ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அவளும் பெண்தான்...

காலையில் நகரமே பரபரப்பாக தத்தமது இரைகளை தேடி விரைந்து கொண்டிருந்தது. நானும் அவர்களில் ஒருவனாக என் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன். அவளுக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம். மேலாடை எதுவும் இன்றி கையில் ஒரு உடைந்து போன வாளியுடன் அழுக்கேறிப் போன ஒரு துண்டை மட்டும் அணிந்தபடி என்னை அலட்சியமாக கடந்து சென்றாள்.

அவளை நான் அதற்கு முன்பு அங்கு பார்த்ததில்லை.பார்த்திருந்தாலும் நினைவில் இல்லை…. ஒரு சில கணங்களே ஆனாலும் அவள் என்னை வெகுவாக பாதித்திருந்தாள்…. பட்டப்பகலில் அரைநிர்வாணமாக வலம் வருவதைப் பற்றி அவள் தன்னிலை உணராதவளாய் இருந்தாள். அது அவளுக்கு பழகிப் போயிருப்பதாகவும் எனக்கு தோன்றியது.…..ஆனால் எனக்கோ அதை வாழ்வின் யதார்த்தமாக ஜீரணம் செய்து கொள்ளமுடியவில்லை.

அதற்காக ஓடிச்சென்று அவளது நிர்வாணத்தை அவளுக்கு புரியவைக்கவும் விரும்பவில்லை. ஏனென்றால் அவளது துணையாக அப்போது அவளிடம் எஞ்சியிருந்தது அந்த அறியாமை மட்டும் தான். அவளை ”பைத்தியம்” என்று வர்ணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏனென்றால்…..

என்னைப்போல் அவளை எதிர்கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்….அவர்களில் ஒரு ஆசிரியர்,ஒரு மருத்துவர்,ஒரு அரசியல்வாதி,ஒரு பாதிரியார்,ஒரு ஆட்டோ ஓட்டுனர்,ஒரு பெண்ணியவாதி, ஒரு வியாபாரி, ஒரு முற்போக்குவாதி, ஒரு பத்திரிக்கையாளன், ஒரு மாணவன், ஒரு போலீஸ்காரர்,ஒரு கூலித்தொழிலாளி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் யாரும் அவளுக்காக எதையும் கிள்ளிப் போடகூட தயாராக இல்லை. நான் உட்பட….

எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டோம். ஒரு பெண்ணை அவளது நிர்வாணத்தோடு ஒரு சமூகமே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் நிர்வாணமாக நடந்து வலம் வருவதால் அவளை பைத்தியம் என எப்படிச் சொல்லமுடியும்?

ஒருவேளை அவளை ”பைத்தியம்” என ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவளது நிலையை ஏற்றுக்கொண்டு ஒதுங்கிச் சென்ற என் போன்றவர்களையும் ”பைத்தியம்” என்னும் அடைப்பில் அல்லவா வைக்க நேரிடும்?

சரி! இந்த ”பைத்தியம்” என்னும் ஆராய்ச்சி விபரீதமான முடிவுகளை நோக்கி இட்டுச் செல்வதால்…..புத்திசாலித்தனமாய் என் சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கம் திசைமாற்றினேன். ஆம்! இப்போது “அவளது இந்த நிலைக்கு யார் காரணமாக இருக்க முடியும்…?” என வேறு ஒரு திசையில் யோசிக்க ஆரம்பித்தேன்……

”அவளை எவனாவது காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி இருக்கலாம்….” “விபத்தில் உறவுகளை பறிகொடுத்து இருக்கலாம்…..”

“மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி குடும்பத்து உறவுகளாலே துரத்தப்பட்டிருக்கலாம்…..”

“பெற்ற பிள்ளையே இடஞ்சலாக எண்ணி அடித்துவிரட்டியிருக்கலாம்…..”அல்லது

”ஒருவேளை வறுமை காரணியாக இருக்கலாமோ….?” இப்படி எண்ண துவங்கிய பின் சிந்தனை வேகமாக கிளை பரப்ப துவங்கியது…..

”ஆம்! பாழாய்ப்போன இந்த ’சுயநல’ அரசியல்வாதிகளால் இப்படியொரு இழிநிலைக்கு இந்தப் பெண் ஆளாகி விட்டாளே….”என ஒரு முடிவுக்கு வந்தேன். அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களை பட்டியலிட்டுக் கொண்டு எனக்குள் குமுறல்கள் வெடிக்கத் துவங்கியது. இப்போது அவள் மீதான பச்சாதாபம் கூட அரசியல்வாதிகள் மீதான வெறுப்பாக மாறி விட்டிருந்தது. சரி! மாற்றங்கள் தானே நிரந்தரமானவை!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றாலே ஜகத்தினை அழித்திட அந்நியர் ஆட்சியல் உறுமிய பாரதி ஆனந்த சுதந்திரம் அடைந்து ஆறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிய பின்பு இப்போது இருந்திருந்தால்…..இந்தப் பெண்ணை நான் கண்ட நிலையில் கண்டிருந்தால்…..என்ன செய்திருப்பான்…?” எங்கெங்கோ சுழன்ற சிந்தனையோட்டும் இப்படியொரு கேள்வியில் வந்து நிலைபெற்று நின்றது.

பாவம்…ஏழை பத்திரிக்கையாளன் காரசாரமாய் ஒரு கட்டுரை எழுதி…. ”என்று இந்த தேசத்தில் ஒரு பெண் தன்னந்தனியாய் இரவில் எந்தவொரு பயமும் இன்றி நடந்து செல்கிறாளோ அன்றே நிஜமான சுதந்தர தினம் என்று அன்று அண்ணல் காந்தி சொன்னார்கள்….இன்றோ ஒரு பெண் பட்டப்பகலில் எந்தவொரு பயமுமின்றி…. மேலாடையும் இன்றி நடந்து செல்கிறாள்…..அப்படியென்றால் நாம் நிஜமாகவே சுதந்திரம் அடைந்து விட்டோமா….?” என வினா எழுப்பியபடி கட்டுரையை இப்படி முடித்திருப்பானோ…..?

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சிம்ம சொப்பனம்...


எங்கள் வங்கியில் தற்போது ஊழியர்களுக்கு ”C.B.S” (core banking solution) என்ற மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைதான் சிம்மசொப்பனமாய் விளங்கிவருகிறது. ஆம்! தங்களது கிளையை CBS-ஆக மாற்ற ஆள் வருகிறார்கள் என்றால் ஏதோ காலரா ஊசிபோட ஊருக்குள் மருத்துவர்கள் வருகிறார்கள் என்பது போல் ஊழியர்கள் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்? நாங்கள் பார்க்காத CBS-ஆ? என இப்போது தோன்றலாம். ஆனால் கிராம வங்கி ஊழியர்களான எங்களுக்கோ இன்று மிகப்பெரும் பிரச்சனையே இதுதான். மாற்றங்கள் என்பதை படிப்படியாக எதிர்கொள்ளும் போது நாம் அதற்கு இயல்பாகவே பழக்கமாகிவிடலாம். ஆனால் மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படும் போது நாம் திகைத்துபோவதே இயற்கை. அப்படித்தான் ஆகிப்போனது தற்போது எங்களது நிலையும்.

எங்கள் வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற வங்கித்தலைவர் அவர்கள் எந்த சாமிக்கு கற்பூரம் ஏற்றி வாக்கு கொடுத்தாரோ தெரியவில்லை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் எங்கள் வங்கியின் அனைத்து கிளைகளையும் CBS-ஆக்கிவிட வேண்டும் என நிர்வாக இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளார். சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகளும் இயந்திரமாய் சுழல தற்போது நூற்றிக்கும் மேற்பட்ட கிளைகள் CBS-ஆகிவிட்டது.

எல்லாமே வணிகமயமாகிப் போன இக்காலத்தில் பலம் நிறைந்த போட்டியாளர்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது யதார்த்தம்தான். ஆனால் அதற்குமுன் ஊழியர்களுக்கும் அத்தகைய புதிய தொழில்நுட்பம் குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டியதும் நிர்வாகத்தின் கடமைதானே?

ஆனால் அதை பற்றியெல்லாம் எந்த கவலையும் இன்றி தான் எடுத்த முடிவுகளை நிறைவேற்றுவதே முக்கியம் என நாலுகால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது எங்கள் நிர்வாகம். இதன்விளைவாக தற்போது ஊழியர்கள் மட்டுமின்றி வங்கியின் வாடிக்கையாளர்களும் வெகுவாக அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கமான நடைமுறைகள் அடியோடு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர் சேவைகளில் காலதாமதம் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது.

பிள்ளைபேறுக்கு கூட பத்துமாதம் காத்திருப்பதை அநாவசியமாக கருதும் இந்தக் காலத்தில் வங்கிச் சேவையில் ஏற்படும் இது போன்ற காலதாமதங்களை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இதனால் அந்தந்த கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களின் மீதே வாடிக்கையாளர்கள் தங்களது கோபத்தையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ”உரலுக்கு ஒரு பக்கம்னா மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி” என்னும் சொலவடைக்கு இலக்கணமாய் எங்கள் நிலையாகிப் போனது.

எங்கள் வங்கியில் பெரும்பான்மையான கிளைகளில் ஒரு அலுவலர், ஒரு எழுத்தர் மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் ஆக மொத்தம் மூன்றே மூன்று நிரந்தர ஊழியர்கள் மட்டுமே! இதைவிட மிகவும் மோசமாக கடைநிலை ஊழியரே இல்லாத கிளைகளும் ஏராளம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் கிளைகளை CBS-ஆக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு அலுவலர்….ஒரு எழுத்தர்…. இவர்கள் இருவர் மட்டுமே மொத்த வர்த்தகத்தையும் இயக்க வேண்டும். அந்த இருவரில் எவருக்கேனும் உடல் நலக்குறைவோ அல்லது வேறு ஏதாவது அத்தியாவசிய காரணங்களுக்காக விடுப்பு தேவைப்பட்டால் அவர்களது நிலை திரிசங்கு சொர்க்கம்தான்!

பல கிளைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைவிட அங்கிருக்கும் கணினிகளின் எண்ணிக்கையே அதிகம். ஏனென்றால் கிளைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்துபோனாலோ அவர்களது இடத்திற்கு வேறு நபர்களை எங்கள் நிர்வாகம் பணிநியமனம் செய்யமாட்டார்கள். அடிமைகளைப் போல் வேலைபார்த்து வரும் தற்காலிகப் பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்யமாட்டார்கள். ஆனால் கிளையின் வர்த்தகத்தை மட்டும் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டும் அதனை மேலும் அதிகரிக்க வைக்கவும் செய்யவேண்டும். ஆளும் தரமாட்டார்கள்….அம்பும் தரமாட்டார்கள் ஆனால் போரில் மட்டும் வெற்றிவாகை சூடவேண்டும்.

இவற்றையெல்லாம் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்பியது எங்கள் நிர்வாக குறைபாடுகளை சுட்டுக் காட்டுவதற்காக மட்டும் அல்ல. இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குமேயாகும். ஏன் என்றால் இது எங்கள் வங்கியில் நிலவும் நிலை மாத்திரம் அல்ல. இங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நிலவும் நிலையும் இதுதான். இது ஏதோ தற்செயலாக ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை அல்ல. இதற்கு பின்னால் பெரும் முதலாளிகளும் அவர்களது அடிவருடிகளான அதிகார அரசியல் விற்பன்னர்களும் மிகத் தெளிவாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் அரசியல் ஒன்று உள்ளது.

ஆம்! தோழர்களே!

அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகரித்து போன வேலைப்பளு மனச்சிதைவை உண்டாக்கும் அதனால் ஒன்று ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோருவார்கள் அல்லது தமது வேலைப்பளுவினை குறைத்துக் கொள்ள தற்காலிகமாய் ஒருவரை குறைந்த வருவாய்க்கு பணி அமர்த்திக்கொள்வார்கள். ஊழியர்களை பொறுத்தவரை தங்களது பிரச்சனை தீர்ந்தால் போதும். ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் போராடிப் பெற்ற தமது தொழிற்சங்க உரிமைகளை அடுகு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று.

அதேநேரத்தில் வாடிக்கையாளர்களான பொதுமக்களையும் அரசு இயந்திரங்களை குறைகூற செய்து தனியார் நிறுவனங்களே மக்கள் சேவைக்கு உகந்தது என்னும் கருத்தையும் ஆளமாக அவர்களுக்குள் விதைக்கிறார்கள். இதனால் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு பொதுமக்களின் அதரவு கரங்கள் நீழுவதில்லை. இப்படித்தான் நம் கைகளைக் கொண்டே நமது கண்களை குத்திக் கொள்ளவைக்கிறது முதலாளித்துவ வர்க்கம்.

பெரும்முதலாளிகளின் வியாபாரபசிக்கு பொதுத்துறைகளை இரையாக்க அதிகாரவர்க்கத்திற்கு பெரும் இடஞ்சலாய் இருப்பது தொழிற்சங்கங்கள் மட்டுமே!

இன்று ஜனநாயகத்தின் கடைசி குரலாய் எஞ்சி இருப்பதும் தொழிற்சங்கங்கள் மட்டுமே! அதன் ஆணிவேரே அரசு மற்றும் பொதுத்துறைகளின் ஊழியர்கள் தான்.

அதனால் தொழிற்சங்கங்களை நீர்த்துப் போகவைக்கவும் செயலிழக்க செய்யவும் இது போன்ற நரித்தனங்களை செய்துவரும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டியது அவசியம். தொழிற்சங்க வாடையே படியாமல் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி அடிமைபடுத்தி விடலாம் என மனப்பால் குடிக்கும் மக்கள் விரோத கூட்டத்தை இனம் கண்டு போராட வேண்டியது நம் கடமை.


புதன், 2 பிப்ரவரி, 2011

நலமான பொய்கள்

பொய்கள் பல சமயங்களில்

நிஜங்களை விட நல்லவைகளாகி

போய்விடுகிறது.

ஆம்!

நெஞ்சை கிழிக்கும் நிஜங்கள்

இனிய உளவாக இல்லாமல்

போவதும் இயற்கை தானே!

இங்கு பொய்களுக்காக பரிந்துபேசி

நிஜங்களை வெறுக்க கற்றுக்

கொடுக்க வரவில்லை-ஆனால்

வலித்து வலித்து மரத்துப்போன

ஒரு இதயத்தில்

சிறு தளிராய் முளைவிடும்

சிறுதுளி நம்பிக்கையை கூட

நிஜங்களை கொண்டு

பிடிங்கி எறிவது எப்படிச் சரியாகும்…?

நிஜங்கள் நெஞ்சத்து நம்பிக்கையை

சிதைக்கும் போது……

பொய்கள் நெஞ்சிற்கு அரண்களாகி

நிஜங்களை வெறுக்க துணைபோகிறது.

ஆம்!

எல்லாம் இழந்த இதயத்திற்குத் தான்

தெரியும் பெரும் வலிதரும்

நிஜங்களைவிட

சிறு ஆறுதல் தரும் பொய்கள்

அதனினும் மேலானவை என்று…….

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மலரின் நிழலைத் தேடி....

பயணங்கள் நமக்கு புதிதல்ல…..

வாழ்க்கை என்பதே ஒரு

தொடர் பயணம் தானே!

சில பயணங்கள்……

இறுதியிட்ட இலக்கை நோக்கி

இருக்கும்.

சில பயணங்கள்……

இலக்குகளை இறுதி செய்யாமல்

இருக்கும்.

என் பயணத்திற்கோ…

நோக்கம் உண்டு- ஆனால்

திசைகள் தெரியாது.

பயணத்திற்கான நோக்கம் இருந்தும்

திசைகள் தெரியாதது

விந்தையாக தோன்றலாம்.

இதில் விந்தை எதுவும் இல்லை

காரணம் என் பயணத்திற்கான

நோக்கம் அப்படியானது…..

ஆம்!

தன் இதழ்களை உதிர்த்துவிட்ட

மலரின் நிழலைத்தேடி நான்

இருளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மலர்கள் அழகானவைதான் –ஆனால்

காற்று அதை உணர்வதில்லை

அதற்காக காற்றை குற்றம் சுமத்தமுடியாது.

ஏனென்றால் காற்றுக்கு தெரிவதில்லை

தான் மலர்களுக்கு காலனாய்

மாறிப்போவது.

அதுமட்டுமின்றி……

என் மலரின் சுவாசம்

இப்போது

அந்த காற்றில் கலந்துவிட்டது.

காற்றில் கலந்துபோன என் மலரின்

சுவாசத்தை வாடை பிடித்துக்கொண்டு-என்

மலரின் நிழலைத்தேடி பயணிக்கிறேன்.