வெள்ளி, 3 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......10


இது ஒரு தொடர் பதிவு......

செப்டம்பர் 5ஆம் தேதி…..

விடியற்காலை ஆறு மணி போல் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அதிகாலையிலே என் வருகைக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. என் அம்மாவும் என்னை மலர்ச்சியோடு எதிர் கொண்டாள்.

“என்னடா இப்புடி மெலிஞ்சிட்ட….”

“எல்லாம் உங்கள பாக்காமத் தாம்மா…..” என்றபடி நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அவள் வலியால் கத்திவிட்டாள். நான் பதறிக்கொண்டு விலகிய போது தான் புரிந்து கொண்டேன் நான் அவளது தோல்களை சற்று வலுவாக பற்றிக் கொண்டுவிட்டேன் என.

“அம்மா சாரிம்மா….தெரியாம பண்ணிட்டேன்……ரொம்ப வலிக்குதா….?” என நான் கேட்டுக்கொண்டிருக்கும் போதே என் அப்பாவும், பாட்டியும் அந்த அறைக்குள் பதறியடித்தபடி ஓடி வந்தார்கள்.

“என்னம்மா என்னாச்சு…?”-இது அப்பா.

“இவந்தான் மேல விழுந்து என்னய அமுக்கிட்டான்…” சிறு குழந்தையைப் போல் என்னைப் பற்றி புகார் கூறினாள்.

“ஒம்மவந்தானம்மா…..நீதான எம்மவன் எப்ப வருவான்…..எப்ப வருவான் கேட்டுட்டே இருந்த இப்ப என்ன….?”-அப்பா

“எனக்குத் தெரியும் நீங்க ஒண்ணும் எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம்……” என குழந்தை போல் குழைந்தாள்.

அப்பா சிரித்தபடியே என்னைப் பார்த்து “சரிப்பா நீ போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா….. நாம கிளம்பலாம்…” என்றார்.

“என்னப்பா எங்க கிளம்பச் சொல்றீங்க….? எங்க போறோம்…?”

“என்ன தெரியாத மாதிரி கேக்குற மதுரைக்கு தான்…..” அப்பாவை முந்திக்கொண்டு ஆச்சி பதிலளித்தாள்.

“மதுரைக்கா…..? எதுக்கு? என்னப்பா இப்பதான வந்து நிக்கிறேன் அதுக்குள்ள மறுபடியும் மதுரைக்கா….?”

“ஒண்ணுமில்ல மக்களே உங்கம்மாவுக்கு அங்க மீனாட்சி மிஷன்ல உள்ள இன் பேஷண்ட்ஸுக்கு எல்லாம் இன்னைக்கு

சாப்பாடு போடனும்கிறா….அதுவுமில்லாம மறுபடியும் ஒரு செக்கப்புக்கு அங்க டாக்டர் இன்னைக்கு வரச் சொல்லியிருக்காரு…..காருக்கும் சொல்லியாச்சு…..அதான் நீ வந்த

பிறகு உன்னையும் கூட்டிட்டு போகலாம்ன்னு இருந்தோம்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏனென்றால் ஊருக்கு வருவதற்கு முன்னால் நான் என் காதலியிடம் அன்று

அவளை சந்திக்க வருவதாய் உறுதி கூறியிருந்தேன். மேலும் அவளது தந்தையும், தாயும் அன்று வெளியூருக்கு போகவிருந்ததால் அன்றைய பொழுதை முழுவதுமாக என்னோடு கழிக்கவும் அவள் சம்மதித்து இருந்தாள்……

இப்படி பல கனவுகளோடு வந்தவனுக்கு எனது தந்தையின் இந்த திடீர் பயண ஏற்பாடு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. ஆனாலும் மதுரைக்கு வரவே முடியாது என சொல்லவும் மனம் சம்மதிக்க வில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நான் என் காதலிக்கு போன் செய்தேன். அவள் என்னை கடிந்து கொண்டு என் அம்மாவுடன் சென்று வர பணித்தாள். எனக்கும் ஏதோ தெளிவு பிறந்தது போல் தோன்றியது. மேலும் அன்று மாலையே திரும்பி விடலாம் என உறுதி கொடுக்கப்பட்டதால் மதுரைக்கு கிளம்பினேன்.

காலை 8.30 மணி அளவில் நான் முன் இருக்கையில் ஓட்டுனருடன் அமர அப்பாவும், அம்மாவும்,ஆச்சியும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்த அம்பாசிடர் காரில் மதுரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்……..

அதுதான் என் தாயுடனான எங்களது கடைசிப் பயணம் என்று அறியாமல்.

மிகவும் சந்தோஷமாக உரையாடிக் கொண்டே பயணித்தோம். பின்னால் அமர்ந்திருந்த என் அம்மாவோ என்னை திரும்பச் சொல்லி அடிக்கடி என் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.

அப்பா “ என்னம்மா உம் பையனுக்கு ஒரே முத்த மழையா இருக்கு…?”

அம்மா “ஆங்….இது எம்மவன் அதான்…” என்றபடி என்னை மீண்டும் முத்தமிட்டாள்.

அப்பா “அப்ப வீட்ல இருக்குறவன்….”

அம்மா “ அது உங்க பிள்ளை…… இவந்தான் எம்மவன்…..நான் இன்னக்கு அவனையுந்தான் கூப்பிட்டேன் வந்திச்சா அந்த குட்டி நாயி….எம்புள்ள தான் வந்திருக்கான் எங்கூட…இவன் என் சீமந்தர புத்திரன் இல்லையா…..அதான்”

ஆச்சி “ரொம்பத்தான் மவன கொஞ்சுவா….” என அவளும் கேலி பேசினாள். இப்படியே என்னை கொஞ்சயபடியே உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தவள். அருப்புக்கோட்டையில் காரை நிறுத்தச் சொல்லி கேசரி வாங்கிக் கேட்டாள். இப்படியெல்லாம் வழக்கத்தில் கேட்பவள் அல்ல. ஆனால் அவள் அன்று ஒரு குழந்தையைப் போல் மாறிப்போயிருந்தாள். என் அப்பாவும் அவளது ஆசைகளை நிறைவேற்றியபடி அவள் கேட்பதையெல்லாம் வழி நெடுகே வாங்கிக் கொடுத்தபடி வந்தார். இடையிடேயே கொஞ்சம் கண்ணயர்ந்து கொண்டும்…..பேசிக்கொண்டும் மதுரை வந்து சேர்ந்தோம்.

அங்கே சென்றதும் அவள் விருப்பப்படியே அங்கே இருக்கும் உள் நோயாளிகளுக்கு அன்றைய மதிய உணவிற்கான கட்டணத்தை ரிசப்ஷனில் சொல்லி கட்டிவிட்டு. மருத்துவரை பார்க்க விண்ணப்பித்தோம். அவரிடம் நாங்கள் வந்திருப்பதாய் தெரிவிக்க பட்டவுடன் எங்களை அதிகம் காத்திருக்க வைக்காமல் அவரது அறைக்குள் அழைத்துக் கொண்டார். என் அம்மாவை

பரிசோதித்தவர் அன்று அங்கே ஒருநாள் அட்மிட் ஆக சொல்லிவிட்டார்.

வேறு வழியின்றி அம்மாவை அங்கு அட்மிட் செய்தோம்.

அன்று தான் மீனாட்சி மிஷனில் நவீன வசதிகள் அடங்கிய அந்த அறை புதிதாக திறக்கப்பட்டிருந்தது. ஒரு நட்சத்திர விடுதி அறைக்கு ஒப்பான வசதிகளோடு கட்டப்பட்டிருந்தது அந்த அறை. அந்த அறைக்குள் நுழைந்ததும் மருத்துவமனைக்குள் இருப்பதற்கான எண்ணமே மறைந்து போனது. அத்துணை நேர்த்தியாக அந்த அறை இருந்தது. நான் அந்த அறைக்குள் சென்றவுடனே என் அம்மாவை கேலி செய்ய ஆரம்பித்தேன்.

“இப்பதானேம்மா தெரியுது நீங்க எதுக்கு அடிக்கடி மீனாட்சி மிஷனுக்கு வாரீங்கன்னு….? இப்படி ரூம் கிடைச்சா நானெல்லான் காலம் பூரா இங்கன நோயாளியா கெடப்பேனே…”

“நான் படுறபாடு உனக்கு கிண்டலா தெரியுது என்ன?” என கோபமாகவே என்னை கடிந்து கொண்டாள்

“என்னம்மா ஒம்மவன் உன்னைய கிண்டல் பண்றான் இதுக்கு போயி கோபப்படுறியே”-ஆச்சி

“உங்களுக்கெல்லாம் என்னப் பார்த்தா கிண்டலாத்தான் தெரியும்….”என ஆச்சியிடமும் கோபத்தை கக்கினாள். ஏன் இப்படி காரணமே இன்றி கோபம் கொள்கிறாள் என எங்களுக்கு புரியவில்லை.

“என்ன ஜெயம்மா இப்படி கோபப்படுற….? அம்மா ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருத்தா….” என்றபடி ஆச்சி மௌனித்தாள்.

அம்மாவும் மறுமொழி பேச விரும்பாதவளாய் அமைதி காத்தாள். இதற்கிடையில் கீழே மருந்துக்கள் வாங்க சென்ற அப்பாவும் வந்துவிட்டார்.

அவருக்கு இங்கு நடந்த களோபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆதலால் இயல்பாக ஆரம்பித்தார்…”யத்த…..இவுரு இங்க நின்னது நிக்க நம்மள தங்க சொல்லிட்டாரு நாமளும் எதுவும் எடுத்துட்டு வரல அதனால இப்ப நீங்க நாம வந்த காரிலே திரும்ப ஊருக்கு போயி தேவையான ஜாமான்களை எடுத்துட்டு வாரீங்களா…?” எனக்கேட்டார்.

“அது இல்லய்யா நான் இங்க இருந்தாத்தான் அவளுக்கு எல்லாத்துக்கும் சரியா இருக்கும். அதனால நீங்க பேரப்புள்ளைய போயே எடுத்துட்டு வரச் சொல்லுங்க…..”

” என்னப்பா நீங்க பேசுறீங்க அம்மா இங்க இருக்கட்டும்……அவனோ நீங்களோ போயிட்டு வாங்க….” என்றாள் அம்மா.

நானே முந்திக்கொண்டு “யப்பா நானே போறேன். எனக்கும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கனும் போல இருக்கு. துணிமணிகளையும் வேற தேவையான ஜாமானையும் யாரு கிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன்….”

“யாருகிட்டேயாவதுன்னா யாருகிட்ட கொடுத்து அனுப்புவ…?”-அப்பா.

“தாத்தாகிட்ட வேணுன்னா கொடுத்து அனுப்பு”-ஆச்சி.

“யத்த நீங்க வேற…? மாமாவ அலையவச்சிக்கிட்டு….. அதெல்லாம் வேண்டாம். மக்களே நீ ஜாமான்களை எடுத்து வேலைக்கார அக்காகிட்ட கொடுத்து அனுப்பு….” என யோசனை சொன்னார்.

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மருத்துவர் பார்வையிட அறைக்கு வந்தார்.

“என்ன….? அக்கா என்ன சொல்றாங்க……?” என உரிமையாக கேட்டபடி அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கதான் சொல்லனும் நான் எப்படி இருக்கேன்னு….”-அம்மா.

“உங்களுக்கென்ன ஜம்முன்னு இருக்கீங்க…. பையன் வேற பக்கத்துல இருக்காப்பல வேற என்ன வேணும் உங்களுக்கு…? ரூம்மெல்லாம் எப்படி இருக்கு….? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்க….?”-மருத்துவர்.

“ரூம்மெல்லாம் நல்லாயிருக்கு டாக்டர்….. எனக்குத்தான் இன்னிக்கு கொஞ்சம் ஞாபக மறதியாவே இருக்குற மாதிரி இருக்கு….” என சொன்னாள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரியாப் போகும். இன்னைக்கு ஒரு எக்ஸ்ரேவும்……பிளெட் டிஸ்டும் எடுத்திடுவோம். நான் மத்ததை சாயிங்காலம் வந்து பாக்கிறேன்…..” என்றபடி யாரும் கவனிக்காத வண்ணம் எனக்கு ஏதோ ஜாடை சொல்லியவாறு அறையைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் நான் கேண்டின் சென்று வருவதாய் சொல்லிவிட்டு அவரை பின் தொடர்ந்தேன். சற்று நிதானித்தவரை நெருங்கினேன் “டாக்டர் அம்மா இப்ப திடீரென்னு ஏதோ ஞாபக மறதி வர்றதா சொல்றாங்களே…..அதனால ஏதும் பிரச்சனையா…?”

“she is at her last days…….அந்த கேன்சர் செல்ஸோட தாக்கம் இப்ப

அவங்க மூளை பகுதிக்கு பரவ ஆரம்பிச்சிடுச்சு…..at any moment the system may collapse…..sorryப்பா…” என்றபடி என் தோள் தட்டி என்னை கடந்து சென்றுவிட்டார். இது போன்ற வார்த்தைகளுக்கு நான் பழக்கப்பட்டிருந்தாலும் எனக்குள் ஒரு தாங்கொண்ணா வலி அப்போது ஏற்பட்டது. இது ஒருவகையான சித்திரவதையாக எனக்கு இருந்தது. ஒவ்வொரு நாளையும் தாயின் மரண தேதியாகவே எண்ணி எதிர் கொள்ளவது துயரத்தின் உச்சம்.

நான் நொறுங்கி போய் அறைக்குள் நுழைந்தேன். யாருடனும் எதுவும் அப்போது பேசத் தோன்றவில்லை. நான் ஊருக்கு கிளம்புவதாய் மட்டும் அப்போது அவர்களிடம் சொன்னேன்.

“அம்மாவை விட்டிட்டு போறியா….யாரையாவது ஜாமான்களை எடுத்திட்டு வரச் சொல்லு நீ அம்மா கூட இருடா…..நீ இருந்தா நான் கொஞ்சம் தைரியமா இருப்பேன்…..” என தன் கடைசி ஆசையை என்னிடம் சொன்னாள்.

ஏதோ ஒரு பிடிவாதத்தோடு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்……

...........தொடரும்.

புதன், 1 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......9


இது ஒரு தொடர் பதிவு....


விடுமுறைகள் முடிந்து கல்லூரி துவங்கும் நாளும் வந்தது…..எனக்கோ என் அம்மாவை விட்டு பிரிய மனமில்லை. நான் எடுத்த முடிவுகளை சொல்லவும் தைரியமில்லை. அப்போது அவள் தான் என்னைத் தேற்றி மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வைத்தாள். தாயின் காவலுக்கு காலனை அமர்த்திவிட்டு

கல்லூரிக்குச் சென்றேன்.

கண்களில் கனவுகளை தேக்கி வைத்தபடி ஆசையும், படபடப்புமாய் நான் கால் பதித்த அதே கல்லூரிச்சாலை இப்போது எனக்கு சிறைச்சாலையாக காட்சியளித்தது. என் தாயின் கடைசி நாட்களில் கூட அவளுடன் இருக்க முடியாமல் போகிறதே என்ற எண்ணம் என்னை மேலும் வதைத்தது. என் உடல்தான் அங்கு சிறைபட்டு கிடந்ததே ஒழிய என் மனமோ என் தாயை தான் சுற்றிக்கொண்டே இருந்தது. வீட்டிலிருந்து போன் வரும் ஒவ்வொரு முறையும் நான் செத்து செத்தே பிழைத்தேன்.

என்னால் எதிலும் அப்போது கவனம் செலுத்த முடியவில்லை. என் நிலையறிந்த நண்பர்களும் என்னை முடிந்தவரை தேற்றவே செய்தனர். ஆனாலும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வாரத்தின் இறுதி நாட்களுக்காக வாரம் முழுக்க காத்திருக்க துவங்கினேன்…..

அப்படித்தான் ஒரு வாரத்தின் இறுதிநாளில் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றேன். மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதில்லை என்னும் உறுதியுடன். எதையாவது சொல்லி வீட்டிலே இருந்துவிட வேண்டும் என வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அங்கோ நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையே இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆம்! என் தாய் மிகவும் பலகீனமாய் மாறியிருந்தாள். அவளை வீட்டில் வைத்து கவனிக்க முடியாத அளவுக்கு அவளது உடல் நிலை மாறியிருந்தது. அவளை மதுரைக்கு அலைய வைக்க வேண்டாம் என மருத்துவர் கூறியதால் எங்கள் ஊரில் உள்ள கிருத்தவ கன்னிமார்களின் சேவையில் நடைபெற்று வரும் மருத்துவமனை ஒன்றில் அவளை அட்மிட் செய்தோம். அங்கிருந்த கன்னிமார்களுக்கும் என் அன்னைக்கும் ஏற்கனவே நல்ல சினேகம் உண்டு. அவளின்பால் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனிக் கருணை உண்டு. அதுமட்டுமின்றி என் அம்மாவிற்கு மருத்துவ ஆலோசனைகள் சொல்லி வந்த டாக்டர் சரவணன் அவர்களும் மதுரையிலிருந்து வாரமொருமுறை எங்கள் ஊருக்கே வந்து என் அம்மாவை பார்த்துச் செல்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

என் அம்மாவிற்கு கால்களில் நீர்கோர்க்க ஆரம்பித்தது. கால்கள் வீங்கியதால் எழுந்து நிற்கவே அவளுக்கு முடியாமல் போனது. கழிவறையில் கூட ஒருவர் துணைக்கு நிற்க வேண்டிய அவலத்திற்கு ஆளானாள். படுக்கையிலேயே கிடந்ததால் BED SOAR எனச் சொல்லப்படும் முதுகுப் புண்களும் வந்து அவளை வதைத்தது. படுக்கவும் முடியாமல்….எழுந்து நடக்கவும் முடியாமல் அவள் அனுபவத்தை வாதைகள் துயரத்தின் உச்சம். நானும் என் பாட்டியும் தான் அவளுக்கான துணைகளாக இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவராக அவளைப் பார்த்துக்கொண்டு மருத்துவமனையும் வீடுமாக எங்கள் வாழ்க்கை பயணம் மாறிப்போனது.

அப்படி ஒரு கடுமையான சூழலையும் என் தாய் மிகத் தைரியமாகவே எதிர்கொண்டாள். அவள் ஒருபோதும் அதை தன் வாழ்வின் கடைசி நாட்களாக எண்ணியதேயில்லை. தான் எப்படியும் குணமாகி மீண்டும் வேலைக்கு செல்வோம் என அவள் உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கைக்கு காரணம் அவளது தீவிர கடவுள் பக்தியே ஆகும். ஆம்! அவள் தன்னைவிட அதிகமாக கிருத்துவ மதத்தையும் அதன் கடவுளரையும் உளமார நம்பினாள். தன் வாதைகளிலிருந்து தன்னை இயேசு கிறுஸ்து விடுவிப்பார் என உறுதியாய் இருந்தாள். அவளது அந்த ஆழமான நம்பிக்கையை வைத்து ஆதாயம் தேட ஒரு கூட்டமும் அடிக்கடி அவளை பார்க்க வந்து போனது. செபம் என்ற பெயரில் அவர்கள் அடித்த கொட்டமும் ஒவ்வொரு முறையும் என்னை இரத்தம் கொதிக்க வைத்தது. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் என்பது போல் இருந்தது அவர்களது செயல்பாடுகள். ஆனால் நான் என் தாயின் பொருட்டு அதை சகித்துக் கொண்டேன்.

என் தாயின் நிலையும், எனது இயலாமையும் ஒரு சேர என்னை மனச்சிதைவுக்குள்ளாக்கியது. என்னால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இயல்பாக நடமாட முடியவில்லை. அதனால் நான் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

நான் கல்லூரிக்கு செல்வதாய் என் அம்மாவிடம் சொல்லிய போது அவளால் என்னை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை, வழி அனுப்பவும் அவளுக்கு மனமில்லை. ஆனாலும் நான் பிடிவாதமாக கல்லூரிக்கு கிளம்பிச் சென்றேன். கல்லூரிக்கு வந்து விட்டாலும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. பெரும்பாலும் ஏதாவது உடல் உபாதையை காரணம் காட்டி விடுதியிலேயே தங்க ஆரம்பித்தேன். அப்படி விடுதியில் தனிமையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் மதுவிலும், சிகரெட்டிலுமே என் பொழுதுகளை கழிக்க துவங்கினேன். என் நிலையறிந்து என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். படிப்பில் நாட்டம் இன்றி சுற்றத் துவங்கினேன்.

ஒருநாள் காலையில் திடீரென்று என் வீட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் பதறியடித்தபடி போனால் அங்கு என் அம்மாவின் குரல்….

“என்னடா எப்படி இருக்க…?”

“அம்மா…..எப்படிம்மா இருக்கீங்க…?”

“நீ நல்லாயிருக்கியாப்பா…. ?எனக்கென்னடா இயேசப்பா கிருபையில நான் நல்லா ஆயிட்டேன் தெரியுமா? இப்ப எனக்கு எந்த நோயும் இல்ல….” அவள் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே போனாள். என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லை. அத்தனை உற்சாகமான அவளது குரலைக் கேட்டு பலநாட்கள் ஆகியிருந்ததால் நான் மகிழ்ச்சியில் உறைந்தே போனேன்.

“என்னடா சத்தத்தையே காணோம்…?”

எப்பம்மா ஆஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தீங்க….?”

“நான் நேத்து சாயிங்காலமே டிஸ்சார்ஜ் அயிட்டேண்டா….நீதான் வரவே மாட்டைக்க….உனக்கு அம்மாவ பாக்கணும்ன்னு தோணலையா….?”

அந்தக் கேள்வியால் நான் உடைந்து விட்டேன். என்னையும் மீறி என் கண்களில் நீர் வழியத்துவங்கியது. நான் அதை அவள் அறியாத வண்ணம் என் குரலை திடப்படுத்திக் கொண்டு….”எம்மா வர்ற செப்டம்பர் 5ஆம் தேதியில இருந்து எனக்கு ஓனம் ஹாலிடேஸ் விடுறாங்க நான் அப்ப வாரேன்மா….”

“சரிப்பா….கைல செலவுக்கு காசு வச்சிருக்கியா இல்ல போட்டுவிடவா….?”

“வேண்டாம்மா…..என்கிட்ட இருக்கு. நான் வந்திருவேன்ம்மா….”

“சரிடா….உடம்ப பாத்துக்கோ பத்திரமா வா….” அவள் போனை துண்டித்தாலும் எனக்குள் சொல்லொன்னா உற்சாகம் தொற்றிக் கொண்டது. எனது அத்துணை கவலைகளையும் அவளது குரல் துடைத்து விட்டிருந்தது. உற்சாகமாக செப்டம்பர் 5ஆம் தேதிக்காக காத்திருக்க துவங்கினேன்.

...........தொடரும்.

திங்கள், 30 மே, 2011

என் தேவதையின் சரிதை.....8


இது ஒரு தொடர் பதிவு..............

வாசகர்களே…..! எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ எனது பழைய நினைவுகளுக்குள் உங்களை அழைத்து சென்றுவிட்டேன். நமது பழைய இனிய நினைவுகளை கொண்டு வலிமிகுந்த தருணங்களில் ஆறுதல் தேடிக் கொள்வது மனித இயல்புகளில் ஒன்று. மனிதனின் அதிசயிக்க தக்க குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. சரி! மீண்டும் என் வாழ்வின் வலிநிறைந்த அத்தியாயங்களுக்குள் செல்வோம்…..

அவள் எங்களுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு கணமும் அவளுக்கானதாய் நான் மாற்றத் துடித்தேன். முதலில் என் அம்மாவிற்கு அவளது நோய் கொஞ்சம் கொஞ்சமாய் குணமாகி வருவதாய் ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் நோயை காட்டிலும் அதன் மூலம் ஏற்படும் சுயபட்சாதாபமே நம்மை அதிகம் வதைக்கும். அதனால் நான் அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பழகினேன்.

இதற்கு எனக்கு பெரிதும் உதவியது என் அம்மாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் அவர்கள். ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே அவர் அந்த நாட்களில் இருந்தார். எந்த இரவிலும் அவரிடம் தயக்கமின்றி பேசும் உரிமை எனக்கு அளித்திருந்தார். என் நிலை உணர்ந்து தைரியமும் அளித்தார். மருத்துவமே வர்த்தகமயமாகிப் போன இந்தக் காலத்தில் மனித நேயத்தின் எச்சங்களாக இவர் போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் பூமியின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கிறது போலும்.

எங்கள் வீட்டின் வழக்கங்கள் எல்லாம் முற்றிலும் மாறிப்போயிருந்தது. யாராவது ஒருவர் என் தாயுடன் எப்போதுமே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அவள் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட யாரையாவது

எதிர்பார்த்தே செய்யும் நிலைக்கு ஆளாகியிருந்தாள். வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட்டேன் ஆனால் அவளுக்கோ அப்படி ஒருவரை அண்டி வாழ்வது துயரத்தின் உச்சமாக இருந்தது. எங்கள் குடும்பத்தின் வேராக எங்களை தாங்கி நின்றவள் அவள். இப்போதோ எழுந்து அமரவோ, நடந்து செல்லவோ முடியாதபடி காய்ந்த சருகாய் கட்டிலில் சுருண்டு இருந்தாள். அவளது அந்தக் கோலமே எங்கள் இயல்புகளை குலைக்க போதுமானதாய் இருந்தது.

எங்கள் குடும்ப பொருளாதாரத்தின் அடிப்படையே என் தாயின் வருமானத்தை பெருமளவு நம்பியிருந்தது. என் தந்தை அரசு பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி வந்தாலும் அவரது வருமானத்தை வைத்து மட்டுமே எங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளை எதிர்கொள்ள முடியாதிருந்தது. அதற்கு நாங்கள் பழகிவிட்டிருந்த வாழ்க்கை முறையும் ஒரு மிகப்பெரிய காரணம். இப்போதோ என் தாயும் படுத்த படுக்கையாகிவிட்டாள். மருத்துவ செலவினங்களோ எங்கள் குடும்பத்தின் தனரேகையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைய செய்து கடன்ரேகைகளாக மாற்றிவிட்டிருந்தது.

அப்போது எனக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன் நான் என் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவது என்று. ஆனால் எனது தீர்மானத்தை என் அம்மாவிடமோ அல்லது வீட்டில் உள்ளவர்களிடமோ நான் அப்போது வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் என் தாயின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று என் கல்வி. அதை எதன் பொருட்டும் அவள் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒருமுறை தனது மருத்துவ செலவினங்களுக்காக வாங்கிய கடனில் என் கல்லூரி கட்டணத்தை கட்டியிருந்தாள். அப்படிப்பட்டவளிடம் நான் என் தீர்மானத்தை சொன்னால் வேறு நோயே தேவையில்லை அவளை கொன்றுவிட.

இப்படி பல விஷயங்களை எனக்குள் புதைத்து கொண்டு அவள் முன் இயல்பாக இருப்பது போல் நடிக்க துவங்கினேன். உலகில் எந்தப் பிள்ளையும் ஏற்க கூடாத பாத்திரமது. அழுகையை கூட சிரிப்பால் மறைக்க வேண்டிய துரதிஷ்டசாலியாய் ஆகிப்போனேன். வலிக்க வலிக்க ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். அப்படி எல்லா வகையிலும் மனப்புழுக்கத்தால் வாடிய எனக்கு ஒரு ஆறுதலும் இருந்தது அது என் காதல்!

ஆம்! நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். அவள் என் அக்காவின் தோழி. முதலில் இந்த இடத்தில் என் அக்காவை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுகிறேன். அவள் பெயர் பிரவீணா. என் தந்தையின் அண்ணன் மகள். கூட்டப்புளி என்னும் எங்கள் கடலோர கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தூத்துக்குடியில் எங்கள் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்தாள். என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.

அவளுடைய கல்லூரித் தோழி ஒருத்திதான் என் காதலி. என் அக்காவை வைத்து அறிமுகமானாள். எனக்கும் நல்ல தோழியாகவே. ஆனால் எங்கள் நட்பு மெல்லமெல்ல அடுத்த படி நிலையை எட்டத் துவங்கியது. அதற்கு தொலைப்பேசி பேரூதவியாக இருந்தது. பதின்ம பருவத்தில் காதலிப்பதே சுகம்! அதிலும் நாம் காதலிக்கப்படுவோமேயானால் அது பரமானந்தம்!

அந்தப் பரமானந்ததிற்கு ஜாதி,மதம்,வயது எதுவும் தடைபோட்டு விட முடியாது. எத்தகைய சமூக அடிப்படைகளையும் தூக்கியெறியும் வல்லமை அதற்கு உண்டு. ஆம்! எங்கள் காதலுக்கும் அது இருந்தது. வாழ்வின் அழகான நாட்கள் அவை. எனக்கான ஒரு உலகத்தை நான் சிருஷ்டித்துக் கொண்டு வாழ்ந்த அற்புதமான காலம் அது.

எனக்கு பல பெண் தோழிகள் உண்டென்பது என் அம்மாவிற்கு தெரியும். நான் அவர்களுடன் இயல்பாக பழகுவதற்கு என் அம்மா தான் முக்கிய காரணம். ஏனென்றால் நான் அவளிடம் இருந்து தான் பாலின பேதங்களை கற்றதும்….கடந்ததும். அதனால் அவள் எங்களது நட்பை சந்தேகிக்கவில்லை. அவளது என்மீதான அந்த திடமான நம்பிக்கையே அவளிடம் என் காதல் கதையை மறைக்க செய்தது. அதுவரை எல்லாவற்றையும் மிக எளிதாக பகிர்ந்து கொள்ள முடிந்த என்னால் என் காதலியை ஒரு தோழியாக மட்டுமே என் அம்மாவிடம் அறிமுகம் செய்ய முடிந்தது….. விந்தையல்ல…..யதார்த்தமே!

எனக்கு ”சரி”க்கும் “தவறு”க்குமான எளிய வித்தியாசங்களை இனம் கண்டுக்கொள்ள கற்றுக்கொடுத்ததே அவள் தான். என்னால் அவளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிந்த எந்தவொரு செய்கையையும் ”சரியானவை”யே என்றும் பகிர்ந்து கொள்ள தயக்கம் ஏற்படுத்தும் எல்லாம் ”தவறானவை”யே என்றும் போதித்திருந்தாள். நானும் அதையே அளவுகோளாய் கொண்டு எனது சரிகளை அவளிடத்திலும் தவறுகளை என் அந்தரங்கத்திடமும் அடைகாக்க துவங்கினேன். ஆம்! என் அந்தரங்கத்தின் முதல் அறையை என் காதலுக்காக ஒதுக்கிக் கொடுத்தேன்.

என் காதலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் காதலித்து வளர்த்தேன். ஏதோ உலகையே வென்ற மிதப்பில் நடமாடத் துவங்கினேன். காதல் என்பதை இன்பத்தின் மறுபெயராய் எண்ணி காலத்தை என் காதலுக்காக கறைக்க துவங்கினேன். காதலை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடி விட்டேன் போலும். இயற்கைக்கு மட்டுமல்ல காதலிலும் நிலையாமையே நிரந்திரமானது என்பதை காலம் சொல்லி கொடுக்க தொடங்கியது…..

கூடிக் கொண்டாடிய காதல் பொழுதுகளை கண்ணீருக்கு தாரை வார்க்க வேண்டி வரும் என எந்தக் கனவுகளும் என்னிடம் அப்போது ஆரூடம் சொல்லி இருக்கவில்லை. ஆனால் சொல்லப்படாத ஆரூடங்கள் தான் எப்போதும் பலித்தே போகும். எனக்கும் அப்படித்தான் ஆகிப்போனது. நான் காதல் மொழி பேசி கனிந்து உருக வேண்டிய கணங்களை என் தாயின் நிலை சொல்லியும்….எனக்கு நானே ஈசிக் கொண்ட அரிதாரத்தைப் பற்றிச் சொல்லியும் கறைக்கவே சரியாக இருந்தது. என் தாயின் கடைசி நாட்களில் எனக்கிருந்த ஒரே ஆறுதலாய் என் காதல் மாறிப்போனது.

நான் உடையும் போது என்னை தேற்றி எழச்செய்தாள். நான் உருகும் போது என்னை உறுதி கொள்ள செய்தாள். நம்பிக்கையால் காதல் கொடுத்தாள். எல்லாம் முடிந்து போகப்போகிறது என நான் எண்ணிய போது "தான்" இருப்பதாய் சொல்லி நிழல் கொடுத்து நின்றாள். தலை கொள்ளும் வெள்ளத்தில் தோள் கொடுத்து நீந்தச் செய்தாள்…..நீந்தத்துவங்கினேன்.

...............தொடரும்.

ஞாயிறு, 29 மே, 2011

என் தேவதையின் சரிதை.....7


இது ஒரு தொடர் பதிவு......

என்னைப் பற்றி என்னைவிட என் தாய் தான் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். எனக்கு பிடித்தவைகள் என்னவென்பதே அவள் சொல்லித்தான் பலமுறை நான் அறிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. தனது வாஞ்சையான அன்பினால் எனக்குள் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை அவளுக்கு இருந்தது. முதலில் என் தனிமையை புரிந்து கொண்டவள் நான் செய்த தவறுகளையும் ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் அவைகளை அவள் ஒருபோதும் நேரடியாக என்னிடம் குற்றங்களாக பட்டியலிட்டதுமில்லை, கண்டித்ததுமில்லை. அதேபோல் என்னைப் பற்றி அவளிடம் யாராவது குறை கூறினால் அவர்களிடம் எனக்காக எதிர்வாதம் செய்து என்னை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்திருப்பதாய் உணரச் செய்தாள். என் மீதான அவளது அந்த அளப்பெரிய நம்பிக்கை தான் அவள் குரல்களுக்கு என் செவிகளை சாயச்செய்தது.

அந்த சமயத்தில் தான் புத்தகங்கள் என்னும் ராட்ஷசநண்பனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அதேபோல் தான் ரசித்த கவிதைகளைப் பற்றி சிலாகித்து பேசி என்னையும் அவைகளை ரசிக்க செய்தாள். தூரிகைகளை கையில் கொடுத்து ஓவியம் பழக்கினாள். பாலசந்தர்,பாக்கியராஜ்,மகேந்திரன் என தனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களை எனக்கும் பிடிக்க செய்தாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் தான் விரும்பிய வகையில் என்னை செதுக்க துவங்கினாள். உளியின் வலி தெரியாமல் சிலை வடிக்கும் கலையில் கைதேர்ந்தவளாய் இருந்தாள்.

அவள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த புத்தகம் என்னும் ராட்ஷசன் என்னை முழுவதுமாய் சுவீகரித்து கொண்டான். ராஜேஷ்குமார், சுஜாதா, பாலகுமாரன் என பித்து பிடித்தாற் போல் படித்து திரிந்தேன். புத்தகங்களை என் கையில் கொடுத்து எனக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்த தனிமையை என் நண்பனாக்கிவிட்டாள்.

எனக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் அவளிடன் ஒரு தீர்வு இருந்தது. அவளிடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னால் பேசமுடிந்தது. அவளும் என்னை தனது நண்பனைப் போல் உணரச்செய்தாள்.

ஆம்! அவளால் என்னிடம் அவளது கடந்த காலங்களின் சோகங்கள்….. தோல்விகள்….வெற்றிகள்….. சந்தோஷங்கள்…. என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அது போன்ற தருணங்களில் என்னை அவள் ஒருபோதும் தன் மகன் என நினைத்து சில சம்பவங்களை விழுங்கியோ….மறைத்தோ எதுவும் சொன்னதில்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் அவள் தான் ஒரு பெண்ணாக அதுவும் சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு உள்ளவளாக இருப்பதினால் தான் சந்தித்து வந்த பாலியில் தொந்தரவுகளைக் கூட என்னிடம் இயல்பாக சொல்வாள். நானும் ஒரு ஆணாக இருப்பதினாலோ என்னவோ அவள் அப்படிச் சொல்லும் போதெல்லாம் அவைகள் எனக்கு ஒருவித குற்றவுணர்வுடன் கூடிய படிப்பினையாகவே நான் பெரும்பாலும் அதனை எடுத்துக் கொள்வதுண்டு. அவளும் ஒருவேளை அதன் பொருட்டும் சொல்லியிருக்கலாம்.

அப்படி ஒருநாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ”காதல்” குறித்த உரையாடல்கள் வந்தது. (அது நான் ’காதலுக்கு மரியாதை’ படம் பார்த்துவிட்டு வந்த சமயம் என நினைவு…..)

நான் ”அம்மா…. படம் சூப்பரா எடுத்திருக்கானுங்க…. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்…. நானெல்லாம் படம் முடிஞ்சு போச்சுன்னு சோகமா கிளம்பிட்டேன்….. ஆனா நல்லவேளை விஜய ஷாலினி கூட சேத்துவிச்சு நல்ல Happy ending-ஆ கிளைமேக்ஸ மாத்திட்டானுங்க….”

அம்மா “டேய் காதல்ங்கிறது கல்யாணத்துல முடிஞ்சா தான் ஜெயிச்சதா நினைக்கிறது முட்டாத்தனம்டா….. நிச்சயமா காதலோட வெற்றி கல்யாணம் இல்லடா….. உண்மைய சொல்லனும்னா காதலோட முடிவு தான் கல்யாணம்….” என்றபடி அவள் ஏதேதோ பேசிச் சென்றாள். நானும் அவளை மறுத்தும், கேலி செய்தும் அன்று விட்டுவிட்டேன். ஆனால் அன்று அவள் பேசிய வார்த்தைகளுக்குள் இருந்த தீர்க்கம் எனக்கு உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. இப்படி வாழ்வில் பல விஷயங்களில் அவளுக்கு மிகத் தெளிவான, தீர்க்கமான் பார்வையிருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை தவிர….. அது அவளது மூடத்தனமான கடவுள் பக்தி…..

அவளுக்கோ கிறுத்துவ மதத்தின் மீது அப்படியொரு பற்றும் நம்பிக்கையும் இருந்தது. என்னையும் என் தம்பியையும் அப்படியே அவள் வளர்க்க விரும்பினாள். எங்களது சிறு பிராயத்திலேயே கோயில் காரியங்களில் எங்களை ஈடுபடச் செய்தாள். வாரம் தவறாமல் பூசைக்கு கூட்டிச் சென்றாள். கிறுத்துவ மதச் சித்தாந்தங்களை போதித்தாள்.

ஆனால் இவையெல்லாம் எனக்குள் பக்தியை தந்த அளவிற்கு பல கேள்விகளையும் தொடர்ந்து எழச் செய்து கொண்டே இருந்தது. என் கேள்விகளுக்கு அவள் ”தேவ நிந்தனை” என்ற ஒற்றை வார்த்தையையே பதிலாக்கிக் கொண்டிருந்தாள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் அப்போதும் முழுமையாக ”கடவுளின் இருப்பை” மறுத்துவிடவில்லை.

அந்தச் சம்பவம் வரை…….

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு புதுவருடத்தின் பிறப்பை ஒட்டிய நேரம். உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாட்டமாய் இருந்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியிலும் புது வருடக் கொண்டாட்டங்கள் களை கட்டிய அந்த சமயத்தில் தான் அந்த ஜாதிக் கலவரம் வெடித்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியில் பரதவர் இனமும், நாடார் சமுதாயமும் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழும் இரு சமுகத்தவர்கள். பெரும்பாலும் பரதவர்கள் கிறுத்துவ மதத்தையும், நாடார்கள் இந்து மதத்தையும் தழுவிய நம்பிக்கையாளர்கள். இந்த இரு வேறுபாடுகளைத் தவிர வேறு எந்தவகையிலும் வேறுபடாதவர்கள். ஒருவருக்கொருவர் அத்தனை அன்னியோன்னியமாய் ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து வருபவர்கள். அப்படிப்பட்ட அந்த இரு சமுகத்தவர்களிடேயே தான் அந்தக் கலவரம் வெடித்தது. இரு சமுகத்தை சேர்ந்த ஓரிரு குடிகாரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை ஊர் கலவரம் ஆனது.

கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ”பம்ஸ்” என்னும் கையெறி குண்டுகளும், பெட்ரோல் வெடிகளும் இரு சமுகத்து உறவுகளையும் வெடிக்கச் செய்தன. சாதிய அடிப்படையிலும், மத அடையாளங்களினாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. மனித நேயம் குற்றுயிரும் குலை உயிருமாய் ஆனது. கலவரம் மூண்ட இரண்டாம் நாளின் நடுஇரவில் எங்கள் வீட்டின் தொலைப்பேசி அலறியது நான்தான் அதை எடுத்தேன். எங்கள் உறவுக்காரர் ஒருவர் பதற்றமாய்…… எங்கள் வீட்டுப் பகுதியில் கலவரக்காரர்கள் வரப்போகிறார்கள் என்றும் அதனால் நாங்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு ஒடும் படியும் எச்சரிக்கை செய்தார்.

உடுத்திய ஆடைகளோடு வீட்டை பூட்டிவிட்டு என்னையும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு என் அம்மாவும் அப்பாவும் அந்த நடுஇரவில் எங்கள் பக்கத்து தெருவில் வசித்து வந்த குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஒரு இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாததாய் போனது. ஜாதியின் பெயரால், மதத்தின் அடிப்படையால் நாங்கள் வீதியில் ஓடிய அந்த நாள் எனக்கு உணர்த்தியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் இந்தக் கடவுளும்…..இந்த பாழாய்போன ஜாதியும்…. என் சகமனிதனை என் மேல் வெறுப்புறச் செய்யுமானால் எனக்கு இந்தக் கடவுளும் தேவையில்லை….ஜாதியும் தேவையில்லை…. என்பதே!