சனி, 30 ஏப்ரல், 2011

என் காம சுவடுகள்...


நிலைகுலையா காமம்

நிதானம் இழப்பதும்

ஒரு சுகம் தான்

அவளது நிந்தனைகள்

என்னை காமுறச் செய்யுமானால்.


இதயத்தின் யாசகம்

இதழ்கள் மோதும் நேரத்தில்-என்

இதயம் இடும் கூச்சல்- என்னை

இம்சிக்கின்றது மீண்டும் மீண்டும்

இன்னொருமுறை வேண்டு மென்று.


நிலவு சாட்சி

நிலைவை சாட்சியாக்கி

அவள் இதழ்களில் முத்தமிட்டேன்

நிலவு வெட்கி மறைந்தது-அது

அமாவாசையாம்!


வேண்டுதல்

வேண்டா வெறுப்பாய்

வேண்டு மென்றே விலகிச் சென்றேன்

அவள் மீண்டும் என்னை

வேண்டி இழுக்க வேண்டிக் கொண்டு.


அசாத்தியமான சாத்தியங்கள்…

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என்னிடம் பேசிவிட்டு

‘சென்ற பின்னும்

அவள் மௌனங்கள் என்னை இம்சிக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் என் அருகில் இல்லாமல்

அவள் என் நினைவுகளைக் கொண்டே

என்னை தீண்டுகிறாளே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் தன் ஆடைகளை

களைந்த பின்பும்

அது அவள் அவயங்களை சுமக்கிறதே!

அது எப்படி சாத்தியமாகிறது…?

அவள் போதும் என்று

என்னை விலகி சென்ற பின்னும்

அவள் விரல்கள் என் தலை கோதுகிறதே!

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

என் கவிதைகள்...

பொய் சொல்லும் கண்கள்….


முகம் பார்க்கும் கண்ணாடி

முன் நின்று கொண்டு....

இனிமேல் பொய்கள் பேசுவதில்லை

என சபதமேற்றுக் கொண்டேன்

என் கண்கள் பேசும்

பொய்கள் புரியாமல்!


நிலையான கண்ணீர்


கண்ணீர் என்பது…..

துக்கத்தின் குறியீடா…?

ஆனந்தத்தின் வெளிப்பாடா…?

தெரியவில்லை-ஆனால்

ஆனந்தத்தின் ஆரம்பமும்

துக்கத்தின் முடிவும்

கண்ணீரில் நிலைக்கிறது.விருந்தோம்பல்

வேண்டப் படாதவன்

விரும்பத் தாகத நேரத்தில்

வீட்டிற்கு வந்து விட்டால்

விடை சொல்ல வழியின்றி

விசாரிப்புகளில் துவங்குகிறது…..

”விரும்பா” விருந்தோம்பல்.பிரியாவிடை

அவள் என்கைகள் பற்றி

கண்கள் பனிக்க கெஞ்சினாள்….

நான் நெஞ்சம் இறுக்கி

என்னை அவளிடமிருந்து

விடுவித்துக் கொண்டு

அவளுக்கு கண்ணீராவது

நிலைக்கட்டும் என எண்ணியபடி….

வந்துவிட்டேன்

மீளா துயில் கொள்ள!

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

காதல் என்னும் புரியாத புதிர்....

காதல் ஒரு புரியாத புதிர் தான்….

காமுறச் செய்யும் காதல்

கண்ணீர் சுரக்கவும் சொல்கிறதே…?

தியாகம் பயிற்றும் காதல்

கோபப் படவும் வைக்கிறதே….?

அக்கறை காட்டும் காதல்

நிராகரிப்பும் செய்கிறதே…?

அள்ளி அணைக்கும் காதல்

கொள்ளி வைக்கவும் துணிகிறதே…?


காதல் ஒரு புரியாத புதிர் தான்…..

கண்ணில் நுழைந்த காதல்

இதயம் சென்றபின் பார்வை இழக்கிறது.

பார்வை இழந்த காதல்

ஆசைகளின் கைப்பிடித்து கொள்கிறது.

காற்றில் மிதக்கும் இறகினைப் போல்

காதல் மிதக்க செய்கிறது.

காதல் மிதப்பில் நம் கால்களைக் கூட

மறந்து போகிறோம்.

அதனால் தானோ....

காதலில் விழுந்தவர்கள்

மீண்டும் எழுவதில்லை....?


காதல் ஒரு புரியாத புதிர் தான்…..

மனிதனைத் தவிற வேறு எந்த உயிரும்

இதனைச் செய்வதில்லை.

நேசிக்கப்பட்டவர்களால்

நிராகரிக்கப் பட்ட பின்னும்…..

அரவணைக்கப்பட்டவர்களால்

தனிமை படுத்தப்பட்ட பின்னும்….

பிரியத்துக்குரியவர்களால்

பிரிவு பரிசளிக்கப்பட்ட பின்னும்….

காதல் ஒரு புரியாத புதிர் தான்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

நான் பேசுகிறேன்....


“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.” என்கிறது கீதை.

மேற்கூறிய ‘அறிவுரையை’ சிலாகிக்காத ஆன்மீக வியாதிகளே இல்லை. பார்பனிய வேதத்தின் ‘மகிமை’யே இதுதான். மனிதகுலத்திற்கு விரோதமான சித்தாந்தங்களை கூட மிகவும் ஏற்புடையதாக மாற்றும் வித்தை அறிந்த கயவர்களின் வேதம் அது. ஏனென்றால் இதைவிட மிக நைச்சியமாக யாராலும் அடிமைத்தனத்திற்கு வக்காளத்து வாங்கி இருக்க முடியாது.

கீதையின் இந்தச் சாரம் நமக்குள் விதைக்க விரும்புவது என்னவென்றால் சுயமரியாதையை துறந்து நமக்கு ‘விதிக்கப்பட்ட’ அடிமைத்தனத்தை எந்தவித எதிர்ப்புகளுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே!

நடந்தவைகள் அனைத்தையும் நாம் நல்லவைகளாய் மாத்திரம் கொள்ள வேண்டுமாம். அது எப்படிச் சரியாகும்…? பிறப்பு என்பது ஒருமுறை தான். அதில் மனிதராய் பிறந்த நாம் ஏன் சக மனிதனிடம் ஜாதியின் பெயரால் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்? எப்படி நம்மைச் சுற்றி நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நல்லவைகளாய் எடுத்துக் கொள்ள முடியும்?

எதனைப்பற்றியும் கவலைப்படாமல் நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கும் என முடங்கிப்போவதற்கு நாம் என்ன மாக்களா…?

எந்த முயற்ச்சியும் இன்றி சோம்பிக் கிடந்துவிட்டு நமக்கு நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் என எதிர்பார்ப்பது அறிவீனம் இல்லையா…? அது பேராசையல்லவா…?

நமது உழைப்பினையும்,விலை மதிப்பற்ற நேரத்தையும் உறிந்து விட்டு நமது உரிமைகளையும், உடைமைகளையும் பறித்துக்கொண்டு கொழுத்துச் செழிக்கும் பெருமுதலாளிகளின் கூட்டத்திடம் நாம் இழந்தது எதுவும் இல்லை என ஏற்றுக்கொள்ளச் சொல்வது அயோக்கியத்தனமானது இல்லையா…? நமது இந்த இழப்புகளுக்காக போராட்டங்களல்ல சிறு கதறல் கூட இருக்கக் கூடாது என்றால் இதனைவிட கயமைத்தனம் வேறென்ன இருக்க முடியும்…?

நமது ஒவ்வொரு துளி வியர்வையாலும், முயற்சிகளாலும், தியாகங்களின் விளைவுகளாலும் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் மீது நமக்கு உரிமையில்லையா…? நாம் நமது உழைப்பிற்கு எஜமானர்கள் இல்லையா…? நமது சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் நாம் தானே உடைமையாளர்கள்…? உரிமை என்பது அவரவர் உழைப்பை சார்ந்த விஷயமல்லவா…? அதனை எப்படி மற்றொருவருக்கு நம்மால் கைமாற்றி விட முடியும்?

தோழர்களே!

இப்படிப்பட்ட கேள்விகள் எதுவும் நமக்குள் எழுந்துவிட கூடாது என்பதால் மிகத் தெளிவாக ஜாதியக் கட்டுமானத்தை கொண்டு நம்மை அடிமைப்படுத்திக் கொண்டது அன்றைய பார்பனியம். நம்மைக் கொண்டே நம்மை அடிமைபடுத்தும் இந்த ஜாதிய கட்டமைப்பைத் தான் இன்றளவும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்கிறோம்.

மூத்திரச்சட்டியை வைத்துக் கொண்டு தனது தொன்னூறாவது அகவையிலும் நம்மை சிந்திக்க வைக்க பயணித்துக் கொண்டே இருந்த ஈரோட்டு சிங்கத்தின் போதனைகள் இன்னும் நம் காதருகே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அதற்கு செவிமடுப்போமா…?

சனி, 9 ஏப்ரல், 2011

நானும் அவளும்...

காதல் ”ரசவாதம்”பாலும்,தேனும்

கலந்து தந்தாள்

பருகும் முன்

பறித்துக் கொண்டாள்

ஏமாற்றத்தோடு அவளை ஏறிட்டேன்

ஏளனப் பார்வையோடு

புன்னகைத்தாள்.

உதடுகளைக் குவித்து……

ஏங்கச் செய்தபடி

பாலினைப் பருகினாள்

என்னைப் பார்த்து சிரித்தபடி

தம்ளரை கவிழ்த்தாள்.

நான் பாய்ந்து சென்று

அவள் உதட்டில்

உறைந்து நின்ற பாலின்

ஒரு துளி மிச்சத்தை சுவைத்தேன்….

தேனும் பாலும் அவள் உதட்டில்

கள்ளாய் மாறும் ’ரசவாதம்’ தெரியாமல்!!!!


ஊடல்

எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல்

நானும் அவளும்

சண்டையிட்டு கொண்டிருந்தோம்…..

வார்த்தைகள் தடித்து கண்ணீர் வெடித்து

கிளம்பிய அந்த தருணத்தில்….திடீரென்று

கோபம் மறைந்து காமம் பூத்தது

அவளை இழுத்து பிடித்து

உப்பிலிட்ட நெல்லிக்கனியை போல் இருந்த

அவளது கன்னங்களை சுவைக்க துவங்கினேன்…..

கோபமாக என்னைப் பிடித்து தள்ளினாள்

அதிர்ச்சியில் ஒரு கணம்

அவமானப்பட மறந்து நின்றேன்.

என் அதிர்ச்சி விலகுமுன்….

என்னை தன் பக்கம் இழுத்து பிடித்து

சுவைக்கத்துவங்கினாள்.


வேண்டப்பட்ட வீழ்ச்சி

குளித்து முடித்து நீர் சொட்ட

வந்து நின்றாள்- வழக்கம்போல்

நான் நிலை தடுமாறத்

துவங்கியிருந்தேன்- ஆனால்

வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அவளும் என்னை

சட்டை செய்யாதவளைப் போல்

சீண்டத் துவங்கி யிருந்தாள்.

நான் என் புலன்களை

கட்டுப்படுத்தும் முயற்சியில்

தோற்றுக் கொண்டிருக்கையில்……

என் அருகே வந்தவள்

தன் கூந்தல் கொண்டு

என் முகத்தில் நீரை அடித்துவிட்டு

திரும்பிச் செல்ல முயல்கையில்

அவளது மயிற்றின் நுனியில்

நான் சிக்குண்டிருந்தேன்.

அவள் தன் மயிற்றில் கட்டி

என்னை இழுத்துச் சென்றாள்.

நான் சென்று விழுந்தேன்.

அவளும் என் வீழ்ச்சியில்

பங்கு கொண்டாள்

என்னை மீண்டும் வீழ்த்த….

நானும் சளைக்காமல்

அவளை பதிலுக்கு வீழ்த்த

இறுதியில் இருவரும் வீழ்ந்து போனோம்.

வீழ்ந்தவர்கள் எழுவது தானே இயற்கை…?

ஆம்…!

அவளும் என்னோடு எழுந்து கொண்டாள்

மீண்டும் குளிப்பதற்கு!

புதன், 6 ஏப்ரல், 2011

வாங்க பேசலாம் வாங்க...

நேற்று என்பது முடிந்து போன ஒன்று…. நாளை என்பது நம் கையில் இல்லாத ஒன்று….. இன்று மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒன்று…. ஆதலால் நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் நமக்கானதாய் எண்ணி நாம் விரும்பிய வண்ணம் ரசித்து கொண்டாடுவோம்….”

சமீபகாலங்களில் இப்படிப்பட்ட வாசகங்களும்….அறிவுரைகளும் அல்லது சிந்தனைகளும் நமக்குள் அதிகப்படியாக செலுத்தப்பட்டு வரப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த ‘CORPORATE’ சாமியர்களே இதனை அதிகம் வலியுறுத்தி வருபவர்களாக இருக்கிறார்கள்.

சரி! இதில் என்ன தவறு என்கிறீர்களா….?

இதைத்தான்….

”எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”.- என்கிறான் வான்புகழ் வள்ளுவன்.

இந்த வாசகத்தை மேம்போக்காக பார்த்தால் நம்மீது அக்கறை கொண்ட ஒருவரின் அன்பான வழிகாட்டுதலாகவே தோன்றும். இன்றைய இயந்திரமயமான வாழ்வில் நாம் நமக்காக செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவாகிப் போனபடியால் நமக்கு இப்படிப்பட்ட ஆலோசனைகள் மிகவும் கனிவான ஒன்றாகவே தெரியும். ஆனால் இது போன்ற கரிசனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ‘அரசியலை’ நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்வது என்னவென்றால்…..

”எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்……

முந்தைய வரலாறுகளை, தியாகங்களை, படிப்பினைகளை முடிந்தனவைகளாய் கொள்ளுங்கள்……

எதிர்கால சமூகத்தைப் பற்றியோ அல்லது சக மனிதனைப்பற்றியோ கவலைப்படாமல் உங்கள் தேவைகளையும்,ஆசைகளையும் பிரதானமாக்கிக் கொண்டு சுயநலமாய் வாழுங்கள்……”

இதைத்தான் இவர்கள் நம்மிடையே விதைக்க விளைகிறார்கள்.

சரி! இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் என்கிறீர்களா?

முதலில் இவர்கள் யார்? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித் புரிந்து கொண்டால் தான் இவர்களது பிரசங்கங்களுக்கு பின்னால் இருக்கும் இலாப நோக்கம் நமக்கு புரிய வரும்.

இந்த ‘CORPORATE’ சாமியார்கள் பெரும்பாலும் பெருமுதலாளிகளின் ’ஆசிபெற்ற’ அடிபொடிகளே! இந்த சாமியார்களின் ‘டிரஸ்ட்’ வரவுகள் எல்லாம் பெரும்பாலும் பினாமி வகையறாக்களே! அன்னிய செலாவணிகளை குறைத்தருளும் வல்லமை படைத்த “உண்டியல்”கள் இவர்கள்! இப்படிப்பட்ட மேன்மையான நோக்கத்திற்கு படைக்கப்பட்ட இந்த "தூதுவர்கள்" வேறு எப்படி பிரசங்கம் செய்வார்கள்…?

தோழர்களே!

’மனிதன்’ என்பவன் ஒரு சமூக மிருகமே! அவனால் இங்கு எதையும் சுயம்புவாய் உருவாக்கிட முடியாது. நாம் சகமனிதர்களை சார்ந்தே நம் வாழ்வை எதிர் கொண்டிட முடியும். ஆகவே மனித இனம் கூட்டாகவே வாழ்ந்தாக வேண்டும். அப்படி கூட்டமாய் வாழும் போது ‘சுயநலமாய்’ இருப்பது எப்படிச் சரியாகும்?

நமது மூதாதையர்களும், முந்தைய தலைமுறையினரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை நமக்கு பாடமாக்கியிருக்காவிட்டால் நமக்கு இந்த வாழ்க்கை சாத்தியமாய் ஆகியிருக்குமா? இத்தனை எளிதாய் நம்மால் இயற்கையையும் அதன் பேரிடர்களையும் எதிர்கொண்டிட முடிந்திருக்குமா? இத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்திருக்காவிட்டால் நம்மால் இத்தனை சுகமான வாழ்வை கொண்டிருக்க முடியுமா? இப்படியொரு சுதந்திர வாழ்வையாவது நாம் கண்டிருப்போமா?

அவர்களது அந்த தேடல்களுக்கும்….தியாகங்களுக்கும்….. பின்னால் ஒளிந்திருந்தது அவர்களது வருங்காலங்களான நம்மைப் பற்றிய கவலைகள் அல்லவா?


இப்படிப்பட்ட முந்தைய வரலாறுகளையும், சரித்திரங்களையும் முடிந்து போனவைகளாக எடுத்துக் கொள்வது எப்படிச் சரியாகும்?

இயற்கை என்பது நம் அனைவருக்கும் பொதுவானது அல்லவா?. அதிலிருந்து நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளும் போதோ அதனால் நமது சக மனிதனுக்கோ அல்லது எதிர்கால தலைமுறைகளுக்கோ எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையல்லவா?

அப்படி இருக்கும் போது நாளைய சந்ததிகளைப் பற்றி

கவலைப்படாமல் இன்றைய கணத்தை மட்டும் சுயநலமாய் அனுபவத்து வாழ்வது எப்படி நியாயமாகும்…?