திங்கள், 8 ஜூன், 2009

நவீன கொத்தடிமைகள்.....


நேற்று எனது தொழிற்சங்க வாழ்வில் ஒரு முக்கியமான நாள். எங்களது பாண்டியன் கிராம வங்கியில் (முற்றிலும் மத்திய அரசிற்கு சொந்தமானது)இருநூற்றி ஐம்பதிற்கும் மேலான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் கிளைகளில் நிரந்தரப் பணியாளர்களான நாங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்(சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் வேலைகளில் பாதியளவு கூட நாங்கள் செய்வது இல்லை).

ஆனால் அவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ஐம்பது முதல் நூறு ருபாய் வரை என வாரக்கூலி வழங்கப்படுகிறது.அவர்களுக்கு பணிபாதுகாப்பு கிடையாது.(மேலாளர்களோ அல்லது உடன் புரியும் எவரேனும் நினைத்தால் எந்த முகாந்திரமும் இன்றி எந்த நிமிடமும் அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியும்).

அவர்கள் பணிபுரியும் கால நேரம் என்பது நாள் ஒன்றிற்கு 10 முதல் 12 மணி நேரம் வரையாகும்.தேவைப்பட்டால் மேலாளர் அவர்களை விடுமுறை நாட்களிலும் வருவிப்பார்.அவர்கள் பதிலேதும் பேசாமல் வரவேண்டும் இல்லையேல் வேலை காலி.அவர்கள் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது.மேலும் லீவு(ஞாயிற்றுக்கிழமை உட்பட) நாட்களில் அவர்களூக்கு சம்பளம் கிடையாது.

இந்த உழைப்பு சுரண்டல் எல்லாம் செய்யும் எங்கள் நிர்வாகமே தந்திரமாக மேலாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் அந்தந்த வங்கியில் இல்லை என (போலி) சான்றிதல் வாங்கிவிடும்.மேலாளர்களும் அப்படியே செய்திடுவர்.

வருகைப் பதிவேடுகளிலோ அல்லது அவர்களுக்கு வழங்கும் சம்பளச் சீட்டுகளிலோ தற்காலிகப் பணியாளர்களின் கையொப்பம் வராமல் பார்த்துக் கொள்வர். நபார்டிலிருந்தோ(NABARD) அல்லது வேறு மத்திய சர்காரின் ஆய்வுத்துறையிலிருந்தோ எவரேனும் வந்தால் அந்த தற்காலிகப் பணியாளர்களை அவர்களின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வர்.

ஆம்! இப்படியாக அவர்கள் நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்படியொரு சூழலில் தான் இந்த கொடுமைகளை காணச் சகியாது எங்கள் தொழிற்சங்கம் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) இதை மேலும் வளர விடக்கூடாது என முடிவு செய்தது.முதற் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் அத்துணை தற்காலிகப் பணியாளர்களையும் விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று ஒன்று திரட்டியது.அதில் நூற்றி அறுபதிற்கும் மேலான இளம் தற்காலிகப் பணியாளர் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் பெரும்பான்மக்கும் மேலாக பெண் தோழர்களே வந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்து இருந்தோம்.அதனால் இராமநாதபுரம்,சிவகங்கை,தேனி,திண்டுக்கல், நாகர்கோவில்,திருநெல்வேலி,தூத்துக்குடி,திருச்செந்தூர் என பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்து கிளம்பியவர்கள் நேரமாகிவிடுமோ என தங்களது காலை உணவைக் கூட துறந்து விட்டு வந்திருந்தனர்.

சில இளம் பெண் தோழர்கள் தங்களது தாய்,தந்தை,கணவன்,சகோதிரன் என அழைத்து வந்திருந்தனர்.இதில் கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனுடையோர் என சமூகத்தாலும்,இயற்கையாலும் வஞ்சிக்கப்பட்டோர் இங்காவது தங்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்படாதா? என அவர்களின் கண்களில் ஏக்கத்தோடு எங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வரவேண்டி இருந்ததால் கூட்டம் ஒருமணி நேரம் தாமதமாகவே துவங்கியது.அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்திருந்த தோழர்கள் கிளைகளில் தங்களது பணிச் சூழலைப் பற்றியும் தாங்கள் எதிர் கொள்ளும் அன்றாட சிரமங்கள் குறித்தும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அதாவது அவர்களின் எல்லா துயர்களையும் எங்களால் துடைக்க முடியும் என்ற அவர்களது நம்பிக்கையே அதில் மேலோங்கி இருந்தது.

நிகழ்ச்சி துவங்கியது.தலைமை தாங்கிய தோழர்களான (மாதவராஜ்,சோலைமாணிக்கம்,சங்கர்,செல்வகுமார் திலகராஜ்,பிச்சைமுத்து)ஆகியோரின் சிறப்புரைகளுக்கு பின் அந்த தோழர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை எழுச்சி அவர்களுக்குள் எழுந்ததை காண முடிந்தது.அந்த இளம் தோழர்களின் நம்பிக்கையும் எழுச்சியும் எங்கள் தொழிற்சங்கத்திற்கான கடமையையும்,எதிர்காலப் பயணத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.

எங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 20ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் அவர்களூக்காக இருக்க எங்களது ஊழியர் சங்கமும்,அலுவலர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

நண்பர்களே!

இது ஏதோ எங்கள் வங்கியில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல.இது இந்த தேசத்தின் பிரச்சனை.ஆம்! BSNL,NLC,TNEB,போன்றவற்றில் ஏற்கனவே இது போன்ற தற்காலிக ஊழியர்களூக்கான நிரந்தரமாக்கும் போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது(சமீபத்தில் மின்சார வாரியத்தில் இரண்டாம் கட்டமாக ஜுன் 3ஆம் தேதி ஆறாயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கியது தமிழக அரசு).

வங்கித்துறையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.அதேபோல் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும்,அரசு அலுவலகங்களிலும் கூட பல ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அவை இன்று தற்காலிக ஊழியர்களின் உதவியாலே இயங்குகிறது.

ஏன்?ஏன்?ஏன்?ஏன் இந்த நிலை.....?

ஒரு பக்கம் வேலவாய்ப்பு திண்டாட்டம்.வறுமை.என மத்தியில் மாநிலத்தில் ஆளும் அத்துனை கட்சிகளும் எந்தவித கட்சிப் பாகுபாடும் இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டே.....அந்நிய முதலீடுகளுக்கு ஒரு பக்கம் கதவுகளை திறந்து விட்டுக்கொண்டே...காசுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்.

மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை இந்தியஅரசு வெகு வேகமாக பார்த்து வருகிறது.ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு பெரும் முதலாளிகளூக்கும் அந்நிய முதலீட்டாளர்களூக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரை சதவிகித வட்டிக்கும்,ஒரு சதவிகத வட்டிக்கும் (பொது மக்களின் பணமான)அரசு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குகிறது.அப்படி கடனாக வாங்கும் பணத்தையும் அந்த ”பணக்கார தொழில் முனைவோர்” திரும்ப செலுத்த மாட்டார்கள்.அதை ஒவ்வொரு நிதியாண்டிலும் ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் அவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தள்ளுபடி செய்து அந்த ’பணக்கார’ கடன்காரர்களை காப்பாற்றி விடுவார்.(இதில் தொழிற்சாலைகள் அமைக்க,தொழிற்பூங்காக்கள் தொடங்க என விவசாயிகளின் விளைநிலங்களை வேறு கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்ப்பார்கள்.)

ஆனால் விவசாயிகளுக்கு 7சதவிகித வட்டியில் கடன் கொடுப்பதற்கோ ஆயிரத்தி எட்டு நொள்ளை நொட்டை பார்பார்கள்.சிறு தொழில் முனைவோருக்கு கடன்கள் 12%ற்கு வழங்குவதற்கு கூட இந்த பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை.ஆனால் சுயதொழில் சுயதொழில் என கூப்பாடு மட்டும் போடுவார்கள்.

வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க இங்கு காலியாக கிடக்கும் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் முறையான ஆள் எடுக்கும் பணி தொடங்க வேண்டும்.அதே நேரத்தில் எந்த வித பணி பாதுகாப்பும் இன்றி இரவுபகல் பாராமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வரும் அத்துனை தற்காலிகப் பணியாளர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை நிரந்திரம் செய்திடல் வேண்டும்.

தொழிற்சங்க அமைப்புகளை பலவீனப்படுத்தவும், போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை உரிமை போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்மூலமாக்க துடிக்கும் தனியார் ’கைகூலிகளின்’ தந்திரங்களை முறியடிக்கவும் அத்துனை வெகுஜன அமைப்புகளூம் போராட துவங்கவேண்டும். நாம் அனுபவிக்கும் அதே சலுகைகளை அடுத்த நம் தலைமுறையினருக்கும் கிடைத்திட வழி செய்திட வேண்டியது நமது கடமை.

நாங்கள் இந்த நவீன கொத்தடிமைகள் முறைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட துவங்கிவிட்டோம்.வாருங்கள் எங்கள் கரங்களை பலப்படுத்த நீங்களும்.......

திங்கள், 1 ஜூன், 2009

ஒரு பொய்யும்..சில உண்மைகளும்..


"To say what is that it is not;or what is not that it is ;is false,while to say what is that it is and what is not that it is not,is true."-ARISTOTLE.


”இருப்பதை இல்லை என்பதும்,இல்லாததை இருப்பதாக சொல்வதும் பொய்,அதே வேளையில் இருப்பதை இருப்பதாகவும்,இல்லாததை இல்லையென்றும் சொல்வது தான் உண்மை” என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

என்னை மிகவும் பாதித்த வாழ்க்கை வரலாறு ரூபாய் நோட்டுகளில் பொக்கை வாய் மலர புன்னகைத்துக்கொண்டே இருக்கும் காந்தியுடைய ”சத்தியசோதனை”- சுயசரிதை.
எனக்கும் காந்திக்கும் இடையே உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், காந்தியை போலவே எனக்கும் ஹரிச்சந்தரா நாடகம்தான் வாழ்வில் மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது.

என்ன ஒரு சிறு வித்தியாசம் அவருக்கு அது சத்தியத்தின் வலிமையை உணர்த்தியதால் வாழ்க்கை முழுவதும் முடிந்த வரை வளைத்து வளைத்து உண்மையை மட்டும் தான் பேச வேண்டும் என அவர் முடிவு செய்தார்.

ஆனால் எனக்கு சத்தியத்தால் ஏற்படும் வலியை அது உணர்த்தியதால் தேவையில்லாமல் சத்தியத்தை சோதனை படுத்துவதில்லை என முடிவெடுத்தேன்(பின்னே!அது எவ்வளவு பெரிய மேட்டரு...அதை நாம ஏன் தேவையில்லாம ரோதனை படுத்தனும்ன்னு அத மன்னிச்சு விட்டுட்டேன்).அதனால் எப்ப எப்ப கேப்புல இடம் கெடச்சாலும் கடா வெட்டிருவேன்!

எல்லாரப் போலவும் எனக்கும் சத்தியம்னாலே சக்கரப் பொங்கல் சாப்பிடுற மாதிரி தான் இருந்தது.

சின்ன வயசுல அம்மா,அப்பா,ஸ்கூல் டீச்சர்கள், நண்பர்கள்,சொந்தக்காரனுங்க,வந்தவன் போனவன்னு வளைச்சு வளைச்சு எந்தப் பாகுபாடும் இல்லாம சிக்குன எல்லார் காதுலயும் பூ சுத்தி என்ன ரொம்ப நல்லவன்னு நம்ப வச்சுருக்கேன்.

சில சமயம் லைட்டா மிஸ்ஸாகி எக்குத்தப்பா மாட்டி எக்கச்சக்கமா வாங்கியும் கெட்டியிருக்கேன்.ஆனால் ஒரு நாளும் மனந்தளர்ந்துப் போய் பொய்யே பேசக் கூடாதுன்னு மட்டும் முடிவெடுத்ததில்லை.என்னுடைய முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அதே மாதிரி முட்டாள்தனமா மாட்டிக்காம விவரமா எஸ்கேப்பாயிடுவேன்.

என்னதான் இருந்தாலும் யானக்கும் அடி சருக்கும் இல்லையா...?

இப்படித்தான் பாருங்க போன வாரம் எம் பொண்டாட்டி இரண்டு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போய் தங்கிட்டு வரட்டுமான்னு கேட்டா.எனக்கு மனசு கேட்கல தான்.... இருந்தாலும் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒரு நல்ல புருஷனோட கடமைங்கறதால எம்மனசு கஷ்டத்தோட.... சாயிங்காலம் அவள அவங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.(என்னடா!பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கேன் பாக்குறீங்களா...பாவி மவ வீட்டுக்கு வந்த உடனயே எம் பளாக்கைத்தான் படிப்பா.அவ படிக்கலனாலும்........(விடுறா,விடுறா மீசை முறுக்கேரிப்போய் தான் இன்னும் இருக்கு) )

அவங்க அம்மாவீடும் எங்கவீடும் ஒரு கிலோ மீட்டர் தான் தூரம்னாலும் அந்த ஒரு கிலோ மீட்டர் பிரிவை கூட எங்களால தாங்க முடியாததால.....அவ கூட உக்காந்து அவள சமாதானப் படுத்திட்டு...வீட்டுக்கு போன உடனே போன் பண்றேன்னு.... நாளைக்கு காலையில வர்றேன்...சத்தியம் செய்துட்டு வெளியே கிளம்பினா....மனசு ரொம்ப பாரம்மா இருந்துச்சு.

என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்பதான் என் தம்பி பாருக்கு போய் ரம் அடிச்சா பாரம் போயிடும்ன்னு விவேக் மாதிரி அட்வைஸ் பண்ணினான்.தம்பி சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு
[ஓ!அது தந்தை சொல்லா...பாருக்குள்ளே(உலகம்) வேணும்னா தம்பி தந்தைனு பாகு பாடு இருக்கும்..ஆனா பாருக்குள்ளே (BAR) எல்லாரும் சமம் தானே.(ஆ!கவித..கவித..)]

நானும் அவன் கூட நம்பி போனேன்.இரண்டு லார்ஜ் ஓ.சி.ஆர் ஆர்டர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது கரெக்டா என் செல்போன் என் மனைவி பெயரை சொல்லி சினுங்கியது.....

(கழுகுக்கு மூக்குல வேர்த்தது போல்ன்னு..... ஒரு பழமொழி உண்டு..... நிச்சயமா அந்த பழமொழியை முதலில் சொன்னது ஒரு ஆம்பிள்ளையாத்தான் இருப்பான் அதுவும் அவன் பொண்டாட்டியை மனசுல வச்சுதான் சொல்லி இருப்பான்.இதுக்காக மகளிர் அமைப்பை சார்ந்தவங்க எனக்கு கெட்ட வார்த்தையில பின்னூட்டம் போட்டா கூட பரவாயில்லை.அவனவன் வலி அவனவனுக்கு....(விடுறா!..விடுறா!..))

நைஸா...பாருக்கு வெளியே போய் அவகிட்ட பேசிட்டு உள்ளே வந்து பாதியில் விட்ட ஆர்டரை தொடர்ந்தேன்.....”பாஸு...சில்லுன்னு ஒரு கோக்..ஒரு லிட்டர் தண்னி நல்லா கூலா...அப்புறம் கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்...கிரீன் சாலட் ஒரு பிளேட்...சீக்கிரம் பாஸ்..”

ஒரு இரண்டு நிமிடம் போயிருக்கும்...மீண்டும் என்னவளிடமிருந்து கால் வந்தது...என் தம்பி வினோதமாய் என்னை பார்த்தான்,”இருடா!கல்யாணம் ஆயிட்டாலே இப்படித்தான்...”என்று வெளியில் வந்து காலை(call) அட்டண்ட் செய்து,” சொல்லு.... என்னமா!..”என்றேன்.

”இப்ப,எங்க இருக்கீங்க...?”என்று அதிர்ந்தாள்.”வீட்ல தான்...ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற..?” இவ்வளவு தான் பேசினேன்.

“ நான் ஒரு மடச்சின்னு நினச்சுட்டீங்களா..ஏன் இப்படி வரவர ரொம்ப பொய் பேசுறீங்க...என்ன ஏன் இப்படி நம்ப வச்சு ஏமாத்திறீங்க...இப்ப நீங்க தண்ணி அடிச்சுகிட்டு தான இருக்கீங்க...”ஆகா! வசமா சிக்கிட்டோம் டா என்று தெரிந்தாலும்.
சமாளித்தவாறே,”இன்னைக்கு தண்ணி முறையில்லையே...!”ஜோக்குன்னு நினைத்து நான் ஏதோ உளரி கொட்ட...இடி இடித்து மழை பெய்து ஒரு வழியாய் ஓய்ந்தது.

சரி நமக்கு எதிராய் யார் இந்த சதியை செய்திருப்பார்..என்று என் தம்பியிடம் புலம்பியவாறே இரண்டு லார்ஜையும் உள்ளே விட்டோம்...விடையை எளிதில் கண்டு பிடிக்க முடியாததால் கொஞ்சம் தெளிவடைய மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.
இப்போது போட்டுக் கொடுத்தவனை கண்டு பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்காக மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.என்ன ஆச்சர்யம்!பழி வாங்கும் எண்ணம் இப்போது என்னிடம் மறைந்து விட்டது.ஆனால் அந்த கோபம் இப்போது என் மனைவி மேல் திரும்பி இருந்தது, “எவனாவது எதாவது சொன்னால் இவள் எப்படி நம்பலாம்...”,”என்ன தான் உண்மையா இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன் பேச்சை கேட்டு இப்படி என்ன ச்ந்தேகப்படலாமா...?”என்று கவலையில் மேலும் இரண்டு லார்ஜ் வாங்கினோம்.


“சரி!விடு காலையில பார்த்துக்கலாம்...”என்று என் தம்பி ஏதோ குளரினான்...
“அத அப்படியெல்லாம் விட முடியாது என...” என் மனைவிக்கு கால் செய்தால் அவள் கட் பண்ணி விட்டுவிட்டு சுட்ச் ஆப் செய்துவிட்டிருந்தாள்.

கடும் கோபமும்,எரிச்சலுமாக வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தால்....பூமி சுற்றுவதை முழுவதுமாக என்னால் உணர முடிந்தது...ஏதோ பூகம்பம் தான் வந்துவிட்டது என நினைத்தாவாறே வீட்டுக்கு வெளியில் வந்தால்... என் தம்பியும் பூமி சுற்றுவதை உணர்ந்தானாம்.வாயில் விரலை விட்டு ஓ.சி.ஆரை(வாந்தின்னு எப்படி மரியாதையில்லாம சொல்ல முடியும்?) வெளியே எடுத்துவிட்டால் பூமி சுற்றுவதும் நின்று விடும்! என்ற உலகமறிந்த கண்டுபிடிப்பையும் எனக்கு நினைவூட்டினான்......வாயில் விரல் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாந்தி வந்தது...(அட!வெளியே வந்ததுக்கு அப்புறம் அந்த கருமத்திற்க்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது) உலகம் சுற்றுவதும் நின்றது....

எப்போது தூங்கினேன் எப்படி விழிந்தேன் என்று தெரியவில்லை...ஆனால் விடிந்து விட்டிருந்தது. நேற்றைய நிகழ்வுகள் மெல்ல நினைவுக்கு வந்தது.ஒரு வழியாக கிளம்பி அவள் அம்மா வீட்டுக்கு போனால் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்...அப்படி இப்படி என்று ஒருவாறு சமாதானப் படுத்திவிட்டு....யார் அந்த கருணா..?என்று மெல்ல கேட்டேன்.

அவள்,” நீங்க தான் அது.என்கிட்ட பேசிட்டு போனை ஒழுங்கா கட் பண்ணாம நீங்க ஆர்டர் கொடுத்தது எனக்கு கேட்டுச்சு...அத வச்சு தான் கண்டி பிடிச்சேன்...”என்று அவள் சொல்லிக்கொண்டே போனாள்..எனக்கு மறுபடியும்...உலகம் சுற்றியது.... இப்போது இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் வெறும் பொய்களால் உண்மைகளை மறைத்து விடமுடியாது.எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.....

வாய்மையே வெல்லும்!பொய்மையை கொல்லும்!