புதன், 4 செப்டம்பர், 2013

ஆல்டர் பாய்ஸ்



மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவனை கடந்த ஞாயிற்று கிழமை பனிமய மாதா கோயில் வாசலில் வைத்து சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்தவனாக ஒருவித பரபரப்போடு என்னை அணுகினான்.

“மாப்ள… எப்புடி இருக்க…? பாத்து எவ்வளவு நாளாச்சு… என்னல பண்ணுற…? இது ஒம் மவனும் மவளுமா?” என தொடர் கேள்விகளை தொடுத்தவன் என் பதில்களுக்கு கூட காத்திராமல் என் மனைவியிடம் திரும்பி “நல்லா… இருக்கீங்களா…?” என அவளிடன் வெகு நாள் பழகியவனைப் போல அத்தனை சிநேகமாய் நலம் விசாரித்தான். உண்மையில் அவனை என் கல்யாணத்திற்கு கூட நான் அழைத்திருக்கவில்லை. அந்தக் குற்றவுணர்வு அந்தக் கணம் மேலோங்கினாலும் நான் அதை மறைத்தபடியே என்னை இயல்பாக காட்டிக் கொண்டு ,” என்னடா எப்படி இருக்க? அன்னைக்கு பாத்த மாறியே இருக்கியேடே…”

“நான் இருக்குறது இருக்கட்டும்… நீ என்னல இப்படி ஊதிட்ட… எனக்கே உன்ன முதல்ல பாத்த ஒடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல  பாத்துக்க… ஆளே மாறிட்டேயே டே… அதுவும் மாதா கோயிலுக்குலாம் வாறே… தங்கச்சி மாத்திட்டாளோ?”

“நல்லா மாறுனாப்ளயே நீங்க வேறன்ணே எட்டு மணிக்கு கோயில் வாசல்ல எங்கள எறக்கிவிட்டிட்டு போறவுகதான்…. பூச முடிஞ்சு நான் போன் பண்ண பொறவுதான்… எங்கள கூப்பிடயே வருவாப்ல…இதெல்லாம் மாறத ஜென்மங்க..” என அவனிடம் என் மனைவி தன் ஆதங்கத்தை சமயம் பார்த்து இறக்கி வைத்தாள்.

“ நீ வேறம்மா இவன் அப்பவே பெரிய அங்ஞானி…. அதான் எங்க பய திருந்திட்டானோன்னு எனக்கே ஆச்சர்யமா போச்சு…” என்றபடி என்னைப் பார்த்து “ எல நீ இன்னும் திருந்தவே இல்லயா?” என்றான்.

“ஆம…ல நான் நாலு கொல, அஞ்சு வழிபறி, அப்பப்ப வீடு பூந்து கொள்ளன்னு அடிச்சிட்டு திரியிறம்பாரு திருந்துறத்துக்கு… அவதான் சொல்லுறான்னா இவனும் வக்காலத்து வாங்கிட்டு…”

“இப்படித்தாண்ணே நாம ஒண்ணு சொன்னா குண்டக்க மண்டக்க ஏதாவது குதற்க்கமா பேசி நம்ம வாய அடச்சிருவாப்ல…”

“நீ விடும்மா… இப்ப இவ்வளவு பேசுறானே….  ஒரு நேரத்துல பூசக்கி உடுப்பு போடுறதுக்கு எவ்வளவு சண்ட போட்டிருக்கான் தெரியுமா…? தொடர்ந்து மூணு பூசக்கெல்லாம் இவனும் நானும் முந்தி ஆல்டர் பாய்ஸா உடுப்பு போடிருக்கோம்… ஒரு பெரிய வெள்ளிகெழமைக்கு சாமிக்கு முன்னால சிலுவையெல்லாம் இவன் புடிச்சிட்டு போயிருக்கான் அந்தக் கதையெல்லாம் உங்கிட்ட சொல்லி இருக்கானா…?” என ஏதேதோ பேசியவன் பழைய நினைவுகளை எனக்குள் மீட்டத்துவங்கினான். ஒருவாறு அவனிடம் பேசி முடித்து அலைப்பேசி எண்களை சம்பிரதாயமாக மாற்றிக் கொண்டு விடைபெற்று வீட்டிற்கு வந்த பின்பும் அவன் கிளறிய அந்த பசுமையான நாட்களுக்குள் என் நினைவுகள் செல்லத் துவங்கியது.

அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தோணியார் கோயிலுக்கு அதிகாலை ஆறு மணி பூசைக்கு என்னை அழைத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் கிறுத்துவ வாழ்வை பழக்கப் படுத்த என் அம்மாச்சி பிரயாசை பட்டுக் கொண்டிருந்தாள். அவளோடு அப்படி பூசைக்கு செல்லும் போதெல்லாம் என் வயதொத்த சிறுவர்கள் பூசையில் சாமியாருக்கு உதவியாக அவரோடு பீடத்தில் அவரைப்போன்று அங்கியும், இடுப்பில் வண்ண வண்ண பட்டைகளும் அணிந்து கொண்டு கம்பீரமாக வலம் வருவது எனக்கும் ஆசையை தூண்டியது. நானும் அவர்களில் ஒருவனாக மாற ஆசைப்பட்டேன்.
என் ஆசையை ஒருநாள் என் அம்மாச்சியிடம் சொன்னபோது அவள் பேருவகையோடு என்னை அழைத்துச் சென்று பங்குச் சாமியாரிடம் ஒப்படைத்தாள். என்னைப்போலவே ஆல்டர் பாயாக மாற ஆசைப்பட்டபடியே ஜூடும் ஆவலாக காத்துக்கொண்டிருந்தான். அப்போது தான் அவன் எனக்கு அறிமுகமானான். ஆனால் நாங்கள் நினைத்தது போல் ஆல்டர் பாயாக மாறுவது அத்தனை சுலபமானதாக இல்லை. எங்களைவிட ஓரிரு வயது மூத்தவர்களே அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சீசப்பிள்ளையாக இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒருவர் இருந்தார். அவரே ஒவ்வொரு பூசைக்கும் யார் யார் உடுப்பு போடுவது என தீர்மானிப்பவராக இருந்தார். அவர் கொடுக்கும் சின்னச்சின்ன வேலைகளையும் சிரமேற் கொண்டு செய்தும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எங்களுக்கு முதலில் பிடிபடவேயில்லை. 

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அங்கிருக்கும் ”உள் அரசியல்” எங்களுக்கு விளங்க துவங்கியது. அதாவது ஒரே பங்கைச் சேர்ந்தவர்களாய் நாங்கள் இருந்தபோதும் அங்கிருந்த பசங்களுக்கிடையே ”தெரு அரசியல்” மேலோங்கி இருந்தது. ஏழாம், எட்டாம் வகுப்பு பசங்கள் அதிகம் இருந்த அந்தோனியார் கோயிலை ஒட்டிய தெரு பசங்களின் ராஜ்ஜியமே அப்போது அங்கு கோலோச்சி இருந்தது. மற்ற தெரு பசங்கள் எல்லாம் அடக்கியே வாசித்தனர்.

இந்த உட்கலகம் எனக்கு பிடிபட்ட உடனே ஏனைய தெரு பசங்களிடம் வயது பாராட்டாமல் பழகத் துவங்கினேன். மெல்லமெல்ல கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் அந்தோனியார் கோயில் தெரு பசங்களின் அட்டகாசங்கள் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் பேசத்துவங்கினேன். அவர்களும் தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தோனியார் கோயில் பசங்கள், ஏனைய தெரு பசங்கள் என பிரிந்து அமரத் துவங்கினோம். ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் மறைக்கல்வி வகுப்புகளில் இதனை விவாதப் பொருளாய் கிசுகிசுக்க துவங்கினோம். ஒருநாள் என் வயதொத்த ஒரு சிறுவனிடம் நானும், ஜூடும் சேர்ந்து வழக்கம் போல் எங்கள் புலம்பல்களை பகிர்ந்து கொள்ள துவங்கினோம் அவனை மாற்று தெரு பையன் என நினைத்து. ஆனால் எங்களுக்கு அப்போது தெரியாது அவனும் அந்தோனியார் கோயில் தெருக்காரனென்று.

எங்கள் புலம்பல்களை அமைதியாய் கேட்டுக் கொண்டவன் எங்களைப் பற்றி அத்தெரு பசங்களிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஜூடை சரியாக குறிப்பிட்டவன் எனது அடையாளங்களை மட்டும் குத்து மதிப்பாக சொல்லிவிட்டிருந்தான். மறுநாள் பூசை முடிந்ததும், ஜூடையும், ஏறத்தாழ என்னைப் போல் இருக்கும் மற்றொருவனையும் பிடித்து அந்தோனியார் கோயில் தெரு பசங்கள் அடி பின்னி எடுத்துவிட்டனர். இந்த சம்பவம் கேள்வி பட்டு நான் பயத்தால் ஓரிரு நாள் கோயில் பக்கமே செல்லவில்லை.

தினமும் அதிகாலை உற்சாகமாய் கோயில் செல்லும் பிள்ளை ஏன் வீட்டிலே முடங்கியுள்ளான் என என் வீட்டில் உள்ளவர்கள் துளைத்து எடுத்த போது நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். என் ஆச்சி என்னை நேராக பங்குச் சாமியாரிடம் அழைத்து சென்று அனைத்து விபரங்களையும் ஒப்புவித்தாள்.

பங்குச்சாமியாரும் “ஓஹோ அப்படியா இந்தக் கூத்தெல்லாம் நடக்குதா… நாளக்கி நீ காலைல பூசக்கிவா நான் ஒன்ன உடுப்பு போட வக்கிதம்… எந்தப் படுக்காலி சண்டக்கி வருதாம்னு பாக்கம்…”என உற்சாகப் படுத்தி அனுப்பினார். அன்றிறவு முழுக்க தூக்கமெல்லாம் தொலைத்துவிட்டு வண்ண கனவுகளில் மிதக்க துவங்கினேன்.

மறுநாள் விடிந்ததும்… விடியாததுமாய் எழுந்து உற்சாகமாய் கிளம்பி கோயிலுக்கு சென்றால் பங்குச்சாமியார் என் நினைவே அற்றவறாக பூசைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். நான் அவர் முன்னால் அங்கேயும்,இங்கேயுமாய் நின்ற போதும் அவர் என்னை சட்டை செய்யவேயில்லை. வழக்கம்போல் அந்தோணியார் கோயில் தெரு பசங்களே உடுப்புகளை அணிந்தபடி மிடுக்காய் தயாராகிக் கொண்டிருந்தனர். நான் நொந்து போய் ஒரு ஓரமாய் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தவனாய் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஜூடுதான் என்னை சமாதானப் படுத்த அதிக முயற்சிகள் எடுத்துக் கொண்டான். ஆனால் அவன் பேசப்பேச எவ்வளவு அடக்கியும் தாளாமல் என் விழிகளில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

அழுது கொண்டே பூசை முடியும் வரை காத்திருந்தேன். பூசை முடிந்ததும் நானும், ஜூடும் கோயிலை விட்டு கிளம்பிய போது அந்தோணியார் கோயில் தெருப் பையன் ஒருவன் எங்களைவிட இரண்டு வயது மூத்தவன் எங்களை நெருங்கி “அன்னைக்கி ஒனக்கு விழவேண்டிய அடி தப்பிச்சுட்ட… இருக்குடி உனக்கு ஒருநா பூச…” என மிரட்டும் தொனியில் என்னை அணுகி ஏளனம் செய்தான். ஒருகட்டத்தில் என்னையே கட்டுப்படுத்த முடியாதவனாய் கோயில் வாசல் என்றும் பாராமல் அவன் மேல் பாய்ந்து விழுந்து அவனை அடிக்க துவங்கினேன். சற்றும் எதிர்பாராத என் தாக்குதலால் அவன் நிலைகுழைந்து விழுந்தான். நான் அவன் மேல் ஏறி அமர்ந்து அவனை கண்மண் தெரியாமல் அடிக்க துவங்கினேன்.

ஜூடு செய்வதறியாமல் என்னை பிடித்து இழுத்தபடியே கத்த துவங்கினான். அவன் போட்ட கூச்சலில் ஒரு சிறு கூட்டம் அங்கே கூடி என்னை அவன் மேலிருந்து தூக்கி விலக்கியது. அந்தோணியார் கோயில் தெரு பசங்கள் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தனர். பங்குச்சாமியாரும் அந்நேரம் பார்த்து வெளியே வந்தார். என்னைப்பற்றி அவரிடம் புகார்கள் வாசிக்கப்பட்டன. என்னிடம் அடிபட்டவன் என் நகக்கீறல்களால் முகம் வீங்கி நின்று அழுது கொண்டிருந்தான்.
அவன் முகத்தை ஏறெடுத்து பார்த்தவாறே பங்குச்சாமி ”நல்ல பலமாத்தாம்ல அடிபட்டிருக்கு… நல்ல புள்ளையளா பூசையில நின்னிட்டு இப்படி வெளில நின்னு சல்லித்தனம் பண்ணா வெளங்கும்ல, நல்லா சாத்தான் குட்டிகளா நிக்கிறத பாருங்களேன்…. எதுக்குடே இப்படி கட்டிப் பொறண்டிக…? கோயிலுக்கு போயிட்டு புள்ளைக வரும்னு அங்க உங்க அப்பாஅம்மாமாரு நிம்மதியா இருப்பாக இப்படி மூஞ்சி வீங்கிப் போன சாமி கோயில்ல பூச வச்சாரா இல்ல குஸ்தி கத்துக் குடுத்தாறன்னுதான கேப்பாக… போங்க போங்க வீட்ட பாத்து போங்கடே பொறவு அங்கிட்டு நின்னு சண்ட போட்டேம் இங்கிட்டு நின்னு சண்ட போட்டேம்னு எவனாவது சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் பாத்துக்குங்க…” என்றபடி எங்களை கடந்து வேகமாய் போய்விட்டார்.

ஏதோ மிகப்பெரும் சாதனை செய்துவிட்டதைப் போல் என் மனம் அப்போது துள்ளி குதித்தது. என் மனத்துயரெல்லாம் கறைந்தோடி என்னைப் பற்றி நானே பெருமிதம் அடைந்து கொண்டேன். என்னை சுற்றி ஒரு அரணைப் போல மற்ற தெரு பசங்களெல்லாம் நின்றபடி அவரவர்க்கு தெரிந்த வார்த்தைகளில் என்னை தேற்றியும், பாராட்டியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தோணியார் கோயில் தெரு பயல்கள் என்னை முறைத்து பார்த்தபடி அவனை அழைத்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவன் இப்படி பேசியது என் காதுகளில் தெளிவாய் கேட்டது ”எல நீ வருத்தப்படாத எங்க போவான்… நாம யாருன்னு அவனுக்கு சீக்கிரமே காட்டுவோம்ல…”

இப்படி ஏராளமான சாகசங்களுக்கும், மிரட்டல்களுக்கும் பிறகே எனக்கும், ஜூடுக்கும் ஒரு ஞாயிற்றுகிழமை பூசையில் உடுப்பு போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாள் முழுவதும் ஓரிரு அடிகள் தரைக்கு மேலே தான் நாங்கள் நடந்து திரிந்தோம். ஏதோ நாங்களே அன்றைய பூசையை நடத்தியதை போல் அத்தனை பெருமைப்பட்டு போனோம். அப்பருவத்தில் பெரும் பகைகள் கூட கானல் நீரை போலத்தானே, அந்தோணியார் கோயில் தெரு பசங்களுக்கும் எங்களுக்குமான இடைவெளியும் கால ஓட்டத்தில் கரைந்து போய் எல்லோரும் நண்பர்களாகிப் போனோம்.
இனிய பழைய நினைவுகளை மீட்ட ஒரு சொல்லோ, ஒரு புன்சிரிப்போ கூட போதுமானதாய் இருக்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஜமீலாவும்…. நானும்….!!!


ஜமீலா…. கடந்த மூன்று நாட்களாய் எனக்குள் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். நான் ஒன்றும் அத்தனை பலவீனமானவன் அல்ல…. ஆனாலும் அவளது நினைவுகளால் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது மனைவியிடம் கூட அத்தனை இயல்பாய் என்னால் நடந்து கொள்ள முடியவில்லை…. அதற்காக ஒரு துளி குற்றவுணர்வும் எனக்குள் எழவில்லை. ஆம்! அந்தத் துணிவைவும் ஜமீலாவே எனக்கு தந்தருளியுள்ளாள்.

ஸ்டெப்பி புள்வெளிகளில் ஜமீலாவுடன் கரம் கோத்துக் கொண்டு ஏகாந்தமாய் திரிகிறது மனம்…. எங்கோ மறைவாய் நின்று கொண்டு (கிச்சினே) பாலா எங்களை தன் தூரிகையில் ஓவியமாக்க கூடும் என எண்ணும் போதே எத்தனை இன்பமாய் இருக்கிறது.

நினைக்க நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது….. வாழ்வின் எந்த கணத்தில் இது போன்ற இன்பங்கள் பூக்கும் என யாரால் அறுதியிட்டு கூறமுடியும்? முதன் முறையாய் ஒரு நீர்க்குமுழியை தீண்டிய ஒரு குழந்தையின் விரலைப் போல் தவிக்கிறது மனம். உங்கள் விரல்களுக்கும் ஜமீலாவை புரட்ட ஒரு வாய்ப்பு கிட்டுமானால் நீங்களும்…. என்னைப்போல் அல்ல என்னைவிட மோசமாக அவள் நினைவுகளில் அலைகழிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயம்.

ஜமீலா…. ஒரு பெருங்கொண்ட குடும்பத்தில் வாக்கப்பட்டவள் தான். அவளது கணவனோ நாட்டுக்காக யுத்தகளத்தில் ஆயுதமாகிப் போனான். ஜமீலாவும் ”ஒழுக்கம்” என போதிக்கப்பட்ட….படும் ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூக கட்டமைப்புகள் குறித்த ஐயவுணர்வும், நம்பிக்கையும் கொண்டவள் தான். ஆனால் காதல் இவை எல்லாவற்றையும் கடந்த அற்புதமான உணர்வல்லவா? காதலை உந்துவது வெறும் காமம் தான் என்றால் காதலுக்கு இத்தனை எதிர்ப்புகள் இராது. காதலில் காமம் ஒருநிலை! ஆனால் காமத்தின் நிறைவால் காதல் வடிவதில்லை.
”கிச்சினே” பாலாவுக்கும் தன் அண்ணன் மனைவியான ஜமீலா மீதிருந்தது காதல் தான். அந்தக் காதல் தான் அவளை காடையர்கள் சீண்டுகிற போது அவனை சினம் கொள்ளச் செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் தோள்களில் சாயும் போது அவனை ரசிக்க செய்கிறது…. அந்தக் காதல் தான் அவள் தானியாரின் கரம் பற்றி ஊரைவிட்டு செல்லும் போது துடித்து தவித்து உடைந்து வெளிப்படுகிறது.

காதல் அரும்பும் கனங்களும் ஆராய்ச்சிக்குரியவை தான். நெஞ்சத்து படபடப்பும், பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகளும் மட்டுமே காதலை உணர்த்தும் கனங்களாய் எல்லோருக்கும் இருப்பதில்லை. இயல்பான பகடிகளும், நேர்மையான அலட்சியங்களும் ஏன் சிலருக்கு காரணங்களற்ற வெறுப்பும் கூட காதல் அரும்பும் கனங்களாய் மாறிவிடுவதுண்டு.
ஜமீலாவுக்கும் அப்படித்தான் ஒரு புரியாத கணத்தில் தானியார் மேல் காதல் அரும்பிப் போகிறது. தானியாரின் அலட்சியமும், உணர்வுகளை வெளிப்படுத்தாத குணமுமாய் அவரைப் பற்றிய அவளது பிம்பங்களை ஸ்டெப்பி புள்வெளிகளில் அந்த ஏகாந்தமான மாலைப் பொழுதில் அவர் தன் பாடல்களால் உடையச் செய்யும் போது அவள் தன் காதலை உணர்கிறாள். இத்தனைக்கும் அவர் காதல் பாடல்களை பாடவில்லை…. பெரும்பாலும் உணர்வுகளைத் தூண்டும் தேசபக்தி பாடல்களே அவை. காதல் ஒரு புரியாத புதிர் தான்!

மனித நம்பிக்கைகளையும், சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்தெரியும் காதல் இழிவாய் பார்க்கப்படுவதும் ஒருவித மூடநம்பிக்கையே! குடும்பம் என்ற அமைப்பின் மிகப்பெரும் பலவீனமே அது பல நேரங்களில் தனிமனித உணர்வுகளை வடிகால்களின்றி முடங்கச்செய்யும் சிறைக்கூடங்களாகிப் போவது தான்.

சிங்கிஸ் ஐத்மத்தேவ் படைத்த ”ஜமீலா” என்னும் அந்த நாவல் எனக்குள் எழுப்பிய கேள்விகள் ஏராளம். எத்தனை வக்கிரமாய் ஒரு ஆண் நம் சமூகத்தில் வளர்க்கப்படுகிறான் என்பதை ஜமீலாவை படித்த பிறகு என்னால் உணர முடிந்தது. இங்கு ஒழுக்கம் என கற்பிக்கப்படும் விஷயங்கள் எத்தனை விஷமமானவை என்பதை ஐத்மத்தேவ் எந்தவித பிரச்சார நெடியுமின்றி மிக நேர்மையாய்….. எளிமையாய் புரியவைத்து விடுகிறார்.

“கள்ளக்காதல்” என்றொரு பதத்தை மிக நைச்சியமாய் நம் பேச்சுவழக்கில் சில மலிவான ஊடகங்களால் எளிதில் கலந்துவிட முடிகிறது. நாமும் சமூக மனிதனாய் அதன் உள் அரசியல் புரியாமல் அதனை அப்படியே வழக்கில் ஏற்றிக் கொள்கிறோம். ஆனால் பெண்களுக்கெதிரான மிகத் தந்திரமான அடிமை அஸ்திரகளில் ஒன்றாய் இதனை யாரும் பார்க்கவில்லை. நான் உட்பட. ஒருநல்ல புத்தகம் நம் விழிகளை விசாலமாக்க வேண்டும். அதனை ஐத்மத்தேவின் “ஜமீலா” செய்கிறாள்.

வாய்ப்பு கிடைத்தால்…. அல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு ஜமீலாவை ஒருமுறை படியுங்கள்!  நீங்கள் ஒரு ஆணாய் இருந்தால் நிச்சயம் ஜமீலாவிடம் காதலில் விழுவீர்கள்…. நீங்கள் ஒரு பெண்ணாய் இருந்தால் ஜமீலாவாய் மாறிப்போவீர்கள்….. நீங்கள் யாராய் இருந்தாலும் ஜமீலாவை நேசிப்பீர்களேயன்றி நிச்சயம் பரிகசிக்க மாட்டீர்கள்!!!!

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டம்;மீனவ மக்கள் இனி என்ன செய்ய வேண்டும்?


ஊடகங்களின் வியாபாரப் பசிக்கு இனி பஞ்சமே இல்லை….. அரசியல் கூத்தாடிகளுக்கும் ஆளும் கட்சியை விமர்சித்து தள்ள மிகப்பெரும் வாய்ப்பாய் கூடங்குளம் மாறிப்போனது. ஆனால் இந்த தேசத்தின் பழங்குடி இனமான மீனவ சமூகத்திற்கோ இது மிக முக்கியமான போராட்டக் காலமிது.

ஓர் ஆண்டுக்கும் மேலான அவர்களது நெடிய போராட்டப் பயணத்தின்  எதிர்கால திசையை அவர்கள் மிகச் சரியாக கனித்து இயங்க வேண்டிய காலகட்டமிது. சு.ப.உதயகுமார்… என்னும் அந்த இளம் மனிதனின் மனித நேயமிக்க சமூக அக்கறையினாலும் அவரின் சளைக்காத வலிமையான மக்கள் தொடர்பின் காரணமாகவும் இன்று மீனவ சமூகத்தின் பெரும்பான்மைக்கும் அதிகமான மக்கள் அவரின் வழிகாட்டுதலின் பெயரில் ஓரணியில் திரண்டு கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று மிகப்பெரும் அரசியல் அனுபவமிக்க இடதுசாரிக் கட்சிகள் போன்ற முற்போக்கு சக்திகளால் கூட அணிதிரட்டப் பட முடியாத அல்லது முனையாத மக்களை மிகக்குறுகிய காலத்தில் இத்தனை உறுதியாக களம் காணச் செய்தது நிச்சயம் சு.ப.உதயகுமாரின் ஆளுமை தான். அதுவும் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் விசுவாசமான ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக…..

மாபெரும் எதிரிகளை மாபெரும் நோக்கத்திற்காக எதிர்க்கும் போது மாபெரும் திட்டமிடல் அவசியம். வெறும் உணர்ச்சிமிக்க போராட்டங்களால் மட்டுமே வெற்றிகள் சாத்தியமாகிவிடாது. எதிரிகளின் பலத்தை முழுவதுமாய் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த தேசமெங்கும் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட, நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்தும் அவைகளை இந்திய ஆட்சியாளர்கள் அணுகும் முறை குறித்துமான ஒரு புரிதல் அவசியமாகும்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சிறப்பு ராணுவச் சட்டத்தை நீக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா என்னும் ”இரும்புமங்கை” கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அது 2 நவம்பர் 2000 அன்று மலோம் நகரில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த பத்து அப்பாவிப் பொதுமக்களை அசாம் ரைப்பிள் பிரிவினர் அநியாயமாய் தங்கள் கொலைவெறியை தனித்துக் கொள்ள சுட்டுக் கொன்றனர். இது போன்ற கோரச்சம்பவங்களை துணிந்து அரங்கேற்ற வழிவகை செய்யும் சிறப்பு ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய அரசாங்கத்தை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். அதாவது தீவிரவாதிகள் என சந்தேகப்படும் யாரையும் எந்தவித விசாரணையுமின்றி சுட்டுக் கொல்லலாம் என்பதே அச்சட்டத்தின் அடிப்படை சாராம்சம். இப்படி ஒருச்சட்டம் தான் மிகப்பெரும் ஜனநாயக தேசம் என மார்தட்டிக் கொள்ளும் இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

இதை எதிர்த்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவை படம்பிடித்து…. செய்திகளாக்கி பரபரப்பூட்டி தங்கள் வியாபார வெறியை தனித்துக் கொண்டு ஊடகங்களும் ஓய்ந்து போய்விட்டது. அரசியல் கட்சிகளும் ஆளும் அரசாங்கங்களை எதிர்த்து வீராவேசமிக்க உரைகளை நிகழ்த்தி ஓய்ந்து போய்விட்டார்கள். ஆனால் ஐரோம் ஷர்மிளா மட்டும் தன் இருப்பத்தி எட்டு வயதில் தொடர்ந்த போராட்டத்தை ஒரு பெண்ணிற்கான அடிப்படை உடலியில் பிரச்சனைகளையும், கோளாறுகளையும் தாங்கிச் சகித்தபடி தன் இளமையையும், காதலையும் தன் நாட்டிற்காக தியாகம் செய்தபடி நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

இன்றும் டெல்லியில் ஜந்தர் மந்திர் பகுதிக்கு போய் பார்த்தால் தெரியும் இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் தத்தமது பிரச்சனைகளை கடைவிரித்தபடி நம்பிக்கையோடு ஏராளமான மக்கள் போராடிக் கொண்டிருப்பதை காணலாம்.

மக்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய தன்னாலான அனைத்து அஸ்திரங்களையும் நமது ஆட்சியாளர்கள் பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். இதில் கட்சி பேதமில்லை. இந்திய தேசத்தின் ஆட்சியை ஒரு கட்சி பிடிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். முதலாவதாக அது ஏகாதிபத்திய நாடுகளின் ஏவல்களை சிரமேற் கொண்டு செய்வோராய் இருத்தல் அவசியம். இரண்டாவதாக உள்நாட்டு, வெளிநாட்டு பெரும்முதலாளிகளின் நலன் பொருட்டு எந்தவித முடிவையும் தயக்கமின்றி எடுப்போராய் இருத்தல் வேண்டும். அது வெகுஜன நலனுக்கு எதிராகவோ அல்லது அழிவிற்கு காரணமாகவோ இருந்தாலும் பராவாயில்லை. மூன்றாவதாக மாஃபியாக்களை கண்டும் காணாமல் அனுசரித்து போவோராய் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு போராடும் மக்கள் தேசவிரோதிகளாகவும், அந்நிய சக்திகளாகவும் ஏன் தீவிரவாதிகளாகவுமே தெரிவார்கள். போராடும் மக்களை ஏனைய பொதுமக்களிடமிருந்து தனித்து போகச் செய்யவே இந்த தந்திரங்களை அவர்கள் கையாள்கிறார்கள்.
பொதுமக்களிடமிருந்து போராட்ட களத்தை துண்டாக்கி அதை கலவரபூமியாக காட்சி படுத்த போராட்டங்களின் கட்டுப்பாடுகளை குழைக்க துவங்குவார்கள். அதற்கு போராளிகளின் உணர்வுகளை தூண்டிவிட்டு வன்முறையை நோக்கி நகர்த்தி அவர்களால் பொதுச் சொத்துகளுக்கும், ஏனைய பகுதி மக்களுக்கும் இடையூறு என சித்தரித்து தனது ஊடகங்களைக் கொண்டு ”நடுநிலைமை” என்னும் மாயையை பரவச் செய்து போராட்டங்களின் நோக்கத்தை சிதைக்க துவங்குவார்கள்.

இது போன்ற ஒரு கட்டத்தில் தான் தற்போது கூடங்குளத்தின் போராளிகளும் நிற்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்த போராட்டக் குழு தலைவர்களை கைது செய்து மேலும் கடற்கரை பகுதிமக்களின் உணர்வுகளை தூண்டி கலவரங்களில் ஈடுபட செய்து ஒட்டுமொத்த கடற்கரை பகுதியையும் துண்டாக்கி அடக்குமுறையால் போராட்டத்தை திசைமாற்றி வென்று விடவே ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கிறார்கள்.

இதிலிருந்து மீண்டும் இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டுமானால் மீனவ மக்கள் முதலில் மேற்கொண்டு புதிய போராட்டங்களை அறிவிக்காமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மீனவ மக்களையும் ஒருசேர ஓர் இடத்தில் ஒன்று கூடச் செய்து தங்களது போராட்ட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்பந்தலிலே அணுஉலைக்கு எதிரான தீர்மானம் உட்பட தங்களது ஏனைய பொதுப்பிரச்சனைகளையும் சேர்த்து பொதுப்பட்டியலிட்டு இதனை ஒரு அரசியலியக்கமாக முன்னெடுப்பதே மிகச்சரியான முடிவாக இருக்கும்.

அரசியல் இயக்கமாய் மக்கள் மன்றத்தில் போய் நிற்பதனால் போராட்டங்களை ஒரு குறுகிய பகுதியில் முடக்காமல் அதை நாடு முழுவதற்குமாய் பரவச் செய்வதற்கும், ஒத்த சிந்தனை உள்ளவர்களை ஓரணியில் ஒரு மிகப்பெரும் நோக்கத்திற்கான மிக நீண்ட பயணத்தில் இணைக்கவும் அரசியல் இயக்கமே சரியானது.

முதலில் எதார்த்தங்களை ஒரு போராளி புரிந்து கொள்ள வேண்டும். உடனடிச் சாத்தியங்கள் எவை? நீண்ட பயணத்திற்குப் பின்பே சாத்தியமாகுபவை எவை? என்னும் புரிதலோடுதான் போராட்டப் பயணத்தை இலக்கை நோக்கி நகர்த்திச் செல்ல முடியும். ஏனெனில் காத்திருக்க மறுப்பவன் ஜனநாயகத்தின் எதிரியாவான்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக தேசத்தில் முதலில் அதிகாரத்தில் பங்கெடுப்பதே அதிக இழப்புகள் இன்றி ஒருகுறுகிய காலத்தில் நம் இலக்குகளை வென்றெடுப்பதற்கான எளிய வழியாகும். ஆனால் அந்த ”எளிய வழியை” அடைய ஆகப்பெரும் ஒழுக்கமும்,பொறுமையும் அவசியம்.
                                                       

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு உலையும்…. மீனவ மக்களின் போராட்டமும்:


நம் மூதாதையர்கள் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்து தொழிலும் அது சார்ந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் கொண்டிருந்தனர். நம் மண்ணையும் மண்ணில் வாழும் உயிர்களையும் தமிழ்மொழி திணை கொண்டே வகுத்து வைத்தது. அப்போதே மனிதர்கள் யாவரும் ஓர் திணையே என்றும் அஃது யாவும் உயர்திணையே எனவும் கொள்ளப்பட்டது. முடைநாற்றமெடுக்கும் சாதியப் பிரிவுகளால் தமிழ் மனிதர்களை பிரிக்கவில்லை.

நம் மண்ணையும் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை மற்றும் பாலைத் திணை என்றே வகுத்து வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் ஆரிய வருகைக்குப் பின் வர்ணாசரமத்தின் அடிப்படையில் ஜாதியின் பெயராலும், மொகலாயர்கள், போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பின்னால் மதத்தின் பெயராலும் பிளவுண்டு போனோம். இப்படியாக இந்த தேசம் சுதந்திரத்திற்கு முன்னால் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வந்தேறிகளாலும் சுதந்திரத்திற்குப் பின்னால் சுயநலமும், பதவிவெறியும் பிடித்த இருந்தேறிகளாலும் சுரண்டப்பட்டு அவர்கள் தம் அதிகாரவெறிக்கு இரையாக்கியப் பின் மண் சார்ந்த வாழ்வும் நிலம் சார்ந்த தொழில்களும் அழித்தொழிக்கப் பட்டு வருகிறது.

இதோ மின்சாரத்தின் பெயரால்…… மற்றுமொரு அரசாங்க பயங்கரவாதம் இந்த மண்ணின் பூர்வ குடிகளில் ஒன்றான மீனவ மக்களின் மீது பாயத்துவங்கியுள்ளது.

மின்சாரம் மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிப் போன விஷயம் தான். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பசிக்கின்றது என்பதற்காக தாயின் முலை அரிந்து யாரும் உண்ணுவதில்லை. சரி! அணு உலைகள் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை விவாதமாக்கும் முன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது…..

பல ஆயிரம் வருடங்களாக தலைமுறை தலைமுறையாய் இம் மண்ணில் வாழும் மனிதர்கள் எம் மக்கள். வங்கக் கடலைத் தவிர வேறு எந்த வாழ்வும் எத் தலைமுறையின் கனவிலும் இதுகாலும் யோசித்து அறியாதவர்கள். இந்த மண்ணிற்காக எம் மக்கள் இதுவரை இழந்தவைகள் வேறு எந்த இனமும் இந்த அகண்ட பெருந்தேசத்தில் இதுவரை இழந்திராதவை.

ஏன்?.... யூதர்கள் இஸ்ரேலுக்காகவும் அராபியர்கள் பாலஸ்தீனத்திற்காகவும் இழந்ததை காட்டிலும் மிக அதிகமாகவே எம் மக்கள் இழந்துள்ளார்கள். அப்படி என்ன இழந்துள்ளார்கள் என்கிறீர்களா?
காலத்தின் சக்கரத்தை ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக சுழலச் செய்து பார்த்தால் தெரியும் இந்த ஆகப்பெரும் தேசத்தின் வரலாற்றினை தத்தமது விருப்பு வெறுப்புகளை மையமாக கொண்டு எழுதி குவித்த வரலாற்று ஆசிரியர்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத அல்லது முக்கியத்துவமின்றி சொல்லப்பட்ட எம் மக்களின் செந்நிற இரத்தம் தோய்ந்த மண்ணிற்கான போராட்டங்களை…….

இன்று அணு உலைக்காக இந்திய அரசு காவு கேட்கும் இதே மண்ணிற்காகத் தான் எம் மக்கள் தாங்கள் காலம் காலமாய் வழிபட்டு வந்த கடவுளர்களையே விட்டுக் கொடுத்தார்கள். எம் மக்களுக்கு கடவுளைக் காட்டிலும் இம்மண்ணே மேலானது. இம்மண்ணிற்காகத் தான் தங்களது வம்ச அடையாளங்களையே மாற்றிக் கொண்டார்கள் எம் மக்கள்.
முகமதியர்களின் வருகைக்கு முன்னால் ஏகபோக கடலாடிகளாக வங்கக்கரையையே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் எம்மக்கள். இந்த தேசத்தின் முதல் அந்நிய வருவாயை ஈட்டியவர்களும் எம் மக்களே! (இன்று அந்நிய முதலீட்டுக்கே நம் தேசத்தை அடமானம் வைக்க துடிப்பவர்கள் தான் எம்மக்களுக்கு தீவிரவாதி பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள்)

முகமதியர்களின் வருகைதான் தமிழக மீனவர்களின் பொருளாதார வாழ்வையும் ஏகபோக கடலாடிகள் என்னும் நிலையையும் மாற்றி அமைத்தது. அதிலும் குறிப்பாக குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளில் முத்துக்களின் விளைச்சல் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. தூத்துக்குடி தான் முத்துக்குளித்துறையின் தலைநகரைப் போல் அப்போது விளங்கியது. இந்த அபரிவிதமான முத்துக்களின் விளைச்சல் தான் மீனவர்களின் மாபெரும் இழப்புகளுக்கு காரணம். முகமதியர்கள் அதிகம் இப்பகுதியில் குடியேறியதற்கும் இம் முத்துக்களின் விளைச்சலே காரணம்.

குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளை அப்போது இரண்டு பேரரசுகள் கோலோச்சி வந்தார்கள். குமரியில் இருந்து புன்னைக்காயல் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும் அங்கிருந்து மன்னார் வரை விஜய நகர பேரரசனின் ஆளுகையிலும் இருந்தது. மீனவ மக்களின் வாழ்வு குறித்த கவலைகள் ஏதுமின்றி முத்துக்குளித்துறையிலிருந்து வரும் வருவாயை மட்டுமே எதிர்நோக்கி ஆட்சி நடத்து வந்தார்கள். குமரியிலிருந்து வேம்பார் வரையிலான பகுதிகள் பரதவர்களின் கட்டுப்பாட்டில் ஏழு கடற்கரை கிராமங்களின் தலைமையில் இருந்தது. அவை மணப்பாடு, புன்னைக்காயல், வீரபாண்டியபட்டணம், தூத்துக்குடி,வேம்பார்,திருச்செந்தூர் மற்றும் வைப்பார். இந்த ஏழு ஊர்களின் தலைவரை பட்டங்கட்டியார் என்று அழைத்து வந்தார்கள். அவர்தான் பரதவமக்களின் தலைவராகவும், அப்போது இருந்தார்.

முகமதியர்களின் ஆதிக்கம் வங்கக்கறையில் ஓங்கத் துவங்கியது….. முத்து வாணிபம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்களும் முத்துக் குளித்துறையை கைப்பற்ற காத்துக் கிடந்தார்கள். முகமதியர்களுக்கும், பரதவர்களுக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கத் துவங்கியது. மீண்டும் பரவர்கள் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்த போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தசமயத்தில் தான் ஒரு பரதவனுக்கும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அந்த பரதவனின் கடுக்கன் அணிந்த காதை இஸ்லாமியர் கடித்து துப்பியுள்ளார்.

பரதவன் ஒருவனின் காது கடித்தெறியப்பட்டது பரதவ இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாய் கருதப்பட்டது. ஆகவே இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகக் கடுமையான தாக்குதலை பரதவர்கள் தொடுத்தார்கள். அடிபட்ட புலியாய் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் அண்டை ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை குவித்து பரதவ இன அழிப்பை துவங்கினர், ஒரு பரதவனின் தலைக்கு ஐந்து பணம் என அறிவிக்கப்பட்டு பரவர்கள் கொல்லப்படலாயினர். பரதவ இனமே அழிவின் விளிம்பிற்கு சென்றது. பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் செய்வதறியாமல் திகைத்து நின்றார், அப்போது குமரியில் குதிரை வாணிபம் செய்து வந்த ஜான்.டி.குரூஸ் என்பவரது வழிகாட்டுதலின் பெயரால் பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்.

ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை காத்திருந்த போர்ச்சுகீசியர்களும் பரதவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஒருநிபந்தனையுடன்…….ஆம்!! அது மதமாற்றம் தான்.

1535 ஆம் ஆண்டு…..

தம் மண்ணில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தாங்கள் இதுவரை வழிபட்டு வந்த குமரியம்மனையும், பெண் எடுத்த கடவுளாக நம்பப்பட்ட திருச்செந்தூர் முருகனையும் தத்தமது ஆதி தெய்வங்களையும் சிலுவையில் அறைந்துவிட்டு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரதவர்கள் ஒரே சமயத்தில் கிறுத்துவத்தை தழுவினர். 

கருத்தனுக்கும், வேலாயிக்கும் போர்ச்சுகீசியன் ஞானத் தந்தையாக நியமிக்கப் பட்டதால் கருத்தன் சிலுவை பர்னாண்டோ ஆனான் வேலாயி ஹெலன் ரொட்ரிகோவாக மாறினாள். சரி மண்ணிற்காக இத்தனை இழந்த பின்பாவது அவர்களது நிலை மாறியதா என்றால்? அதுவும் இல்லை….. முன்னிலும் மோசமானது. அடுப்பில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுந்த கதையாக மீனவர்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்யத் துவங்கினார்கள் போர்ச்சுகீசியர்கள்…. பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்தச் சமயத்தில் தான் போர்ச்சுகல்லில்  இருந்து சேசு சபையினர் கிறுத்துவம் போதிக்க வரலாயினர். அப்படி சேசு சபையால் அனுப்பப்பட்டவர் தான் சவேரியார். இவர் இங்கே வெறும் போதகராக மட்டும் இல்லாமல் போர்ச்சுகீசிய ஆளுகையின் கீழான இப்பகுதியின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.  கொஞ்சம் மனிதாபிமானம் நிறைந்த மனிதராக கடற்கரையோரும் வலம் வந்தவரால் மீனவ மக்களின் மரியாதைக்குரிய மனிதராகவும் இருந்துள்ளார். இவர் போர்ச்சுகீசியர்களின் அடாவடித்தனங்களை கொஞ்சம் அடக்கவும் செய்துள்ளார்.

மதுரையை ஆண்டு வந்த விஜயநகர பேரரசின் பிரதிநிதிகளான வடுகர்களுக்கு பரதவர்களின் மதமாற்றத்தால் முத்துக்குளித்துறையின் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அவ்வப்போது பரதவர்கள் மீது படையெடுப்புகள் நடத்தி அவர்களது குடியிருப்புகளை சூறையாடுவதும் பெண்களை மானபங்கப்படுத்துவதும் தொடர்ந்து நடந்துள்ளது.

முகமதியர்கள், போர்ச்சுகீசியர்கள், வடுகர்கள், டச்சுகாரர்கள் அதன் பின்னர் ஆங்கிலேயர் என தொடர்ந்த படையெடுப்புகளில் சிக்கி தவித்த போதும் சரி…. இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது வாரிக் கொடுத்த பின்பும் சரி….. எம்மக்கள் ஒருபோதும் இம்மண்ணை யாருக்காகவும் எத்தகைய நிலையிலும் விட்டுக் கொடுத்ததில்லை.

தங்கள் வாழ்வையும் வளத்தையும் வங்கக்கரைக்கே வாரிக் கொடுத்துவிட்டு இருண்டு போனவர்களின் வாழ்வில் சுதந்திரம் அடைந்த பிறகாவது விடியல் பிறந்ததா? என்றால்….. இல்லை!!! தொடர்ந்து இந்த தேசம் எம்மக்களை வஞ்சித்தே வந்துள்ளது.

பரவன்….. என்பது ஒரு ஜாதியல்ல…. அது ஒரு பழங்குடி இனம். ஆனால் இந்த தேசத்தில் பரதர்கள் பட்டியலினத்தவராய் கொள்ளப்படாமல் மிகவும் தாழ்த்தபட்டவர்களாகவே இடமளிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். வெறும் வாக்கு வங்கியாகவே பார்க்கப் படும் எம்மக்களின் கல்வித்தரம் குறித்தோ அல்லது சுகாதாரம் குறித்தோ அல்லது அடிப்படை கட்டமைப்புகள் குறித்தோ இந்த தேசத்தின் எந்தத் தலைவனுக்கும் அல்லது கட்சிக்கும் கவலையில்லை. இன்னும் கிறுத்தவ சபைகளின் கட்டுப்பாடுகளில் தான் எம் மக்களின் பெரும்பகுதி வாழ்ந்து வருவதாவது தெரியுமா?

இந்த தேசத்தின் கரைகளில் தம்மை தாமே ஒதுக்கிக் கொண்டவர்களை ஒட்டுமொத்த தேசமும் இதுவரை தீண்ட மறுப்பதற்கு பெயர் என்ன?

இப்படியாக தொடர்ந்து சமூகநீதி மறுக்கப்பட்டு வந்தபோதும் எம்மக்கள் எதர்காகவும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி இத்தனை உக்கிரமாய் போராடியதில்லை. இதுதான் எம்மக்கள் செய்திட்ட மாபெரும் தவறும் கூட. ஆனால் இன்று பல நூறு ஆண்டுகள் கழித்த போதும் தம் மண்ணிற்கு அணுவின் பெயரால் ஆபத்து என்னும் போது தம் பேதங்கள் கடந்து இணைந்துள்ளார்கள்.

மண்ணுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கும் அஸ்திரங்கள் அனைத்தையும் ஆளும் அதிகாரவர்ககம் போராடும் மக்களுக்கு எதிராக ஏவி வருகிறது. இவர்கள் கனம வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்காக சுரண்டுவதை எதிர்த்தால் நக்சலைட்டுகள் என தீவிரவாத முத்திரை குத்தப்படும். அணு உலைக்கு எதிராக போராடினால் அந்நிய நிதியுதவியின் தயவால் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என மீண்டும் அதே தீவிரவாதி முத்திரை.

இப்படி போராடும் பொதுமக்களை “தீவிரவாதி” என்று சொல்லி அச்சுறுத்தும் முதலாளித்துவ அடியாட்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இதில் உள்ளது….

எம்மக்கள் தம் மண்ணிற்கு ஆபத்து என்னும் நிலை ஏற்படுவதை உணர்ந்து கொண்டால் தங்கள் மண்ணைக் காப்பாற்ற எத்தகையை தியாகமும் செய்வார்கள் என்பதே அது!!!

சனி, 8 செப்டம்பர், 2012

கோல்கேட்டும்,கோட்னானியும்.....


இந்தியர்கள் உண்மையாகவே ‘பெருமை’ப்படலாம்!

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அகராதியில் சேர்பதற்கு மொழியியல் ஆய்வாளர்கள் கூடி முடிவெடுப்பார்கள். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகள் அடுத்த ஆண்டிலிருந்து அகராதியில் இடம்பெறும். பாலிவுட்,கோலிவுட் போன்ற வார்த்தைகள் செல்லமாக இப்படித்தான் இடம் பிடித்தன. அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் வெள்ளைமாளிகையிலிருந்து கொண்டே ரகசிய டேப் மூலம் வாட்டர் கேட் வளாகத்தில் உள்ள DNC கூட்டத்தை ஒற்றறிந்ததால் அவமானப்பட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து 1974ல் விலக வேண்டி வந்தது. அதிலிருந்து ‘வாட்டர்கேட்’ என்றாலே ஊழல் என்றாகிவிட்டது. அந்த வார்த்தை அகராதியிலும் இடம்பிடித்தது.

அதேபாணியில் “கோல்கேட்” (COALGATE) என்றால் ‘நிலக்கரி ஊழலுக்கு’ செல்லப்பெயர். கோல்கேட் என்றவுடன் கூடவே ‘கனிம ஊழல்’, இந்தியா, மன்மோகன்சிங் என்ற இணைப்பான்களையும் கணினியும், கணினி மூலம் சேகரமான அகராதிகளும் காட்டும். மன்மோகன் ‘வரலாற்று நாயகராகப்’ பதிவு செய்யப்பட்டு விடுவார்!

இந்தியாவின் அனைத்து கார்டூனிஸ்ட்டுகளுக்கும் ‘தீனி’ கிடைத்து விட்டது! இந்தியப் பிரதமர் பற்றிப் போடாத கார்டூன்படமில்லை ஆனாலும் டாக்டர் மன்மோகன் சிங் அசரவில்லையே!.....வழக்கம்போல். ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை. கவலைப்படவேண்டிய ஆழமான விஷயம்.
மாநில அரசுகளுக்கும் தனியார் முதலைகளுக்கும் மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஜூலை 2004 முதல் வெளிப்படையாக தெரிவிக்கப்படாதது புதைக்கப்பட்டு கிடக்கும் மர்மங்கள் இந்திய கண்ட்ரோலர்/ஆடிட்டர் ஜெனரலையே ஆட வைத்து விட்டது! 142 நிலக்கரி ப்ளாக்குகள் ஒதுக்கீட்டில் தனியார் அடித்த கொள்ளை லாபத்தைக் கேட்டால் தலைசுற்றும். அதாவது,ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு! விவரங்கள் வெளிப்படையாகவும் இல்லை;நியாயமாகவும் இல்லை. ஏலப்போட்டி முறையாக நடத்தப்படாததே இந்த முறைகேட்டுக்குக் காரணம். அதற்கான வழிகாட்டுதல்களும் இல்லை. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்தான் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பு என்னும்போது இன்னும் திடுக்கிட வைக்கிறது.

கனிமவளத்தைக் கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனங்கள் பற்றி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தில் இதை விசாரிக்க இடம்கொடுக்காமல் ரகளை செய்து வெளிநடப்பு செய்கின்றனர். விசாரணை வந்தால் பா.ஜ.க காலத்திலிருந்தே விசாரிக்க வேண்டி வருவதால் இதை மழுப்ப அவர்கள் வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மெகா ஊழல்கள் உட்கட்சிப் பூசலில் முடிந்து முடைநாற்றமடிக்கிறது.
வங்கி ஊழியர்களோ இதிர தொழிலாளர்களோ வேலை நிறுத்தம் செய்ய துவங்கினால் அரசு மீடியாக்களும்,கார்பரேட் நிறுவனங்களும்,சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்புகளும் இதனால் அரசுக்கு ஏற்படும் ‘தேசிய இழப்பு’ பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் ‘அநியாயத்தை’ பற்றியும் முதலைக் கண்ணீர் வடித்து தங்கள் கருத்தை இதர பிரிவு மக்களின் மீது திணித்து மூளைச்சலவை செய்வார்கள்.

2ஜி ஊழல் ரூ.1.76 லட்சம் கோடி என்றால்,அதைவிடவும் கூடுதல் இழப்பை தேசம் நிலக்கரி ஊழல் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தை மாற்ற இயலாது ‘புறக்கடைவழியாக’ நிலக்கரித் துறையையும் தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சத்தனம் இதில் வெளிப்படுகிறது. பொதுமக்கள் அக்கறையுடன் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் கூடாது என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களும் போதிப்பதன் ரகசியம் இதுதான். அதாவது இந்த “ஊழல் அரசியல்” குட்டு வெளிப்பட்டு விடும் என்ற ‘போபியாதான்’!

“அண்ணன் எப்போது சாவான்….திண்ணை எப்போது காலியாகும்” என்ற பழமொழியைப் பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.க.வுக்குப் பலத்த அடி!
”அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான்,பாருங்கள் இந்தியாவிலேயே மாடல் அரசு இதுதான்.” என்று விளம்பரம் செய்து வந்த குஜராத் மாநில அரசு பற்றிய ‘யோக்கியதை’ அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

2002 கோத்ரா சம்பவத்தை காரணமாக்கி குஜராத்-அகமதாபாத்-நரோதாபாடியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டது. இப்படியாக இனக்கலவரத்தைத் தூண்டி கூலிப்படையை வைத்து 97 பேரைக் கொலை செய்து பிணங்களை கிணற்றில் அள்ளிப்போட்டதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது யார் யார் என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்தது; அதன் அடிப்படையில் குஜாராத் சிறப்பு நீதிமன்றம் திருமதி.மாயாபென் கோட்னானி (28 ஆண்டுகள் சிறை) உட்பட 32 பேருக்குத் தண்டனை விதித்துள்ளது.

கலவரம் நடத்தி படுகொலை செய்த கோட்னானி எம்.எல்.ஏ 2004-ல் அமைச்சரானார்! அதுவும் மகளிர்/குழந்தைகள் நலத்துறை பொறுப்பு! குழந்தைகளையும்,பெண்களையும் கொல்லத் தலைமை ஏற்றிருந்த கோட்னானி பார்த்துக் கொண்டிருந்த தொழில் மகளிர் உடல்நல மருத்துவர்!... விசுவாசிக்குப் ‘பொருத்தமான பரிசளித்தவர்’ முதல்வர் நரேந்திர மோடி! கோட்னானியுடன் தண்டனை அடைந்தவர்களில் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப்பரிவார அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.


பத்தாண்டுகள் தாமதமானாலும் கூட, சோர்வடையாது போராடி இத்தீர்ப்பு வெளியாவதற்கு இடதுசாரிக் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டா செடல்வத் (பெஸ்ட் பேக்கிரி விஷயத்தை வெளிக் கொண்டு வந்தவர்) ஹர்ஷ் மந்தர் உள்ளிட்டோர்,”பைனல் சொலூஷன்” (இந்த ஆவணப் படம்தான் குஜராத் 2002 இனக்கலவரம் நடந்த பின் உடனடியாக, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகளைப் பதிவு செய்தது. பா.ஜ.க. தலைமை வகித்த மத்திய அரசு இப்படத்துக்குத் தடை விதித்தது. ஆனால், சளைக்காது இயக்குனர் ராகேஷ் ஷர்மா இதை உலகத் திரைப்பட விழாக்களில் திரையிட்டு உண்மையை உணர்த்தியதால் சங்கப்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்து வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது.
UPA அரசு தடையை விலக்கி இப்படத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கியது.)

ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா போன்றோர் காரணமாக அமைந்தனர். குஜராத் கலவரங்கள் விசாரணை மூலம் எவ்வாறெல்லாம் வன்முறை காலத்தில் அதுவரை சமூகத்தில் பாச நேசத்துடன் பழகிவந்த சிறுபான்மை மக்கள், திடீரென ‘இதரர்களாகப்’ பாவிக்கப்பட்டு பிரித்தொழிக்கப்படுவார்கள் என்ற படிப்பினைகளை நாம் பெற முடியும்.(காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே வேண்டுமென்றே தன் கையில் “இப்ராஹீம்” எனப் பச்சை குத்தியிருந்தான்! அவன் நினைத்தவாறே புணே, மும்பையில் உடனடியாக கலவரங்கள் நிகழத் துவங்கின! நேரு அரசு நல்லவேளையாக உடனடியாகத் தலையிட்டு கலவரத்தைக் கட்டுப்படுத்தியது.) எல்லாக் காலங்களிலும் சமூக நல்லிணக்கம் பேணுவது நமது தலையாய கடமை.

(நன்றி : BANK WORKERS UNITY/SEP’12 ISSUE)