கடந்த இரு தினங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் உவரி சென்றிருந்தேன். நான்கு வருடங்களுக்கு பின் மீண்டும் செல்வதால் நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி சென்றோம். ஊருக்குள் நுழைகையிலேயே எங்களுக்கு வழி மறுத்தபடி ஒரு மணல் லாரி தன் பெருத்த சரீரம் குலங்க குலங்க முன்னால் சென்று கொண்டிருந்தது. அது மண்ணை எங்கள் மீது வாரி இறைத்தபடியே எங்களை ஊருக்குள் அழைத்து சென்றது.
தாயை பிரிந்த கன்றினைப் போல் காரை விட்டு இறங்கியதும் நேரே கடலை நோக்கி விரைந்தோம். அங்கே எங்கள் கடலன்னை மடி அறுக்கப்பட்டு இரத்தச்சகதியாய் ஓலமிட்டு கொண்டிருந்தாள். தலைமுறை தலைமுறையாய் எங்களை சீராட்டி தாலாட்டி வளர்த்து வரும் எங்கள் கடலன்னையின் அவல நிலையை கண்ட போது நாங்கள் நிலைகுலைந்து போனோம். பணவெறி பிடித்த ஓநாய்களின் கோரப்பசியால் பலலட்சம் வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஓயாத பயணத்தின் மூலமாக அவள் சேர்த்து வைத்திருந்த வளமான மண்ணையும் இழந்து கரைகளும் துண்டிக்கப்பட்டு சிவந்திருந்தாள்.
இந்தப் படங்கள் நான்கு வருடங்களுக்கு முன் அதாவது 08/08/2008 அன்று எடுத்தது. இப்படி இருந்த இடம் தான் இப்போது……….
இப்படி இருக்கிறது.....
உவரியின் புகழ்பெற்ற ”செல்வமாதா” கோயிலின் நான்கு வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் இது. இதில் என் நண்பர்கள் உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்கும் தார்ச்சாலையின் இன்றைய நிலை…….
ஆம்! அந்த தார்ச்சாலைதான் இப்படி அரிக்கப்பட்டு கடல் மேலும் ஊருக்குள் வந்துள்ளது. செல்வமாதா கோயிலில் இருந்து அந்தோணியார் கோயிலுக்கு முன்பு கடற்கரையோரமாக நடந்தே சென்று விடலாம் ஆனால் இன்றோ……..
இது தான் நிலை. கரைகள் ஒடுக்கப்பட்டு…… வீடுகள் அரிக்கப்பட்டு மிதப்பதற்கு தயாரான நிலையில் உவரி!!!!! மண்ணை சுரண்டுபவர்களுக்கு மனிதர்களைப் பற்றி என்ன கவலை? அவர்களது கண்ணெல்லாம் மண்ணாய் போய்விட்டது.
தான் வலைவீசும் கடல் பகுதியில் பக்கத்து ஊர்க்காரன் வலைவிரிதாலே தலையறுக்க துணியும் கடலோடிகளும் இன்று சுரனை அற்றுப் போய் பெற்ற அன்னைக்கும் மேலான கடலன்னையையே மாற்றானுக்கு காவு கொடுக்க துணிந்து விட்ட பேடித்தனத்தை நினைத்து வெட்கி தலைகுனிவதா? அல்லது தாங்கள் சுரண்டப்படுவதையே உணரமுடியமால் சுயசிந்தனை அற்றுப் போய் பாமரராய் வாழும் என்மக்களின் இழிநிலையை எண்ணி வருந்துவதா? என்றே புரியவில்லை.
கடலறுத்து எடுக்கப்பட்ட மண்ணிற்கு வேலியிட்டு காவல் காக்கும் வல்லூறுகள்.
தம் பிள்ளைகள் தத்தளிப்பதை கண்டு இரத்தம் சொறியும் கடல் அன்னை. இத்தனை கொடுமைகளையும் சுரண்டல்களையும் அந்த அரசாங்கத்தோடு சேர்ந்து மௌனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் உவரி காவல் தெய்வமான அந்தோனியாரும், கடலாடிகளின் தாயுமான செல்வமாதவும்!!!!!!!!!
6 கருத்துகள்:
வீடுகளை அரிக்கத்தயாராக, தொட்டுவிடும் தூரத்தில் கடல்..
விளைவுகளை நினைச்சா பயங்கரமா இருக்குதே..
வேலியே பயிரை மேயும் கொடுமைதான் இங்கு நடக்கிறது ...மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசியல்வாதிகள் பிச்சை காசுக்காக சில பணக்காரர்களிடம் அடி வருடுவதால்தான் இந்த நிலை ....எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இந்நிலை மாறாமலிருப்பதுதான் கொடுமை ...நல்ல பதிவு அண்ணா !
வேதனையாக இருக்கிறது நாட்டின் நிலைமையை நினைத்தால்.
very bad stage for உவரி.....
by:
D.Daniel Raj,IPS
Tiruchendur,
Tuticorin District.
அன்பிற்கினிய தோழர்கள் ரத்தினவேல், அமைதிசாரல், கூடல் பாலா.....
உங்களது வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் எனது நன்றிகள்.
மதிப்பிற்குரிய தோழர்.டானியல் அவர்களின் வருகையும் பகிர்வும் எனது இந்தப் பதிவின் நோக்கம் நிறைவேறிய நிறைவை தருகிறது.
தங்களது பணியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியின் நிலையை தாங்கள் அறிந்திருப்பது ஆச்சர்யமானதல்ல....ஆனால் அது குறித்து ஒரு சமூக தளத்தில் வெளிப்படையாக தங்களது கருத்தை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். விருப்பம் இருந்தால் நாம் தொடர்ந்து உரையாடலாம்........
கருத்துரையிடுக