சனி, 21 நவம்பர், 2009

ஞமலிபோல் வாழேல்....


”ஞமலிபோல் வாழேல்” என்கிறான் பாரதி.’ஞமலி’ என்றால் நாய் என்று பொருள்.நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படுவதல்லவா நாய் பின்பு ஏன் பாரதி ’ஞமிலிபோல் வாழேல்’ என்கிறான்? என்று குழப்பமாய் உள்ளதா? ஆம்! நாம் எதையும் மேலோட்டமாய் பார்த்து பழகியவர்களல்லவா? நமக்கு அப்படித்தான் தோன்றும்.ஆனால் நாய்களின் குணாதிசயங்களை உற்று நோக்கினால் உண்மை புலப்படும்.

பொதுவாக நாய்கள் சுதந்திரமாய் செயல்படும் பிராணி அல்ல.அவைகளுக்கு உணவு வழங்குபவர்களே எஜமானர்கள்.அத்தகைய எஜமானர்கள் எதை சொன்னாலும் அது செய்யும்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒருவேளை உணவுக்காக வாலையும் ஆட்டி,காலையும் நக்கும் கீழ்தரமான நடவடிக்கைகளை கொண்டது.அதேசமயம் போலிதனமாய் பாசாங்கு செய்து கொஞ்சி குழையும் குணமும் அதற்கு உண்டு.மொத்ததில் நாய்கள் அடிமைதனத்தின் சின்னங்கள்.

மனிதனும் ஆடு,மாடு,கோழி போன்ற உயிரனங்களை தனது அன்றாட பயன்பாட்டிற்காகவும்,தேவைக்காகவும் வளர்த்தான்.ஆனால் நாய்களை அவன் வளர்த்ததோ மற்ற உயிரனங்களை கண்கானிக்கவும்,வேட்டையாடவுமே.ஆக மனிதனின் ஆதிக்க வெறிக்கு முதலில் வாலாட்டியது நாய்களே! அதன் பரிணாம வளர்சியே இன்று அடியாட்களாகவும்,கூலிப்படையாகவும் மாற்றம் கண்டுள்ளது.

அடியாட்களுக்கும்,கூலிப்படையினருக்கும் எந்த அடிப்படை சித்தாந்தமும் கிடையாது.அவர்களை பொறுத்த வரையில் காசு கொடுப்பவரே எஜமானன்.அந்த எஜமானன் எதை சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்.இன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களும் இவர்களே!

இதில் கொடுமை என்னவென்றால் அடியாட்களாகவும்,கூலிப்படையினராகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிதட்டு வகுப்பினராய் இருப்பவர்களே!(இருந்தவர்களே).இவர்களுக்கோ தாங்கள் யாருக்கு எதிராய் செயல்படுகிறோம்....?தங்களைப் போன்றோர் உருவாவதற்கு யார் காரணம்...?தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன....? என்று கூட தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

அப்படிப்பட்டவர்களால் கொடூரமாய் அழிக்கப்பட்டு இன்றும் தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாய் இருக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.....

1967ஆம் வருடம்...அறிஞர் அண்ணாவின் ஆட்சிகாலமது..... தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலமது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்ச் சிறிய விவசாய கிராமம் கீழவெண்மணி...அங்கே அப்போது விவாசாய கூலிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்பட்டனர்.சிறு தவறுகளுக்கு கூட சவுக்கடியும்,சாணிப்பாலும் ”பரிசளக்கப்பட்ட” காலமது.தூரத்தெரியும் விடிவெள்ளியாய் கம்யூனிச தலைவர்கள் அந்த விவசாய தோழர்களுக்கு மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வந்தார்கள்.அதன் விளைவாக விவசாயச் சங்கம் ஒன்று உருவானது.ஒற்றுமையாய் ஒருகுரலில் தங்களது உரிமைகளை கேட்க தொடங்கினார்கள் விவசாயிகள்.அதை கண்டு அதிர்ந்த பண்ணையார்களும்,நிலச்சுவாந்தார்களும் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’என்று ஒன்றை உருவாக்கி ஆதிக்க வெறியை ஒருங்கிணைத்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் விவசாயிகள் வெறும் அரை லிட்டர் நெல்லை தங்கள் படியில் உயர்த்தி கேட்டனர்.அதற்காக அன்றைய ’அரசியல்வாதியான’ ராஜாஜியும், ”தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது” என விவசாயிகளை பரிகசித்தார்.ஆனால் விவசாயிகள் படி உயர்த்தி கேட்டதால் பண்ணையார்களுக்கும்,நிலச்சுவாந்தார்களுக்குமே பேய் பிடித்தது.அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள்.கிறிஸ்துமஸ் தினத்தன்று.பண்ணையார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழவெண்மணியில் நுழைந்து தங்களது விசுவாச வெறியை கட்டவிழ்த்து விட்டார்கள்.உயிரை கையில் படித்தபடி விவசாயிகள் தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது அங்கு ஒரு தெருவின் மூலையில் ராமைய்யா என்ற விவசாயின் குடிசை இருந்தது.அந்த சின்னன்ஞ் சிறு குடிலில் 48 பேர் அடைக்கலம் கொண்டார்கள்.அதையறிந்த அந்த வெறியாட்கள் அந்த குடிசைக்கு தீவைத்தனர்.வெப்பம் தாளாமல் மரண ஓலமிட்டபடி தகித்து கொண்டிருந்த நெருப்பையும் மீறி ஆறு பேர் வெளியே ஓடினர்.அப்படி தப்பியோட எத்தனித்தவர்களில் இருவரை பிடித்து மீண்டும் உள்ளே தள்ளியது அந்த வெறிபிடித்த கும்பல்.

அப்போது ஒரு தாய் தனது மரணத்தருவாயிலும் தனது குழந்தையை வெளியே வீசியிருக்கிறாள்.ஆனால் அந்த வெறிபிடித்த கூலிப்படையினரோ குழந்தை என்று கூட பாராமல் அதை மீண்டும் எடுத்து நெருப்பில் வீசியிருக்கிறார்கள்.கடைசியாக அவர்களது வெறியாட்டத்தில் வெந்து கருகியது 44 பேர் உயிர். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர்.

கூலியாக உயர்த்தி கேட்ட அரை லிட்டர் நெல்லுக்காக ஆதிக்க வெறியர்களின் கண்ணிசைவுக்கு கூலிப்படையினர் 44 உயிருக்கு வாய்கரிசி போட்டனர்.இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்னவென்றால்....”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.

இன்னும் கீழவெண்மணிகள்...பாப்பாபட்டியாகவும்,கீரிப்பட்டியாகவும்,மேலவளவாகவும்,உத்தப்பபுரங்களாகவும் தமிழக மண்ணில் உயிர்போடு தான் உள்ளது.நாமோ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவராய் சொல்லப்படும் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ஆனால் நம் அண்டை மாவட்டத்தில் சாதி வெறிக்கு வெறும் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பலியான அந்த உயிர்களுக்கு துக்கம் அனுசரிக்க மாட்டோம்.உண்மையில் ஏசுநாதர் என்றொரு தேவமைந்தன் இருப்பாரேயானால் அவர்கூட நம்மை இதற்காக மன்னிக்க மாட்டார்.

தோழர்களே!

தனது உதிரம் கொடுத்து நமக்கு உயிர் கொடுத்த நம் அன்னைக்கே நமது உயிரை பலிகேட்க உரிமையில்லாத போது நாம் யார் அடுத்தவர் உயிரெடுக்க?சகமனிதனை அழித்து நாம் அடைவதற்கு இங்கு எதுவுமில்லை.இந்தச் சமூகம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.நாம் சிரித்தால் அது சிரிக்கும்...நாம் அழுதால் அது அழும்....நாம் அதனை அடித்தால் அது நம்மை திருப்பியடிக்கும்.செய்யும் எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டென்பது உலக நியதி....ஆதலால் ஞமிலி போல் அல்லாமல் உள்ளார்ந்த அன்போடு சக உயிரை காதல் செய்வீர்.....!

புதன், 18 நவம்பர், 2009

ஆண்மை தவறேல்....


”ஆண்மை தவறேல்” என்றான் பாரதி.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என கும்மியடித்த பாரதியா இப்படிச் சொன்னான்? என வினா எழுப்ப தோன்றுகிறதா? நிச்சயம் தோன்றும்.

காரணம்...

இந்த ஆணாதிக்க தமிழ்ச் சமூகத்தில் ‘ஆண்மை’ ஆண்களுக்குரியது என்றும் ’பெண்மை’ பெண்களுக்குரியது என்று தான் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது சரியல்ல.

“ஆண்மை” என்பது ஒரு பெயர்ச்சொல் தான்.ஆனாலும் அதற்கு பாலின பேதமில்லை.ஏனென்றால் ”ஆண்மை” என்பது ’வீரம்’ என்று பொருள் படும்.’வீரம்’ எல்லோருக்கும் பொதுவானது.

சரி ‘வீரம்’ என்றால் என்ன?

ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்வதே வீரமாகும்.இதைத்தான் பாரதி சொன்னான்.”ஆண்மை தவறேல்” என்று.இன்று நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.இன்று தற்கொலை செய்திகளை தாங்கி வராத நாளிதழ்களே இல்லை.தேர்வெழுதி தோற்றுப் போனால் உடனே தற்கொலை....காதலில் தோற்றால் தற்கொலை....வறுமையில் வாடினால் தற்கொலை....என்று சிறு தோல்விகளுக்கும் வாழ்வை முடித்துக் கொள்ளும் அபத்தங்கள் நமது சமூகத்தில் தொடர் கதையாகவே உள்ளது.வாழ்வை எதிர் கொள்ளும் மன தைரியம் நம்மிடம் குறைந்து வருவதே இதற்கு காரணம்.

வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய உண்டு.அவற்றுள் ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

1955ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் தனது பணி முடிந்து மாலையில் பேருந்தில் ஏறி கறுப்பினர்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தாள் ரோசா பாக்ஸ்.மாண்ட்கோமரியிலிருந்து (MONTGOMERY) தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு பயணித்தாள்.அது அமெரிக்காவில் இனவெறி அதிகாரப்பூர்வமாய் அரங்கேறிக் கொண்டிருந்த காலம்.வெள்ளையர்கள் பேருந்தில் ஏறும் போது கறுப்பினத்தவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை காலி செய்து தர வேண்டுமென்பது எழுதப் படாத விதியாகவே இருந்தது.

ஒரு நிறுத்தத்தின் போது மூன்று ,நான்கு வெள்ளையினத்தவர்கள் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.அப்போது இருக்கைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை.இதை பார்த்த பேருந்தின் நடத்துனர் அவளையும்,அவளுடன் அமர்ந்திருந்த மற்றவர்களையும் எழுந்து வெள்ளையர்களுக்கு இடம் கொடுக்க சொன்னார்.மற்றவர்கள் முதலில் சிறிது தயக்கம் காட்டினாலும் எழுந்து கொண்டார்கள்.ஆனால் ரோசா பாக்ஸோ சிறிதும் பயமின்றி மெல்ல நகர்ந்து சன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு எழுவதற்கு மறுத்தாள்.நடத்துனரின் மிரட்டல்களை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது இருக்கையிலே தன்னை இருத்திக் கொண்டாள்.அப்படி அவள் உறுதிபட மறுத்ததற்கு காரணம்...ஒரு உயிரினமாக...ஒரு தேசத்தின் குடிமகளாக...அவள் தனது பிறப்புரிமைகளை அறிந்து கொள்ள விரும்பியதேயாகும்.

அவளது அந்த மறுப்பு அவன் சற்றும் எதிர்பாராதது.அவளுடன் அதுவரை அமர்ந்து பயணித்த ஆண்களே மறுப்பேதும் சொல்லாமல் எழுந்த பிறகும் அவள் எழுவதற்கு மறுத்தது அந்த நடத்துனரை கோபம் கொள்ள செய்தது.அவன் காவல்துறையினரை வருவித்தான்.அவர்களிடத்தும் அவள் உறுதியாய் மறுத்தாள்.அதனால் அவள் அங்கு கைது செய்யப்பட்டாள்.அவளது கைது அங்கு அதுவரை அடிமைதனங்களை சகித்து கொண்டு வாழ்ந்த கறுப்பின சகோதிரர்களை எழுச்சி கொள்ள செய்தது.அதன் தொடர்சியாக ’மாண்ட்கோமரி எழுச்சி இயக்கம்’(MONTGOMERY IMPROVEMENT ASSOCIATION) மார்டின் லூதர் கிங் என்னும் பாதிரியாரின் தலைமையில் உருவாக்கப்பட்டது.அந்த இயக்கம் ‘மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ என்னும் வரலாற்று சிறப்புமிக்க அறப்போராட்டத்தை அறிவித்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நூறு ஆண்டுகளாக நிறத்தின் பெயரால் தாங்கள் இழந்து வந்த உரிமைகளை மீட்டெடுக்கும் எழுச்சியுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.அதன் விளைவாக பேருந்துகள் காலியாகின.போராட்டம் தொடர்ந்தது.....அந்தப் பேரியக்கத்தின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அமெரிக்க உச்சநீதிமன்றம் ”பேருந்திகளில் நிறவெறி பிரிவினைகள் சட்டத்திற்கு புறம்பானது” என்ற அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை வழங்கியது.

அதுவரை எந்த ஆண்மகனுக்கும் வராத துணிச்சலோடும்,ஆண்மையோடும் தனது உரிமைக்காக போராடிய ரோசா பாக்ஸின் நெஞ்சுறுதியே அந்த மாபெரும் எழுச்சிக்கான முதல் பொறி.அந்த வீர மங்கை 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ஆம் தேதி தனது 92ஆவது வயதில் காலமானார்.அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி மாண்ட்கோமரியிலும்,டெட்ராய்டிலும் இயங்கிய அத்துணை பேருந்துகளிலும் முன் இறுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு கறுப்பு கொடிகளை தாங்கி பயணித்தது....வெள்ளை இனத்தவர் மரியாதையுடன் அதன் அருகில் நின்றபடி பயணித்தனர்.....

தோழர்களே!

கோடிக்கணக்கான விந்தணுக்களை போராடி வென்றதனாலே தான் நாம் உயிரினமாய் ஜெனித்தோம்.ஆகவே போராட்டங்கள் நமக்கு புதிதல்ல....நாம் நமது சிறகுகளை மறந்துவிட்டு சிகரங்களை கண்டு மலைக்கிறோம்.ஆகவே ந்மது சிறகுகளை விரிப்போம்!சிகரங்கள் நம் வசமாகும்!

புதன், 4 நவம்பர், 2009

வேற்றுமையில் ஒற்றுமை....



ஊனமுற்றவன்....

லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...

கல்வித்தந்தை...

பெயர் போன தனது மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டிய ஏழை மாணவனுக்கு அவனது குடும்ப நிலை உணர்ந்து.....!!!!
இருபது லட்ச ரூபாயை இரண்டு தவனையில் கட்டுவதற்கு தாராளம் காட்டினான்.....
அந்த அறக்கட்டளை நிர்வாக குழுமத்தின் தலைவன்.

பட்டதாரி....

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனது தந்தையின் உதிரத்தில் விளைந்த விளைநிலத்தை அடகுவத்தான்.
வந்த பணத்தில் விசா வாங்கி விமானம் ஏறினான்.
வானில் பறக்கையில் அவனுக்கு பூமி சிறுக்கத் தொடங்கியது.....

கைமாறும் காந்தி....

காந்தி சிரிக்கும் நோட்டை கொடுத்து ஓட்டுவாங்கினான்.
கோட்டைக்குப் போனான்.
ஓட்டு போட்டவன் மனு கொடுக்க கோட்டைக்கு போனான்.
மனுவை பெற்றவன் அவன் கையிலிருந்த சிரிக்கும் காந்தியை சுட்டிகாட்டினான்.
காந்தி சிரித்தபடி மீண்டும் கைமாறினார்.

என்னைப் போல் ஒருவன்....

விபத்துக்குள்ளாகி ரத்த சகதியில் விழுந்த கிடந்தவனை கண்டு
படபடப்போடு வேகமாக விரைந்து சென்றான்......வீட்டிற்கு!

செவ்வாய், 3 நவம்பர், 2009

இனி தடையேதும் இல்லை....


விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.

தூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீரச்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.

காரணம்...........

எனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....

எங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.

(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)

அந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

வங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.

எமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது என ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....

இது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....

ஆம் தோழர்களே!

நாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....!

செவ்வாய், 27 அக்டோபர், 2009

இது ஒரு காதல் கதை....


வாழ்வில் சில நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகிறது.அப்படி ஒரு அற்புதமான நாளை கடந்த ஒரு சில தினங்களில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.......

அவனை நான் முதல்முதலில் சந்தித்தது ஒரு பாரில்(BAR) வைத்துதான்.சரியாக சொல்லவேண்டுமென்றால் அந்த சந்திப்பு நடந்து ஆறுவருடங்கள் ஆகிறது.எனது தாயின் ”திடீர்” மரணம் என்னை மிகவும் பாதித்திருந்த சமயம் அது.நான் என்னை எனது மதுவுடன் கலந்து கொண்டிருக்கும் போது அவன் கையில் மதுவுடன் என் அருகில் வந்தமர்ந்தான்,வேறு இருக்கை இல்லாததால்.

அந்த அரை இருட்டும்,ஏ.சி குளிரும் என்னை புகை பிடிக்க தூண்டியதால் சிகிரெட்டை எடுத்து வாயில் வைத்தேன்.அப்போது அவனும் சிகிரெட் பற்றவைத்தபடி இருந்ததால் சற்று நிதானித்து தீப்பெட்டிக்காக கை நீட்டினேன்.அவன் சிரித்தபடி எனக்கும் பற்றவைத்து விட்டான்.பரஸ்பரம் நிக்கோடின் புகையோடு அறிமுகமாகிக் கொண்டோம்.ஒவ்வொரு லார்ஜின் இடைவெளியிலும் எங்களது பகிர்வு படலம் தொடர்ந்தது......

மதுவின் கைங்கர்யமா? அல்லது எனது துயரின் தவிப்பா? தெரியவில்லை அந்த முதல் சந்திப்பிலேயே எனக்குள் அழுந்திக்கொண்டிருந்த எனது தாயின் மரணத்திற்கும்,அதனால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கும் அவனிடம் ஆறுதல் தேடத்துவங்கியிருந்தேன்.அவனும் பல வருடங்கள் பழகிய தோழமையுடன் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.எந்த ஒளிவும் மறைவும் இன்றி நான் என் குடும்ப விவகாரங்களை அவனோடு பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ அவனும் தனக்குள் அறித்துக் கொண்டிருந்த தனது காதல் கதையயும் என்னோடு பகிர்ந்து கொள்ள துவங்கினான்......

அவன் தனது காதலுக்கு ஏழு வயதாகிறது என்ற அறிமுகத்தோடு ஆரம்பித்தான்.அவள் தான் தனது காதலை அவனிடம் முதலில் வெளிப்படுத்தியதாகவும், அவன் சிறு தயக்கத்துடன் அவளது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னான்.அவன் தனது காதல் கதையை என்னிடம் சொல்லும் போது அந்த அறையின் இருளையும் தாண்டி அவனது முகம் மிகவும் பொலிவுடனும்,பூரிப்புடனும் காணப்பட்டது.ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு உண்டான நேர்த்தியுடன் அவன் தனது காதல் அநூபவத்தின் மகிழ்ச்சியான பக்கங்களை எனக்கு புரட்டி கொண்டிருந்தான்.ஊடலும்,கூடலுமாய் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவனது காதலில் இரண்டு சம்பவங்களின் குறுக்கீடுகளால் அவனது காதல் பயணம் திசைமாற துவங்கியிருக்கிறது.

ஒன்று அவனது காதலியின் தங்கையின் திடீர் மரணம்.அதில் அவளது குடும்பமே நிலைகுலைந்து போயிருந்திருக்கிறது.அப்போது இவனும்,இவனது நண்பர்களுமே அவளது தங்கையின் இறுதிச் சடங்கின் காரியங்களை முன்நின்று செய்திருக்கிறார்கள்.அவளுக்கு உடன்பிறந்த ஆண்கள் இல்லையாதலால் இவனே ஓர் ஆண்வாரிசை போல அனைத்தையும் செய்திருக்கிறான்.அவளது குடும்பமே இவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்த போது தான் அந்த இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது.அது....

இவனது காதலியின் தமக்கை அவளது காதலனை கைப்பிடிக்க வீட்டிலிருந்து வெளியேறியது.கடைசி மகளை காலனும்,மூத்த மகளை காதலனும் கூட்டிச் சென்றதால் அவளது பெற்றோரின் ஒரே நம்பிக்கையாக இவனது காதலி மாற்றப்பட்டிருக்கிறாள்.அவர்கள் தங்களுக்கான ஆறுதலாய் அவளை அவளது தாய்மாமனுக்கு கல்யாணம் செய்துவைக்க தீர்மானித்திருக்கிறார்கள்.அவளது நிலை திரிசங்கு சொர்க்கமாய் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவள் தற்கொலைக்கும் முயன்று பார்த்திருக்கிறாள்.ஆனால் அதுவும் நிறைவேறாமல் காலத்தின் விருந்தாய் மாறிப்போயிருக்கிறாள்.இவனோ அவளது நிலை கண்டு பதைத்து எதை கேட்டாலும் தருவேன் என காதல் போதையில் உளறியிருக்கிறான். அவளோ வேறு வழியின்றி இவனிடம் ”காதல் கருணை”கேட்டிருக்கிறாள்.இவனோ நிலை குலைந்து போயிருக்கிறான்.அந்த நிலையில் தான் எங்களது சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.....

அவன் தனது காதல் கதையை சொல்லிமுடிக்கையில் ஒருவித சூன்யம் எங்களுக்கிடையில் சூழ்ந்திருந்தது.எனக்கு ஆறுதல் சொன்னவனுக்கு அப்போது ஆறுதல் சொல்ல கூட என்னிடம் வார்தையில்லை.....அதனால் மீண்டும் ஆளுக்கு ஒரு லார்ஜ் மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமைதியானேன்.மது வந்தது.....அருந்தினோம்....மீண்டும் சந்திப்போம் என உறுதி சொல்லிவிட்டு பிரிந்தோம்......

மீண்டும் ஒருவாரம் கழித்து அதே பாரில் வைத்து அவனை சந்தித்தேன்.அப்போது அவனது முகம் மிகவும் வாடிப்போயிருந்தது.நான் அவன் அருகில் போய் அமர்ந்தேன்.என்னை அடையாளம் கண்டு கொண்டு என் நலம் விசாரித்தான்.முன்னுரைகளின்றி என்னால் அப்போது அவனிடம் நேரடியாகவே அவனது காதலின் நிலை குறித்து கேட்கமுடிந்தது.அவனும் உரிமையோடு என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.......

அவன் நேரடியாகவே போய் அவளது பெற்றோரை பார்த்திருக்கிறான்.அவர்களும் மிக தன்மையாகவே இவனிடம் அவர்களது நிலை குறித்து சொல்லி இவனை உதவிட வேண்டியுள்ளார்கள். வேறு வழியின்றி இவனும் அவர்களுக்கு உறுதியளித்தபடி திரும்பிவிட்டதாக சொன்னான்.அவனது நிலையை காண பரிதாபமாக இருந்த அதே நேரத்தில் அவன் மீது மரியாதையும் கூடிப்போயிருந்தது.....தனது காதலை தவிற வேறு எவருடைய மனநிலையையுமே பிரதானமாக நினைக்காத இன்றைய தலைமுறையினர் மத்தியில் இப்படியும் ஒருவனா? என்றிருந்தது.

அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.எங்கள் நட்பு நாளொரு பாரும் பொழுதொரு பீருமாக தொடர்ந்தது.இப்படியே குடித்துக் கொண்டிருந்தால் கவலைகள் குறைந்து விடாது என போதையே புத்தி சொன்னது.அது போதியில் கிடைத்த புத்தியல்ல....என்றாலும் போதை சொன்னதை புத்தி கேட்டது.கவலைகளை மறக்க கவனத்தை திசை மாற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.

அதனால் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு தொழில் தொடங்குவது என முடிவு செய்தோம்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருள்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்கும் STOCKIST-களாக மாறினோம்.இந்த இடைவெளியில் அவனது காதலிக்கு கல்யாணமாகி அவளும் சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.மீண்டும் அவனது பார்வை பாருக்குள் செல்ல துவங்கியது.எங்களது வருவாய்களெல்லாம் மதுவகைகளாக மாறிக்கொண்டிருந்தது.அந்த நேரத்தில் தான் கருணை அடிப்படையில் எனது அம்மாவின் வேலை எனக்கு கிடைத்ததற்கான உத்தரவு வங்கியிலிருந்து வந்தது.

அவனும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை வாழ்த்தி வழியனுப்பினான்.ராமநாதபுர மாவட்டதில் போய் பணியில் அமர்ந்தேன்.அவனோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் தொடர் நஷ்டத்தால் தொழிலை மூடியதாய் ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது சொன்னான்.பயிற்சி காலமாதலால் என்னாலும் ஊருக்கு அதிகம் செல்லமுடியாமல் போனது.வாரங்கள் நாட்களையும்,மாதங்கள் வாரங்களையும் விழுங்கி கொண்டு சென்றது.ஒருவழியாக மூன்று மாதங்கள் கழித்து ஊருக்கு செல்வதற்கு தோதாக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவனை தொடர்பு கொண்டு பாருக்கு வரச்சொல்லி விட்டு அவனை காணச் சென்றேன்.

அப்போது அவனது முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருந்தது.ஆளும் உற்சகமாயிருந்தான்.எனக்கு அவனை அப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.அவனது பொலிவிற்கான காரணத்தை கேட்டேன்.அவன் சிரித்தபடி அவனுக்கு துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணி கிடைத்துள்ளதாக சொன்னான்.ஆளுக்கொரு பீரை ஆர்டர் செய்துவிட்டு,’ வேறு ஏதாவது விசேஷம் உள்ளதா?’ எனக் கேட்டேன்.எனது அந்தக் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் சிறு தயக்கமுமின்றி அவளை மீண்டும் சந்தித்ததாக சொன்னான்.கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து கேட்கும் ஆவலும் வந்தது.அவனே தொடர்ந்தான்........

விசா புதுப்பிப்பதற்காக ஊருக்கு திரும்பியவளை மிக தற்செயலாக இவனது பிறந்த நாள் அன்று கடைத்தெருவில் வைத்து சந்தித்திருக்கிறான்.இவனது பிறந்தநாளை நினைவு கூர்ந்தவளாய் அவளும் வாழ்த்தியிருக்கிறாள்.சந்திப்பின் ஊடே செல்போன் நம்பர்களையும் பரிமாற்றி இருக்கிறார்கள்.வீட்டிற்கு வந்து தொடர்பு கொண்டவனிடம் மெல்ல மெல்ல அவளது தாம்பத்ய கொடுமைகளையும்,அவனது நினைவுகளை மறக்க முடியாத தன் நிலையையும் சொல்லி கண்ணீரோடு கரைந்திருக்கிறாள்.அவனது சமாதனங்கள் அவளிடம் தோற்றுப் போனதாகவும் சொன்னான்.

நான் அவளை அதுவரை ஒருமுறை கூட சந்தித்ததோ அல்லது பேசியதோ கூட கிடையாது.எனக்கு அவனை தெரியும் அவ்வளவுதான்.ஆனாலும் எனக்கு அப்போது அவனிடம் இப்படி கேட்க தோன்றியது.....

“மச்சான்! அவ திரும்பி வந்தா நீ ஏத்துக்குவியா...?” எனக்கேட்டேன்.
“டேய்! நான் அவள லவ் பண்றண்டா...”என்றான்.

ஒருவகையில் நான் அவனிடம் இந்த பதிலை எதிர்பார்த்தேன் என்பதும் உண்மை.என்னிடம் சட்டென்று சொன்ன இந்த பதிலை அவனால் அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்....காரணம் அவளாலும் நான் அவனிடம் கேட்டதைப் போல் நேரடியாய் கேட்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கலாம் என தோன்றியது.

அதனால் நான் அவர்கள் இருவரிடமும் பேசவிரும்புவதாய் சொன்னேன்.அவனும் அவளிடம் கேட்டுச் சொல்வதாய் ஒப்புக்கொண்டான்.ஆனால் ஒரு அவசர அலுவலின் காரணமாக நான் மறுநாளே ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர்களை சந்திக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது.

நான் மீண்டும் வருவதற்கு நாளாகக் கூடும் என்பதாலும்,செல்போனிலோ தொலைப்பேசியிலோ பேசுவதை விட கடிதமே சிறந்தது என தோன்றியதாலும் நான் அவர்களிடம் நேரில் பேச நினைத்ததை ஒரு கடிதமாக எழுதினேன்.அதை அவளோடு சேர்ந்து படிக்க சொல்லி அவனிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.

ஓரிரு நாளில் அவனிடமிருந்து எனக்கு போன் வந்தது.அவர்களிருவரும் சேர்ந்து வாழ தீர்மானித்திருப்பதாக சொன்னவன் அவளும் என்னுடம் பேச விரும்புவதாக சொன்னான்.ஏற்கனவே சொன்னது போல் நான் அதுவரை அவளை பார்த்ததோ பேசியதோ கூட இல்லை அப்படியிருக்கையில் அவள் என்னிடம் தன் வாழ்வின் மிக முக்கயமான ஒரு முடிவை எடுக்கும் போது ஆலோசிக்க சம்மதம் தெரிவித்து என்னிடம் பேச விரும்பியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.எனக்கு பெருமையாகவும் இருந்தது.நாங்கள் மூவரும் கான்பரன்ஸ்(CONFERENCE CALL) கால் மூலமாக பேசினோம்....

பல நாள் பழகிய தோழமையுடன் இருந்தது அவளது பேச்சு.எனது குடும்பச் சூழல் குறித்தும் அவளிடம் சொல்லி இருப்பான் போல் ஆதலால் அவள் மிக அக்கறையுடன் எனக்கு ஆறுதல் சொன்னாள்.அதன்பின் வழக்கமான கிண்டல் கேலிப்பேச்சுகளுக்கு பிறகு அவளது முடிவு குறித்து கேட்டேன்.அவள் தீர்க்கமாய் இருந்தாள்.எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவளது பெற்றோரின் நிலை குறித்து கேட்டேன்.பெற்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சி வேகத்தில் செய்த ’தியாகம்’ தங்களது வாழ்க்கையை சூன்யமாய் மாற்றிவிட்டதாய் சொன்னாள்.

கண்கானாத தேசத்தில் அவளை கைபிடித்தவனின் சந்தேக கொடுமைகளை அவள் விவரித்த போது எனக்கு பிரகாஷ்ராஜ் படங்களின் நினைவுகள் வந்து போனது.அவள் அங்கு மீண்டும் திரும்பி போகபோவதில்லை என்றும் அவனிடம் விவாகரத்து கோரமுடிவு செய்திருப்பதாகவும் சொன்னாள்.அவள் பேசிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் ஆணாக பிறந்ததற்கே எனக்கு அவமானமாக கூட தோன்றியது.’காலம்காலமாக இப்படி எத்தனை நூற்றாண்டுகளுக்கு நத்தைகளைப் போல் எங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிக் கொண்டே வாழ்வது?’என அவள் கேட்ட போது என்னிடம் மௌனம் மட்டுமே மிச்சமிருந்தது.

அவள் தரப்பு நியாயங்கள் எனக்கு மிகவும் இயல்பாகவும்,சரியாகவுமே தோன்றியது.ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒருமுறை.அந்த அற்புதத்தை கஷ்டப்பட்டு கடமைக்காக வாழ்ந்து கழிப்பதைவிட இஷ்டப்பட்டு அனூபவித்து வாழ்வதே சரி.

இப்போது எனக்கு என் நண்பனிடம் கேட்பதற்கே கேள்விகள் மீதம் இருந்தது......

அவனது இந்த முடிவு உணர்ச்சிவயபட்டதாக இருக்ககூடாது எனக்கேட்டுக் கொண்டேன்.அவன் தனது உறுதியை ஒரு அரைமணி நேர தொடர் உரையின் மூலம் உறுதிபடுத்த முயற்சித்தான்.அவன் பேசி முடித்ததும் அவள் தொடர்ந்தாள்.....அவனது உறுதியே தன்னை இப்படியொரு துணிச்சலான முடிவெடுக்க தூண்டியதாகவும் சொன்னாள்.அவர்களது இந்த முடிவு எனக்கு காதல் மேல் மேலும் அதிக மரியாதையை தந்தது.

அவர்களது துணிச்சல் பேச்சோடு நின்றுவிடவில்லை.அதேநேரத்தில் அவர்களது இந்த முடிவை நடைமுறை படுத்துவதும் அவர்களுக்கு அத்தனை இலகுவாக இல்லை.ஏனென்றால் இருவரும் வேறு வேறு ஜாதி,அவள் ஏற்கனவே திருமணமானவள் என எதிர்புகளுக்கான காரணங்கள் மிக நீளமாகவே இருந்தது.ஆனால் இந்த சமூகத்தின் அத்துணை கலாச்சார மூடத்தனங்களையும் எதிர்த்து போராட அவர்களிடம் காதல் இருந்தது. எனவே ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அவர்கள் தங்களை தயார் படுத்த துவங்கினார்கள்.இன்னும் சொல்லப்போனால் ஆழம் தெரிந்தே காலை வைத்தார்கள்.

முதலில் அவன் உள்ளூரில் அல்லாமல் வேறு ஏதாவது வெளியூரில் வேலை தேடுவது என முடிவு செய்யப்பட்டது.பல இடங்களுக்கு விண்ணப்பித்ததில் அவனுக்கு மும்பை துறைமுகத்தில் வேலை கிடைத்தது.அவன் அங்கு வேலையில் போய் அமர்ந்தான்.ஓரிரு மாதங்களில் அவளை அங்கு அழைத்து கொள்வதாய் முடிவானது.அந்த இடைவெளியில் அவள் விவாகரத்திற்கு விண்ணபிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாய் இல்லை.ஏனென்றால் அவளது தாயாரும் ஒரு வழக்கறிஞர் தான்.மேலும் அவளது வீட்டில் அவளது விவாகரத்து முடிவுக்கு கடும் எதிர்ப்பு வேறு.அவளது தாய் வழக்கறிஞராக இருப்பதால் அவரது சம்மதமின்றி அவளது விவாகரத்து வழக்கில் ஆஜராக எங்கள் ஊரில் வழக்கறிஞர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.அதனால் எனது நண்பன் ஒருவனின் உதிவியோடு வெளியூரிலிருந்து வேறு ஒரு வக்கீலை பிடித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அவளுக்கு ’தாலிகட்டியவன்’ சிங்கப்பூரில் இருந்ததால் அவனால் தொடர்ந்து இரு சம்மன்களுக்கு கூட வரமுடியாமல் போனது.அவனும் அதற்குண்டான விளக்கமும் கொடுக்கவில்லை.அது வழக்கிற்கு சாதகமாகி அவளுக்கு வெகு விரைவிலேயே விவாகரத்தும் கிடைத்தது.விவாகரத்து பெற்ற கையோடு தான் மும்பையில் வேலைக்கு விண்ணப்பத்ததாகவும் அங்கு தனக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் வீட்டில் சொல்லிப்பார்த்தாள்.அவர்கள் சம்மதிக்க மறுத்தார்கள்.வீட்டை விட்டு வெளியேறினாள்.அவன் மும்பையில் இருந்ததால் நானே அவளை திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று வழியனுப்பிவைத்தேன்.அங்கே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.அங்கிருந்து கொஞ்ச நாட்களில் அவனுக்கு துபாய் துறைமுகத்தில் வேலை கிடைத்தது.இருவரும் துபாய் சென்றார்கள்.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தத்தம் பெற்றோர்களிடம் தாங்கள் சேர்ந்து வாழும் விஷயத்தை சொல்லி ஊர் திரும்பினார்கள்.இருவர் வீட்டிலும் கண்ணீரும்,மிரட்டலுமாய் அவர்களை பிரிக்க பார்த்தார்கள்.கடைசியில் அவர்களது காதலுக்கும்,உறுதிக்கும் முன்னால் இந்த சமூகத்தை பீடித்திருக்கும் ஜாதியமும்,கலாச்சாரத்தின் பெயரால் நடத்தப்பட்டு வரும் அபத்தங்களும் மண்டியிட்டன......
இப்போது அவன்,"மாபிள்ளை நாளைக்கு பார்டிக்கு வந்திடுன்னு" நாங்கள் முதலில் சந்தித்த பாருக்கு அழைத்துள்ளான்....

(குறிப்பு:இருவீட்டார் சமதத்துடன் கடந்த அக்டோபர் 25ஆம் அவர்களது திருமணம் இனிதே முடிந்தது.)

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரௌத்திரம் பழகு...


பாரதியின் படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தவைகளில் ஒன்று அவனது ”புதிய ஆத்திச்சூடி”.வாமனன் போல் இரண்டு வார்த்தைகளில் உலகளந்திருப்பான்.இரண்டு அடிகளில் குறள் சொன்ன வள்ளுவனே கூட கொஞ்சம் பொறாமை கொள்ள வேண்டி வரும் இவனது இந்த படைப்பை படிக்க நேர்ந்தால்.மிகப் பெரும் தத்துவங்களையும்,வாழ்வியல் நெறிமுறைகளையும் இரண்டே வார்த்தைகளில் அநாயசமாக சொல்லியிருப்பான்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புது அர்த்தங்களை நமக்கு கற்பிக்கும் வல்லமை அந்த வார்த்தைகளுக்கு உண்டு.

உதாரணமாக........

“ரௌத்திரம் பழகு”-மேலோட்டமாக பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும்.ஆனால் அது சரியாக படவில்லை எனக்கு.ஏனென்றால் அவன் ’ரௌத்திரம் கொள்’ என சொல்லவில்லை மாறாக ரௌத்திரம் பழகு என்கிறான்.’பழகுதல்’ என்றால் தெரிந்துகொள்ளுதல், பக்குவப்படுதல்,தேர்ச்சிகொள்ளுதல் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியதாகும்.உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரௌத்திரத்தை தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை சென்று அடைகிறான்.

ஏனென்றால் ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது.அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம் அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.

இன்று நமது தேசத்தின் பிரச்சனையே இது தான்.இளைய தலைமுறையினர் ரௌத்திரம் கொள்கிறார்களே தவிர ரௌத்திரம் பழகவில்லை.

ரோட்டில் ஒருவன் தற்செயலாக தனது வாகனத்தின் மீது மோதி விட்டால் போதும்.உடனே தனக்கு தெரிந்த எல்லா வசைசொற்களையும் அவன் மீதும் அந்த இடத்திலே இல்லாத அவனது குடும்பத்தார் மீதும் பிரயோகம் செய்வார்கள் அப்படியும் ரௌத்திரம் தீரவில்லையா? அவனை இழுத்து போட்டு அடிக்கவும் கூட செய்யும் இந்த தலைமுறையினர் ஒரு போதும் தன்னையும்,தனது தேசத்தையும் சுரண்டும் அரசியல் விற்பன்னர்களுக்கு எதிராகவோ,கடமையை செய்ய கையூட்டு கேட்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவோ,கல்வியையும்,மருத்துவத்தையும் வியாபாரமாக்கி கொழுக்கும் பெரும் முதலாளிகளுக்கு எதிராகவோ,ஜாதி,மத வெறிபிடித்த சமூகவிரோதிகளுக்கு எதிராகவோ ரௌத்திரம் கொள்வதில்லை.

தனக்கு நேர்ந்த அவமானத்தில் விளைந்த தனது ரௌத்திரத்தை தனக்குள் அடைகாத்து நிறவெறிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்து அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாபெரும் தலைவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்......

தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தான் என்பதற்காக முதல் வகுப்பு பயணச்சீடு அவனிடம் இருந்த போதும் நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி ஒருவனால் வெளியில் தள்ளப்படுகிறான்.

தான் தள்ளப்பட்ட PIETERMARITZBURG என்னும் ரயில் நிலையத்திலே நிற்கும் போது அவன் மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றுகிறது ஒன்று அவமானம் தாங்காமல் தாய் நாடு திரும்புவது மற்றொன்று தன்னைப் போல் அங்கு நிறவெறிக்கு ஆளாகி அடிமைகளாக வாழும் மக்களுக்காக நிறவெறியை எதிர்த்து போராடுவது.

அவனது மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றினாலும் அவனது மனம் தேர்வு செய்தது இரண்டாம் வழியை தான்.

அவன் அன்று தனது ரௌத்திரத்தை அடைகாத்து, தேசம் தாண்டியும் மத ரீதியில் பிளவுண்டு கூலிகளாகவும்,கொத்தடிமைகளை போலவும் வாழ்ந்து வந்த, தனது தேசத்தாருக்கு ரௌத்திரம் பழக்கினான்.அவனது ரௌத்திரம் அவர்களுக்கு அங்கு ஒரு விடியலை தந்தது.

அதை விடுத்து அவன் அன்று தன்னை ரயிலிருந்து தள்ளிய அதிகாரியை ரௌத்திரம் தாளாமல் திருப்பி தாக்கியிருப்பானேயானால் அவன் கைது செய்யப்பட்டிருப்பானே ஒழிய ஒருபோதும் அங்கு நிறவெறிக்கு தீர்வு பிறந்திருக்காது.

அன்று கோபம் கொண்டு நிறவெறியால் தள்ளிய அந்த வெள்ளை அதிகாரியின் பெயருக்கு சரித்திரத்தில் இடமில்லை.ஆனால் அன்று முதல் வகுப்பில் இடமில்லை என நிறவெறியோடு தூக்கியெரியப்பட்டபோதும் தனது ரௌத்திரத்தை அடைகாத்துக் கொண்டு மக்கள் எழுச்சிக்கு வித்திட்ட அன்றைய இளைஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே சரித்திரமானார்.

ஆகவே தோழர்களே!
நாம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பினும் நமது ரௌத்திரத்தை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்றால் நமது நியாயம் கூட மற்றவர்களுக்கு அநியாயமாகவே படும்.ஆதலால் ரௌத்திரம் பழகுவோம்...!

புதன், 16 செப்டம்பர், 2009

ஊனம் என்றால் என்ன..?

ஊனமென்பது யாதெனில்.....
மங்கிய ஒளியும் இருண்ட பார்வையும்
கொண்டோரல்ல குரூடர்-மாறாக
கெட்டவை கண்டும் காணா செருக்குடன்
கடந்து செல்வோர் குரூடர்!

ஊனமென்பது யாதெனில்.....
மௌனம் உடைத்து வார்த்தைகள் தொடுக்க
முடியாதவரல்ல ஊமை-மாறாக
உள்ளதை சொல்ல உள்ளம் நடுங்கி
உண்மையை மறைப்போர் ஊமை!

ஊனமென்பது யாதெனில்....
ஒலிகள் உணரா செவிகள்
கொண்டோரல்ல செவிடர்-மாறாக
சக உயிரின் ஓலம் கேட்டும்
உயிர் துடிப்பற்றிருப்பர் செவிடர்!

ஊனமென்பது யாதெனில்.....
கைகள் நலிந்து கால்கள் இழந்தவருக்கல்ல
ஊனம்!-மாறாக
கடமையை செய்ய காசுக்காக நீளும் கரங்களும்,
கண்ணியமற்று திரியும் கால்களும்
கொண்டிருப்போரே ஊனமுற்றோர்!