்கள் அழகு மூக்குகளைப் பொத்திக் கொள்கிறீர்களே, உங்களது சுத்தமான வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றும் மலத்தைச் சுமந்து ஓடும் சாக்கடைகளின் அருகே நாங்கள் குடியிருப்பதால் தான் எங்கள் குடியிருப்புகளில் இத்தனை துர்நாற்றம் வீசுகிறது என்று எப்போதாவது உங்களுக்கு உறைத்ததுண்டா ? நாகரீகம் என்று நீங்கள் வரையறை செய்திருக்கும் எல்லாக் கட்டு திட்டங்களையும் உடைத்தெறிந்து, சுதந்திரமாக ஆடிக் கொண்டிருக்கிறோம், இன்றைய இரவில். நாகரீகம் பற்றிய உங்களது கோட்பாடுகள் போலித்தனமானவை என்று எங்களுக்குத் தெரியும்; உங்கள் இல்லங்களில் மவுனமாக வேலை பார்த்தபடி உங்களது எல்லா அசுத்தங்களையும் கவனிப்பவர்கள் நாங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைய இரவில் நாங்கள் ஆடுகிறோம், எங்களையும் மனிதப் பிறவிகள் என்று எங்களுக்கு உணர்த்திய ஒரு மனிதனின் பிறந்த நாள் இன்று என்பதால்! அவர் வெறுமனே உங்களது குற்ற உணர்ச்சிகளை வருடிக் கொடுத்து இதம் செய்வதற்காக ஒன்றும் எங்களுக்கு வேறு பெயர் சூட்டவில்லை. நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் கனவு காணவும், மகிழ்ச்சியாக வாழவும் உரிமை உண்டு என்று சொல்லிக் கொடுத்தார் அவர்.

எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு நாங்கள் அழுக்கானவர்களாகவும், அவலட்சணமானவர்களாகவும் அறியாமையில் உழல்பவர்களாகவும், இழிவானவர்களாகவும் காட்சி அளிப்பது. ஏன் அப்படி தோன்றுகிறது என்று அவர் எங்களை உணரச் செய்தார். எமது உடைகளையும், தண்ணீரையும் நீங்கள் பறித்துக் கொண்டுவிட்டதால் நாங்கள் அழுக்காக இருக்கிறோம். எமது உணவுகளைப் பறித்துக் கொண்டு அழகிப் போனவற்றைத் தின்னுமாறு நீங்கள் செய்துவிட்டதால் நாங்கள் அவலட்சணமாகவும், வளர்ச்சி குன்றியவர்களாகவும் ஆகிப் போனோம். எங்களுக்குத் தெரியாத மொழிகளிலேயே நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாலும், எங்களைக் கல்வி கற்க நீங்கள் அனுமதிக்க மறுப்பதாலும் நாங்கள் அறியாமையில் வீழ்ந்தோம். அடிமைகள் வேறெப்படி இருக்க முடியும், நாங்கள் இழிவாய் தான் காட்சி அளிக்கிறோம்.

அம்பேத்கர் எங்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியபிறகு, நாங்கள் இனி அழுக்காகவும், அவலட்சணமாகவும், அறியாதவர்களாகவும், இழிவாகவும் தோற்றமளிப்பதை முடிவுக்கு கொண்டு வர வழிவகைகளைச் சிந்திக்கத் தொடங்கினோம். இருந்த போதிலும், இன்னும் எங்களில் பெரும்பாலானோர் அப்படியே தான் இருக்கின்றனர் - அதற்குக் காரணம் இந்தக் கொடுமைகளை நீங்கள் சில நூற்றாண்டுகளாகச் சுமத்தி வந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட எங்களைத் தடுத்து நிறுத்தவும், ஏன், எங்களில் சிலரை விலை கொடுத்தே வாங்கவும் கூட உங்களுக்குள்ள அத்தனை செல்வாக்கையும் நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

எங்களுக்குத் தெரியத் தான் செய்கிறது - நாங்கள் நட்ட நடு வீதியில் நடனம் ஆடி வருகிறோம். உங்கள் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சாலையே உங்களுக்குத் தான் பட்டா போட்டுக் கொடுத்திருப்பது மாதிரி இரைச்சல் எழுப்பாதீர்கள்! சாலை முழுவதும் ஓட்டு மொத்தமாக உங்களுக்கே சொந்தம் போல உங்களுக்குத் தோன்றக் காரணம் என்ன? எப்படி அப்படி இருக்க முடியும்? கண்ணாடியால் அரவணைக்கப்பட்ட பெரிய கட்டிடங்களில் இருந்து உங்கள் வீட்டை நோக்கி வண்டியில் போய்க் கொண்டிருப்பதாலா ?

என்றைக்காவது ஒரு நாள் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுங்கள். நீங்கள் இயக்கும் ஒவ்வொரு காருக்காகவும், பல பேர் சாலையோரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது, பேருந்துகளில் எங்களைத் திணித்துக் கொள்ளவோ, ஆட்டோவில் பகிர்ந்து கொண்டோ பயணம் செய்யவேண்டியிருக்கிறது. சொல்லப் போனால், உங்கள் கார் வழுக்கிச் செல்ல வசதியான சாலையை அமைக்கத் தோண்டிக் கொண்டிருத்த போதும், எங்கள் தோலைப் போலவே கருத்த தார் மொண்டு எடுத்துப் பூசிக் கொண்டிருந்த போதும் சூரிய வெப்பத்திலும், நள்ளிரவைக் கடந்த நேரத்திலும் இந்த நாட்டில் எல்லாமே மோசம் என்று உங்களது மேற்கத்திய பாணி இழிவுப் பேச்சுக்களைக் கேட்டபடி உழைத்தது நாங்கள் தான்.

இந்தச் சாலை உங்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பது அற்ப விஷயம். நாங்கள் இந்தச் சாலைக்குச் சொந்தக்காரர்கள் எனதே பெரிய உண்மை! எங்களில் எத்தனை பேர் இந்தச் சாலைகளிலேயே பிறந்தவர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? இங்கேயே பிறந்து, உண்டு, உறங்கி, குடும்பம் நடத்திப், பிள்ளைகளைப் பெற்று எங்கள் வாழ்வு மொத்தத்தையும் இங்கேயே வாழ்ந்து முடிப்பவர்கள் எத்தனை பேர் என்பதாவது தெரியுமா முதலில்? அப்படி இருக்க, உங்களுக்கு இங்கே வழி விட வேண்டும் என்று உரிமை பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்!

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, போதை ஏறியபடி கன்னா பின்னா என்று நாங்கள் இன்று ஆட்டம் போடவே செய்வோம். உங்களது செல்லப் பிள்ளைகள் குடித்துக் கும்மாளம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எந்த நாளும் நுழைய முடியாது, விடுவார்களா? நீங்கள் டிப்ஸ் என்று செலவழிக்கும் பணத்தின் அளவில் எங்களது ஒரு முழு நாளுக்கான உணவையும் நாங்கள் முடித்துக் கொள்வோம். அப்படியே உங்களது வாரிசுகள் தங்களது கட்டிழந்து குதியாட்டம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எதற்காக அனுமதிக்கப் படுவோம் என்றால், அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யக் காத்திருக்கத் தான்.

எனவே இன்றைய எங்கள் ஆட்டம் சாலையில் தான். இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள், சாலையில் குடித்துவிட்டு நாங்கள் ஆட்டம் போடும் போது, உங்கள் கார் செல்லும் பாதையைக் கொஞ்சம் மறிக்க மட்டுமே செய்கிறோம். ஆனால், நீங்கள் குடித்துக் கும்மாளம் போட்டபடி கார்களில் பவனி வரும்போது, வெறித் தனமாக உங்கள் கார்களை எங்கள் மீது ஏற்றிச் சாலையோரம் நசுக்கித் தள்ளிவிட்டுப் போகிறீர்கள். குடித்திருக்கும்போது நம்மில் யார் அதிகம் ஆபத்தானவர்கள் என்பது பற்றிய புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வோம்.

என்னதான் நாளை மீண்டும் -நீங்கள் கொடுக்கும் குறைந்த கூலிக்காக உங்களது வசைச் சொற்கள்-இழி சொற்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், உலகமே உங்கள் தோள்களில் என்பது போல் பாவித்துக் கொண்டு நீங்கள் நடந்து கொள்வதை சகித்துக் கொண்டும் - உங்களுக்காக உழைக்க வந்து நிற்போம் என்றாலும், இந்த இரவில் எங்கள் கொண்டாட்டத்தை நடத்துகிறோம். உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, உங்களது வாகனங்களில் அமர்ந்தபடி எங்களைச் சபித்துக் கொண்டிருங்கள். அல்லது, பேசாமல் எங்கள் களியாட்டத்தில் நீங்களும் கலந்து விடுங்கள்.


கட்டுரையாளர் சித்தார்த்திய ஸ்வபன் ராய் அவர்களின் மின்னஞ்சல்: siddharthyaroy@gmail.com

நன்றி: தி ஹிண்டு: ஏப்ரல் 24, 2011

தமிழில்: எஸ் வி வேணுகோபாலன்