வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தோழர் ஆனேன்...3


இது ஒரு தொடர் பதிவு.....

குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை பாதையை நாம் வாழும் சமூகத்தை நோக்கி திரும்ப செய்தது எமது தொழிற்சங்கம் தான். இந்த சமூகத்தின் நிஜமான பக்கங்களை அது எனக்கு புரட்டிக் காட்டியது.அதுவரை நான் கண்டு நம்பி வந்த பிம்பங்களின் சுயரூபங்கள் தோலுரிக்கபட்ட போது நான் பெரிதும் அதிர்ந்து போனேன்.

இந்த சமூகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை தெரிந்து கொள்ள எனது தேடுதலை துவங்கினேன். அப்போது நிழல்கள் நிஜங்களாகவும்...நிஜங்கள் நிழல்கள் கூட இல்லாமலும் இருப்பதை கண்டேன். கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,காஸ்ட்ரோ...என ”புதிய புதிய” தோழர்கள் எனக்கு அறிமுகமாகத் துவங்கினார்கள். எனக்குள் தோன்றாத கேள்விகளுக்கு கூட அவர்களிடம் பதில்கள் கிடைத்தது.

“கம்யூனிஸம்” என்ற அவர்களது நூற்றாண்டு கால கனவு என்னை வசீகரித்தது. அது வெறும் சித்தாந்தம் அல்ல.மனித சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் பல்வேறு வகையான ஏற்றதாழ்வுகளுக்கான ஒரு தீர்வு என புரிந்துகொண்டேன். எனக்கு புரிந்த வரை ஒரு சில வார்த்தைகளில் அதன் சாரத்தை சொல்ல வேண்டுமானால் வர்க்கப் பேதமற்ற, தேச பிரிவினைகளற்ற, தட்டுப்பாடுகளற்ற ஒன்றிணைந்த ஒரே மனித சமூகம் என்ற நிலையே கம்யூனிசமாகும். உலகத்தின் எந்த மூலையிலும் இதுவரை பூரண கம்யூனிச ஆட்சி மலர்ந்ததில்லை,சோவியத் ரஷ்யா உட்பட. ஏனென்றால் லெனின்,ஸ்டாலின் போன்றவர்களால் கூட ரஷ்யாவில் சேஷியலிச ஆட்சியை தான் மலரச் செய்யமுடிந்தது. சோஷியலிசம் என்பது கம்யூனிசத்தின் முதல்படியே ஆகும். கம்யூனிசம் என்பது மனித சமூகத்தின் உன்னதமான நிலை.

ஆனால் இந்த உன்னதமான நிலையை மனித சமூகம் அடைந்து விட கூடாது என நினைக்கும் சுயநலவாதிகள் தான் சோவியத் வீழ்ந்தது...கம்யூனிசம் தோற்றது...என தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து நம்மை மூளைச் சலவை செய்துள்ளார்கள். பெரும் முதலாளிகளுக்கும், அவர்களை அண்டிப்பிழைத்து உடல் உழைப்பில்லாமல் ஊனை வளர்க்கும் வீணர்களான முதலாளித்துவ தரகர்களுக்கும் கம்யூனிசம் பொது எதிரியானது வியப்பிற்குரிய ஒன்றல்ல.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களை அடிமைகளாகவும், கூலிகளாகவும் சுரண்டிப் பிழைத்தவர்களுக்கு தொழிலாளற்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றாகிவிட்டால் நாமும் உழைத்து பிழைக்க வேண்டி வருமே என்ற பயமே அவர்களை கம்யூனிசத்தை வெறுக்க செய்தது. அதனால் தான் தொழிற்சங்கங்களை முனை மழுங்க செய்ய தங்களாலான அத்துணை முயற்சிகளையும் இன்றளவும் செய்து வருகிறார்கள்.

தொழிற்சங்கம் என்ற ஒன்றை பற்றி இனிவரும் தலைமுறையினர் கனவிலும் நினைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து தொழிற்சங்கங்கள் குறித்தும், தொழிற்சங்க தலைவர்களை குறிவைத்தும் உண்மையற்ற பிரச்சாரங்களை மிகவும் நைச்சியமாக மக்கள் மத்தியில் படரவிட்டு வருகின்றனர். இதை புரிந்து கொள்ளாத நம்மவர்களும் தொழிற்சங்கம் என்றால் தொட்டதற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்பவர்கள்,சம்பளத்தை உயர்த்தக் கோரியும், போனஸ் கோரியும் கொடி பிடிப்பார்கள் என்பன போன்ற தவறான பிம்பங்களே இருக்கிறது.

உதாரணமாக.....

நாம் வீதிகளில் பயணிக்கும் போது அவ்வப்போது செங்கொடி ஏந்தி நகரத்தின் முக்கிய இடங்களில் ஒரு சிலர் ஒன்று கூடி முழக்கங்கள் செய்த வண்ணம் இருப்பதை கண்டிருப்போம். அப்போது நாம் அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலையே இல்லை என முணங்கியபடி ஒருவித எரிச்சலுடன் அவர்களை கடந்தும் சென்றிருப்போம். ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காகத்தான் அவர்களது அன்றைய ஊதிய இழப்பை கூட பொருட்படுத்தாமல் முழங்கி கொண்டிருப்பர்.

அதேசமயம் மாபெரும் பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பரத்துடன் பொது சொத்துக்களை விரயம் செய்தபடியும் மிக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியபடிம் தமது அன்றாட பணிகளையே ஏதோ மாபெரும் சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும் நம்மை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் பொய்யர்களுக்குப் பின்னால் அணிவகுப்போம். ஊடகங்களும் இத்தகைய அரசியல் விற்பன்னர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர்களது கோமாளிதனங்களை தலையில் வைத்து கொண்டாடும் போக்கே இன்றைய யதார்த்தம்.

இந்தப் புள்ளியில் தான் வியாபாரிகள் வீரத் தலைவர்களாகவும்....போராளிகள் பிழைக்க தெரியாதவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனாலும் மனம் தளரா மார்க்கண்டேயர்களாக இன்னும் எங்களை போன்ற தொழிற்சங்கங்கள் மக்களுக்கான போராட்டங்களை மிகவும் நம்பிக்கையோடு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

-தொடரும்.........

4 கருத்துகள்:

ஆர்வா சொன்னது…

"சிவப்பு சிந்தனை" சிறப்பானதாகவே இருக்கிறது

Unknown சொன்னது…

நன்றி காதலா...!

Joe சொன்னது…

//
அதேசமயம் மாபெரும் பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பரத்துடன் பொது சொத்துக்களை விரயம் செய்தபடியும் மிக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியபடிம் தமது அன்றாட பணிகளையே ஏதோ மாபெரும் சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும் நம்மை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் பொய்யர்களுக்குப் பின்னால் அணிவகுப்போம்.
//
சவுக்கடி! நம்ம மக்கள் திருந்துவாங்களா?

சாமக்கோடங்கி சொன்னது…

உங்க பகுதிக்கு ரொம்ப நாள் கழிச்சி வரேன்..

எப்டி இருக்கீங்க..