வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தோழர் ஆனேன்...3


இது ஒரு தொடர் பதிவு.....

குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை பாதையை நாம் வாழும் சமூகத்தை நோக்கி திரும்ப செய்தது எமது தொழிற்சங்கம் தான். இந்த சமூகத்தின் நிஜமான பக்கங்களை அது எனக்கு புரட்டிக் காட்டியது.அதுவரை நான் கண்டு நம்பி வந்த பிம்பங்களின் சுயரூபங்கள் தோலுரிக்கபட்ட போது நான் பெரிதும் அதிர்ந்து போனேன்.

இந்த சமூகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை தெரிந்து கொள்ள எனது தேடுதலை துவங்கினேன். அப்போது நிழல்கள் நிஜங்களாகவும்...நிஜங்கள் நிழல்கள் கூட இல்லாமலும் இருப்பதை கண்டேன். கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,காஸ்ட்ரோ...என ”புதிய புதிய” தோழர்கள் எனக்கு அறிமுகமாகத் துவங்கினார்கள். எனக்குள் தோன்றாத கேள்விகளுக்கு கூட அவர்களிடம் பதில்கள் கிடைத்தது.

“கம்யூனிஸம்” என்ற அவர்களது நூற்றாண்டு கால கனவு என்னை வசீகரித்தது. அது வெறும் சித்தாந்தம் அல்ல.மனித சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் பல்வேறு வகையான ஏற்றதாழ்வுகளுக்கான ஒரு தீர்வு என புரிந்துகொண்டேன். எனக்கு புரிந்த வரை ஒரு சில வார்த்தைகளில் அதன் சாரத்தை சொல்ல வேண்டுமானால் வர்க்கப் பேதமற்ற, தேச பிரிவினைகளற்ற, தட்டுப்பாடுகளற்ற ஒன்றிணைந்த ஒரே மனித சமூகம் என்ற நிலையே கம்யூனிசமாகும். உலகத்தின் எந்த மூலையிலும் இதுவரை பூரண கம்யூனிச ஆட்சி மலர்ந்ததில்லை,சோவியத் ரஷ்யா உட்பட. ஏனென்றால் லெனின்,ஸ்டாலின் போன்றவர்களால் கூட ரஷ்யாவில் சேஷியலிச ஆட்சியை தான் மலரச் செய்யமுடிந்தது. சோஷியலிசம் என்பது கம்யூனிசத்தின் முதல்படியே ஆகும். கம்யூனிசம் என்பது மனித சமூகத்தின் உன்னதமான நிலை.

ஆனால் இந்த உன்னதமான நிலையை மனித சமூகம் அடைந்து விட கூடாது என நினைக்கும் சுயநலவாதிகள் தான் சோவியத் வீழ்ந்தது...கம்யூனிசம் தோற்றது...என தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து நம்மை மூளைச் சலவை செய்துள்ளார்கள். பெரும் முதலாளிகளுக்கும், அவர்களை அண்டிப்பிழைத்து உடல் உழைப்பில்லாமல் ஊனை வளர்க்கும் வீணர்களான முதலாளித்துவ தரகர்களுக்கும் கம்யூனிசம் பொது எதிரியானது வியப்பிற்குரிய ஒன்றல்ல.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களை அடிமைகளாகவும், கூலிகளாகவும் சுரண்டிப் பிழைத்தவர்களுக்கு தொழிலாளற்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றாகிவிட்டால் நாமும் உழைத்து பிழைக்க வேண்டி வருமே என்ற பயமே அவர்களை கம்யூனிசத்தை வெறுக்க செய்தது. அதனால் தான் தொழிற்சங்கங்களை முனை மழுங்க செய்ய தங்களாலான அத்துணை முயற்சிகளையும் இன்றளவும் செய்து வருகிறார்கள்.

தொழிற்சங்கம் என்ற ஒன்றை பற்றி இனிவரும் தலைமுறையினர் கனவிலும் நினைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து தொழிற்சங்கங்கள் குறித்தும், தொழிற்சங்க தலைவர்களை குறிவைத்தும் உண்மையற்ற பிரச்சாரங்களை மிகவும் நைச்சியமாக மக்கள் மத்தியில் படரவிட்டு வருகின்றனர். இதை புரிந்து கொள்ளாத நம்மவர்களும் தொழிற்சங்கம் என்றால் தொட்டதற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்பவர்கள்,சம்பளத்தை உயர்த்தக் கோரியும், போனஸ் கோரியும் கொடி பிடிப்பார்கள் என்பன போன்ற தவறான பிம்பங்களே இருக்கிறது.

உதாரணமாக.....

நாம் வீதிகளில் பயணிக்கும் போது அவ்வப்போது செங்கொடி ஏந்தி நகரத்தின் முக்கிய இடங்களில் ஒரு சிலர் ஒன்று கூடி முழக்கங்கள் செய்த வண்ணம் இருப்பதை கண்டிருப்போம். அப்போது நாம் அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலையே இல்லை என முணங்கியபடி ஒருவித எரிச்சலுடன் அவர்களை கடந்தும் சென்றிருப்போம். ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காகத்தான் அவர்களது அன்றைய ஊதிய இழப்பை கூட பொருட்படுத்தாமல் முழங்கி கொண்டிருப்பர்.

அதேசமயம் மாபெரும் பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பரத்துடன் பொது சொத்துக்களை விரயம் செய்தபடியும் மிக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியபடிம் தமது அன்றாட பணிகளையே ஏதோ மாபெரும் சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும் நம்மை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் பொய்யர்களுக்குப் பின்னால் அணிவகுப்போம். ஊடகங்களும் இத்தகைய அரசியல் விற்பன்னர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர்களது கோமாளிதனங்களை தலையில் வைத்து கொண்டாடும் போக்கே இன்றைய யதார்த்தம்.

இந்தப் புள்ளியில் தான் வியாபாரிகள் வீரத் தலைவர்களாகவும்....போராளிகள் பிழைக்க தெரியாதவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனாலும் மனம் தளரா மார்க்கண்டேயர்களாக இன்னும் எங்களை போன்ற தொழிற்சங்கங்கள் மக்களுக்கான போராட்டங்களை மிகவும் நம்பிக்கையோடு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

-தொடரும்.........

புதன், 10 பிப்ரவரி, 2010

எனது முதல் பொதுக்குழு அனூபவம்.....


இது ஒரு தொடர் பதிவு......

தோழர்
ஆனேன்..2

எங்கள் சங்கத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எனது அமர்வை தவறாமல் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.தொழிற்சங்க கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் அதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகளோடு எங்கள் வட்டார தோழர்கள் கலந்துரையாடிய முறை அங்கு பரிமாறப்பட்ட கருத்தாக்கங்கள் எல்லாமே எனக்கு வினோதமாகவும் அதேசமயம் விஷயம் செறிந்ததாகவும் இருக்கும்.அவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்டு எனது இருப்பை பதிவு செய்ய விரும்புவேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்படி செய்யவிடாமல் தடுத்து விடும்....அது எனது தேவையற்ற கூச்சம் என்று நினைக்கிறேன்.

என்னுள் இருந்த அந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களையும் களைந்து எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் தோழர்.சுந்தரவடிவேல் அவர்கள். அவர் அப்போது கீழக்கரை கிளையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்கம் குறித்து எனக்குள் எழுந்த அத்துணை கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது.அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.அவரை உண்மையில் ஒரு ஆதர்ச நாயகனைப் போல் காணலானேன்.ஏனென்றால் அத்தனை கம்பீரமும்,உறுதியும் அவரிடம் உண்டு.தனக்கு தவறு என்று தோன்றினால் அதை தயங்காமல் தட்டிக்கேட்கும் துணிச்சலும் அவரிடம் உண்டு.

எங்கள் கிளையில் நீண்ட காலமாக சரி செய்யப்படாத கணக்குகளை சீர் செய்யும் பொருட்டு தோழர்.சுந்தரவடிவேல் அவர்களை எங்கள் கிளைக்கு தற்காலிக பணிமாற்றம் செய்தார்கள்.அவர் கணக்குகளில் இருந்த குழப்பங்களை மட்டும் அல்ல எனக்குள் தொழிற்சங்கம் குறித்து இருந்த சிறு சிறு குழப்பங்களையும் அந்த குறுகிய காலத்தில் சரி செய்தார்.

அந்த சமயத்தில் தான் எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் வைத்து நடைபெற்றது.அதுதான் எனது முதல் பொதுக்குழு கூட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் போராட்ட காலங்களை தவிர்த்து எங்கள் வங்கியின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் தோழர்கள் ஒன்றாக சங்கமிப்போம். ஒரு இரண்டு ஆண்டுகளில் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அசைபோட்டு விட்டும்... புதிய செயற்குழுவை தேர்ந்தெடுத்து விட்டும்... கலையும் சம்பரதாய கூட்டமல்ல அது.

அது எங்கள் குடும்ப விழா..... அங்கு வரும் தோழர்கள் தங்கள் கடந்தகால இனிமையான நினைவுகளை மீட்டெடுத்து அவர்கள் மேல் காலம் படர விட்ட முதுமையை களைந்து விட்டு புதிய பொலிவோடும், இளமையோடும் உற்சாகமாக இருக்கும் தருணங்கள் அவை. வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் இல்லாத ஒரு பெருமை எங்கள் சங்கத்திற்கு உண்டு. அது கடைநிலை ஊழியர்,எழுத்தர்,அலுவலர் என்ற எந்த பாகுபாடும் எங்கள் தோழர்களுக்கு இடையில் கிடையாது. மேலாளரை கூட உரிமையுடன் பெயர் சொல்லியும்,உறவு சொல்லியும் அழைக்கும் எத்தனையோ கடைநிலை ஊழியர்களையும்,எழுத்தர்களையும் நான் கண்டதுண்டு. உத்தியோகத்தின் பெயர்களை தவிர வேறு எந்த பிரிவினையும் எங்களுக்கிடையில் இல்லை.

அந்த பொதுக்குழு கூட்டத்தின் வரவேற்பில் வருகை பதிவேடுடன் அமர்ந்திருந்தார் தோழர்.காமராஜ் (அடர்கருப்பு).நான் முதலில் அவரை எதிர்கொண்டவுடன் அவர் என் பெயரை கேட்டார்.நான்,”அண்டோ...”என்றேன்.அவர் விடாமல் முழுபெயரையும் சொல் என கொஞ்சம் குரலுயர்த்தினார்.நான் முறைப்பாக,”அண்டோ கால்பட்...”என்றேன்.அவர் உடனே சிரித்தபடி,”நீ கன்சோலா அக்கா மகன் தானே...நானும் உங்க அம்மாவும் ஒண்ணா வேலை பாத்திருக்கோம் தம்பி...எங்க அக்கா அவ....”என்று நிறுத்தியவரிடம்.நான் சமாதானமாக,”அப்படியா சார்...”என முடிப்பதற்குள்..”சார் என்ன சார்....மாமான்னு கூப்பிடு என அன்பு கட்டளையிட்டார்.அன்றுலிருந்து அவர் எனக்கு ’மாமா’மட்டும் தான்......

அங்கு நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என் தாயின் பெயரை சொல்லி அறிமுகமாக துவங்கினேன்.அப்போது ஒவ்வொருவரும் என் அம்மாவின்... அவர்களது நினைவுகளையும் என் அம்மாவை பற்றிய தங்களது மேலான மதீப்பீடுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள துவங்கினர். அப்போது தான் நான் அவர்களுக்கு அந்நியமானவன் அல்ல என்பதை உணரத்துவங்கினேன்.

நான் அந்த பொதுக்குழுவிற்கு சென்றதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம்....எப்படியாவது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தை சந்தித்து எனது சொந்த ஊருக்கு பணிமாறுதல் வாங்கித்தர உதவி கேட்பதற்கே.அவரை அதற்கு முன் எனது பணிநியமனத்தின் போதும்...ஓரிரு முறை இராமநாதபுர மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற எங்கள் சங்க கூட்டங்களிலுமே சந்தித்திருந்தேன். அந்த சந்திப்புகளின் போது அவர் என் தோள் தட்டி நலம் விசாரிப்பார் ஆனால் என் பதிலுக்கு கூட காத்திராமல் அடத்தவரிடம் சென்றிடுவார்.அதனால் அவரை எப்படியாவது பொதுக்குழுவில் வைத்து பிடித்துவிட வேண்டும் என தீர்மானித்து சென்றிருந்தேன்.

அவரோ என்னிடம் சிக்குவதாய் இல்லை. ஏதோ கால்களில் இறக்கை முழைத்தவர் போல் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். ஒருவழியாக தோழர்.முருகானந்தம் அவர்களின் உதவியோடு அவரை பிடித்தேன். அவரோ,”இன்னும் கல்யாணம் கூட ஆகல தானே... இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கலாமே....”என இடியை இறக்கினார். நான் என் குடும்ப நிலையையும் என்னோடு இராமநாதபுரத்தில் தங்கியிருந்த எனது தாத்தா,பாட்டியின் உடல் நிலைகுறித்தும் விவரித்து எனது பணிமாறுதலுக்கான அவசியத்தை எடுத்துச் சொன்னேன்.உடனே அவரும் உறுதியளித்தார். நான் அதற்கு ’நன்றி’ சொல்வதற்கு முன் வழக்கம் போல் மறைந்துவிட்டார்!!!!!

ஒருவழியாக பொதுக்குழு ஆரம்பமானது. தலைவர்களின் உரை...தீர்மானங்கள்....பொதுச்செயலாளர் அறிக்கை...அதன் மேல் விவாதங்கள்....பொதுச்செயலாளரின் பதில்கள்.....புதிய செயற்குழுவின் தேர்வு....என அங்கு நடந்தேறிய எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள் தான்.”தொழிற்சங்கம்” என்பது தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட சுயநல கூடாரமல்ல என்பதை நான் அநூபவ பூர்வமாக அன்று உணர்ந்தேன். தொழிற்சங்கத்தின் வேர்களை நோக்கி எனது பார்வையை செலுத்த வைத்த அற்புதமான வைபவம் அது.அதன் ஒவ்வொரு நினைவுகளும் இன்றும் என்னுள் பசுமையாக மலர்கிறது.....


தொடரும்..................

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

"தோழர்" ஆனேன்....


“தொழிற்சங்கம்” என்ற வார்த்தையே தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒன்றுதான்.ஆறு வருடங்களுக்கு முன்பு நானும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தேன்.என் தாயின் திடீர் மரணம்....எனது அப்போதைய குடும்பச் சூழல் எல்லாம் சேர்ந்து எனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு என்னை எனது தாயின் வங்கிப்பணியை வாரிசு உரிமை அடிப்படையில் ஏற்கச் செய்தது.

என்னை இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் இரகுநாதபுரம் என்னும் ஊரில் உள்ள எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) கிளைக்கு ’எழுத்தராக’ பணிநியமனம் செய்தார்கள்.அங்கு எங்களது சங்கத்தின் (பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்) அப்போதைய உதவி பொதுச்செயலாராக இருந்த தோழர்.முருகானந்தம் அவர்கள் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரிடமிருந்து தான் எனது தொழிற்சங்க வாழ்வின் அகரம் ஆரம்பமானது.

அதுவரை நான் கேட்டறிந்தது எல்லாம் ஒரு வங்கி கிளையில் மேலாளர் என்பவர் சர்வ அதிகாரம் படைத்தவர். அவர் நினைத்தால் அந்த கிளையின் ஊழியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் அவர் சொல்படி கேட்டு அவரது விருப்பபடி நடந்தால் மட்டுமே என் போன்ற ஊழியர்களின் வேலை தப்பும்.அதற்கு மாறாக தொழிற்சங்கத்தில் இணைந்தால் அவர்கள் நம்மை காரணமில்லாமல் போராட செய்து மேலாளரின் கோபத்திற்கும், நிர்வாகத்தின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கி நமது வேலையை இழக்கும்படி செய்துவிடுவார்கள் என்பதுமே ஆரம்பத்தில் எனக்கு தொழிற்சங்கம் குறித்த கேள்விஞானமாக இருந்து வந்தது.

ஆனால் தோழர்.முருகானந்தம் அவர்களிடம் எங்கள் கிளைமேலாளர் மட்டுமல்லாமல் அப்போதைய இராமநாதபுர வட்டாரமேலாளரே நடந்து கொள்ளும் விதம் எனக்கு பெரும் வியப்பளித்தது.ஒரு சாதாரண காசாளருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ஒரு வட்டார மேலாளரே தனது வட்டார ஆளுமையின் கீழ் இயங்கும் வங்கிகள் குறித்தும் நிர்வாகத்தால் தனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய உத்தரவுகள் குறித்துமான தனது அன்றாட நிகழ்வுகளை ஏன் இவ்வளவு சிரத்தையுடன் ஒரு காசாளரிடம் பகிர்ந்து கொள்கிறார்?என்பன போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தது.

எனது அத்தனை கேள்விகளுக்கும் அவர் ஒரு “தொழிற்சங்க தலைவர்” என்ற பதிலே எனக்கு கிடைத்தது.”தொழிற்சங்கம்” குறித்தான எனது பயங்களும்,தவறான புரிதல்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.தயக்கங்கள் களைந்து தொழிற்சங்கம் என்னும் மாபெரும் விருட்சத்தின் விழுதுகள் நோக்கி எனது கைகள் நீள துவங்கின.தோழமையுடனும்,வாஞ்சையுடனும் இராமநாதபுர வட்டார தோழர்கள் என்னுள் நெருக்கம் பிடித்தனர்.மெல்ல மெல்ல அவர்கள் கைப்பிடித்து நான் தொழிற்சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போது எனக்கு அது ஒரு புதுவிதமான அநூபவமாக இருந்தது.

மாபெரும் தொழிற்சங்க பாரம்பரியமும்,சளைக்காத உழைப்புக்கும் கொண்ட எங்கள் சங்கத்தின் பெரும்பான்மையான தோழர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறையின் இடைவெளி உண்டு.ஆனால் அவர்கள் என்னிடம் பாராட்டிய தோழமையை என் சக வயதினரிடம் கூட நான் அதுவரை கண்டதில்லை.என் தாயின் திடீர் மரணத்தால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கு அவர்களது தோழமையே சிறு மாறுதலை தருவித்தது.

எங்கள் வங்கியின் நிர்வாகம் எப்போதெல்லாம் ஊழியர் விரோத நடவடிக்கையில் இறங்கியதோ அப்போதெல்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில் எங்கள் வட்டார(இராமநாதபுரம்) தோழர்களும் நிர்வாகத்திற்கு எதிராக களம் கண்டனர்.”பயம்” என்ற சொல்லை கூட கேட்டறியாதவர்களை போல் அவர்கள் வீதியில் இறங்கி செய்யும் முழக்கங்கள் என்னை மட்டுமல்ல விண்ணையும் அசைப்பதாய் இருக்கும்.முதலில் அவர்களோடு வீதியில் இறங்கி கோஷமிடுவதற்கு எனக்கு கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.ஆனால் அவர்களது போராட்டத்தின் வீச்சும் அதை உறுதியோடு அவர்கள் முழங்கிய விதமும் என்னையும் அறியாமல் எனது குரலை அவர்களோடு உயர செய்தது.நரம்பு புடைக்க நமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புது இரத்தம் பாய்வதை நாம் உணரலாம்.நான் உணர்ந்தேன்....!

........தொடரும்