வெள்ளி, 6 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....1.
2010 ஜூலை 25……

சென்னை எழும்பூர் இரயில் நிலையம்….. வழக்கமான தனது மாலை நேரத்து பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.
விதவிதமான பயணிகள் அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், இரயில் நிலைய பணியாளர்கள், காவல்துறையினர் என மனித இரைச்சல்களால் சலசலத்து கொண்டிருந்தது.

இவற்றுக்கு மத்தியில் ’பயணிகளின் அன்பான கவனத்திற்கு…. சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தூத்துக்குடிக்கு செல்லவிருக்கும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மூன்றாவது நடைமேடையிலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பவிருக்கிறது……’ என்னும் அந்தப் பெண்ணின் குரல் இவை எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் ஒலிப்பெருக்கியில் எச்சரித்துக் கொண்டிருப்பதை கேட்டபடி மூன்றாவது நடைமேடையில் தனது S2 கோச்சை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் பிரவீண்.

தோள்களில் மலையேறிகள் பயன்படுத்துவதைப் போன்ற பையை அணிந்து கொண்டும் தனது வலது கையில் வீல் பொருத்தப்பட்ட இடுப்புயற பெட்டியொன்றை இழுத்து கொண்டும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி S2 கோச்சை வந்தடைந்தவன் தன் பெயரையும் இருக்கை எண்ணையும் மீண்டுமொரு முறை உறுதி செய்தபடி தனது பெட்டி பையோடு தன்னையும் உள்ளே செலுத்திக் கொண்டான்.

24 என்னும் தனது இருக்கை எண்ணை நோக்கி சென்றான். அது சைடு லோயராக இருப்பதைக் கண்டு கொஞ்சம் நிம்மதி அடைந்தவனாக தனது சுமைகளை காலுக்கு அடியில் தள்ளிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். தனது பையிலிருந்து தண்ணிர் பாட்டிலை வெளியில் எடுத்து கொஞ்சம் குடித்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
இன்ன காரணமின்றில்லாமல் அங்குமிங்குமாய் அவனை கடந்தவண்ணமாய் பயணிகள் அலைந்து கொண்டிருந்தார்கள்.


தனது ஜீன்ஸ் பேண்ட்டை கழற்றிவிட்டு முக்கால் பேண்ட்டை அணிந்து கொண்டால் சற்று சௌகர்யமாய் இருக்கும் என எண்ணம் தோன்றிய போது ஏதேச்சையாய் தனது கம்பார்ட்மெண்டில் உள்ள சக பயணிகளை பார்த்தான். முதிய மற்றும் நடுத்தர வயது தம்பதியரும், துறுதுறுவென்று இரண்டு சின்னப் பையன்களும் இருந்தனர். அந்த நடுத்தர வயது ஆணின் தாய் தந்தையர் தான் அந்த இருவரும் என்பதை அவர்களது உரையாடலில் இருந்து தெரிந்து கொண்டான். ஏனோ அவர்களை கண்டவுடன் தனது ஆடை மாற்றும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்டான்.

அந்த இரண்டு பையன்களுக்கும் ஏழெட்டு வயதுக்குள் தான் இருக்கும். அவர்கள் அங்குமிங்கும் ஓடியபடி ஒருவித பரவச நிலையிலே இருந்தனர். அவர்கள் இருவரையும் ஓரிடத்தில் அமரச் செய்வதிலேயே மொத்த குடும்பமும் பாடுபட்டுக் கொண்டிருந்தது. இத்தனை பரபரப்பிலும் ஒருவித அறுதியற்ற மனநிலையோடு அமர்ந்து பலவித நினைவுகளோடு தன்னை சுற்றி அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சிகளை அணிச்சையாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் பிரவீண்.

பிரவீண் இருபத்தி ஒன்பது வயது இளைஞன். ஏறத்தாழ ஆறடியை நிறைக்கும் உயரம். நல்ல கருத்த பொலிவான முகவெட்டுடன் கூடிய அழகன். மாலுமியாதலால் நல்ல திடகாத்திரமான உடற்கட்டுடன் இருந்தான்.
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் மெல்ல மெல்ல நகரத் துவங்கியது. உடனே அந்த இரண்டு சிறுவர்களும் “ஹே.....ஏ...” என்று பேரிரச்சலோடு பிரவீணின் இருக்கைக்கு மேலே விழுந்தார்கள்.
சன்னலுக்கு வெளியே தங்களது கைகளை நீட்டியபடி போவோர் வருவோருக்கு கையசைக்க துவங்கினர்.

மூத்தவன் அஸ்வின் தன் தம்பியிடம் “டேய்....டேய்... நிஷாந்த் அங்க பாரேன் எவ்வளோ கலர்கலரா லைட்டு பாரேன்.....அய்யோ ஓடிப்போச்சே....”
“எல அஸ்வின் இங்க பாரேன்....கட எவ்ளோ ஸ்பீடா ஓடுது பாரேன்....”
இருவரும் எதையதையோ ஒருவருக்கு ஒருவர் காண்பித்து உற்சாகம் அடைந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தபடி பிரவீணும் அவர்களோடு இணைந்து தம்மை கடந்து போகும் ஒவ்வொன்றிலும் சுவாரஸ்யமாகிக் கொண்டிருந்தான்.

“டேய்....டேய்....இரண்டு பேரும் இங்க வாங்க.... அங்கிள டிஸ்டர்ப் பண்ணாதீங்க....” என்று தனது கரகரத்த குரலால் எச்சரித்தபடி சிறுவர்கள் இருவரையும் தம் பக்கம் அழைத்தார் ஆஸ்கர்.
ஆஸ்கர் முப்பது.....முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். அந்த இரண்டு சிறுவர்களின் தந்தை. அந்த இரவு நேர இரயில் பயணத்திலும் முழுக்கை சட்டை அணிந்து டீக்காக டக்-இன் செய்திருந்தார். ஒரு சாயலில் நடிகர் ரமேஷ் அரவிந்த் போலிருந்தார்.

அவருடைய மனைவி ஷீலாவும் அவருடன் சேர்ந்தபடி...” சொன்னா கேக்க மாட்டானுக இரண்டு அடியப் போட்டாத்தான் புத்தி வரும்....”என்று மிரட்டினாள். தன்னை சுற்றி நடந்து கொண்டிருந்த இந்த சம்பாஷனைகளை கவனித்த பிரவீண்...”எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல.....பசங்க இருக்கட்டும்....”என அவர்களது தந்தை ஆஸ்கரைப் பார்த்து சொன்னான்.
இரயில் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து சென்று கொண்டிருந்தது.
அஸ்வின் பிரவீணை நோக்கி,” அங்கிள் நீங்க எங்க போறீங்க....?” எனக் கேட்டான்.

பிரவீண் அஸ்வினின் தலையை செல்லமாக கோதியபடி ”தூத்துக்குடிக்கு போறேன்....” என்றபோது “ஹை..... நாங்களும் அங்கதான் போறோம்....இங்க எங்க அத்த வீட்டுக்கு வந்திட்டு ஊருக்கு போயிட்டிருக்கோம். சென்னை ஒரே போர் அங்கிள் கிரிக்கெட்,சைக்கிள் ரைட் எதுவுமே விளாடமுடியல..... தூத்துக்குடிக்கு போன உடனே ஜான்,குமார்,நிக்கி....எல்லார் கூடேயும் சேந்து புல் டைம் விளாட்டுதான்.....இல்லடா நிஷாந்த்....”
“ம்மா.....ஏ...அம்மா....இங்க பாரேன் அஸ்வின் நம்ம ஊருக்கு போன உடனே விளாடப் போறானா....அதுவும் அந்த நிக்கிபய கூட சேந்தாம்....”என நிஷாந்த் எதையோ போட்டுக் கொடுக்க அஸ்வின் திடீரென்று நிஷாந்த் மண்டையில் ஓங்கிக் கொட்டினான். நிஷாந்தும் பதிலுக்கு அவனை அடிக்க ஒருசில நிமிடங்களில் அண்ணன் தம்பி இருவருக்கும் கைகலப்பானது.

பிரவீண் “டேய் அடிச்சுக்காதிங்கடா.....”என்று சொல்லியபடி நிஷாந்தை பிடிக்க முயல தன்னை அடிக்க வந்த அஸ்வினை தள்ளிவிட நிஷாந்த் கையை தூக்கிய போது பிரவீணின் நெற்றிக் கண்களை குளிர்வித்துக் கொண்டிருந்த கூலிங்கிளாஸ் எகிறி கீழே விழுந்தது. இந்த நிமிஷ நேர களோபரத்தை அனுமானிக்க தாமதித்த ஆஸ்கர் பிரவீணின் கண்ணாடி கிழே விழுந்ததும் பாய்ந்து சென்று இருவரையும் பிடித்து இழுத்து ஆளுக்கு ஒரு அடியைப் போட்டார். இருவரும் ஒரு சேர அழத்துவங்கினர்.
“அங்கிள்ட்ட முதல்ல சாரி கேளுங்கடா....” என்று அதட்டியபடி. “வெரி சாரி சார்....” என்றபடி பிரவீணின் கண்ணாடியை எடுக்க முயன்றவர் போல் கீழ குனிந்தார்.

அதற்குள் பிரவீண் கண்ணாடியை கையில் எடுத்தபடி “அதெல்லாம் ஒண்ணுமில்ல.....சின்ன பசங்கதான.... தெரியாம பட்டிருச்சு..... இதுக்கு போயி பசங்கள அடிக்காதிங்க.....”

முதியவர் ராபர்ட் தமது பேரக் குழந்தைகளை பார்த்து “அஸ்வின்.....நிஷாந்த்.... ரெண்டு பேரும் அங்கிள்கிட்ட சாரி சொல்லுங்க..... ஏ! அஸ்வின் அங்க என்ன பாத்துகிட்டு.....நீ முதல்ல சாரி கேளுடா....”

அஸ்வின் தலையை குனிந்தபடி “சாரி! அங்கிள்.....” என்று கிசுகிசுத்தான்.
“சத்தமா சொல்லுடா....”-இது ஷீலா

“அய்யோ.....அதெல்லாம் வேண்டாம் புள்ளங்கள விடுங்க.....” என்றபடி பிரவீண் அஸ்வினை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

ராபர்ட்டின் மனைவி விக்டோரியா.....,” தம்பி நீங்களூம் தூத்துக்குடி தான் போறீங்களா...?”

“ஆமா....அங்க எங்க அம்மாச்சி வீட்டுக்கு தான் போயிட்டிருக்கேன்.”

“அம்மா அப்பால்லாம் மெட்ராஸ்லதான் இருக்காங்களா....?”

“இல்ல அம்மா இறந்து போயி பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சு......அம்மா இறந்து ஒரு வருஷத்துல அப்பாவும் போயிட்டாரு......அப்பா இறந்து கொஞ்ச நாள்ல கப்பல்ல வேல கெடச்சு போனேன்...... அப்படி இப்படின்னு ஏழு வருஷத்துக்கும் மேல ஆச்சு ஊருக்கு போயி.....எனக்குன்னு அங்க அம்மாச்சி மட்டுந்தான் இருக்கு...... அவங்களுக்காக தான் இப்போ ஊருக்கு போயிட்டிருக்கேன்......”

“எப்படிய்யா இத்தன வருஷமா ஊரு பக்கமே போவாம இருக்க முடிஞ்சிது......உங்க அம்மாச்சிய பாக்கவாவது போயிருக்கலாம்ல.....?”
பதிலேதும் பேசாமல் ஒருவித வெறுமையோடு சிரித்துக் கொண்டான் பிரவீண்.


ஆனால் அந்த வெற்றுச் சிரிப்பு அவன் கதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஆயிரம் பதில்களை அளித்தது. அனிச்சையாய் ஷீலாவின் கரங்கள் தம் இருகுழந்தைகளையும் வளைத்துக் கொண்டது.
அங்கே அப்போது அழையா விருந்தாளியாய் மௌனம் வந்து குடியேறியது. ரயிலின் தகதகப்போடு கூடிய அந்த திடீர் மௌனம் ஒருவித இறுக்கத்தை அங்கே உணரச்செய்தது.


ரயில் தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்தது. பிரவீண் எழுந்து கழிவறைக்குள் சென்று ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தான். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் இழப்புகளால் சக மனிதர்களிடம் எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பழகும் இயல்பை உருவாக்கியிருந்தான். ஆனாலும் அன்று அஸ்வினையும், நிஷாந்தையும் பார்க்கும் போது அவனுக்கு ஒரு மெல்லிய ஏக்கமும், தான் நம்பும் இயேசுநாதரை ”இறுதிதீர்ப்பு நாளன்று” கூண்டிலேற்றி தன் வாழ்வுக்கு நீதி கேட்கும் ஆத்திரமும் அவனுக்குள் மேலெழும்பவே செய்தது.


வழக்கம்போல் அவனது இயல்பு அந்த எண்ணத்தை நிலைக்க செய்யாமல் அவனை மீண்டும் ஒட்டுதலற்ற மனநிலைக்கே திரும்பச் செய்தது. அதற்கு அந்த சிகிரெட் கரையும் நிமிடங்களே அவனுக்கு போதுமானதாய் இருந்தது. ரயில் தாம்பரம் நிலையத்தை விட்டு நகரத் துவங்கியது.

பிரவீண் தன் இருக்கைக்கு திரும்பிய போது அங்கே டிக்கெட் பரிசோதகர் அமர்ந்திருந்தார். அனைவரது பயணச்சீட்டையும் பரிசோதித்து விட்டு அவர் எழுந்து சென்றதும். விக்டோரியா தன் மருமகள் ஷீலாவை பார்த்து,”யாத்தே..... மணி எட்டரைக்கு மேல ஆவுது பாரு.....புள்ளைவ சாப்புடாம கெடக்கு அந்த இட்லிய எடுத்து வச்சு கொடும்மா......”

“சரித்தே.....” என்றபடி சீட்டுக்கு அடியிலிருந்த அந்த பெரிய கட்டப்பையை எடுத்து எல்லோருக்கும் பரிமாறினாள்.

“அந்த தம்பிக்கும் வச்சு குடும்மா.....” என்றாள் விக்டோரியா.

“அய்யோ அதெல்லாங் வேண்டா(ம்) நான் பழம் வச்சிருக்கேன் சாப்பிட....”என்றபடி தன் பைக்குள் கையைவிட்டான் பிரவீண்.

“வாலிப புள்ள வெறும் பழத்த சாப்பிட்டிட்டு படுக்குறதா....? எய்யா.... ஒனக்கு குடுக்குறதுனால இங்க ஒண்ணு(ம்) கொறஞ்சு போயிடாது வேத்தாளா நெனைக்காம வாங்கிக்கய்யா.....” என வாஞ்சையோடு ஒருமைக்கு மாறியிருந்தாள் விக்டோரியா.

“அப்படியெல்லா(ம்) நெனைக்கல.....” என வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான் பிரவீண்.

“ரொம்ப காலங் கழிச்சு நம்ம ஊருக்கு வாறீங்க.....கண்டகண்ட சாப்பாட்ட சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும் இட்லி, மீன்கொளம்புன்னு நம்ம வீட்டு சாப்பாட்ட சாப்பிட்டு பாருங்க....”-ஆஸ்கர்.

“அப்பனும்....மவனும் மீனால அடிச்ச வானானுங்க தம்பி.....இட்லிக்கும் மீனு கொளம்பு தான் வேணும்..... ஊருவழி வந்திருக்கோமே கொஞ்ச வாயக் கட்டுவமேன்னா இருக்குதுக.... எம்மவ உயிர வாங்கி இட்லியும் மீன் கொளம்பும் செஞ்சு ஏனத்துல வாங்குன பொறவுதான் ரயிலேறுவோம்ன மாறி நின்னது நிக்க அவள செய்ய சொல்லி வாங்கிட்டு வருதுக.....”

“ஆமா....இவ பெரிய பாப்பாத்தி கணக்காத்தான் பவுசு காட்டுவா.....”பதிலுக்கு ராபர்ட்டும் தன் மனைவியை வாரினார்.

”நாங்களும் பரத்திதான்......ஆனா எங்க சனத்துல யாரும் இப்படி மீனு.....மீனுன்னு செத்ததில்லப்பா.....”

“பழையகாயல் காரனுவ பேருக்குதான் பரவன் எவன் இப்ப மடிக்கு போறான்.....? இல்ல நீதான் பொறந்ததுல இருந்து ஒங்க ஊருல கடலப் பாத்திருக்கியா...? சேசுகோயிலுக்கும் கெழக்க இருக்கர கடலுக்கு எப்படித்தான் உரிம கொண்டாடுறீகளோ.....? பெரிய பரத்தியாம்ல பரத்தி....”

“வந்துட்டாரு வங்கக் கடலரசன்.....இவுரு ரொம்ப கண்டாரு எங்க ஊரப் பத்தி.....என்னக்கி எங்க அய்யா இவர கெட்டி வச்சாரோ அன்னக்கே எனக்கு போச்சு ஊரும்......உறவும்.....” என சிடுசிடுத்தாள்

“சும்மா இருக்கீகளாம்மா......அதையும் இதையும் பேசிக்கிட்டு....”

“இவனுக்கு இவன் அப்பன ஒண்ணு சொல்லிறக் கூடாதே..... அந்தால பொத்துகிட்டு வந்திரும்.....”

“தம்பி.... நீங்க ஒண்ணும் வித்தியாசமா நெனைக்காதிங்க என்னைய கொஞ்சம் பொறக்கி கடிச்சாத்தான் அவளுக்கு செறிக்கும்” என தன் மனைவியை மறுபடியும் சீண்டியபடி பிரவீணையும் கட்டுக்குள் இழுத்தார்.

அவன் சிரித்தபடியே இட்லியை பிட்டுபிட்டு மீன் கொளம்பில் தொட்டுக் கொண்டு சாப்பிட்டவாறு அவர்களது ஊடலையும் ரசித்துக் கொண்டிருந்தான். அப்பிடி இப்படியென ஏதேதோ பேசியபடி ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டு முடித்த கொஞ்சநேரத்துக்கெல்லம் சிறுவர்கள் இருவரும் தூங்கிப்போனார்கள். அவர்கள் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது பிரவீண் எழுந்து கதவருகே சென்றான்.


சாத்தியிருந்த கதவை திறந்தபோது ரயிலின் சத்தம் பிரம்மாண்டமாய் கேட்டது. ரயிலின் அந்த பேரிரச்சலுக்கு பயந்து காற்று வேகவேகமாய் ரயிலுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருந்தது. கதவின் இருபக்க கம்பிகளையும் பற்றியவாறு இருளின் ஒளியை ரசிக்க துவங்கினான்.
அடர்ந்து படர்ந்த இருளை கிழித்து செல்லும் ரயில்......அடித்து பிடித்து முகத்தில் அறையும் காற்று......வாட்டி வதைக்கும் நினைவுகள்.....என காலச்சக்கரத்தின் கரம் பிடித்து பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.
......தொடரும்

1 கருத்து:

vimalanperali சொன்னது…

புகை வண்டியுடன் சேர்த்து பயணிக்கிற ஈரம் மிகுந்த கதை.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.நன்றிவணக்கம்/