வியாழன், 21 மே, 2009

நான் பேசுகிறேன்......


நாம் இப்படித்தான்.........

****இரு சக்கர வாகனங்களில் செல்லும் முன் பின் தெரியாத நபர் வண்டியில் சைடு ஸ்டாண்ட் போடாமல் சென்றால் அலறி அடித்துக்கொண்டு எச்சரிக்கை செய்வோம்.லைட்டு போட்டுக் கொண்டு எவனாவது பகலில் வண்டி ஓட்டினால் கையை மடக்கி விரித்து மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு அவன் தான் காரணம் என்பது போல் பொதுச் சேவை செய்வோம்.ஆனால் அவனே எங்காவது அடிபட்டு விழுந்தாலோ அல்லது உயிருக்கு போராடினாலோ சந்தடியில்லாமல் இடத்தை காலி செய்வோம் நமக்கு ஏன் வீண் வம்பு என்று.

****ஊரல்லாம் லஞ்சம்,ஊழல் என்று புலம்புவோம்.ஆனால் நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு ஆனலும் சரி காரியம் நடந்தால் போதும் என்று கொடுக்க வேண்டியதை கொடுத்து நடக்க வேண்டியதை நடத்துவோம்.இதுல நாயகன் கமல் ரேஞ்சில் அவங்களை மாறச் சொல்லுங்க நான் மாறுகிறேன் ஞாயப் படுத்தவேற செய்வோம்.(எழுதுற நானும் இதில் விதிவிலக்கல்ல!)

****வாய் கிழிய மனித நேயம் பேசுவோம்.நம்மை தவிர நாட்டில் உள்ள அனைவருமே ஈவு இரக்கம் எதுவும் இல்லாதவர்கள் என்றும் நாம் தான் இந்த சுயநல நாட்டில் பிழைக்க தெரியாதவர்கள் என்றும் நம்மை நாமே இகழ்புகழ்ச்சி செய்து கொள்வோம்.ஆனால் பேருந்தில் இடம் போடுவதற்காக கை குட்டையிலிருந்து கோமனம் வரைக்கும் தூக்கி போட்டு இடம் பிடிப்போம்.(அரசியல்வாதிகளெல்லாம் நம்மிடம் தோற்றுப்போகும் அளவிற்க்கு).
அதே போல் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணி அசதியில் நம்மீது தூங்கி விழுந்தால் அவ்வளவு தான் மனித நேயம் பொங்கப் பொங்க அவன் மயிரை ஆய்ந்து அவனை துன்புறுத்துவோம் தவறு துகில் களைப்போம்.(இதில் கை முட்டை கொண்டு இடிப்பது, நாக்கை பிடிங்கிக் கொண்டு சாவது போல் அவனை வார்த்தைகளாலே வறுத்தெடுப்பது என பல விதங்கள் உண்டு)

****அரசியல்வாதிகளைப் பற்றியும்,அரசு இயந்திரங்களைப் பற்றியும் ஆயிரம் குறைகள் சொல்வோம்.ஆனால் நாம் பொது இடத்தில்தான் மூத்திரம் போவோம். நடு ரோட்டில் தான் எச்சில் துப்புவோம்.கோபம் வந்தால் அரசாங்கப் பொருட்களை தான் சேதப்படுத்துவோம்.தண்ணி அடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுவோம்.

****தனி மனித உரிமை பேசுவோம்.ஆனால் நமது கவலைகளும்,கோபங்களும் எப்போதும் நமது ஆசைகளையும் ,சுயதேவைகளையும் பொறுத்தே எழும்.தனி மனித ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டதாக புலம்புவோம்.உலகம் நிறைய மாற வேண்டி உள்ளது என கருத்துரைப்போம் ஏன் கவலை கூட கொள்வோம்.ஆனால் எந்த ஒரு சிறு மாற்றத்திற்க்கும் நாம் நம்மை உட்படுத்த மாட்டோம்.

****அடுத்த வீட்டில் எழவு விழுந்தால் அது செய்தி ஆனால் அதுவே நம் வீட்டில் என்றால் அது மீளாத் துயர்,துக்கம்.
அப்படித்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

****நாம் நிழலை நிஜமாய் கொள்வோம். நிஜங்களை மௌனத்தால் கொல்வோம்.ஆனால் என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவன் வருவான் நம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவான் என தீர்க்கமாய் நம்புவோம்.கண்களை இறுக மூடிக்கொண்டு விடியல் காண துடிக்கும் குடிகாரன் போல்.

தனி மனித மாற்றங்களால் இந்த சமூகம் மாறுமா?

புள்ளிகள் சேர்ந்து கோடாவது போல் தனி மனிதர்கள் சேர்ந்தே சமூகம் உருவானது.அதனால் தனி மனித மாற்றங்களால் சமூக மாற்றம் ஏற்படுத்த முடியும்.
மாற்றங்கள் வேண்டி தலைவர்கள் தேடி காத்திருப்போரே!வாருங்கள் எந்த மாற்றமும் தானாய் வருவதில்லை நாமாய் ஏற்படுத்தும் வரை.

சுட்டால்தான் நெருப்பு!
சுற்றினால்தான் பூமி!
போராடினால்தான் மனிதன்!-ஆம் மாற்றங்கள் வேண்டி போராடுவோம்.

வியாழன், 14 மே, 2009

நாங்க ஸ்கூலுக்கு போறோம்.....!



ஜனநாயகம்!

மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நன்நாள் தேர்தல் நாள்!....

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக தொண்டு செய்வதே! அரசியலாகும்!......

அரசியல் செய்வோருக்கு அரம் தவறு அறம் கூற்றாகும்!.....

மக்களுக்காக தொண்டு செய்வதற்காகவே அரசியல் செய்பவர்கள் தான் நமது அரசியல்தலைவர்கள்!...

தனது நலத்தைவிட பொது நலமே தனக்கு முக்கியம் என்று செயல்படுபவர்கள் தான் நமது அரசியல் தலைவர்கள்!..........

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அமைப்பையும் நல்ல வழிகாட்டிகளையும் நமக்கு கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்!.........

வாழ்க ஜனநாயகம்! வளர்க நம் நாடு!

(குறிப்பு: .மேலே நீங்கள் படித்தது, எங்க கிளாஸ் சாரு! நாளைக்கு கேள்வி கேட்பதாக சொன்ன வீட்டுப்பாடத்தை உங்களிடம் ஒப்பிச்சேன் அவ்வளவுதான்.... என்னடா.. இது என்று யாரும் குழப்பம் அடைய வேண்டாம்....உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன்! நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக நான்,எங்க அப்பா ,எங்க தாத்தா,பாட்டி எல்லாரும் போயிருந்தோம் .அங்க எங்களுக்கு 18வயது இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் அதனால் நாங்கள் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் அதிகாரி சொல்லிவிட்டார்.
அதனால் மற்றற்ற மகிழ்ச்சிக்கு ஆழான நாங்கள் மீண்டும் பள்ளிக்கு படிக்க சென்றுவிட்டோம்!
படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே.....? என்ன சொல்றீங்க.....?)

சனி, 2 மே, 2009

வாழ்வை காதல் செய்வோம்!!!


எங்கள் வீட்டை கவனித்து வரும் அக்கா நேற்று காலையில் நான் வேலைக்கு செல்லும் நேரத்தில், செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள் தீடீரென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் பதறியபடி என்னவென்று விசாரித்தேன்.அவள் அழுதுகொண்டே தனது மகள் முந்தைய நாள் இரவே பாட்டி வீட்டிற்கு செல்வதாக பொய் சொல்லி வேறு ஜாதி பையனோடு ஓடிப் போய்விட்டதாக கூறி அழுகையை தொடர்ந்தாள். நான் சமாதானம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லிவிட்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவிட்டேன்.அலுவலகம் முடிந்து வீடு திரும்பினேன்.இப்போது அந்த அக்காவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.ஆனாலும் சோகம் குறையவில்லை(பிறகு மகள் ஓடிப்போனாள் குதுகலமா கொப்பளிக்கும்?).
நானும் என் முகத்தில் கொஞ்சம் வாட்டத்தை வீம்பாக வரவழைத்துக் கொண்டு ,”என்னக்கா ஏதும் தகவல் தெரிஞ்சதா?”என்று வினவினேன்.
ஏற்கனவே இந்தக் கேள்வியை அதிகம் முறை எதிர்கொண்டிருந்தாள் போலும்.அதனால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மிக சரளமாக வார்த்தைகள் வந்து விழுந்தன,”அந்தக் கழுத! திருப்பூரில் இதுக்கு முன்னாடி அவ வேலை பார்த்த போது தங்கியிருந்த ரூமுக்கு போய் இருந்திருக்கா....ஒருவழியா அவ இருந்த இடத்தை கண்டுபிடிச்சு அவளை கூட்டியார ஆள் போயிருக்கு..” என்றபடி அவள் பிள்ளைகள் வளர்க்க பட்ட கஷ்டத்தையும், அவள் குடும்ப சூழலை உணராத குழந்தைகளை பற்றிய கவலைகளாகவும் அவளது குமுறல்கள் தொடர்ந்தன... ஒருவாறு அவளை ஆறுதல் படுத்தி அனுப்பிவைத்தோம்.(அவளது மகள் இருந்த இடத்தை கண்டுபிடிச்ச விதம்.அவர்கள் போலீஸுக்கு போனார்களா? இல்லையா?,அந்த பையன் வீட்டாருடன் என்ன பேசிக்கொண்டார்கள்? போன்ற தகவல்கள் இந்த பதிவிற்கு அவசியமாக எனக்கு படாததால் அதை எழுதவில்லை).

இரண்டு நாட்களாக அந்த அக்கா வீட்டு வேலைக்கு வராததால் என்னவென்று பார்க்க சென்றபோது தான் தெரிந்தது அந்த அக்காவின் மகள் விஷம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்று.

அந்த பிள்ளை பிழைத்துக்கொண்டாளா? அவள் காதல் கைகூடியதா?இல்லையா?என்பதை பகிர்ந்து கொள்வதல்ல என் பதிவின் நோக்கம்.
மேற் சொன்ன சம்பவத்தை உங்களுடன் ஏன் பகிர்ந்து கொண்டேன் என்றால்.....

ஒரு பெண் அதுவும் சமூகத்தின் கடை நிலை பொருளாதார சூழலில் வளர்கப்பட்டவள்.கல்வியின் நிழலை மிகக் கடுமையான குடும்பச் சிக்கல்களுக்கு இடையே காண கிடைத்தவள்.வறுமைக்கும்,தேவைக்கும் இடையே தன் தாய் எந்த வித சமூக பாதுகாப்புமின்றி தனியொரு மனுஷியாக நின்று போராடிக்கொண்டிருப்பதை பார்த்து வளர்ந்தவள்.இவை எதைப் பற்றியும் கவலைபடாமல் தன் காதல்ஆசை ஒன்றே பிரதானம் எனக் கொண்டு வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்தது என்னை இந்த என் தலைமுறையினரைப் பற்றி மிக கவலை கொள்ள செய்தது.

ஏனென்றால் இது நம் சமூகத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்கோ அல்ல ஆணுக்கோ நடக்கும் விஷயமல்ல.இந்த பதிவை எழுதும் நானும் அதை படிக்கும் நிங்களும் கடந்து வந்த (வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை கடக்கப் போகும்) ஒரு பகுதி தான் இது.

காதல் ஒரு அற்புதமான உணர்வு.ஜாதி,மதம்,இனம்,மொழி,என உலகில் உள்ள அத்தனை பேதங்களையும் களைந்து எறியும் வல்லமை கொண்டது காதல்.இதனால் தான் பாரதி போன்றோர் மானிடத்தை காதல் செய்யச் சொன்னார்கள்.எனக்கும் இதில் மாற்றுக்கருத்து கிடையாது.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லைதான்.ஆனால் தீதையும் நன்றையும் நம்மை புரிய வைப்பதில் நமது புறச்சூழல் பெரிதும் காரணமாகிறது.

காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.

***முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்,பழகும் மனிதர்கள்,செல்லும் இடங்கள்,பார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.

***காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.

***கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.

***செய்தி ஊடகங்களும், திரைப்படங்களும் காதலை வியாபார சரக்காக மட்டுமே பார்கின்றது.இங்கு நூற்றிற்கு தொன்னூற்றி ஒன்பது திரைப்படங்கள் காதலை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது.அவைகள் சொல்லி கொடுப்பது எல்லாம் பெண்ணை எப்படி வசியம் செய்வது என்றே.அவர்களை பொறுத்தவரையில் பெண்ணும் ஒரு பொருளே.அவளை அடைய வேண்டியது ஒரு ஆணின் கடமை அவ்வளவுதான்.காதலர்கள் ஒன்று கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது காதலித்த பாவத்திற்காக இறந்து விட வேண்டும்.காதலுக்காக எதுவும் செய்யலாம் யாரை வேண்டுமானலும் கொலையும் செய்யலாம்.இதை தான் இன்றைய திரைபடங்கள் போதிக்கின்றன.
இந்த உலகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.அதை பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.வாழ்க்கை பயணத்தில் காதல் ஒரு சம்பவம் என்று இல்லாமல் காதல் தான் வாழ்க்கை என்று போதனை செய்து எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையையும் இந்த சமூகத்தின் எதிர் காலத்தையும் பின்னடைய செய்த பெருமை இந்த திரைப்படத்துறைக்கு உள்ளது.

***ஏ உலக காதலர்களே! தாஜ்மகாலை உலக அதிசயமாகவும் காதலின் ஒப்பற்ற சின்னமாகவும் போற்றுபவர்களே...உங்களுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதையை சொல்கிறேன் கேளுங்கள்.......

குராம் என்றொரு அரச குமாரன் இருந்தான்.அவன் மிக எளிதில் எந்த ஒரு கட்டழகியும் கண்டு மயங்கும் பேரழகை கொண்டிருந்தான்.ஒரு நாள் அவன் கடைத்தெருவிற்கு சென்றிருந்த போது ஒரு கண்ணாடிக் கடையில் ஒரு பெண் துருதுருவென்று வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் எப்பட்ப் பட்ட அழகி என்றால்......அவளை கண்ட பின்பு ஒருவன் செயலற்றுப் போனால் தான் அவன் ஆரோக்கியமான ஆண்மகன். மாறாக அவளை வர்ணிக்க வார்த்தைகள் தேடினால் அவனுக்குள் ஆண்மை சுரப்பிகள் வேலை செய்யவில்லை என்றே பொருள்.அந்தப் பேரழகி! அர்ஜுமண்ட் பானு பேகம்.(வசதிக்காக பேகம் என்று கொள்வோம்).இப்படிப் பட்ட இருவர் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டபிறகு என்ன பிறக்கும்? கழுதையும் ,குதிரையுமா பிறக்கும்?.....ஆம்!....அதேதான்....
காதல் பிறந்தது.அவளும் பார்சீய ராஜ வம்சத்தை சேர்ந்தவள்.அதனால் எந்த குத்தும் வெட்டும் இல்லாமல் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது.அரச சோதிடர்கள் அவர்களது திருமணத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து முடிவு செய்தார்கள்.இதற்கு இடையில் குராம் அவளை உளமாற காதலித்துக் கொண்டே இரண்டே இரண்டு திரும்ணங்கள் மட்டும் செய்து கொண்டான்.ஒரு வழியாக பேகத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாவதாக மணம் முடித்துக் கொண்டான்.அவளை மணம் முடித்த பிறகும் அவன் ஏராளமான பெண்களை தவிற்க முடியாத காரணங்களால் மணந்து கொண்டாலும்.பேகத்தை மற்றவரை காட்டிலும் அதிகம் நேசித்தான்.அதற்கு சாட்சியாக அவர்களுக்கு பதினான்கு குழந்தைகள் பிறந்தன.பதினான்காவது பிரசவத்தின் போது பேகம் இறந்து விட்டபடியால் அவளால் மேலும் குழந்தைகள் பெற முடியவில்லை!!!!.காதல் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் குராமும் வளைத்து வளைத்து கல்யாணம் கட்டி பார்த்தார் துக்கம் அடங்கவில்லை.கடைசியாக மனைவியின் ஆசைப்படி யமுனை ஆற்றங்கரையில் பளிங்கு கல்லறை ஒன்றே பேகத்தை புதைத்த இடத்தில் கட்டினார்.....ஆம்!!!அது தான் தாஜ்மகால்.குராமின் பட்டப் பெயர் தான்(பட்டம் சூட்டப்பட்ட போது தான்) ஷாஜஹான்.அவரை மணந்து கொண்டதால் அர்ஜுமண்ட் பானு பேகம்..மும்தாஜ் மகால் ஆனார். இது தான் உலக காதல் சின்னத்தின் வரலாறு!!!

ஆகவே! காதல் காதல் காதல் காதல் போயின்.........................சாதலா?மற்றொரு காதலா.....?
எப்போதோ படித்த ஒரு கவிதை ஞாபகம் வருகிறது.
உலக அதிசயமாய்.....காதல் சின்னமாய்.....
நம்மிடம் மிஞ்சியது ....
ஒரே ஒரு கல்லறைதான்.

ஆகவே!நம்மை கொன்று நம் காதலை வளர்க்கவோ வாழவைக்கவோ முடியாது.காதல் வாழ வாழ்வை காதலிப்போம்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

என் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்


நேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டி,தாத்தா,அத்தை,மற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்,நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது? ஈழ விவகாரமா?தேர்தல் நிலவரமா?அப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறு,”என்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுது”என்றவனை என் அத்தை ”அட நீ வேற,நானே கவலையில இருக்கேன்,உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்,அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே! அதான் ரொம்ப பயமா இருக்கு....”என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள்.

நெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான்.
ஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா?


நான்,”கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்பல்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........”ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்து,”நானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியே”என்று அதுக்கும் பயந்தாள்.

கண்களை டிவியிலும்,காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோ,”இவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்,இவனுக்கு வேற வேலையே இல்லை....”என்று என் மேல் எரிச்சல் பட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத நான்,”உனக்கு என்னடி தெரியும் சீரியலு,சினிமா,பாட்டு,கூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்?சோமாலியாவை பற்றி என்ன தெரியும்?அங்க பசியிலும்,வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சு,மிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்,பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானே?ஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது.”

“ஆரம்பிச்சிட்டான்!இனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....”என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தை,”உங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? இங்க நானே பயந்து போயிருக்கேன், நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..”என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது.

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டி,”ஏ!புள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா? இங்க சாப்பிடேன்யா....”என்றவளிடம், “இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்”என்றேன்.

“இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....?”என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக,”ஓபாமா! சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....”என்றவளே தொடர்ட்ந்தாள்.....”ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா?”என்று பொரிந்து தள்ளினாள்.

“எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்,பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது.Peace keeping troops என்ற பெயரில் அமெரிக்கர்களும்,பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய Battle of Mogadishu வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள Islamic court union(ICU)ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ,ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம். தனது ஆயுதங்களையும் வாங்க செய்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்?இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.” என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்,”அத்த!ரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்,காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்க”என்றபடி அங்கிருந்து கிளம்பினேன்.

சோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொது உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது.
இதை நம்ம ஓர் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்,தனக்கு தனக்குன்னா புடுக்கு கூட களையெடுக்குமாம்.
(பி.கு:என் மாமாவின் கப்பல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஸோமாலியாவை கடந்துவிட்டது)

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

தோழர்களின் மேலான கவனத்திற்கு......


தமிழீழம் குறித்த நமது பார்வையும் அணுகுமுறையும் சரியானதல்ல.போராட்டங்கள் ஒன்றும் கம்யூனிஸ்ட்களுக்கு புதிதல்ல.அது போலவே போராட்ட வடிவங்களும்.எந்த ஒரு வர்க்கப் போராட்டமானாலும் சரி,இனப் போராட்டமானாலும் சரி அதை முன்னெடுத்து செல்பவர்களுக்கு பெயர் போராளிகளே அன்று தீவிரவாதிகள் அல்ல.ஆயுதம் ஏந்தினாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்.ஏனென்றால் ஆயுதபுரட்சியை கொண்டு வெற்றிகரமாக சோசியலிச ஆட்சியை நிறுவிய வரலாறு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு.போராளிகளின் ஆயுதங்களை முடிவு செய்பவர்கள் அதிகாரவர்க்கம் தான் என்பதிலும் மாற்று கருத்து நமக்கு இருக்கமுடியாது.அப்படி இருக்கையில் விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாக நாம் கருதுவது சரியா?

சரி!இப்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படலாம் அதாவது நமது நாட்டுப் பிரதமரை நம் மண்ணில் வைத்தே கொலை செய்தார்களே அது ஞாயமா என்று? இதற்கு என்னிடம் சில பதில் கேள்விகள் உள்ளன.அவை...

நமது நாட்டின் மற்றொரு பிரதமரே நாம் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது தவறு என்று கூறி அமைதிப்படையை திரும்பபெற்றாரே அது ஏன்?அப்படியென்றால் அமைதிப்படைக்கு கொடுக்கப்பட்ட ரகசிய பணி என்னவோ?ஒரு நாட்டில் அமைதியை நிலை நாட்ட சென்ற படைபிரிவினரை அந்த நாட்டின் அரசாங்கமும் அதை எதிர்த்து போராடும் போராளிகளும் ஒன்று சேர்ந்து விரட்டியது ஏன்?

கொலைகளை நான் ஞாயப்படுத்தவில்லை ஆனால் அதே சமயம் கொலைகளுக்கு உண்டான காரணங்களையும் நாம் கவனிக்காமல் தீர்ப்பளிப்பது ஞாயமில்லை என்றே சொல்கிறேன்.இங்கு மேலும் சில விஷயங்களை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன் தமிழ் ஈழம் என்பதில் மார்க்சிஸ்டுகளான நாம் முரண்படுவது ஞாயமில்லை.அது பிரிவினை வாதமும் அல்ல.அது ஒரு நிர்பந்தம்.யாரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் போது அதை எழுப்பவில்லை.சிங்களப் பேரினவாதிகளை பொறுத்தவரையில் தமிழர்களை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் தமிழர்கள் அடிமைகளாகவும்,கூலிகளாகவும் மட்டுமே இருக்க தகுதியானவர்கள்.ஒரு போதும் அவர்கள் தமிழர்களை சமமாக கருதமாற்றார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அப்படி இருக்கும் போது தமிழீழம் ஒன்றே சரியான வழி.
.
இந்த சூழலில் இதை பிரிவினை வாதம் தான் என்று நாம் அடித்து சொன்னால் வரலாறுகளை சற்று திரும்பி பார்க்க உங்களை அழைக்கிறேன்.இது தவறு என்றால்.............

அம்பேத்கார் தலித் தோழர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரியதை பிரிவினைவாதம் என்று சொல்லி காந்தி உண்ணாவிரதமிருந்தது தலித் மக்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தபடுத்தவில்லையா?

பாலஸ்தீனம் கேட்டு போராடும் அரேபியர்களுக்கு ஆதரவு தரும் நாம் ஏன் தமிழர்கள் கேட்கும் தமிழீழத்தை ஏற்க மறுக்கிறோம்?

இனவாத பிரிவினையை சித்தாந்தத்திற்க்கு எதிரானது என்று கொள்வோமேயானால் நாம் சித்தாந்தம் மீறி பெரும் முதலாளிகளுக்கு தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கும் பொருட்டு விவசாயிகள் நிலத்தை கையகபடுத்தியது முறையா?அதை வேலைவாய்ப்புக்காகவும்,மாநில வருவாய் மேம்பாட்டிற்காகவும் தளர்த்தி கொள்ளலாம் என்றால் தமிழீழத்தையும் சமத்துவம் பொருட்டு ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?

தமிழர்கள் ஆகட்டும் திபெத்தியர்களாகட்டும் நாம் இவர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் அவர்களது அகராதியில் கம்யூனிஸ்ட்டுகள் என்றால் துரோகிகள் என்றாகிவிடும் அபாயம் ஏற்படும்.ரஷ்யாவின் வீழ்ச்சி நாம் வலுக்கட்டாயமாக ஒவ்வொரு இனக்குழுக்களையும் இழுத்துப்போட்டதால் ஏற்பட்டது என்பதை நாம் மறந்து விட வேண்டாம்.

மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்கிறேன் பிரபாகரனையும் மற்ற போராளிகளையும் விடுங்கள் மரணம் போராளிகளுக்கு மற்றுமொறு பதக்கம் தான். ஆனால் பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளும்,அப்பாவி ஆதரவற்ற மனிதர்களையும் பாருங்கள். அவர்கள் அங்கே போரினால் அழிந்து கொண்டு இருக்கும் போது நாம் வீதி விதியாக ஓட்டுப் பிச்சை கேட்பது எப்படி உள்ளது தெரியுமா?எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் என் வயிறு நிரம்பினால் போதும் என்பது போல் உள்ளது.

மற்ற கட்சிகளை போல் அல்ல மார்க்சிஸ்டுகள் என்பதாலே தொழிற்சங்க அரங்கத்தின் மூலம் ஈர்கப்பட்டு உள்ளே வந்தேன். ஆனால் இன்றோ என் மனசாட்சியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லாமல் என் கோழைதனத்தையும்,கையாலாகததனத்தையும் எண்ணி வெட்கிதலைகுனிகிறேன்.
நமது அமைதியை வரலாறு மன்னிக்காது..............

வியாழன், 23 ஏப்ரல், 2009

சுத்தத் தமிழன்


IPL கிரிக்கெட் போட்டிகளை பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது தெரியாமல் ரிமோட்டில் என் விரல் பட்டு ஏதோ ஒரு செய்தி சேனலுக்கு மாறிவிட்டது .அதில், ஏதோ இலங்கை என்றொரு நாடு உள்ளதாமே அங்கு ஏதோ தமிழினம் அழிந்து கொண்டு வருவதாகவும் ,பிரபாகரன் சீக்கிரத்தில் பிடிபடுவார் என்றும்,விடுதலைப்புலிகள் கதை முடிந்து விடும் என்றும் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.கிரிக்கெட்டை விட இது சுவாரஸ்யமாக இருந்தது இப்போது, ஆனாலும் பரபரப்பான மேட்சை பாதியில் விட முடியாதல்லவா?மீண்டும் setmax மாற்றி மேட்சில் முழ்கினேன்.பரபரப்பான போட்டியில் chennai superkings தோற்றுப்போனது எனக்கு மிகவும் கவலை அளித்தது.என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் அல்லவா?

சனி, 18 ஏப்ரல், 2009

நம் நாட்டில் அதிகம் பேர் பார்க்கும் வேலை என்ன?


மொகலாய சக்கரவர்த்தி அக்பருக்கு தீடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது அது தன் நாட்டில் அதிகமானவர்களால் பார்க்கப்படும் வேலை என்ன?என்பதே.தனது சந்தேகத்திற்கு பீர்பால் ஒருவரால் தான் சரியான விடை சொல்ல முடியும் என முடிவு செய்து அவரை வரவழைக்க ஆள் அனுப்பினார்.பீர்பாலும் வந்தார்,அவரிடம் கேள்வியை சொல்லிய உடனே சிறிதும் யோசிக்காமல் அவர் மருத்துவம் தான் நாட்டில் அதிகமாக பார்க்கப்படும் வேலை என்று சொன்னார்.அக்பருக்கோ இந்த பதிலை கேட்டவுடன் கோபம் தலைக்கு ஏறிவிட்டது.ஏனென்றால் விவசாயம்,வியாபாரம்,அரசுப்பணிகள் என்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வெவ்வேறு வேலைகளில் ஈடுபடும் போது மிகச் சொற்பமானவர்கள் மட்டுமே ஈடுபடும் மருத்துவத்தை பீர்பால் சொன்னவுடன் மன்னர் பீர்பால் தன்னை கேலி செய்வதாக நினைத்துவிட்டார்.
ஆனால் பீர்பால் தான் சொல்லிய பதில் சரி தான் என்றும் அதை நிருபிக்க தன்னால் முடியும் எனவும் சொன்னார்.அக்பரும் அதை ஏற்றுக்கொண்டு மறுநாள் தன்னுடன் நகர்வலத்திற்கு பீர்பாலையும் அழைத்து செல்லவும் ஒப்புக்கொண்டார்.

நகர் வலத்திற்கு கிளம்பும் அன்று பீர்பால் தன் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டுவந்தார்.அரசர், ’என்ன தலையில் கட்டு?’ என்று கேட்டவுடன் பிர்பால் தனக்கு ’தலைவலி’ என்று சொன்னார்.அதற்கு உடனே அக்பர் தனக்கு ராஜாங்கமருத்துவர் சொல்லிக் கொடுத்த மூலிகை தைலத்தின் மகத்துவத்தை பற்றிச் சொல்லி அதையே பீர்பாலுக்கும் பரிந்துரைத்தார்.பீர்பாலும் ஒரு புன்முறுவலோடு தலையாட்டிவிட்டு நகர் வலத்திற்க்கு தான் தயார் என்றார். நகர் வலம் ஆரம்பித்தார்கள்....
.
போகும் வழியெங்கும் அவர்கள் சந்தித்த மக்கள் ஒருவர் விடாமல் அனைவரும் பீர்பாலின் தலைக்கட்டின் காரணத்தை கேட்கவும்,தலைவலி என்று பீர்பால் சொன்னவுடன், அவர்கள் அதற்கு தங்களுக்கு தெரிந்த மருந்தை சொல்லவும்.... என அவர்கள் நகர்வலம் ஒருவழியாக முடிந்தது.இப்பொது பீர்பால் அக்பரோடு இருந்தவர்களை பார்த்து நகைப்போடு பார்தீர்களா! நமது நாட்டின் அரசர் உட்பட நாம் ந்தித்த அனைவருமே மருத்துவர்களாக இருப்பதை என்று சொல்லி சிரித்தார்.அக்பரும் பிர்பாலின் மதி நுட்பத்தை ரசித்து சிரித்தார்.

இந்த கதையை ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த இருநாட்களாக பீர்பாலின் நிலை தான் எனக்கும்.எங்களது வங்கியில் காசாளராக பணிபுரிந்தால் ஊதியமும் கொடுத்து சிறப்புச் சலுகையாக கைவலியும் கொடுப்பார்கள்.அப்படித்தான் எனக்கும் de-quervains disease (பெருவிரலில் ஏற்படும் வலி) வந்து கைகளில் கட்டு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வீட்டில் உள்ள மருத்துவரிடமிருந்து(அதாங்க! வீட்டம்மா) ஒரு வழியாக தப்பித்து பஸ்ஸில் ஏறினால் டிக்கட் கொடுக்கும் டாக்டரிடம் மருந்து வாங்கி கட்டி கொண்டேன்.சக பயண மருத்துவர்கள் ஆதங்கத்தோடு பார்த்து விட்டு அள்ளி தெளித்த அறிவுரைகளை அசராமல் வாங்கி குவித்தபடி ஒரு வழியாக வங்கியில் நுழைந்தேன்.இப்போது எனது மேலாளரின் முறை.லீவு கேட்டு விடுவேனோ என்று உள்ளுக்குள் நினைத்தவாறு ’ஒன்னும் பெரிய பிரச்சனையில்லையே!’ என்று அவர் கவலையை அவர் வெளிப்படுத்தினார்.சக தோழர்கள் ??????????-குறிகளை தொடுத்த பின் மருத்துவராக மாறினார்கள்.வங்கியின் வாடிக்கையாளர்களும் இதில் விதிவிலக்கல்ல.அதிலும் வாடிக்கையாளர் ஒருவர் தன் மச்சினன் ஒருவனுக்கு கைமுறிந்து போனதை ரசித்து ரசித்து சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்து முடிந்த எனது கல்யாணத்திற்கும் கைவலிக்கும் முடிச்சுப்போட்டு சுத்தி போட சொன்னவர்களிலிருந்து,மலையாள நாட்டு வைத்தியர்களுக்கு அம்பாசிடர்களாக தங்களை தாங்களே நியமித்துகொண்டவர்கள் வரை பலரையும் இந்த கை கட்டினால் நான் எதிர்கொள்ள வேண்டிருந்தது.

கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடியது என்பது போல் நான் பார்த்த ஒவ்வொருவரிடமும் பதில் சொல்லி பதில் சொல்லி கை வலி போய் எனக்கு வாய் வலி வந்தது தான் மிச்சம்.
(பதில் :மொகலாய காலம் தொட்டு இன்று வரை நம் நாட்டில் மருத்துவர்கள் தான் அதிகம்.BIRBAL THE GREAT.)