வெள்ளி, 6 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....1.




2010 ஜூலை 25……

சென்னை எழும்பூர் இரயில் நிலையம்….. வழக்கமான தனது மாலை நேரத்து பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.
விதவிதமான பயணிகள் அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், இரயில் நிலைய பணியாளர்கள், காவல்துறையினர் என மனித இரைச்சல்களால் சலசலத்து கொண்டிருந்தது.

இவற்றுக்கு மத்தியில் ’பயணிகளின் அன்பான கவனத்திற்கு…. சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தூத்துக்குடிக்கு செல்லவிருக்கும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மூன்றாவது நடைமேடையிலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பவிருக்கிறது……’ என்னும் அந்தப் பெண்ணின் குரல் இவை எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் ஒலிப்பெருக்கியில் எச்சரித்துக் கொண்டிருப்பதை கேட்டபடி மூன்றாவது நடைமேடையில் தனது S2 கோச்சை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் பிரவீண்.

தோள்களில் மலையேறிகள் பயன்படுத்துவதைப் போன்ற பையை அணிந்து கொண்டும் தனது வலது கையில் வீல் பொருத்தப்பட்ட இடுப்புயற பெட்டியொன்றை இழுத்து கொண்டும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி S2 கோச்சை வந்தடைந்தவன் தன் பெயரையும் இருக்கை எண்ணையும் மீண்டுமொரு முறை உறுதி செய்தபடி தனது பெட்டி பையோடு தன்னையும் உள்ளே செலுத்திக் கொண்டான்.

24 என்னும் தனது இருக்கை எண்ணை நோக்கி சென்றான். அது சைடு லோயராக இருப்பதைக் கண்டு கொஞ்சம் நிம்மதி அடைந்தவனாக தனது சுமைகளை காலுக்கு அடியில் தள்ளிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். தனது பையிலிருந்து தண்ணிர் பாட்டிலை வெளியில் எடுத்து கொஞ்சம் குடித்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
இன்ன காரணமின்றில்லாமல் அங்குமிங்குமாய் அவனை கடந்தவண்ணமாய் பயணிகள் அலைந்து கொண்டிருந்தார்கள்.


தனது ஜீன்ஸ் பேண்ட்டை கழற்றிவிட்டு முக்கால் பேண்ட்டை அணிந்து கொண்டால் சற்று சௌகர்யமாய் இருக்கும் என எண்ணம் தோன்றிய போது ஏதேச்சையாய் தனது கம்பார்ட்மெண்டில் உள்ள சக பயணிகளை பார்த்தான். முதிய மற்றும் நடுத்தர வயது தம்பதியரும், துறுதுறுவென்று இரண்டு சின்னப் பையன்களும் இருந்தனர். அந்த நடுத்தர வயது ஆணின் தாய் தந்தையர் தான் அந்த இருவரும் என்பதை அவர்களது உரையாடலில் இருந்து தெரிந்து கொண்டான். ஏனோ அவர்களை கண்டவுடன் தனது ஆடை மாற்றும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்டான்.

அந்த இரண்டு பையன்களுக்கும் ஏழெட்டு வயதுக்குள் தான் இருக்கும். அவர்கள் அங்குமிங்கும் ஓடியபடி ஒருவித பரவச நிலையிலே இருந்தனர். அவர்கள் இருவரையும் ஓரிடத்தில் அமரச் செய்வதிலேயே மொத்த குடும்பமும் பாடுபட்டுக் கொண்டிருந்தது. இத்தனை பரபரப்பிலும் ஒருவித அறுதியற்ற மனநிலையோடு அமர்ந்து பலவித நினைவுகளோடு தன்னை சுற்றி அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகளை அணிச்சையாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் பிரவீண்.

பிரவீண் இருபத்தி ஒன்பது வயது இளைஞன். ஏறத்தாழ ஆறடியை நிறைக்கும் உயரம். நல்ல கருத்த பொலிவான முகவெட்டுடன் கூடிய அழகன். மாலுமியாதலால் நல்ல திடகாத்திரமான உடற்கட்டுடன் இருந்தான்.
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் மெல்ல மெல்ல நகரத் துவங்கியது. உடனே அந்த இரண்டு சிறுவர்களும் “ஹே.....ஏ...” என்று பேரிரச்சலோடு பிரவீணின் இருக்கைக்கு மேலே விழுந்தார்கள்.
சன்னலுக்கு வெளியே தங்களது கைகளை நீட்டியபடி போவோர் வருவோருக்கு கையசைக்க துவங்கினர்.

மூத்தவன் அஸ்வின் தன் தம்பியிடம் “டேய்....டேய்... நிஷாந்த் அங்க பாரேன் எவ்வளோ கலர்கலரா லைட்டு பாரேன்.....அய்யோ ஓடிப்போச்சே....”
“எல அஸ்வின் இங்க பாரேன்....கட எவ்ளோ ஸ்பீடா ஓடுது பாரேன்....”
இருவரும் எதையதையோ ஒருவருக்கு ஒருவர் காண்பித்து உற்சாகம் அடைந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தபடி பிரவீணும் அவர்களோடு இணைந்து தம்மை கடந்து போகும் ஒவ்வொன்றிலும் சுவாரஸ்யமாகிக் கொண்டிருந்தான்.

“டேய்....டேய்....இரண்டு பேரும் இங்க வாங்க.... அங்கிள டிஸ்டர்ப் பண்ணாதீங்க....” என்று தனது கரகரத்த குரலால் எச்சரித்தபடி சிறுவர்கள் இருவரையும் தம் பக்கம் அழைத்தார் ஆஸ்கர்.
ஆஸ்கர் முப்பது.....முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். அந்த இரண்டு சிறுவர்களின் தந்தை. அந்த இரவு நேர இரயில் பயணத்திலும் முழுக்கை சட்டை அணிந்து டீக்காக டக்-இன் செய்திருந்தார். ஒரு சாயலில் நடிகர் ரமேஷ் அரவிந்த் போலிருந்தார்.

அவருடைய மனைவி ஷீலாவும் அவருடன் சேர்ந்தபடி...” சொன்னா கேக்க மாட்டானுக இரண்டு அடியப் போட்டாத்தான் புத்தி வரும்....”என்று மிரட்டினாள். தன்னை சுற்றி நடந்து கொண்டிருந்த இந்த சம்பாஷனைகளை கவனித்த பிரவீண்...”எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல.....பசங்க இருக்கட்டும்....”என அவர்களது தந்தை ஆஸ்கரைப் பார்த்து சொன்னான்.
இரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து சென்று கொண்டிருந்தது.
அஸ்வின் பிரவீணை நோக்கி,” அங்கிள் நீங்க எங்க போறீங்க....?” எனக் கேட்டான்.

பிரவீண் அஸ்வினின் தலையை செல்லமாக கோதியபடி ”தூத்துக்குடிக்கு போறேன்....” என்றபோது “ஹை..... நாங்களும் அங்கதான் போறோம்....இங்க எங்க அத்த வீட்டுக்கு வந்திட்டு ஊருக்கு போயிட்டிருக்கோம். சென்னை ஒரே போர் அங்கிள் கிரிக்கெட்,சைக்கிள் ரைட் எதுவுமே விளாடமுடியல..... தூத்துக்குடிக்கு போன உடனே ஜான்,குமார்,நிக்கி....எல்லார் கூடேயும் சேந்து புல் டைம் விளாட்டுதான்.....இல்லடா நிஷாந்த்....”
“ம்மா.....ஏ...அம்மா....இங்க பாரேன் அஸ்வின் நம்ம ஊருக்கு போன உடனே விளாடப் போறானா....அதுவும் அந்த நிக்கிபய கூட சேந்தாம்....”என நிஷாந்த் எதையோ போட்டுக் கொடுக்க அஸ்வின் திடீரென்று நிஷாந்த் மண்டையில் ஓங்கிக் கொட்டினான். நிஷாந்தும் பதிலுக்கு அவனை அடிக்க ஒருசில நிமிடங்களில் அண்ணன் தம்பி இருவருக்கும் கைகலப்பானது.

பிரவீண் “டேய் அடிச்சுக்காதிங்கடா.....”என்று சொல்லியபடி நிஷாந்தை பிடிக்க முயல தன்னை அடிக்க வந்த அஸ்வினை தள்ளிவிட நிஷாந்த் கையை தூக்கிய போது பிரவீணின் நெற்றிக் கண்களை குளிர்வித்துக் கொண்டிருந்த கூலிங்கிளாஸ் எகிறி கீழே விழுந்தது. இந்த நிமிஷ நேர களோபரத்தை அனுமானிக்க தாமதித்த ஆஸ்கர் பிரவீணின் கண்ணாடி கிழே விழுந்ததும் பாய்ந்து சென்று இருவரையும் பிடித்து இழுத்து ஆளுக்கு ஒரு அடியைப் போட்டார். இருவரும் ஒரு சேர அழத்துவங்கினர்.
“அங்கிள்ட்ட முதல்ல சாரி கேளுங்கடா....” என்று அதட்டியபடி. “வெரி சாரி சார்....” என்றபடி பிரவீணின் கண்ணாடியை எடுக்க முயன்றவர் போல் கீழ குனிந்தார்.

அதற்குள் பிரவீண் கண்ணாடியை கையில் எடுத்தபடி “அதெல்லாம் ஒண்ணுமில்ல.....சின்ன பசங்கதான.... தெரியாம பட்டிருச்சு..... இதுக்கு போயி பசங்கள அடிக்காதிங்க.....”

முதியவர் ராபர்ட் தமது பேரக் குழந்தைகளை பார்த்து “அஸ்வின்.....நிஷாந்த்.... ரெண்டு பேரும் அங்கிள்கிட்ட சாரி சொல்லுங்க..... ஏ! அஸ்வின் அங்க என்ன பாத்துகிட்டு.....நீ முதல்ல சாரி கேளுடா....”

அஸ்வின் தலையை குனிந்தபடி “சாரி! அங்கிள்.....” என்று கிசுகிசுத்தான்.
“சத்தமா சொல்லுடா....”-இது ஷீலா

“அய்யோ.....அதெல்லாம் வேண்டாம் புள்ளங்கள விடுங்க.....” என்றபடி பிரவீண் அஸ்வினை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

ராபர்ட்டின் மனைவி விக்டோரியா.....,” தம்பி நீங்களூம் தூத்துக்குடி தான் போறீங்களா...?”

“ஆமா....அங்க எங்க அம்மாச்சி வீட்டுக்கு தான் போயிட்டிருக்கேன்.”

“அம்மா அப்பால்லாம் மெட்ராஸ்லதான் இருக்காங்களா....?”

“இல்ல அம்மா இறந்து போயி பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சு......அம்மா இறந்து ஒரு வருஷத்துல அப்பாவும் போயிட்டாரு......அப்பா இறந்து கொஞ்ச நாள்ல கப்பல்ல வேல கெடச்சு போனேன்...... அப்படி இப்படின்னு ஏழு வருஷத்துக்கும் மேல ஆச்சு ஊருக்கு போயி.....எனக்குன்னு அங்க அம்மாச்சி மட்டுந்தான் இருக்கு...... அவங்களுக்காக தான் இப்போ ஊருக்கு போயிட்டிருக்கேன்......”

“எப்படிய்யா இத்தன வருஷமா ஊரு பக்கமே போவாம இருக்க முடிஞ்சிது......உங்க அம்மாச்சிய பாக்கவாவது போயிருக்கலாம்ல.....?”
பதிலேதும் பேசாமல் ஒருவித வெறுமையோடு சிரித்துக் கொண்டான் பிரவீண்.


ஆனால் அந்த வெற்றுச் சிரிப்பு அவன் கதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆயிரம் பதில்களை அளித்தது. அனிச்சையாய் ஷீலாவின் கரங்கள் தம் இருகுழந்தைகளையும் வளைத்துக் கொண்டது.
அங்கே அப்போது அழையா விருந்தாளியாய் மௌனம் வந்து குடியேறியது. ரயிலின் தகதகப்போடு கூடிய அந்த திடீர் மௌனம் ஒருவித இறுக்கத்தை அங்கே உணரச்செய்தது.


ரயில் தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்தது. பிரவீண் எழுந்து கழிவறைக்குள் சென்று ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தான். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் இழப்புகளால் சக மனிதர்களிடம் எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பழகும் இயல்பை உருவாக்கியிருந்தான். ஆனாலும் அன்று அஸ்வினையும், நிஷாந்தையும் பார்க்கும் போது அவனுக்கு ஒரு மெல்லிய ஏக்கமும், தான் நம்பும் இயேசுநாதரை ”இறுதிதீர்ப்பு நாளன்று” கூண்டிலேற்றி தன் வாழ்வுக்கு நீதி கேட்கும் ஆத்திரமும் அவனுக்குள் மேலெழும்பவே செய்தது.


வழக்கம்போல் அவனது இயல்பு அந்த எண்ணத்தை நிலைக்க செய்யாமல் அவனை மீண்டும் ஒட்டுதலற்ற மனநிலைக்கே திரும்பச் செய்தது. அதற்கு அந்த சிகிரெட் கரையும் நிமிடங்களே அவனுக்கு போதுமானதாய் இருந்தது. ரயில் தாம்பரம் நிலையத்தை விட்டு நகரத் துவங்கியது.

பிரவீண் தன் இருக்கைக்கு திரும்பிய போது அங்கே டிக்கெட் பரிசோதகர் அமர்ந்திருந்தார். அனைவரது பயணச்சீட்டையும் பரிசோதித்து விட்டு அவர் எழுந்து சென்றதும். விக்டோரியா தன் மருமகள் ஷீலாவை பார்த்து,”யாத்தே..... மணி எட்டரைக்கு மேல ஆவுது பாரு.....புள்ளைவ சாப்புடாம கெடக்கு அந்த இட்லிய எடுத்து வச்சு கொடும்மா......”

“சரித்தே.....” என்றபடி சீட்டுக்கு அடியிலிருந்த அந்த பெரிய கட்டப்பையை எடுத்து எல்லோருக்கும் பரிமாறினாள்.

“அந்த தம்பிக்கும் வச்சு குடும்மா.....” என்றாள் விக்டோரியா.

“அய்யோ அதெல்லாங் வேண்டா(ம்) நான் பழம் வச்சிருக்கேன் சாப்பிட....”என்றபடி தன் பைக்குள் கையைவிட்டான் பிரவீண்.

“வாலிப புள்ள வெறும் பழத்த சாப்பிட்டிட்டு படுக்குறதா....? எய்யா.... ஒனக்கு குடுக்குறதுனால இங்க ஒண்ணு(ம்) கொறஞ்சு போயிடாது வேத்தாளா நெனைக்காம வாங்கிக்கய்யா.....” என வாஞ்சையோடு ஒருமைக்கு மாறியிருந்தாள் விக்டோரியா.

“அப்படியெல்லா(ம்) நெனைக்கல.....” என வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான் பிரவீண்.

“ரொம்ப காலங் கழிச்சு நம்ம ஊருக்கு வாறீங்க.....கண்டகண்ட சாப்பாட்ட சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும் இட்லி, மீன்கொளம்புன்னு நம்ம வீட்டு சாப்பாட்ட சாப்பிட்டு பாருங்க....”-ஆஸ்கர்.

“அப்பனும்....மவனும் மீனால அடிச்ச வானானுங்க தம்பி.....இட்லிக்கும் மீனு கொளம்பு தான் வேணும்..... ஊருவழி வந்திருக்கோமே கொஞ்ச வாயக் கட்டுவமேன்னா இருக்குதுக.... எம்மவ உயிர வாங்கி இட்லியும் மீன் கொளம்பும் செஞ்சு ஏனத்துல வாங்குன பொறவுதான் ரயிலேறுவோம்ன மாறி நின்னது நிக்க அவள செய்ய சொல்லி வாங்கிட்டு வருதுக.....”

“ஆமா....இவ பெரிய பாப்பாத்தி கணக்காத்தான் பவுசு காட்டுவா.....”பதிலுக்கு ராபர்ட்டும் தன் மனைவியை வாரினார்.

”நாங்களும் பரத்திதான்......ஆனா எங்க சனத்துல யாரும் இப்படி மீனு.....மீனுன்னு செத்ததில்லப்பா.....”

“பழையகாயல் காரனுவ பேருக்குதான் பரவன் எவன் இப்ப மடிக்கு போறான்.....? இல்ல நீதான் பொறந்ததுல இருந்து ஒங்க ஊருல கடலப் பாத்திருக்கியா...? சேசுகோயிலுக்கும் கெழக்க இருக்கர கடலுக்கு எப்படித்தான் உரிம கொண்டாடுறீகளோ.....? பெரிய பரத்தியாம்ல பரத்தி....”

“வந்துட்டாரு வங்கக் கடலரசன்.....இவுரு ரொம்ப கண்டாரு எங்க ஊரப் பத்தி.....என்னக்கி எங்க அய்யா இவர கெட்டி வச்சாரோ அன்னக்கே எனக்கு போச்சு ஊரும்......உறவும்.....” என சிடுசிடுத்தாள்

“சும்மா இருக்கீகளாம்மா......அதையும் இதையும் பேசிக்கிட்டு....”

“இவனுக்கு இவன் அப்பன ஒண்ணு சொல்லிறக் கூடாதே..... அந்தால பொத்துகிட்டு வந்திரும்.....”

“தம்பி.... நீங்க ஒண்ணும் வித்தியாசமா நெனைக்காதிங்க என்னைய கொஞ்சம் பொறக்கி கடிச்சாத்தான் அவளுக்கு செறிக்கும்” என தன் மனைவியை மறுபடியும் சீண்டியபடி பிரவீணையும் கட்டுக்குள் இழுத்தார்.

அவன் சிரித்தபடியே இட்லியை பிட்டுபிட்டு மீன் கொளம்பில் தொட்டுக் கொண்டு சாப்பிட்டவாறு அவர்களது ஊடலையும் ரசித்துக் கொண்டிருந்தான். அப்பிடி இப்படியென ஏதேதோ பேசியபடி ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டு முடித்த கொஞ்சநேரத்துக்கெல்லம் சிறுவர்கள் இருவரும் தூங்கிப்போனார்கள். அவர்கள் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது பிரவீண் எழுந்து கதவருகே சென்றான்.


சாத்தியிருந்த கதவை திறந்தபோது ரயிலின் சத்தம் பிரம்மாண்டமாய் கேட்டது. ரயிலின் அந்த பேரிரச்சலுக்கு பயந்து காற்று வேகவேகமாய் ரயிலுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தது. கதவின் இருபக்க கம்பிகளையும் பற்றியவாறு இருளின் ஒளியை ரசிக்க துவங்கினான்.
அடர்ந்து படர்ந்த இருளை கிழித்து செல்லும் ரயில்......அடித்து பிடித்து முகத்தில் அறையும் காற்று......வாட்டி வதைக்கும் நினைவுகள்.....என காலச்சக்கரத்தின் கரம் பிடித்து பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.








......தொடரும்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

பிப்ரவரி28 தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஏன்?




உலகின் மிகப்பெரும் பொருளாதார மேதையாக அறிமுகப்படுத்தப்பட்ட மௌனச் சாமியாரின் ஆட்சியில் தற்போது கடுமையான விலைவாசி உயர்வினால் பெரும்பான்மைக்கும் அதிகமான குடிமக்களின் அடிப்படை வாழ்வாதரங்கள் கூட கேள்விக்குறியாகியுள்ளது.



உழைக்கும் வர்க்கத்தின் மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான தாக்குதல்களையும் இந்த முதலாளித்துவ அடியாட்கள் தொடுத்து வருகிறார்கள். மிக நைச்சியமாய் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், போராடிப் பெற்ற சலுகைகளையும் பறிக்கும் வேலைகளையே தொடர்ந்து இந்த அரசாங்கம் செய்து வருகிறது.


ஏன் இந்த அரசாங்கம் தொழலாளர்களின் உரிமைகளை பறிப்பதில் தற்போது இத்தனை வேகமாய் உள்ளது?


தொன்னூறுகளின் துவக்கத்திலேயே உலகமயமாக்கலை தமது புதிய பொருளாதார கொள்கையாக இதே காங்கரஸ் ஆட்சியாளர்கள் அறிவித்து கொண்டாலும் அவர்களால் முழுவீச்சாக பொதுத்துறை நிறுவனங்களை ஏகாதிபத்திய அரசாங்கங்களின் விருப்பத்துக்கேற்ப பன்னாட்டு பெருநிறுவனங்களிடமும் இங்குள்ள பெருமுதலாளிகளிடமும் முழுவதுமாய் ஒப்படைக்க முடியவில்லை. அதற்கிருந்த காரணிகளில் முக்கியமானதாய் இருந்தது இடதுசாரிகளின் அரசியல் ஆதிக்கமும், இந்திய தொழிற்சங்கங்களின் வலுவான கட்டமைப்பும் தான். அதனால் முதலில் அவர்களால் அந்நிய முதலீடுகளை நேரடியாக பொதுத்துறைகளில் அனுமதிக்க முடியவில்லை.

அதனால் ”தேசத்தின் வளர்ச்சி” என்னும் பெயரில் அந்நிய முதலீடுகளை தனியார் தொழிற்சாலைகள் போன்ற விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் புகுத்தினார்கள். அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அவர்கள் அப்போது நினைத்தும் பார்த்திராத ஊதியங்களை வழங்கி அதற்கு பதிலாக அவர்களிடம் காலநேரமற்ற உழைப்பையும், அடிப்படை தொழிற்சங்க உரிமைகளையும் பறித்துக் கொண்டன அந்த பன்னாட்டு நிறுவனங்கள். அவர்களும் ”விட்டில்பூச்சி மனிதர்களாய்” ஆகிப்போனார்கள். இந்தக் காலகட்டத்தில் கணிணியின் பயன்பாடும், அது சார்ந்த தொழிற்நுட்ப வேலைகளும் அதிகமாய் உருவெடுக்க ஆரம்பித்தது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் கடைகளை பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால்


இரண்டு விஷயங்கள் நடந்தேறின......

ஒன்று......

இந்த அபரிவிதமான பணப்புழக்கம் நடுத்தர வர்க்கத்திலேயே ஒரு புதிய மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கியது. அதன்விளைவாக பன்னாட்டு நிறுவன வேலை மோகம் மலேரியாவைப் போல் பரவத் துவங்கியது. அதேசமயம் அரசாங்க உத்தியோங்களின் மீதான மோகம் குறையத் துவங்கி பட்டதாரி இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு ஏதுவாக அந்நிறுவனங்களும் கல்லூரி வளாகங்களை வேலைவாய்ப்பு சந்தைகளாக மாற்றினார்கள்.

கல்வி சாலைகள் வியாபார கூடமாக மாற்றப்பட்டது. மாணவர்களும் பந்தைய குதிரைகளாக மாற்றப் பட்டார்கள். ஒழுக்கத்தையும், அறிவையும் போதிக்க வேண்டிய கல்வி அடிமைதனத்தையும், வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளையுமே கற்றுத் தரலாயின. இதனால் இந்த தலைமுறையே ”கார்பரேட் அடிமைகளாக” உருவெடுத்து போனார்கள்.

இரண்டு.....

இந்தக்காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனங்களும் வெகுவாக குறைக்கப் பட்டன. அல்லது முற்றிலுமாய் நிறுத்தி வைக்க பட்டது. ஆனால் வேலைபளுவோ பல நூறு மடங்குகளாக அதிகரிக்க துவங்கின. இந்த பணிச்சுமையின் காரணமாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பணிச்சுமை கூடிப்போனது.


அதிகரித்து போன பணிச்சுமையை எதிர்கொள்ள ஆங்காங்கே தற்காலிகப் பணியாளர்கள் தினக்கூலிகளாக நியமிக்க படலாயினர். அப்படி தற்காலிகமாய் நியமிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான எந்தவொரு உரிமையையும் வழங்கப்படவில்லை. ஆக இங்கும் தொழிசங்க அரணில்லா “நவீன கொத்தடிமைகள்” உருவாகத்துவங்கினார்கள்.

அதேசமயம் பொதுமக்கள் மத்தியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப் படுவதே இதெற்கெல்லாம் ஒரே தீர்வாகவும் பேசப் பட வைக்கப்பட்டது. அதாவது பெரும்பான்மை சமூகத்தை தனியார்மயத்தை நோக்கி பண்படுத்தும் வேலைகள் நடந்தேற துவங்கின.

இந்தச் சூழலில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி பல பன்னாட்டு நிறுவனங்களையும் ஏகாதிபத்திய நாடுகளையும் மிகப்பெரும் சிதைவுக்குள்ளாக்கியது. இந்த வீழ்ச்சியில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியபோது. இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் சின்னஞ்சிறு சேதாரம் கூட இல்லாமல் கம்பீரமாக நிலைத்து நின்றது. (இதற்கும் இந்திய தொழிற்சங்கங்களின் வலுவான கட்டமைப்பே காரணம்.). இதனால் பன்னாட்டு நிறுவன மோகம் பிடித்து இருந்தவர்கள் எல்லாம் மொத்த மொத்தமாய் பொதுத்துறைகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளார்கள்.

முதலாளித்துவ அடியாட்களோ தற்போது இலாபகரமாய் இயங்கி வரும் பொதுத்துறைகளை பெருமுதலாளிகளுக்கும், அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. அப்படி தனியார்மய படுத்தப் படும் போது தொழிற்சங்க இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவே தற்போது தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வேலைகளில் தீவிரமாய் இறங்கி உள்ளது.

இதை எதிர்தே வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் இவ்வேலை நிறுத்தம் வெல்லட்டும்!!!!!

புதன், 7 டிசம்பர், 2011

விழிப்பாய் தமிழா......




எனக்கு வியப்பாக இருக்கிறது…….!!! எங்கிருந்தோ புற்றீசல்களைப் போல விவசாய குடிகளின் இன்னல் போக்க துடிக்கும் இரட்சகர்களாக மாறிப்போயிருக்கிறார்கள் இங்கிருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளும், ’வாழ்க-ஒழிக’ குரலெழுப்பிகளும். ஊடகங்களின் சமீபத்திய பொம்பலாட்டதுக்கு இரையாகிக் கொண்டிருப்பது தமிழக-கேரள எல்லையோர அப்பாவிகள்.


முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவில் இரு மாநில அரசுகளிடத்தே இருவேறு கருத்தாக்கம் எழுந்தவுடனே அதை “முல்லை பெரியாறு விவகாரம்” என விஷயத்தை விகாரப் படுத்தியது ஊடகங்கள் தான். தற்போது விவகாரமாகிப் போன விஷயத்தை செய்தியாக்கி கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான்.

இனி பரபரப்பான விற்பனையில் தமிழக கேரள மக்களின் உறவும்,சர்சைகளும் இருக்கும். நாம் இந்த தொடர் அரசியலை புரிந்து கொள்ளவில்லையெனில் வழக்கம் போல் விழியிருந்து குருடராய் வீழ்வதை தவிர வேறு வழியில்லை……


1979ல் கேரள அரசுக்கு அணையின் பாதுகாப்பு நிலை குறித்து எழுந்த ஐயத்தின் விளைவாக அப்போது 152 அடியில் சேகரிக்கப் பட்டு வந்த நீரின் அளவை 136அடியாக குறைத்தது. அப்போதைய தமிழக அரசு கேரள அரசின் ஐயத்தை போக்கும் பொருட்டு அணையை பலப்படுத்த சில நடவடிக்கைகளை செய்து நீரின் அளவை உயர்த்த கோரியது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.


இருமாநில அரசுகளும் தத்தம் கருத்துகளில் உறுதியாக இருந்தபடியால் விஷயம் உச்சநீதி மன்றத்தில் வழக்கானது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை.

அதேசமயம் கேரள அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரவும் மறுக்கவில்லை. கேரள அரசின் நிலைபாடானது முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டி முடித்து அதன் பின்னர் நீர் தேக்க அளவை உயர்த்தி கொடுக்கலாம் என்பதாகவே உள்ளது.

ஆனால் தமிழகத்தின் நிலைபாடு…. முல்லை பெரியாறு அணையே வலுவாக உள்ள போது ஏன் நீர் தேக்க அளவை உயர்த்த புதிய அணை கட்ட வேண்டும்? என்பதே.

ஒரே தேசத்தை சார்ந்த இருமாநில அரசுகளுக்கு இடையேயான கருத்து மாற்றத்தை இருவேறு தேசிய இனத்துக்கு இடையேயான பிரச்சனையாக உருமாறியது எப்போது?

எவர் ஊதினாலும் வீங்கவும்….. எவர் உதைத்தாலும் பறக்கவும் நாம் என்ன வெறும் காற்றடைத்த பலூனா?

நம்மிடையே உள்ள மிகப்பெரும் பலவீனம் எந்தவொரு பிரச்சனையையும் நாம் உணர்வுபூர்வமாகவே அணுகுவது தான். சக உயிர்களிடத்தே….. மனிதன் தன்னை உயர்திணையாக மாற்றிக் கொள்ள உதவியது அவனது பகுத்து ஆராயும் அறிவு தான். ஆனால் ஏனோ இது போன்ற நேரங்களில் நாம் எதையும் பகுத்து ஆராய்வதில்லை.

நிஜமாகவே விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் நமக்கு இத்துணை பற்று இருப்பது உண்மையானால் முல்லை பெரியாறு அல்ல நாம் கையில் எடுக்க வேண்டிய முதல் பிரச்சனை.

இனம்,மொழி பேதங்களற்று தம் உயிரையும், இளமையையும், நல்வாழ்க்கையையும் இழந்து நமக்காக நம் முந்தைய தலைமுறையினர் போராடிப் பெற்ற ஜனநாயக அரசியலை இன்று தம் சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் பெருமுதலாளிகளிடத்தே அடகு வைத்துவிட்டு விவசாயிகளிடமிருந்து “பொருளாதார மண்டலங்கள்” என்னும் பெயரில் நிலத்தை பறிக்கும் கயவர்களை நோக்கி அல்லவா நாம் முதலில் பாய்ந்திருக்க வேண்டும்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே….. தமிழகத்தில் அப்போது மன்னராட்சியாக இருந்த போதும் கூட தம் குடிகளுக்காக அவர்கள் கட்டிய நீர் தேக்கங்களும், நீர் நிலைகளுமான கணக்கற்ற கண்மாய்களும், குளங்களும் கடும் வறட்சியிலும், கோடையிலும் தமிழனின் தாகம் தீர்த்து வந்ததே அவைகள் மக்களாட்சியாக மாறிப் போனபின் அதுவும் குறிப்பாக புதிய பொருளாதார கொள்கையை நாம் கடைபிடிக்க துவங்கியதும் அனைத்தும் பட்டா நிலங்களாக மாறிப்போனதே அப்போது எங்கே போயிருந்தது இந்த ரௌத்திரம்?

மலட்டு விதைகளையும், இரசாயனமிக்க உரத்தையும் விற்பனை செய்வதே பசுமை புரட்சியாக அறிவித்து விவசாய குடிகளை ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக்கி….. மண்ணை மலடாக்கி…. உணவை விஷமாக்கி நம் கண்களை விற்று சித்திரம் வாங்கச் செய்த போதல்லவா நாம் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும்?

விஷத்திற்கு கூட இங்கு காப்பிரைட் உரிமை உண்டு. ஆனால் தான் விளைவித்த பொருளுக்கு விலை வைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளை சுரண்டுப் பிழைக்கும் அட்டைப் பூச்சிகளுக்கு எதிராகவல்லவா நாம் கோஷம் எழுப்பியிருக்க வேண்டும்?

ஆனால் இதுவெல்லாம் நமக்கு பிரச்சனையாகவும் தெரியாது…….நாம் நம்மை தமிழனாகவும் உணர்வதில்லை. ஆனால் அதுவே நம் அண்டை மாநிலத்தானோடு ஒரு பிரச்சனையென்றால் உடனே நாம் தமிழனாகி விடுவோம்.

கொம்வு சீவப்பட்ட காளைகளாக கூட்டத்தில் பாய்வதில் தானே அத்துணை பெருமை நமக்கு. மறந்துவிட வேண்டாம்….. காளைகளின் வீரம் எத்தகையதாயினும் ஒருபோதும் காளைக்கு அது பயன் தரா மாறாக அது மேய்பானின் அடிமையே!!!

திங்கள், 10 அக்டோபர், 2011

அஜீ(ரணம்)



தன் வயிற்றைக் காயவைத்து......



தன் காலை சேற்றில் வைத்து......



என் தட்டில் சோற்றை வைத்தவன்



தற்கொலை செய்து கொண்டான்!!!!!



என்னும் செய்தியை



தொலைக்காட்சியில் பார்த்தபடியே



நான் சோற்றை



சுவைத்துக் கொண்டிருந்தேன் - நேற்று



என்பது ஞாபகம் வந்து



தொலைத்தது - இன்று



மருத்துவர் என்னை பரிசோதித்தபடியே



“எல்லாம் அஜீரணக்



கோளாரால் வந்தது....”என்று



சொல்லி மருந்து கொடுத்தபோது.






புதன், 21 செப்டம்பர், 2011

பிடுங்கப்பட்ட சுதந்திரம்……


குழந்தை பல்பத்தை தன்

எச்சிலால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது

நான் கோபமாக பல்பத்தை அதனிடமிருந்து

பிடுங்கி எறிந்தேன்

குழந்தை அழ ஆரம்பித்தது……..

நான் ஏதேதோ சமாதானம்

சொல்லிப் பார்த்தேன் ஆனால்

அது தன் அழுகையை நிறுத்துவதாயில்லை

வேறு வழியின்றி மீண்டும்

பல்பத்தை அதன் கையில் கொடுத்தேன்

இப்போது……..

பல்பத்தை வாங்கிய குழந்தை அதை

தரையில் வீசியெறிந்தது

அப்போது தான் எனக்கு உரைத்தது

நான் அதனிடமிருந்து பிடுங்கியது

பல்பத்தை அல்ல……..

அதன் சுதந்திரத்தை என்று!!!!!!

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஐரோம் ஷர்மிளா ஒரு போராளியின் காதல்...


இளவயதின் சலனங்களோ
மயக்கப் பொழுதுகளோ
உயிரியலின் இயல்பான தூண்டுதல்களோ கூட
மறுத்துக் கொண்ட வாழ்வு உனது

பேருந்துக்குக் காத்திருந்த
அப்பாவி மனிதர்களை
இராணுவ துப்பாக்கிச் சனியன்கள்
பலிவாங்கிப் பழி தீர்த்துக் கொண்ட நாளொன்றில்
பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கியது உனது போராட்டத் தவம்.

உனது நாக்குக்குப் பதில் சொல்ல முடியாத அரசு
மூக்கு வழியாக உணவளித்து
உனது பட்டினிப் போரை எதிர்கொண்டு தவிக்கிறது
சிறப்பு ஆள்தூக்கி இராணுவச் சட்டத்தை
உரித்தெறிய மறுபபோர்முன் நீயும்
உடைத்தெறிய மறுக்கிறாய் உனது தவத்தை

'அன்னா' விரதத்தின் பக்கமிருந்து நகர மறுத்த
ஊடக வலைப்பின்னல்கள்
உனது உண்ணாவிரதத்தைச் சொல்வதே இல்லை மக்களிடம்

"அமைதியின் நறுமணத்தில்" ***
கவிதைகளால் பேசியிருந்தாய்
உனது திட சித்தத்தை..

வாய் திறந்திருக்கிறாய் போராளியே
முதன்முறை உனது காதலைப் பற்றி
இனியேனும்
என் வழியே என் வாழ்வை நடத்தவிடு என்னும்
உனது குரலில் யாசகமில்லை
சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டுமெனும்
நிபந்தனையின் மீது தான் நிற்கிறது
உனது காதல் தூரிகை

வெட்கமற்ற ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளட்டும்
போராளிகளுக்கும் காதல் உண்டென்பதை
அவர்களது முதல் காதல்
போராட்டக் கோரிக்கைகள் என்பதை -
அமைதி வாழ்க்கைக்கான வாசலை அடைத்திருக்கும்
இரும்புக் கதவுகள் உடைபடுமுன்
திறப்பது நல்லது என்பதை!
எஸ் வி வேணுகோபாலன்

*** (அமைதியின் நறுமணம்: ஐரோம் சர்மிளா அவர்களின் கவிதை தொகுப்பு. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது)
இந்தியாவைச் சார்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவரைத் தாம் காதலிப்பதாகவும், சிறப்பு இராணுவச் சட்டம் எடுக்கப்பட்டுவிடுமானால் தாம் அவரை மணந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும் ஐரோம் சர்மிளா அண்மையில் பத்திரிகையாளர் ஒருவரிடம் சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

















வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அம்பேத்கர் பார்ட்டி


ஏப்ரல் 14ம் நாளாகிய இன்றிரவு மகாராஷ்டிர மாநிலத்தின் சேரிப்பகுதிகளில் ஒரு பார்ட்டி - கொண்டாட்டம் நடத்த இருக்கிறோம் நாங்கள். ஒரு பெரிய களியாட்டத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமோ அவை அத்தனையும் எங்கள் கொண்டாட்டத்தில் உண்டு. குத்துப் பாட்டுக்கள் முதற்கொண்டு லாவணிப் பாடல்களை வரை ரீ-மிக்சிங் செய்து இடையே இடையே ஆங்கில வரிகளையும் ஓடவிட்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் எங்கள் கலைஞர்கள் போடும் அட்டகாச நடன மெட்டுக்கள் கருத்த பெரிய ஒலிப் பெருக்கிகளிலிருந்து தெருக்களையே அதிரடித்துக் கொண்டிருக்கும்.

எங்கள் பெண்கள் தமது உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டும், முகங்களில் பவுடர் அப்பிக் கொண்டும், கூந்தலில் மலர்களை அள்ளிச் சூடிக் கொண்டும் டிரங்க் பெட்டிகளிலிருந்து தேடி எடுத்த இருப்பதிலேயே உயர்ந்த ஆடைகளை அணிந்த வண்ணம் தோன்றுவார்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் மிக மட்டமாகத் தோன்றினால், நீங்கள் சரியாய்த் தான் கவனித்திருக்கிறீர்கள் என்று பொருள். கழித்துக் கட்டப்பட்ட, குறைபாடுகள் உள்ள துணிமணிகளைத் தள்ளுபடி விலையில் விற்கும் மலிவு விலைக் கடைகளில் இருந்து தான் இந்த அலங்காரப் பொருள்களையும், ஆடை வகைகளையும் அவர்கள் வாங்கி வைத்திருக்கின்றனர். இந்தத் திருநாளில் அணிவதற்கென்றே எத்தனையோ நாட்கள் தமது ஆசைகளை அடக்கிக் கொண்டு தொடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் காத்திருந்தனர்.

எங்கள் குழந்தைகளுக்கோ இதைவிடவும் மட்டமான ஃபிரில் வைத்த செயற்கை இழை ஆடைகளை அணிவித்திருக்கின்றனர். கருத்த அவர்களின் முகங்களில் முகப் பூச்சு பளிச்சென்று எடுப்பாய்த் தெரிகிறது. எங்கள் ஆடவர்களோ, மூச்சில் தெறிக்கும் மட்ட ரக சாராயத்தின் நெடியோடு எப்போது எல்லாம் மறந்து வெறித்தனமாக ஓர் ஆட்டம் போடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். முரட்டுத் தனமிக்க எங்கள் இளவட்டங்களோ எந்தக் காலத்திலும் ஒழுங்காக நடந்து கொண்டதாக சரித்திரமில்லை. இன்றைக்கோ எல்லா எச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, குமரிப் பெண்கள் ஒதுங்கி நின்று வெட்கத்தோடு தங்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதைக் கவனித்தபடி கோமாளிகள் போல் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான எங்கள் வீடுகளில் மாட்டுக் கறி வெந்து கொண்டிருக்கும்; ஆட்டுக் கறியை விடவும், கோழிக் கறியை விடவும் அதுதான் மிகவும் விலை மலிவு என்பதால் உங்களது மத உணர்வுகள் குறித்தெல்லாம் நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்களது இந்தக் கொண்டாட்டத்தின் எல்லா அம்சங்களும் மலிவு விலையில் திரட்டப்பட்டதாக நீங்கள் கவனித்தால், அப்படியே கோடி டாலர் மதிக்கத் தக்க இன்றைய எங்களது முக மலர்ச்சியையும் நினைவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி என்னதான் இன்று விசேஷம் என்கிறீர்களா? ஏப்ரல் 14 : இன்றைக்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் நங்கள்.

எனக்குத் தெரியும், எங்களையும், எங்களது செயல்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் வெறுப்பது. ஆனால், இந்த நாள் எங்களது நாள். எங்களை நீங்கள் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். சகித்துக் கொண்டால் தான் என்ன என்று கேட்கிறேன்...கால காலமாக நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் , ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துத் தானே வருகிறோம். எனவே அப்படி ஒரு மாதிரி எங்களைப் பார்ப்பதை இன்றைக்காவது கை விடுங்கள்.

எங்கள் சேரிகளின் வழியே நடக்க நேரும்போது துர்நாற்றம் தாளாமல் உங்கள் அழகு மூக்குகளைப் பொத்திக் கொள்கிறீர்களே, உங்களது சுத்தமான வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றும் மலத்தைச் சுமந்து ஓடும் சாக்கடைகளின் அருகே நாங்கள் குடியிருப்பதால் தான் எங்கள் குடியிருப்புகளில் இத்தனை துர்நாற்றம் வீசுகிறது என்று எப்போதாவது உங்களுக்கு உறைத்ததுண்டா ? நாகரீகம் என்று நீங்கள் வரையறை செய்திருக்கும் எல்லாக் கட்டு திட்டங்களையும் உடைத்தெறிந்து, சுதந்திரமாக ஆடிக் கொண்டிருக்கிறோம், இன்றைய இரவில். நாகரீகம் பற்றிய உங்களது கோட்பாடுகள் போலித்தனமானவை என்று எங்களுக்குத் தெரியும்; உங்கள் இல்லங்களில் மவுனமாக வேலை பார்த்தபடி உங்களது எல்லா அசுத்தங்களையும் கவனிப்பவர்கள் நாங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைய இரவில் நாங்கள் ஆடுகிறோம், எங்களையும் மனிதப் பிறவிகள் என்று எங்களுக்கு உணர்த்திய ஒரு மனிதனின் பிறந்த நாள் இன்று என்பதால்! அவர் வெறுமனே உங்களது குற்ற உணர்ச்சிகளை வருடிக் கொடுத்து இதம் செய்வதற்காக ஒன்றும் எங்களுக்கு வேறு பெயர் சூட்டவில்லை. நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் கனவு காணவும், மகிழ்ச்சியாக வாழவும் உரிமை உண்டு என்று சொல்லிக் கொடுத்தார் அவர்.

எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு நாங்கள் அழுக்கானவர்களாகவும், அவலட்சணமானவர்களாகவும் அறியாமையில் உழல்பவர்களாகவும், இழிவானவர்களாகவும் காட்சி அளிப்பது. ஏன் அப்படி தோன்றுகிறது என்று அவர் எங்களை உணரச் செய்தார். எமது உடைகளையும், தண்ணீரையும் நீங்கள் பறித்துக் கொண்டுவிட்டதால் நாங்கள் அழுக்காக இருக்கிறோம். எமது உணவுகளைப் பறித்துக் கொண்டு அழகிப் போனவற்றைத் தின்னுமாறு நீங்கள் செய்துவிட்டதால் நாங்கள் அவலட்சணமாகவும், வளர்ச்சி குன்றியவர்களாகவும் ஆகிப் போனோம். எங்களுக்குத் தெரியாத மொழிகளிலேயே நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாலும், எங்களைக் கல்வி கற்க நீங்கள் அனுமதிக்க மறுப்பதாலும் நாங்கள் அறியாமையில் வீழ்ந்தோம். அடிமைகள் வேறெப்படி இருக்க முடியும், நாங்கள் இழிவாய் தான் காட்சி அளிக்கிறோம்.

அம்பேத்கர் எங்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியபிறகு, நாங்கள் இனி அழுக்காகவும், அவலட்சணமாகவும், அறியாதவர்களாகவும், இழிவாகவும் தோற்றமளிப்பதை முடிவுக்கு கொண்டு வர வழிவகைகளைச் சிந்திக்கத் தொடங்கினோம். இருந்த போதிலும், இன்னும் எங்களில் பெரும்பாலானோர் அப்படியே தான் இருக்கின்றனர் - அதற்குக் காரணம் இந்தக் கொடுமைகளை நீங்கள் சில நூற்றாண்டுகளாகச் சுமத்தி வந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட எங்களைத் தடுத்து நிறுத்தவும், ஏன், எங்களில் சிலரை விலை கொடுத்தே வாங்கவும் கூட உங்களுக்குள்ள அத்தனை செல்வாக்கையும் நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

எங்களுக்குத் தெரியத் தான் செய்கிறது - நாங்கள் நட்ட நடு வீதியில் நடனம் ஆடி வருகிறோம். உங்கள் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சாலையே உங்களுக்குத் தான் பட்டா போட்டுக் கொடுத்திருப்பது மாதிரி இரைச்சல் எழுப்பாதீர்கள்! சாலை முழுவதும் ஓட்டு மொத்தமாக உங்களுக்கே சொந்தம் போல உங்களுக்குத் தோன்றக் காரணம் என்ன? எப்படி அப்படி இருக்க முடியும்? கண்ணாடியால் அரவணைக்கப்பட்ட பெரிய கட்டிடங்களில் இருந்து உங்கள் வீட்டை நோக்கி வண்டியில் போய்க் கொண்டிருப்பதாலா ?

என்றைக்காவது ஒரு நாள் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுங்கள். நீங்கள் இயக்கும் ஒவ்வொரு காருக்காகவும், பல பேர் சாலையோரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது, பேருந்துகளில் எங்களைத் திணித்துக் கொள்ளவோ, ஆட்டோவில் பகிர்ந்து கொண்டோ பயணம் செய்யவேண்டியிருக்கிறது. சொல்லப் போனால், உங்கள் கார் வழுக்கிச் செல்ல வசதியான சாலையை அமைக்கத் தோண்டிக் கொண்டிருத்த போதும், எங்கள் தோலைப் போலவே கருத்த தார் மொண்டு எடுத்துப் பூசிக் கொண்டிருந்த போதும் சூரிய வெப்பத்திலும், நள்ளிரவைக் கடந்த நேரத்திலும் இந்த நாட்டில் எல்லாமே மோசம் என்று உங்களது மேற்கத்திய பாணி இழிவுப் பேச்சுக்களைக் கேட்டபடி உழைத்தது நாங்கள் தான்.

இந்தச் சாலை உங்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பது அற்ப விஷயம். நாங்கள் இந்தச் சாலைக்குச் சொந்தக்காரர்கள் எனதே பெரிய உண்மை! எங்களில் எத்தனை பேர் இந்தச் சாலைகளிலேயே பிறந்தவர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? இங்கேயே பிறந்து, உண்டு, உறங்கி, குடும்பம் நடத்திப், பிள்ளைகளைப் பெற்று எங்கள் வாழ்வு மொத்தத்தையும் இங்கேயே வாழ்ந்து முடிப்பவர்கள் எத்தனை பேர் என்பதாவது தெரியுமா முதலில்? அப்படி இருக்க, உங்களுக்கு இங்கே வழி விட வேண்டும் என்று உரிமை பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்!

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, போதை ஏறியபடி கன்னா பின்னா என்று நாங்கள் இன்று ஆட்டம் போடவே செய்வோம். உங்களது செல்லப் பிள்ளைகள் குடித்துக் கும்மாளம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எந்த நாளும் நுழைய முடியாது, விடுவார்களா? நீங்கள் டிப்ஸ் என்று செலவழிக்கும் பணத்தின் அளவில் எங்களது ஒரு முழு நாளுக்கான உணவையும் நாங்கள் முடித்துக் கொள்வோம். அப்படியே உங்களது வாரிசுகள் தங்களது கட்டிழந்து குதியாட்டம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எதற்காக அனுமதிக்கப் படுவோம் என்றால், அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யக் காத்திருக்கத் தான்.

எனவே இன்றைய எங்கள் ஆட்டம் சாலையில் தான். இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள், சாலையில் குடித்துவிட்டு நாங்கள் ஆட்டம் போடும் போது, உங்கள் கார் செல்லும் பாதையைக் கொஞ்சம் மறிக்க மட்டுமே செய்கிறோம். ஆனால், நீங்கள் குடித்துக் கும்மாளம் போட்டபடி கார்களில் பவனி வரும்போது, வெறித் தனமாக உங்கள் கார்களை எங்கள் மீது ஏற்றிச் சாலையோரம் நசுக்கித் தள்ளிவிட்டுப் போகிறீர்கள். குடித்திருக்கும்போது நம்மில் யார் அதிகம் ஆபத்தானவர்கள் என்பது பற்றிய புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வோம்.

என்னதான் நாளை மீண்டும் -நீங்கள் கொடுக்கும் குறைந்த கூலிக்காக உங்களது வசைச் சொற்கள்-இழி சொற்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், உலகமே உங்கள் தோள்களில் என்பது போல் பாவித்துக் கொண்டு நீங்கள் நடந்து கொள்வதை சகித்துக் கொண்டும் - உங்களுக்காக உழைக்க வந்து நிற்போம் என்றாலும், இந்த இரவில் எங்கள் கொண்டாட்டத்தை நடத்துகிறோம். உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, உங்களது வாகனங்களில் அமர்ந்தபடி எங்களைச் சபித்துக் கொண்டிருங்கள். அல்லது, பேசாமல் எங்கள் களியாட்டத்தில் நீங்களும் கலந்து விடுங்கள்.


கட்டுரையாளர் சித்தார்த்திய ஸ்வபன் ராய் அவர்களின் மின்னஞ்சல்: siddharthyaroy@gmail.com

நன்றி: தி ஹிண்டு: ஏப்ரல் 24, 2011

தமிழில்: எஸ் வி வேணுகோபாலன்