வியாழன், 12 ஆகஸ்ட், 2010

புதுச்சேரியில்-ஒரு தொழிற்சங்க வைபவம்


கடந்த 08.08.2010 அன்று புதுச்சேரியில் உள்ள பார்வதி திருமண நிலையத்தில் வைத்து சிறப்பு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்து நடத்தினர். இதை வழக்கமாக கூட்டப்படும் தொழிற்சங்க கூட்டமாக நாம் பார்க்க முடியாது.ஏனென்றால் “தொழிற்சங்கம்” என்ற வார்த்தையை கூட இதுவரை எதிர்கொண்டிராத ஒரு புதிய தலைமுறையின் வண்ணமயமான தொழிற்சங்க பிரவேச விழா இது.

விழித்தெழ விசனப்பட்டுக்கொண்டு விடியலை மறுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாலைப்பொழுதை மலர்ச்சியாக்க மெல்லப் பரவும் ஒளிக்கீற்றுகள் போல பல்வேறு பக்கங்களில் இருந்தும் தோழர்களின் வருகை இருந்தது. AIRRBEA என்னும் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்கள் கூட்டிய சிறப்பு தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்க பாண்டியன் கிராம வங்கி,பல்லவன் கிராம வங்கி,சவுத் மலபார் மற்றும் சப்தகிரி கிராம வங்கிகளில் இருந்தும் திரளான தோழர்கள் வந்து குவிய துவங்கினார்கள்.வண்ணத்துப்பூச்சிகளின் திடீர் படையெடுப்பு போல இருந்தது புதுவை தோழர்களின் வருகை. அவர்கள் வந்திறங்கிய சிறிது நேரத்தில் அந்த இடமே ஒரு கல்லூரிவளாகம் போல் உருமாறியது. பல மணிநேர பயணக் களைப்பையும் மீறி ஒருவித புத்துணர்ச்சி எங்களுக்குள் பரவத்துவங்கியது.

முதலில் சிறிது தயக்கத்துடன் நுழைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு திரும்பி எங்களோடு சகஜமாக உரையாட துவங்கினர். விழா அரங்கத்தை சீரமைப்பது,பேனர்கள் கட்டுவது என பரபரப்பானார்கள். மணப்பெண்ணை தயார் செய்வது போல் கருமசிரத்தையோடு அரங்கத்தை தயார் செய்தனர். எங்களது அகில இந்திய தலைவர்களின் வருகைக்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் கூட்டம் மிகச் சரியாக 11.00மணிக்கு துவங்கியது.

புதிய இளம் தலைமுறையினருக்கு இடையே பல தலைமுறைகளை கடந்த பழுத்த பழமாக எங்களது அகில இந்திய சங்கத்தின் (AIRRBEA) பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் அமர்ந்திருந்தார். சமீபத்தில் தான் செய்து கொண்ட அறுவைசிகிச்சையின் காயம் கூட ஆறாத நிலையில் தனது குடும்பத்தின் புதிய அங்கத்தினர்களோடு கலந்துரையாட மிகுந்த உற்சாகத்தோடு காத்திருந்தார். கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் அலுவலர் சங்கத்தலைவர் தோழர். முருகன் துவக்கி வைத்தார். புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.சசிகுமார் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

அதுவரை உறவுகளின் முறைகளை சொல்லியும், நண்பர்களின் பெயர்களை சொல்லியும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த அவர்களின் உதடுகள் முதல்முதலாக “காம்ரேட்” என உச்சரிக்க துவங்கியதால் சிறிது பதட்டத்துடன் அதை பதம் பார்த்தார்கள். குழந்தைகளின் ’கிள்ளை’ மொழி போல அதுவும் அழகாகதான் இருந்தது.தோழர்.ரமன்யா வரவேற்புரையை தெளிந்த ஆங்கில நடையில் வழங்கினார். எங்கள் சங்கத்தின் (AIRRBEA) தமிழ்மாநில பொதுச்செயலாளரும், புதுவை பாரதியார் கிராம வங்கியின் தொழிற்சங்க அமைப்பாளருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்கள் ஒரு மூத்த தகப்பனை போல் அவர்களுக்கு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களை பற்றியும்,எங்கள் சங்கத்தின் பாரம்பரியத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

எங்கள் அகில இந்திய சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான் தோழர்.வெங்கடேஸ்வர ரெட்டி (GS-NFRRBO) அவர்கள் மிகத்தேர்ந்த வார்த்தைகளில் காலம் கருதி சுருக்கமாக தனது சிறப்புரையை வழங்கினார். அடுத்து பேசிய தோழர்.ராஜீவன் (PRESIDENT-NFRRBE) அவர்கள் புதிய தோழர்களின் வருகையால் தனக்கு அளப்பரிய உற்சாகமும், சங்கத்தின் எதிர்காலம் குறித்தான புதிய நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து தோழர்.K.கிருஷ்ணன் (SECRETARY-BEFI) அவர்கள் மெல்ல தன் முழக்கத்தை ஆரம்பித்தார். தோழர்.D.K.முகர்ஜியின் ஓய்வறியா வாழ்க்கை முறையையும், போராட்டங்கள் நிறைந்த அவரது தொழிற்சங்க பயணத்தையும் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை பாடமாக கொள்ள வேண்டுமென கூறினார். மேலும் தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை குறித்தும்,அதிகாரவர்க்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் அவர்தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

எமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் தனது சிறப்புரையை மிக மெல்லிய குரலில் ஆரம்பித்தவர் தனது உடல்நிலையையும் மறந்து மெல்ல மெல்ல தனது வழக்கமான கர்ஜனைக்கு மாறினார்.கிராம வங்கிகளுக்கு புதியவர்களின் வருகை புதுரத்தம் பாய்ச்சியிருப்பதாகவும் அதேசமயம் கிராம வங்கி ஊழியர்களுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதாகவும் உறுதியளித்தவர். கிராம வங்கிச் சேவையிலிருந்து புதியவர்கள் வேறு வேலைகளுக்கும் மாற்றலாகி போகவேண்டாம் என்ற தனது கோரிக்கையையும் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் வைத்தார். கிராம வங்கி ஊழியர்களின் போராட்டங்கள் நிறைந்த கடந்த காலங்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார். நமது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் அதன் இன்றைய நிலை குறித்தும் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.ஒருமணி நேரத்திற்கும் மேலான அந்த நீண்ட உரையை தங்களது பசியையும் மறந்து வடித்து வைத்த சிலைகளைப் போல சிறு சலனமும் இன்றி உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.அவர் தனது சிறப்புரையை நிறைவு செய்த போதும் அரங்கத்தின் சுவர்களில் அவரது குரல் எதிரொலித்து கொண்டே இருந்தது.

இறுதியாக கூட்டத்தின் நிறைவு உறையை இளம் தோழர்.மனோஜ் பிரபாகர் அவர்கள் வழங்கி அந்த அருமையான அமர்வை நிறைவு செய்தார். தொழிற்சங்கங்களை முடக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளை சிதைப்பதிலும் அதிக சிரத்தையோடு ஆளும் அதிகார வர்க்கம் செயல்பட்டு வரும் வேளையில் இது போன்ற தொழிற்சங்க கூட்டங்கள் நடைபெறுவது நமக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும்,புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது.