
என் வாழ்கையில் எத்தனையோ இரவுகள் வந்துள்ளது ஆனால் ''அந்த இரவை'' என்னால் வாழ்கையில் மறக்கவே முடியாது.என் மனைவியை அவள் தாய் வீட்டில் விட்டுவிட்டு நான் 'முதல்முதலாக' தனியாக தவித்த மிக நீ............ண்ட ''முதலிரவு''............... தான் அது.
ஆம் திருமணமானவர்களுக்கு அந்த இரவின் சுகமான வலிகள் புரியும்.எனக்கு நண்பர்கள் அதிகம் உண்டு அவர்களில் ஒருவர் கூட அந்த ''முதல் இரவின் '' கொடுமையான கணங்களை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டது இல்லை.அப்படியே பகிர்ந்து கொண்ட ஒரு சிலரும்' no தங்கமணி enjoy...' என்றே சொல்லி ஏதோ நடித்து தங்களது உணர்வுகளை தாங்களே ஏமாற்றியுள்ளார்கள்.
ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. என் வாழ்வின் மிக முக்கியமான ''அந்த இரவில்''நான் எதிர் கொண்ட ஒவ்வொரு கணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் வீடுதான்........என் படுக்கை அறைதான் ......ஆனால் அன்றோ ஏதோ ஒரு தீவில் இருப்பது போல் உணர்ந்தேன். விளக்கை அனைத்தும் தூக்கம் வரவில்லை எனக்கு.அவள் நினைவுகள் கனவுகளாக விரிந்து ஆறுதல் கூறியது.புத்தகம் படிக்கலாம் என்று முடிவு செய்தேன்.இப்போது முயற்சி செய்தாலும் ஞாபகம் வரவில்லை என்ன புத்தகத்தை அன்று புரட்டினேன் என்று. இரவும் தனிமையும் நமது நிர்வாணத்தை நமக்கு மிகத் தெளிவாக புரியவைக்கும் ஆற்றல் கொண்டது.எத்தனையோ தனிமையான இரவுகளை கடந்து வந்துள்ளேன் ஆனால் அன்று போல் என்றும் நான் தவித்தது இல்லை.வட்டிக்காரனை எதிர் கொண்டு கடந்து செல்லும் கடங்காரனை போல் நொடிகள் ஒவ்வொன்றையும் கடந்து சென்றேன்.எனது இருபத்திஐந்து ஆண்டுகால வாழ்கையையும் அவள் வந்த இருபத்திஐந்து நாட்களுக்குள் அவளிடம் தொலைத்து விட்டு அவள் நினைவுகளை மட்டுமே நான் சுமந்து நிற்பது எப்படி? இப்படி அவள் என்னுள் ஏற்படுத்திய அற்புதங்கள் ஏராளம்.
சங்கஇலக்கியங்களில் நாரை விடு தூது ,நிலா விடு தூது என்று பல வழிகளில் தலைவனும் தலைவியும் தங்களது விரகதாபங்களை வெளிப்படுத்தியதாக பள்ளிகூட காலங்களில் கடமைக்காக படித்து பரிட்சையில் மறந்து போனது கூட அன்று ஞாபகம் வந்தது எனக்கு. இப்படி மாறி மாறி என்னுள் சிந்தனை ஓட்டங்கள் எங்கெங்கோ அலைமோதி கொண்டிருந்தது. செல்போன் உதவியோடு இந்த தவிப்பிற்கு முடிவு கட்டி விடலாம் என்று முடிவு செய்தேன்.ஆனாலும் 'ஏதோ'ஒரு எண்ணம் திடீரென்று தோன்றி இந்த 'தவிப்பை' மேலும் அனுபவிக்கலாம் என முடிவு செய்தேன்.சில நேரங்களில் சில முடிவுகளை ஏன் எடுத்தோம்? எப்படி எடுத்தோம்?என்று யோசிக்காமல் எடுப்போம் .அப்படித்தான் இந்த முடிவும்.
அவள் ஒரு நாள் என்னிடம் வேடிக்கையாக கேட்டாள் அவளை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று?நான் என் கை விரல்களை மடக்கி என் இதயத்தின் அளவாய்காட்டினேன். ஆனால் உண்மையில் அன்று எனக்கே தெரியவில்லை அவளை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று.அவள் என்னோடு இருக்கும் வரை எனக்கு புரியாத என் காதல் அவள் என்னோடு இல்லாத ஒரு நாளில் புரிந்தது.நான் என் தனிமையை விட மிக அதிகமாய் அவளை நேசிக்கிறேன் என்று.
இப்படியாக எனது தனிமையும் அவளது நினைவுகளுமாக சேர்ந்து 'நான்' என்ற ஒன்றை என்னை விட்டு ஓடச் செய்து எனக்கான 'விடியல்' தேடி தந்த 'போதி இரவானது ' .