வெள்ளி, 13 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....42010 ஜூலை 26....


அதிகாலை.....

ரயில் கீரீச்….. என்னும் சத்தத்தோடு வாஞ்சி மணியாச்சியில் நின்றபோது…… ’சூடா…..அ காபி….ய் டீ…..இ சாய்…..’ ‘வட…..போலி….வடேய்….’ என காகங்களுக்கு போட்டியாக மனித குரல்கள் சன்னல்களுக்கு வெளியே இரைந்து கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து கண்விழித்தான் பிரவீண். சிறுவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் விழித்திருந்தனர்.
படுத்திருந்த படியே மெல்ல எழுந்து தனது இருக்கையில் ஒருவாறு சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு சன்னலுக்கு வெளியே பார்வையை விட்டான். விடிந்து விட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சியே…..அவனுக்கு தூத்துக்குடியின் எல்லையைப் போல் பட்டது. ’எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இந்த மண்ணைப் பார்த்து?’ என ஏக்கத்தோடு எண்ணிக்கொண்டான். நன்றாக சுவாசித்து ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டான். அந்த காற்றே அவனுக்கு அத்தனை நெருக்கமாய் பட்டது. இந்த மண்ணைப் பிரிந்து எப்படி தன்னால் இத்தனை ஆண்டுகள் இருக்க முடிந்தது? என எண்ணி மலைத்துக்கொண்டான். நெடுநாள் பிரிந்திருந்த காதலியை பார்த்த உணர்வுடன் செய்கையற்று வீற்றிருந்தான்.

திடீரென்று அவனது செல்போன் சிணுங்கியது…..எடுத்து பார்த்தான் “joseph mama calling………..”என மின்னியது.

“ஹலோ…..மாமா….”

“ஹலோ……ஹலோ….ஓ”

“ஹலோ…..மாமா …..கேக்குது சொல்லுங்க…..”

“ஹலோ…..ஆங்….இப்ப எங்க வந்திட்டிருக்கய்யா?”

“மாமா…… இப்ப வாஞ்சிமணியாச்சில இருந்து டிரெயின் கெளம்பிருச்சு…..”

“எங்கய்யா…..எறங்குற…..?”

“நான் மேலூர்லயே இறங்கிருறேன் மாமா….”

“ஆங்…..சரியா சரி……நான் அங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திர்றேன்”

“அதெல்லாம் எதுக்கு மாமா…..நான் வந்திர மாட்டேனா?”

”பெரிய மனுசன் மாறிபேசாத நான் வந்திர்றேன்…..”என்றபடி அவனது பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டார்.

ஜோசப் எப்போதும் அப்படித்தான்…… அவரைப் பொறுத்தவரை இன்னமும் பிரவீண் சின்னப் பையன் தான்….. மருமகன் மேல் எப்பவும் தனிப் பிரியம் உண்டவர்க்கு. அவன் பிறந்தபோது 16-ஆம் காம்பவுண்டையே விழாக்கோலம் பூணச்செய்து விட்டார். தன் அக்காளுக்கு ஆண் வாரிசு பிறந்ததை ஏதோ தேவதூதனின் வருகையைப் போல் அத்தனை விமர்சையாக கொண்டாடினார். அவருக்கு தனது அக்காள் ஜெயா என்றால் அத்தனை மரியாதையும்,பாசமும் உண்டு. ஜோசப்பைவிட ஜெயா இரண்டு வயதே மூத்தவள். ஆனாலும் ஜொஸியைவிட அவளே அவரிடம் அதிக கண்டிப்பை காண்பிப்பவளாய் இருந்தாள். அவரும் அவளது வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் தன்னை மாற்றிக் கொள்வார்.

பிரவீணுக்கு நினைவு தெரிந்த காலத்திலும் அதாவது ஜோசப்பிற்கு திருமணமான பின்பும் அவரை ஜெயா கோபப்பட்டு கைநீட்டி அடித்ததை பார்த்துள்ளான். அதுவும் அவர் தன் மனைவி சோபியாவை ஏதோ வாக்குவாதத்தின் போது கைநீட்டிவிட்டார் என்பதற்காக!!!

பிரவீணுக்கு தன் மாமன் மீது அதிக பிடிப்பு ஏற்படுத்திய காரணங்களில் மிகவும் முக்கியமானது அவர் தன் தாயின் மீது வைத்திருக்கும் தனிமரியாதையும்….. பாசமும் தான்.

”என்ன சார் இன்னும் தூக்கம் கலையலையா?” என்றபடி ஆஸ்கர் அவன் முன் வந்து நின்றார்.

சட்டென்று தன் கால்களை இழுத்துக்கொண்டு அவருக்கு உட்கார இடம் கொடுத்தபடி “இல்ல அப்போதே…..எந்திச்சிட்டேன்…..சும்மா அப்படியே உக்காந்து பாத்திட்டு இருக்கேன்….”
ஆஸ்கர் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பிள்ளைகளும் எழுந்து விட்டிருந்தன. அப்படியே ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்கள். ஒரு அரைமணி நேர பயணத்தில் ரயில் தூத்துக்குடிக்குள் நுழைந்தது. ஊர் ரொம்பவே மாறிவிட்டிருந்ததை உணர்ந்தான். முன்றாம் கேட்டுக்கு மேலாக ஒரு பாலம் புதிதாய் சென்று கொண்டிருப்பதையும் கவனித்தான். ஒருவழியாய் ரயில் ரெண்டாம் கேட்…..மேலூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அனைவரிடமும் சொல்லிவிட்டு மேலூரில் இறங்கினான். ஏழு ஆண்டுகளில் ஊரில் எத்தனை எத்தனை மாற்றங்கள் என எண்ணிக்கொண்டான். மேலூர் ரயில் நிறுத்தமே அவனுக்கு புதிதாய் தெரிந்தது. அவனை ’சார்….ஆட்டோ வேணுமா…சார்?’ ‘சார் எங்க போணும் சார்…..?’ என ஆட்டோ ஓட்டுனர்கள் மொய்க்க துவங்கினார்கள். ஓரிருவருக்கு வேண்டாம் என பதில் சொல்லி பார்த்தான்……


அவர்கள் விடுவதாய் தெரியவில்லை. பின்பு பதிலேதும் சொல்லாமல் நடக்க துவங்கினான். அவனை மொய்த்து கொண்டிருந்தவர்கள் விலகிப் போக ஆரம்பித்தனர்.சுற்றும் முற்றும் பார்த்து தன் மாமன் ஜோசப்பை தேடினான். அவர் இவனது கண்ணுக்கு அகப்படாமல் போகவே செல்போனை எடுத்து அவருக்கு போன் செய்ய போன போது……”பிரவீண்……” என்றபடி ஜோசப் தீடீரென்று அவன் முன் முளைத்து அவனை கட்டிக்கொண்டார். அவனும் வாஞ்சையாய் அவரைத் தழுவிக் கொண்டான்.

“இங்க மாமன் ஒருத்தன் கடக்காம்கிறதையே மறந்திட்டியேப்பா…..உன்ன வரவைக்க எத்தன பாடுபட வேண்டிக் கெடக்கு……. நல்லா எளச்சு கறுத்து போயிட்டியேப்பா……”

“சும்மா இருங்க மாமா நீங்க வேற…..”


“எய்யா அந்த பெட்டியும் பையையும் எங்கிட்ட குடு” என்றபடி அவன் கையிலிருந்து பெட்டியை பறித்துக் கொண்டார்.

“அய்யோ மாமா நானே தூக்கிக்கிர்றேன்...” என அவன் சொல்லியும் கேட்காமல் அவர் முன்னே நடக்கத் துவங்கினார். அபிராமி மஹாலுக்கு சற்று முன்னதாக நின்று கொண்டிருந்தவருக்கு ஏதோ சைகை காண்பித்தார். அவரும் புரிந்து கொண்டவராக இவர்களை நோக்கி வந்தார். ஏறத்தாழ இவர்கள் இண்டிகோ கார் அருகே செல்லவும் அவர் இவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது. அவர் பிரவீணைப் பார்த்ததும் ”என்ன தம்பி எப்படி இருக்கீங்க…….? பாத்து வருசக்கணக்கா ஆச்சு…..” என பிரியமாக விசாரித்த போது இவனுக்கு அவரை யார் என்றே அடையாளம் தெரியவில்லை என்றபோதும் சமாளித்தபடியே”ஆங்…..நல்லா இருக்கேன்….” என சிரித்து வைத்தான்.

“அவர் காரின் முன் இருக்கை கதவை திறந்து டிக்கியை ஓப்பன் செய்தபடியே”தம்பி நா(ன்) யாருன்னு தெரிய்….யிதா?”
இவன் ஒருவித சங்கோஜத்தோடு பதில் சொல்ல முடியால் வலுக்கட்டாயமாக ஒருவித புன்னகையை வரவழைத்தபடி”இல்ல…..சரியா ஞாபகமில்ல…..”

“ஏய்!!! ஆட்டோ மாமாடா……. இவரோட ஆட்டோவுல தான் முந்தி நீ ஸ்கூலுக்கெல்லாம் போன…..மறந்திட்டியா?” என்றபடி அவரை அவனுக்கு ஞாபகப்படுத்த முயற்சி வைத்தார். ஆனாலும் அவனால் தன் நினைவடுக்குகளில் இருந்து முழுவதுமாய் அவரை மீட்கமுடியவில்லை.
காரின் டிக்கியில் ஒருவழியாக அவனது பெரிய பெட்டியை மட்டும் வைத்து மூடினார்கள். தோளில் போட்டிருந்த பையை தன்னோடு வைத்துக் கொண்டு காரின் பின் இருக்கையில் ஏறினான். ஜோசப் டிரைவருடன் முன் இருக்கையில் ஏறிக் கொண்டார். முதல்வேளையாய் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டான். அதேபழைய கூட்ட நெரிசலோடு வண்டி இரண்டாம் கேட்டை கடந்து மெல்ல ஊர ஆரம்பித்தது. இருசக்கர வாகனங்களின் ஹாரன் இரைச்சல்கள் காதை கிழித்துக் கொண்டு மக்களின் இயல்பை உரக்கச் சொல்லி கொண்டிருந்தது.

“என்னய்யா…..பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு….?”

“ஒண்ணும் பிரச்சன இல்ல மாமா…..ஊரே மாறிப்போச்சே….. ”

“நீங்க ரொம்ப நா கழிச்சு பாக்குற நாள அப்படி தெரியுது போல….எல்லாம் அப்படியே தான் இருக்கானுவ…..” என்றபடி டிரைவரும் தன் பங்கிற்கு ஹாரன் அடித்து சத்தத்தை உற்பத்தி செய்தார். வண்டி போட்டோ பார்க்கை ஒட்டி டபிள்யூ.ஜீ.சி ரோட்டில் திரும்பியது. அன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் சாரை சாரையாக சாலையில் சென்று கொண்டிருந்தனர். எல்லாம் விதவிதமான உடையளங்காரங்களோடு……

“மாமா…..காலங்காத்தால இந்த கூட்டமெல்லா(ம்) எங்க போவுது?”

“நீ என்ன இப்புடி கேக்குற இன்னக்கு ஜூலை 26….. நம்ம மாதாகோயில் கொடியேத்தம்ல மறந்திட்டியா?”

“ஆமோ….ல்ல பாருங்க….. எனக்கு அது சுத்தமா ஞாபகமே இல்ல…. கொடியேத்தம் எத்தன மணிக்கு மாமா?”

“அது…..கொடியேருறதுக்கு எட்டேகால் எட்டரை வரை ஆயிரும்….. ஆனா நேரமே போனாத்தான் நிக்கறதுக்காவது எடம் கெடக்கும்…..அங்க எல்லாரும் கோயிலுக்கு தான் கெளிம்பிட்டு இருக்குதுக……நீயும் வருவல்ல?”

”ஆங்….வாரம்மாமா…..கொஞ்சோம் நசநசன்னு இருக்கு…..போய் குளிச்சிட்டு உடனே கிளம்பிரலாம்….”

“இப்பவே மணி ஏழுஇருபது ஆச்சு……”என ஜோசப் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கார் அவர்களது தெருமுக்கிற்கு வந்திருந்தது. கார் சின்னக் காம்பவுண்ட் வாயலில் நின்றதும் தான் தாமதம் ஜொஸி ஓடோடி வந்தாள். பிரவீண் தன் பையோடு இறங்கியதும் அவனை வாயலில் வைத்தே கட்டி அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டபடி”எய்யா…… என்ன பெத்த ராசா…… இந்த கெழடு ஒண்னு இங்க சீவன புடிச்சிட்டு…..கெடக்கேன்னு நெனச்சுப் பாத்தியா……” என ஆனந்தமும்,ஆதங்கமுமாய் கண்ணீர்த் துளிகளால் அவன் கன்னங்கள் நனைத்தாள். தன் தாயின் கரங்களே தன்னைத் தீண்டுவது போல் உணர்ந்தவன் அவளது கண்ணீரில் கரையத்துவங்கினான்.

“எம்மா…..என்ன? புள்ளய வாசல்ல நிக்கவச்சிக்கிட்டு…..”என்றபடி அவர்களை தன் விட்டிற்குள் இட்டுச் சென்றான் ஜோசப். அதற்குள் அவன் வீட்டு முன்னால் சிறு கூட்டமே கூடிவிட்டிருந்தது.


‘ஜொஸியம்மே…..பேரன் கப்பல்ல இருந்து வந்திருக்கானாம்’
‘ஏழெட்டு….. வருசத்துக்கு முன்னால போன புள்ள இப்ப திரும்பியிருக்குன்னா சும்மாவா…..’
‘யாரு நம்மா செயாக்கா மவனா……? வந்திருக்கியான்…..’

‘இனி ஸ்வீட்டி குட்டியத் தான் கைல புடிக்க முடியாது’
‘என்னமா……வளத்தியும் வண்ணமுமா வளந்திட்டான்……இம்மிட்டு கோண்டு இருக்கும் போது பாத்தது….’

‘ஏங்…..ஞ பாத்து பேசுங்க ஜொஸியம்மே காது கேட்டுச்சு……அவ்ளோ தான்’
என விதவிதமான பார்வைகள்……சிந்தனைகள்……பேச்சுக்கள்…..என அவனது வருகை அங்கு கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து ஒவ்வொரு விதமாய் வெளிப்பட துவங்கியது.

ஜோசப்பின் வீடு மூன்று பத்திகள் கொண்டது. முதலில் நுழைந்தவுடன் ஒரு சிறிய வரவேற்பரை……அந்த வரவேற்பரையின் இடது பக்கம் ஒரு படுக்கயறை அங்கே கழிவறையும்,குளியலறையும் அதனுள்ளே தான். அந்த வரவேற்பறையின் மேல்பக்கம் ஒரு சிறிய சமையலறை அதன் ஊடே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டு. அதுதான் மொத்த வீடும்.
பிரவீண் வரவேற்பறையில் காபி குடித்தபடி அமர்ந்திருந்தான். அவனது அத்தை சோபியா,ஜொஸியம்மே மற்றும் மாமன் ஜோசப் அனைவரும் அவனைச் சுற்றிய நின்றும்,அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனது வருகைக்கான நாட்களையும், மணித்துளிகளையும் எண்ணியபடி காத்திருந்த ஸ்வீட்டியோ இன்னும் குளியலறையிலிருந்து வெளிவந்த பாடில்லை. அவனது அத்தை சோபியா மாத்திரம் கொடியேற்றத்திற்கு கிளம்பிவிட்டிருந்தாள்.

“என்ன கொடியேத்ததுக்கு போக வேணாமா……இப்படியே பேசிகிட்டிருந்தா எப்படி? அவன் இங்கதான இருக்கப் போறான்…..”-ஜோசப்

“அந்த கொமரிய எங்க காணோம்? மச்சான் எப்ப வருவான்னு கெடந்தாளே இப்ப எங்க ஓடி ஒளிஞ்சு கெடக்கா?”-ஜொஸியம்மே
இந்த பேச்சையெல்லாம் உள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருந்த ஸ்வீட்டி’கெழவி ரொம்ப ஓவராப் போய் நம்ம மானத்த வாங்குதே’ என செல்லக் கோபத்தோடு எண்ணிக்கொண்டாலும் ‘நம்ம பத்தி இந்தளவுக்காவது பேசி நான் ஒருத்தி இங்க இருக்கம்ங்கற நெனப்பயாவது குடுத்தாகளே!!’ என்றும் ஒருவகையில் ஆறுதல் பட்டுக்கொண்டாள். அதேசமயம்’இந்த மச்சானுக்கு நம்ம பத்தி ஒரு வார்த்தயாவது கேக்க தோணுதா?’ என்றும்

ஆதங்கம் மேலெழுந்து ஓய்ந்தது.

”மாமா…..நான் அங்க ஆச்சி வீட்டுக்குப் போய் குளிச்சு கெளம்பி வர்றேன் அப்புறம் சேந்து போகலாம்…..” என்றபடியே தன் பாட்டியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்றான்.

அவன் குளித்து கொண்டிருக்கும் போதே ஜொஸியம்மே கிளம்பி விட்டிருந்தாள். பேரன் வந்த மகிழ்ச்சியில் தனக்கு ரொம்ப பிடித்த குங்கும நிறச் சேலையை அணிந்திருந்தாள். அந்த சேலையை அவள் அணிந்து பல வருடங்கள் ஆகியிருக்கும். சமீபகாலங்களில் பெரும்பாலும் பழுப்பு நிறச் சேலைகளையும்,நீலம்,ஊதா, கருப்புவெள்ளை கலந்த சேலைகளையுமே அணிந்து வந்தாள்.

அழகான பிங்க் நிற டிசைனர் சேலை ஒன்றை floating-விட்டபடி சிக்கென்று அணிந்து கொண்டு ஒரு கற்றை மயிரை தன் முன் நெற்றியில் தவழ விட்டுக் கொண்டு அங்கு வந்தாள் ஸ்வீட்டி. பல நூறு கோடி புண்ணியங்களை தம் முன் ஜென்மத்தில் செய்ததன் விளைவாக அவள் செங்கழுத்தை அலங்கரித்தபடி அவளது மார்பின் மீது தவழ்ந்து கொண்டிருந்தது அந்த வைரக்கல் பதித்த ஆப்பிள் டாலருடன் கூடிய அந்த ஒற்றைச் செயின்.

“ஆத்தே…..எந்த மன்னவன மண்ணக்கவ்வச் செய்ய ஆட்டம்….?”

“கெழவி…..நீ எந்த மன்னவன கவுக்க இப்படி நிக்கியோ…..அதுக்குத்தான் நானும் வந்திருக்கேன்…..”

“அடிச் செருப்பால சின்னக் கழுத…..”

“எவ்வளவு தைரியோமிருந்தா…… ஒம் பேரன் எப்ப வருவான்னு நான் காத்துக் கெடந்தேன்னு சொல்லி ஏம் மானத்த வாங்குவீக?” என அவள் தன் பாட்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போது தலையை துவட்டியபடி அங்கங்கே செதுக்கி வைத்தாற் போன்ற கட்டுடலின் மீது ஒரு டர்க்கி துண்டை மட்டும் தவழவிட்டுக் கொண்டு சிகப்பு நிற ஷார்ட்ஸோடு பிரவீண் அங்கு வந்தான். அவனை பார்த்தபோது அவளது கர்வம் மங்கி அட்ரினல் சுரப்பிகளின் தயவால் மெல்ல இச்சை படர்ந்து அவளை உந்தியது.

”வாடி என் ஆத்தாபெத்த சக்களித்தி……வாய்க்கு வாய் வம்பளந்தியே இப்ப பேச்சுமூச்சக் காணோம்?” “எய்யா…..இங்க மினுக்கிட்டு நிக்காளே இந்த கொமரி யாருன்னு தெரியுதா?”

பிரவீண் அப்போது தான் அவளை நிமிர்ந்து நன்றாக பார்த்தான். குளித்துவிட்டு வந்தவனுக்கு குப்பென்று வியர்த்தது. அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது மெல்ல விழிக்க துவங்கியது.

“இது…..இது….” என அவன் இழுத்துக் கொண்டிருந்தான்.

”ஒம்மாமம் மொவ……”

“ஸ்வீட்டியா!!!! இப்படி வளந்துட்டா?”

“வேற எப்படி வளரனுங்கிறியரு?”

“ஆச்சி…..நான் வாரேன்…..” என்று வெட்கப்பட்ட படியே அவள் வெளியேறினாள்.

தீடீரென்று அவனுக்குள் ஏற்பட்ட கிளர்ச்சி ஆயிரம் உணர்வுகளை அவனுக்குள் ஒரே சமயத்தில் தோற்றுவித்தது. சின்னஞ் சிறியவளாய் பார்த்து சென்றவள் பட்டாம்பூச்சியாய் தன் முன் சிறகடித்து நிற்பாள் என அவன் கனவிலும் எண்ணவில்லை. ஏதோ ஒரு இனம்புரியாத பிடிப்பு அவன் வாழ்க்கையில் தோன்றியது போல் உணர்ந்தான். அத்துணை பயணக் களைப்பும் மறைந்து போய் புதிய உற்சாகம் அவனை தொற்றிக் கொண்டது.
தனது பெட்டியை திறந்து மிகவும் சிரத்தையோடு தன் ஆடைகளிலே மிகவும் பிடித்தமான ஆஸ்திரேலியாவில் எடுத்த இளநீல நிறச்சட்டையும், இங்கிலாந்தின் வைத்து எடுத்த கறுப்பு நிற பேண்டையும் அணிந்து கொண்டான். ஒட்டகத்தோலினால் செய்யப்பட்ட ஒட்லாண்ட்ஸ் சாப்பாத்தை அணிந்து கொண்டான். தனது தலைமயிறை ஹீட்டரினால் சரி செய்து செட் பண்ணிக் கொண்டான். வெளியே செல்வதற்கு எத்தனித்தவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் தனது பைக்குள் கையைவிட்டு அடிடாஸ் பாடிஸ்பிரேயை எடுத்து மீண்டும் குளித்துக் கொண்டான்.

“என்னய்யா…..போலாமா? அங்கன கொடியேறிறப் போவுது” என ஜொஸி நினைவூட்டினாள்.

“ஆங்…..கெளம்பியாச்சு ஆச்சி”

“அது என்னையா செண்டு இந்த மணம் மணக்குது?” என அவள் கேட்டதும் தான் தாமதம் உள்ளே வைக்க இருந்த பாடி ஸ்பிரேவை எடுத்து அவளுக்கும் அடித்து விட்டான்.

“ஆத்தே…..என்ன மணம்? வெல ரொம்ப சாஸ்தியோ?”

“அதெல்லாம் இல்ல வெறும் இருபது டாலர்தான்”

“அது எம்புட்டு நம்ம பணத்துக்கு?”

“தோராயமா தொள்ளாயிரம்…..ஆயிரம் வரும்”

“ஆயிர ரூவாயா….” என வாய்பிழந்தாள்.
இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்தபோது.ஜோசப்பும் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

“எய்யா…..நீயும் ஆச்சியும் கார்ல ஏறி போங்க நா(ன்) பின்னாக்ல வண்டில வாரன்….”

“ஏன்யா…..நீயும் எங்க கூடவே வரலாம்ல?”

“எம்மா…..அவளும்,ஸ்வீட்டியும் வண்டில இருக்காங்க….. அவ்வளவு பேருதான் அது கொள்ளும்…..நீங்க சீக்கிரோம் வண்டில ஏறுங்க”
இருவரும் காருக்குள் ஏறிக்கொள்ள கார் மாதாகோயிலை நோக்கி விரைந்தது. அங்கே இருவரின் இதயங்கள் மட்டும் ஒருவருக்குள் ஒருவராய் பயணிக்க துவங்கியது.

...........தொடரும்.