
’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.
மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.
இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.
1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.
1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.
அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!
இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?
லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?
ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?