வெள்ளி, 27 மே, 2011

உயிரானவள்...


பெண்ணே!

உன்னை நிலமென்றால்

பூரித்துப் போகதே….!

அவன் என்றும் உன்னை

தன் கால்களுக்கு

கீழே வைக்க சதி செய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நிலவென்றால்

குளிர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் இரவின் துணையாக்கி

காமத்திற்கு இரையாக்க முடிவுசெய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நீரென்றால்

உருகிப் போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் தேவைக்கு பருக

உன் சுதந்திரத்திற்கு அணைகட்ட துணிந்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை மலரென்றால்

மலர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் உடைமைகளில் ஒன்றாக்கிக்கொள்ள

உன்னை காம்பறுக்க போகிறான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

நீலமாய்…..

நிலவாய்….

நீராய்….

மலராய்….

அவன் என்றும் உன்னை

வர்ணிப்பது….. நீ!

உயிராய் வாழ்வதையே உன்னை

மறக்க செய்வதற்கே….

எனப் புரிந்து கொள்!

உன் வாழ்வை உனக்கென

மாற்றிக்கொள்!!!!

என் தேவதையின் சரிதை.....6


இது ஒரு தொடர் பதிவு.....

எங்கள் இருக்கைக்கு அருகே நின்றபடி மிரட்டும் தொனியில் நடத்துனர் என்னலே எங்கனையும் இறங்காம இப்படியே தூங்குனீகனா எப்படி? எந்த ஊருடே போவனும்..?

மற்ற இருவரும் வாயடைத்துப் போய் நிற்க நானும் பயந்தபடியே மணிமுத்தாறு போகணும்... எனப் பம்மினேன்.

அப்ப ஊரு வந்தும் இறங்காம இருக்கீ...ய....? கூட பெரியவுக யாரும் தொணைக்கு வரலையா...?என மேலும் விசாரணையை அதிகப்படுத்தினார்.

அவர் சந்தேகபடுவதை புரிந்து கொண்டு நான் சுதாகரித்து கொண்டேன்.இங்க எங்க மாமா வீடு இருக்கு....நாங்க லீவுக்கு வந்திருக்கோம்...எங்கமாமா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எங்கள கூட்டிட்டு போயிருவாரு... என படபடவென புழுகிமுடித்தேன்.

முன்னாடி இருந்து ஓட்டுனரின் குரல் வந்தது அவனுகள சீக்கிரம் இறக்கி விடுப்பா....சின்னப் பயளுகள போட்டு நோண்டிக்கிட்டு....என அங்கலாய்த்தார். நாங்களும் இதுதான் சமயம் என வேகமாக இறங்கிக் கொண்டோம்.

பேருந்து கிளம்பியவுடன் கால்போனப் போக்கில் சற்று தூரம் நடந்தோம். எங்கள் வயதொத்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டதும் அவர்களை நெருங்கி பேச்சுக் கொடுத்தோம். அவர்களாகவே நாங்கள் ஏதும் N.C.C கேம்பிற்கு வந்துள்ளோமா? எனக் கேட்டவுடன் நாங்களும் தலையாட்டி வைத்தோம். அப்போது தான் அவர்கள் அங்கே ஒரு அணைக்கட்டு இருப்பதை சொன்னார்கள். நாங்களும் அதை சுற்றி பார்க்க விரும்பியதாக கூறியவுடன் அதற்கு வழியும் காண்பித்தார்கள். அப்போது பசியும் அடங்கிவிட்டிருந்தது. நாங்கள் அணைக்கட்டு ஏறினோம். அணைக்கட்டின் பிரம்மாண்டம் எங்களை மலைக்க செய்தது. ஏதோ சுற்றுலா பயணிகளைப் போல் அங்கே சுற்றித் திரிந்து விட்டு கால்கள் ஓய்ந்து போய் அணையிலிருந்து இறங்கினோம்.

தாகத்தால் நாக்கும் வறண்டு போயிருந்தது. கீழே இறங்கி சற்று தொலைவு ஊருக்கு எதிர்புறமாக நடந்தபோது ஒரு சின்ன நீரோடை தெரிந்தது. பசுவைக் கண்ட கன்று போல் துள்ளிக்குதித்து நீரில் விழுந்தோம். நேரம் போவதே தெரியாமல் நீரில் விளையாடிக் கொண்டிருந்து விட்டு ஒருவழியாக களைத்து ஓய்ந்து அருகிலிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தோம். அப்போது கருக்கலும் ஆரம்பமாக துவங்கியது....போக வழியும் தெரியவில்லை.....பையில் காசும் இல்லை.....கொஞ்சம் கொஞ்சமாய் பயம் வரத் தொடங்கியது. ஒவ்வொருவராய் புலம்ப ஆரம்பித்தோம். வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய நினைப்பு வரவும் கலங்க தொடங்கினோம். மெல்ல மெல்ல வீட்டை விட்டு ஓடி வந்தது எவ்வளவு பெரிய அபத்தம் என புரிய துவங்கியது.

இருள் அடர்த்தியாகிக் கொண்டே வர பயமும் அதிகரிக்க துவங்கியது. திசைகள் தெரியாமல் கால்களை செலுத்த துவங்கியிருந்தோம். மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த மரங்கள் நிரம்பிய பகுதிகளுக்குள் பிரவேசித்திருந்தோம்....திடீரென ஒரு மனித குரல் எங்களை நோக்கி ஓங்கி ஒலித்தது நாங்கள் பயந்து போய் அப்படியே நின்று விட்டோம். மரத்திற்கு பின்னால் ஏதோ செய்து கொண்டிருந்த உருவம் எங்களை நோக்கி சத்தமிட்டபடி வந்தது.

யாருப்பா நீங்க....? இங்க எங்க போறீக.....? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். நாங்கள் பதிலற்று உரைந்து நின்றோம்.

வாயத் தொரந்து பேசுங்க டே...

தடுமாறியபடி நான் இல்ல ஊருக்கு....

ராஜ்குமார் என்னை இடைமறித்தபடி தூத்துக்குடிக்கு போவனும்...

என்னது தூத்துக்குடிக்கா...? அதுக்கு இங்க எதுக்கு வந்தீக…? அதுவும் இந்த நேரத்துல...?

இல்ல சும்மா சுத்திப்பாக்க...என்றேன்.

சுத்திபாக்கவா....? நான் மட்டும் பாக்கலைன்னா காட்டுப்பன்னிக்கிட்ட கடிபட்டு செத்துலடே போயிருப்பீக...என அவர் சொன்னவுடன் எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.

சரிச்சரி... இங்கன நின்னு பேச வேண்டாம்... எம் பொறத்தால வாங்க...என்றபடி எங்களை திரும்பி அழைத்து கொண்டு எங்கோ சென்றார். எங்களுக்கும் வேறு வழி இல்லாததால் அவரைப் பின் தொடர்ந்தோம். வழியில் அந்த கானகத்தில் உள்ள மிருகங்களைப் பற்றி ஏதோ கதைகளை சொல்லியபடி எங்களை எங்கோ அழைத்துச் சென்றார். நாங்கள் பதிலேதும் பேசாமல் மௌனமாக அவரை பின் தொடர்ந்தோம்....

மணிமுத்தாறு காவல்துறை பயிற்சி மையத்திற்கு அருகே இருந்த ஒரு சின்ன பெட்டிக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்போது பெட்டிக்கடையில் ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். எங்களை அழைத்து சென்றவரோ பெட்டிக்கடைக்காரரிடம் எங்களை சந்தித்த விவரங்களை கூறிவிட்டு பயலுவ அமுக்குனிகளா இருக்கானுவ.....பார்த்தா பெரிய இடத்து புள்ளைவ மாதிரியும் தெரியுதுக... நீரு கொஞ்சம் என்னென்னு கேளும்... என்றார்.

நானும், ராஜ்குமாரும் பயந்தபடியே நின்று கொண்டிருந்தோம். வினோத் விம்மி விம்மி அழத்துவங்கியிருந்தான்....பெட்டிக்கடைகாரர் வாயில் வெத்தலையை சுவைத்தபடி எங்களை நோக்கி இன் நேரத்துல காட்டுப் பக்கமா என்ன ஜோலியா டே போனீக....? காட்டுப்பன்னிகள பசியாத்தவா.... என்றபடி பயங்கரமாய் சிரித்தார்.

நாங்களோ பயத்தால் நா எழாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். அவரோ வினோத்தைப் பார்த்து நீ ஏம்டே இப்ப அழுதுகிட்டு கெடக்க....உன் சேக்காளி மாரப்பாரு எப்படி கல்லுளிமங்கனுவ மாதிரி நிக்கானுவன்னு...என்று நாலு பேர் முன்னிலையில் எங்களை கேலி பேசிக்கொண்டிருந்தது எனக்கு அவமானமும், கோபமும் ஒரு சேர கொள்ள செய்தது.

அதற்கு மேல் அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியதால் தைரியத்தை வரவழைத்து கொண்டு நானே பேச ஆரம்பித்தேன் நாங்க மூணு பேரும் சும்மா சுத்தி பாக்கலாம்ன்னு இங்க வந்தோம்...சுத்தி பாத்துக்கிட்டே வழி தெரியமா காட்டுப்பக்கமா போயிட்டோம்...

கடைக்காரர் சுத்தி பாக்க வந்தீகளா... (என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு) எனக்கு சின்ன வயசுலே காது குத்தியாச்சுடே தம்பி.... எந்த ஊருல இருந்து வாரீக...? அது என்ன கையில பையி?என்றபடி என் கையிலிருந்த பையை கேட்டார்.

தூத்துக்குடி... என்றபடி நான் கையிலிருந்த பையை கொடுக்க தயங்கவும்....அவரே தொடர்ந்தார் குடு டே என்ன இருக்குன்னு பார்ப்போம்.... என்றபடி ஏறத்தாழ பிடுங்கிக் கொண்டார். உள்ளிருந்து நாங்கள் எதற்கும் தேவைப்படும் என பாதுகாப்பிற்காக எடுத்து வந்திருந்த கத்தி, கவுட்டை, புகைத்தது போக மீதம் வைத்திருந்த பீடிகள், எங்கள் உடைகள் என ஒவ்வொன்றையும் அவர் வெளியில் எடுத்த போது நான் கொஞ்சம் நஞ்சம் வரவழைத்திருந்த தைரியமும் மறைந்து போனது.

அருகிலிருந்த ஒருவர் தம்பிகளா... என்ன படிக்கிறீக...? என கேலியாக கேட்டார்.

இந்த வயசுலே பீடிக்கட்டும், கத்தியுமா சுத்துனா என்ன படிக்கப் போறானுக....-இது அங்கே நின்று கொண்டிருந்த மற்றொருவர்.

இப்போது எங்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கடைகாரரிடம் யோவ் பயலுவ வீட்டுல இருந்து ஓடி வந்திருக்கானுக தெரியுதா...? அதான் இந்த முழிமுழிக்கிறானுவ...

கடைகாரர் எங்களை நோக்கி இந்த வயசிலயே பீடி, சிகரெட்டுன்னு அலையறீகளே உருப்புடுறதுக்கா...?உங்க பேரு என்னடே..?

நான் மூவரின் பெயரையும் சொன்னேன். ஏனென்றால் அப்போது ராஜ்குமாரும், வினோத்துடன் சேர்ந்து அழத் துவங்கியிருந்தான். எனக்கோ பயமாக இருந்ததே ஒழிய அழுகை வரவில்லை.

ராஜ்குமாரும், வினோத்தும் அழுதபடியே நாங்கள் வீட்டிலிருந்து ஓடிவந்ததிலிருந்து அங்கு சுற்றி திரிந்தவரை ஒவ்வொன்றாய் அழுதபடியே ஒப்பித்து முடித்தார்கள். நான் மௌனமாய் நின்று கொண்டிருந்தேன். எங்கள் பெற்றோர்களைப் பற்றியும் எங்களை பற்றியும் விசாரித்து விட்டு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எங்களுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார்கள். அதிலும் அந்த கடைக்காரர் அப்போது மிகவும் வாஞ்சையான குரலுக்கு மாறிவிட்டிருந்தார்.

அவர் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதில் அவரது கால்கள் பறிபோனதாகவும் சொல்லி தனது செயற்கை கால்களை எங்களிடம் காண்பித்தார். அதுவரை அமர்ந்து கொண்டு எங்களிடம் பேசியதால் நாங்கள் அவரது கால்களை கவனிக்கவில்லை. அப்படி அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தற்செயலாக அருகிலிருந்த காவல்துறை பயிற்சி மையத்திலிருந்து நான்கைந்து பணியாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களிடம் எங்களைப் பற்றி கூறி எங்கள் வழி செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அவர்களில் ஒருவருடன் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையம்..... இரவு 8.00 மணிக்கு......

வாழ்வில் முதல்முறையாக காவல்நிலையத்திற்குள் காலடி எடுத்துவைத்தோம். மனம் பயத்தின் உச்சத்தில் படபடக்க துவங்கியது. சினிமாக்களில் வரும் பயங்கரமான காவல்நிலைய காட்சிகள் நினைவுகளில் நிழலாடி மேலும் அச்சம் கொள்ள செய்தது. ஆனால் எங்களோடு வந்தவர் எங்களைப் பற்றி எடுத்து கூறியதும் காவல்நிலைய அதிகாரிகள் ஏதோ தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல் எங்களை கவனித்து கொண்டார்கள்.

அதிலும் அங்கிருந்த அதிகாரி ஒருவர் எங்களிடம் மிகவும் இயல்பாக உரையாடி எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்களை வாங்கி எங்கள் வீடுகளுக்கு தகவல் சொல்லி விட்டிருந்தார். இதற்கிடையில் எப்படியோ எங்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு பத்திரிகையின் நிருபர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் அந்த அதிகாரி எங்களை தனது உறவினர்களின் பிள்ளைகள் எனச் சொல்லி அனுப்பிவிட்டு அங்கிருந்த சக காவல் பணியாளர்களை எங்களுக்காக கடிந்தும் கொண்டார்.

வாடகை கார்களை பிடித்துக் கொண்டு ஓரீரு மணிநேரங்களில் பரிதவிப்போடு எங்களது பெற்றோர்களும் அம்பை காவல்நிலையம் வந்து சேர்ந்தார்கள். அதிலும் என் மாமா (அப்பாவின் அக்கா மாப்பிள்ளை) ஒருவர் தனது தேடலின் தவிப்பை கோபமாக வெளிப்படுத்தியபடி வந்ததும் வராததுமாய் தன் கைகளை ஓங்கியபடி என்னை அடிக்க நெருங்கினார். அப்போது அந்த அதிகாரி அவரை இடைமறித்து கடிந்து கொண்டார். அவர் எங்களது பெற்றோர்களை ஆசுவாசப்பட வைத்து நிதானமாக எங்கள் சார்பாக அவர்களிடம் பேசி அவர்களது கோபத்தையும் தணித்தார். பின்னர் எங்கள் பக்கம் திரும்பி கைகுலுக்கிய படி விடையளித்தார்.

அந்தச் சம்பவம் என்னை பெரிதும் மாற்றியது. என் பெற்றோர்களின் அன்பை எனக்கு புரிய வைத்த தருணம் அது. அதிலும் என் தாயின் கண்களில் தெரிந்த தவிப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவள் என்னை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன் இனி வாழ்வில் எத்தகைய சூழலிலும் அவளை விட்டு பிரியக் கூடாது என்று.


...............தொடரும்.

வியாழன், 26 மே, 2011

நான் யார்....?


நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

சாதி என்னும் அரக்கனின்

கொடூரப் பசிக்கு தினம்தினம் எம்

சனங்களின் உரிமைகளும் உயிர்களும்

இரையாகிக் கொண்டிருந்தாலும்

”அதற்கென்ன செய்யமுடியும்?”என்று

இருக்கும் கூட்டத்தில்- நான் யார்…?



ஊழலும், லஞ்சமுமாய் புரையோடிப்

போன அதிகாரவர்க்கத்தையும்,

அரசியல் விற்பன்னர்களையும்

காறி உமிழ்ந்தபடி- தன்

காரியம் சாதிக்க கையூட்டு கொடுக்கும்

கண்னியவான்களில் – நான் யார்…?


வணிகமும் வர்த்தகமும்

வாழ்வின் தேவைகளை சார்ந்திராமல்

ஆசைகளையும், நுகரும் வெறியையும்

அடிப்படையாக்கி சந்தைகள் மலிந்துபோய்

மனிதம் விலையாகிக் கொண்டிருக்கும்

வர்த்தகமயமான உலகில் - நான் யார்…?


எம் கைகெட்டும் தூரத்தில்

தம் உரிமைகளுக்காக போராடிய

எம் சகோதிர சகோதிரிகளை

இனவெறி அரசு அழித்து ஒடுக்கியபோதும்

இதயங்கள் மரத்துபோய்

துயரங்களைக் கூட செய்திகளாக

பார்க்கப் பழகிப்போன சமூகத்தில்- நான் யார்…..?


எம் தேசத்து வளங்களை

அந்நிய பெரும் முதலாளிகளுக்கு

தாரை வார்ப்பதையே ராஜ விசுவாசமாய்!

நினைத்துக் கொண்டு போட்டிப் போடும்

அரசியல் ’அடியாட்களின்’ அடாவடித்தனத்தை

சகித்துக் கொண்டு வாழப் பழகிய

கூட்டத்தில்- நான் யார்…?


கண்களை இறுக மூடிக்கொண்டும்

’கடவுளே! கடவுளே!’- என

கூப்பாடு போட்டுக் கொண்டும்

காசுக்காக ”கடவுளை” ஏலம் போடும்

கயவர்களின் பேச்சை நம்பிக் கொண்டும்

‘விதைக்காமல் விளைச்சலுக்காக ‘

கடவுளை அழைத்துக் கொண்டும்

காத்திருக்கும் கூட்டத்தில்- நான் யார்….?


மனிதத்தை மறந்து மதவெறி பிடித்து

சகமனிதர்களை வதைக்கும் மதங்களின்

அடையாளங்களை சுமந்து திரியும்

மடமைக் கூட்டத்தில்- நான் யார்….?


அக்கிரமங்களையும் அநியாயங்களையும்

கண்டு ஆத்திரம் கொள்ளாமல்

சுயநலமாய் சகித்து வாழ பழகிப்போன

சுயநலவாதிகளில்- நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?!!!!!!!!

புதன், 25 மே, 2011

என் தேவதையின் சரிதை....5


இது ஒரு தொடர் பதிவு....

அவள் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது காலை முடிந்து நன்பகல் பிறந்துவிட்டது. மதுரையிலிருந்து அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா என அனைவரும் வந்துவிட்டிருந்தனர். பயணம் செய்த களைப்பில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.பாட்டி சமையலறையின் நுழைவில் நின்று கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வேலைக்கார அக்காவிடம் மருத்துவமனை அனூபவங்களை புலம்பலாக கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதையே விதவிதமான வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதையும் ஏதோ சுவாரஸ்யமாய் கேட்பதைப் போல் கேட்டுக்கொண்டு அவள் புலம்பல்களுக்கு இசைவான வார்த்தைகளை பதிலாகவும் தந்துக்கொண்டிருந்தாள் அந்த அக்கா.

நான் என் அறையிலிருந்து வெளியில் வந்த போது எங்கோ வெளியில் போக தயாராய் இருந்த தாத்தா என்னைப் பார்த்துவிட்டு பாட்டியை நோக்கி எம்மா...இங்க பாரு பேரப்புள்ள முழுச்சிட்டாரு அவனுக்கு சாப்பாட்ட போடு...

அவனே இப்பதான் முழுச்சிருக்கான்....உடனே எப்படி சாப்புடுவான்...?" என தாத்தாவை கடிந்தபடி என்னைப் பார்த்து என்னய்யா நல்ல நித்திரையோ...?எனக் கேட்டாள்.

ம்...நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க...?

இப்பதான்...ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்....முதல்ல நீ போய் பல்ல வெளக்கிட்டு வா...என்றாள்.

தாத்தா மருமகன் குளிச்சாச்சா...? என பாட்டியிடம் கேட்டார்.

வருவாங்க....அதுக்குள்ளையும் என்ன அவசரம் உங்களுக்கு...? என சினந்து கொண்டாள் பாட்டி.

அவள் எப்போதும் இப்படித்தான் ஒருவித செல்லக் கோபத்தோடே தாத்தாவிடம் உரையாடுவாள். தாத்தாவும் அந்த எரிச்சாலான வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் உரிமைச் சீண்டலை புரிந்துகொண்டு ரசித்துக் கொள்வார். பெரும்பாலும் பொதுவிடங்களில் அவர்களது உரையாடல்கள் இந்த வகையை சார்ந்ததாகவே அமையும். அதேசமயம் அவள் தன்னைத் தவிர வேறு யாரும் தாத்தாவை கடிந்து கொள்ள அனுமதிக்க மாட்டாள். தான் பெற்ற பிள்ளைகள்...பேரப்பிள்ளைகள் என எந்தவித விதிவிலக்கும் அதில் இருந்ததில்லை. முதுமையில் காதல் கூட கோபத்தின் ரூபமாகவே வெளிப்படும் போலும்.

என்ன ஆச்சி...தாத்தா எங்க கெளம்பி இருக்காங்க..?முகத்தை அலம்பிவிட்டு பிரஷ்ஷில் பேஸ்டை வைத்தபடி கேட்டேன்.

உங்க தாத்தாவுக்கு துணி தொவைக்கனுமாம்....இன்னக்கி அங்க தண்ணி வர்ற நாளு வேற....அதனால அதையும் புடிச்சுவச்சிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கேன்....

தாத்தா....உங்கள வீட்ல கொண்டு போய் விடனுமா...?

இல்லய்யா.....அப்பா தம்பிய கூட்டிட்டு வர மாமா வீட்டுக்கு போறாங்களாம்....அதான் அப்படியே போற வழியில என்னைய வீட்டுல இறக்கி விட்டிற்றதா சொன்னாங்க....என்றவரிடம் பதிலேதும் பேசாமல் பற்களை விளக்க துவங்கினேன்.

வழக்கம்போல் அன்றாட நிகழ்வுகள் இயல்பாக தொடங்கியது........

ஆம்! எனக்கு ஒரு தம்பி உண்டு அவன் என்னைவிட நான்கு வயது இளையவன். அப்போது அவன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதிவிட்டு பரீட்சை முடிவுக்காக காத்திருந்தான். நாங்கள் இரண்டு பிள்ளைகள் தான்.பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்தபடியால் திசைக்கொன்றாய் வளர வேண்டிய சூழல். அவன் ஆரம்பத்திலிருந்தே என் தாய்மாமாவின் வீட்டில் தான் அதிகம் வளர்ந்து வந்தான். ஆரம்பகாலத்தில் நாங்கள் தாத்தா,பாட்டி,மாமா,அத்தை என கூட்டு குடும்பமாக தான் இருந்து வந்தோம்.

தூத்துக்குடியின் மைய பகுதிகளில் ஒன்றான அந்தோனியார் கோயிலை ஒட்டிய ஒரு சிறு தெருவில் இருந்த எங்கள் பாட்டியின் பூர்வீக வீட்டில்தான் ஒன்றாக இருந்தோம். தனிநபர் தேவைகள் கொஞ்சம் பெருகியவுடன் இட நெருக்கடியும்,மன நெருக்கடியும் அதிகரிக்க துவங்கியது. உறவுகள் நிலைக்க கொஞ்சம் இடைவெளி இருப்பது அவசியம் என புரிந்து கொண்டாள் என் அன்னை. அதனால் அப்போது நகருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமாகவும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகேயும் இருந்த வாடகை வீட்டிற்கு குடிபோவது என முடிவு செய்யப்பட்டு தனிக்குடித்தனம் சென்றோம்.

எங்களது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் அந்த அமைதியும், தனிமையும் தேவையானதாய் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கோ கூட்டு குடும்பத்தில் உறவுகளின் அரவணைப்பிலும், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற நண்பர்களின் கூட்டத்திலும் திளைத்திருந்து விட்டு திடீரென அவர்களை பிரிய நேர்ந்ததால் வேரோடு பிடிங்கி வேறு இடத்தில் நடப்பட்ட செடிகளைப் போல் வாடிப்போனோம். வாழ்வில் தனிமை என்ற ஒன்றையே சுவைத்திராத நான் முதன்முதலாக ஒரு நாளின் அதிகப்பட்சமான நேரங்களை தனிமையுடன் கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான சமயம் அது. தனிமைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு நாமாக விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளும் போது தனிமை நமக்கு இனிமை சேர்க்கும் மாறாக அது மற்றவர்களால் நமக்கு திணிக்கப்படும் போதோ தனிமை கொடுமையான தண்டனையாக மாறிப்போகும்.

எனக்கும் அது அப்படித்தான் ஆகிப்போனது....

நான் அப்போது ஆறாம் வகுப்பும் தம்பி இரண்டாம் வகுப்பும் படித்து கொண்டிருந்த சமயம் அது. தம்பியோ பள்ளி முடிந்தவுடன் அவனுக்காக அமர்த்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி என் தாய்மாமா விட்டிற்கு சென்றிடுவான். ஆனால் நானோ பள்ளி முடிந்தபின்பும் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே டியூஷனும் முடித்துவிட்டு எனக்கு வாங்கி கொடுக்கப்பட்டிருந்த சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு போய்விட வேண்டும். அம்மாவும்,அப்பாவும் வெவ்வேறு வெளியூர்களில் பணிபுரிந்து வந்தனர். தினமும் பணிமுடிந்து முதலில் ஊர் திரும்புபவர் தம்பியை மாமா வீட்டிலிருந்து அழைத்து வரவேண்டும். பெரும்பாலும் அதற்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். இதுதான் எங்களது அன்றாடம்...... அதாவது என் அம்மாவிற்கு எங்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைக்கும் வரை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இதுதான் நடைமுறையாக இருந்தது.

பெற்றவர்களின் தீவிர பொருளாதார தேடலால் என் பதின்ம பருவத்தில் எனக்கு பரிசளிக்கப்பட்ட தனிமையை தவிர்க்க நான் புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டேன். அவர்கள் புகைவடிவாகவும், திரவ வடிவாகவும், நிர்வாணத்தின் நிழல் வடிவாகவும் உருவகம் கொண்டவர்கள். ஆம்! தண்ணியடிப்பதும், புகைபிடிப்பதும் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே பழக்கம் ஆகியிருந்தது. கையில் கிடைக்கும் அல்லது எடுக்கும் காசுகளை எல்லாம் எனது இந்த புதிய நண்பர்களுக்காக அர்ப்பணம் செய்ய ஆரம்பித்தேன். பள்ளிப்பருவத்திலே இவர்களது சகவாசம் கிடைத்து விட்டதால் படிப்பும் பல்லை இழிக்க ஆரம்பித்தது. இதற்கு கைமாறாக இவர்களோ என்னைப் போன்றே குடும்பச் சூழல் அமையப்பெற்ற என் வயதொத்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

வாழ்க்கை இலக்குகள் இல்லாமல் பயணிக்க துவங்கியது. பெற்றவர்கள் இருக்கும் நேரத்தில் ஒருமாதிரியும் அவர்களது கண் மறைவில் வேறு ஒரு உலகிலும் சஞ்சீகரிக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தின் மீதான பிடிப்புகள் குறையத் துவங்கியது. எங்களை தனிமைப்படுத்திய சமூகத்தை நாங்கள் ஒன்றாக இணைந்து ஒதுக்க முடிவெடுத்தோம். ஆம்! நண்பர்களோடு சேர்ந்து ஊரை விட்டே ஓடிப்போக முடிவு செய்தேன்.....

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். முதலில் நான் இந்த திட்டத்தை முன்மொழிந்ததும் என் நண்பர்கள் வட்டத்தில் ஏகபோக வரவேற்பு இருந்தது. பத்திற்கும் மேற்பட்டோர் தாங்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். நாட்கள் செல்ல செல்ல திட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் பயத்தால் ஒப்புக்கொண்ட ஒவ்வொருவராய் திட்டத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். கடைசியில் என்னுடன் சேர்ந்து வர வினோத்தும்,ராஜ்குமாரும் மட்டுமே ஒப்புக்கொண்டார்கள். ஒரு சனிக்கிழமை ஓடிப்போவதாய் முடிவுசெய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு அன்றே வீட்டிலிருந்த உண்டியலை எடுத்து பதுக்கிக் கொண்டேன். மறுநாள் சனிக்கிழமை விடுமுறை நாளாதலால் விளையாடப் போவதாய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன். ஏற்கனவே பேசி வைத்த ஒதுக்குப்புரமான இடத்தில் மூவரும் சந்தித்து கொண்டோம். மற்ற இருவரும் எனக்கு முன்பே வந்திருந்தனர். இருவர் முகமும் வாடிப் போயிருந்தது. காரணம் கேட்ட போது வீட்டில் பணமே எடுக்க முடியவில்லை என்றும் இருவர் கையிலுமாய் சேர்த்து மொத்தம் பதினைந்து ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினார்கள். அதனால் திட்டத்தை வேண்டுமானால் வேறு ஒருநாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என சொல்லிப்பார்த்தார்கள்.

நான் திடமாக மறுத்துவிட்டு நான் எடுத்து வந்த உண்டியலை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் உற்சாகமானார்கள். உண்டயலை உடைத்து எண்ணிப்பார்த்த போது ஐம்பத்தி ஆறு ரூபாய் மாத்திரமே இருந்தது. இருவரும் மீண்டும் சோர்ந்து போனார்கள். நான் இருவருக்கும் ஆறுதலளித்து பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொள்ள வைத்தேன். கையில் உள்ள காசு தீரும் வரை பயணம் செய்வதென்றும்....காசு தீரும் இடத்தில் இறங்கி உழைத்து பிழைத்து கொள்வதென்றும் ஏகமனதாக தீர்மானம் செய்து பயணத்தை துவக்கினோம்.

என் பெற்றோருடன் திருநெல்வேலியில் உள்ள என் அத்தை (அப்பாவின் அக்கா) வீட்டிற்கு அதிகம் பயணம் செய்திருந்தபடியால் அந்த அனூபவத்தின் அடிப்படையில் முதலில் திருநெல்வேலிக்கு பயணமானோம். அதுவரை பெற்றோர்கள் உடன் மட்டுமே பயணம் செய்திருந்தவர்களுக்கு அது ஒரு உற்சாகமான அனூபவமாகவே இருந்தது. வீட்டை விட்டு ஓடிப்போகிறோம் என கொஞ்சம் நஞ்சம் இருந்த பதட்டமும் அந்த பயணத்தின் உற்சாகத்தில் மறைந்துவிட்டிருந்தது. வழக்கமாக பேருந்தில் ஏறிய அடுத்த கணமே நான் தூங்கிவிடுவேன். ஆனால் அன்றோ எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

அடிக்கடி பயணம் செய்த பாதையாக இருந்த போதிலும் அன்று நான் பார்த்த இடங்கள் எல்லாம் புதியனவையாகவே தோன்றிற்று. மனதுக்கினிய நண்பர்கள்....கனவுகள் நோக்கிய பயணம்......கட்டுப்பாடுகள் இல்லா புதிய உலகம்...என சிறகடித்துக் கொண்டிருந்தோம். அப்படியே முடிவில்லாமல் பேருந்து பயணித்து கொண்டே இருக்காதா? என்பதே அப்போதைய எங்களது ஒரே ஆசையாக இருந்தது. இன்பமான தருணங்கள் வேகமாக கடந்து போய்விடும் என்னும் சார்பியல் தத்துவத்தின் கூறுகள் படி அந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் ஒரு நொடிப் பொழுதைப் போல் கடந்துபோனது. நாங்களும் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டிருந்தோம்.

மேற்கொண்டு மீதம் இருந்த காசில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள குறைவான பயணிகள் இருந்த பேருந்துகளில் ஏறி பின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்த பயணிகள் நடத்துனரிடம் அவர்கள் பயணிக்கும் ஊர்களின் பெயரை சொல்லி பயணக் கட்டணத்தை கேட்பதை வைத்து எங்கள் கையிருப்பை சரிபார்த்து கொண்டே வந்தோம். எங்கள் கையிருப்புக்கு அதிகமாக கட்டணம் வரும் பேருந்துகளிலிருந்து நடத்துனர் எங்களை நெருங்கும் முன்பே இறங்கிவிடுவோம்.

இப்படியாக ஓரிரு பேருந்துகளில் ஏறி இறங்கி கடைசியாக மணிமுத்தாறு செல்லும் பேருந்தில் ஏறினோம். எங்கள் கையிருப்புக்கு அது ஒத்துவருவதாய் இருந்தது. அதனால் மணிமுத்தாறுக்கு மூன்று டிக்கெட்டுகள் வாங்கி பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் எடுத்து வந்த பணம் முழுவதும் பயணக் கட்டணத்திற்கே செலவாகிப் போனதால் மதிய உணவருந்த காசு இல்லாமல் போனது. அதுவரை நேரத்திற்கு சாப்பிட்டு பழகிய எனக்கு பசி என்ற புதிய நண்பன் அறிமுகமானது அப்போது தான். வாழ்வில் முதல் முறையாக அவனை நான் அன்று தான் சந்தித்தேன்.

அதுவரை ஏட்டிலும் மற்றவர்களது பேச்சிலுமே அவனைப் பற்றி கேள்விப்பட்டிருந்த எனக்கு அவனது நேரடி அறிமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்வின் யதார்த்தங்கள் எங்கள் முகத்தில் அறைந்தது. சற்று நேரத்திற்கு முன் கரைபுரண்ட உற்சாகம் திடீரென்று மறைந்துபோயிருந்தது. மூவரும் பசியின் பிடியில் சிக்கியதால் சோர்ந்து போய் தூங்கிவிட்டோம்.....முரட்டுக்கரம் ஒன்று எங்களை துயில் கலைத்தது. நாங்கள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தோம் பேருந்து காலியாக இருந்தது......

.............தொடரும்.