இது ஒரு தொடர் பதிவு......
எங்களது அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அப்போது பீகாரில் உள்ள புத்தகயா என்னும் ஊரில் வைத்து நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள எங்கள் சங்கத்தலைமையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிகுந்த உற்சாகத்தோடு அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அதுதான் எனது முதல் வட இந்திய பயணம். அதனால் மிகுந்த ஆவலோடு பயணத்திற்காக காத்திருந்தேன்.....அந்த நாளும் வந்தது....
தூத்துக்குடியிலிருந்து நானும், தோழர்.அருள்ராஜும் பயணமானோம்.....தூத்துக்குடி....சாத்தூர்....மதுரை என ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்கள் தோழர்கள் வந்திருந்து எங்களை வழியனுப்பி வைத்த அந்த நிமிடங்கள் நான் அதுவரை வாழ்வில் பார்த்திராதது. மிகவும் பெருமிதமான உணர்வோடு எனது அந்த பயணம் துவங்கியது.ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்களது சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவராய் எங்களோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்தார்கள்.
முற்றிலும் புதிய மனிதர்கள்....புதிய சூழல்....என எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தனிமை படர துவங்கியது. என்னோடு பயணித்தவர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தது. எனக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்று கூட அப்போது தெரியவில்லை. ஆனால் எனக்குள் எழுந்த அந்த தயக்கத்தை அவர்கள் கொஞ்ச நேரம் கூட நீடிக்க விடவில்லை. ஒவ்வொருவராய் வந்து என்னிடம் தங்களைப் பற்றியும், எனது அம்மாவை பற்றியும் அவர்களது கடந்த கால நினைவுகளை பற்றியும் பகிர்ந்தபடி என்னிடம் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமானேன்.
மறுநாள் காலை 9.30 மணியளவில் இரண்டு மணி நேர தாமதத்தோடு சென்னை எழும்பூர் சென்று சேர்ந்தோம். எங்களுக்கோ காலை 10.00 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து கிளம்பும் கோரமண்டல் ரயிலை பிடிக்க வேண்டிய நிர்பந்தம். அதாவது வெறும் அரை மணி நேர கால அவகாசமே இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை நெரிசலில் மிதந்து செண்ட்ரல் சேரவும் ரயில் கிளம்பவும் மிகச் சரியாய் இருந்தது. எங்களது பெட்டி படுக்கைகளோடு சென்னை செண்ட்ரலில் நாங்கள் ஓடிய காட்சி தமிழ் சினிமாக்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல.
ஒருவழியாக ஆளுக்கு ஒரு பெட்டியில் ஏறி விழுந்து ஒருங்கிணைந்தோம். ஆனால் இதிலெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் ரயிலோ தனது வழக்கமான தடதடப்புடன் பயணித்து கொண்டிருந்தது.....
பொதுவாக பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதிலும் இது போன்ற அசாத்திய சூழலும் இணையும் போது அதன் சுவாரஸ்யம் இரட்டிப்பாகத்தான் செய்கிறது. எனது முந்தய நாளின் தயக்கங்கள் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது.
நாங்கள் ரயிலேறிய விதத்தை சிலாகித்தபடி ஆரம்பித்த எங்கள் உரையாடல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடு பயணித்த தோழர்களின் அதற்கு முந்தைய இது போன்ற பயண அனூபங்கள்....முந்தைய அகில இந்திய மாநாட்டு அனூபவங்கள்....என கிளை விட துவங்கியிருந்தது. அவர்களுக்கு என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும்....வரலாறுகளும் மீதம் இருந்தது. எனக்கோ அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் புதிதாகவும்,ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.
நிறைய பேசினார்கள்....என்னையும் பேச வைத்தார்கள்.....தோழமை என்னும் அந்த வீரியமிக்க உணர்வை எனக்குள் செலுத்தி தலைமுறை இடைவெளியையும் தகர்த்தெரிந்தார்கள். தனது குடும்பம்...தனது வேலை...தனது தேவைகள்....என எல்லாவற்றையும் விடுத்து அவர்களிடம் பொதுவான பேசு பொருளாய் இருந்தது...தொழிற்சங்கம். அவர்கள் சிலாகிக்க....நெஞ்சம் விறைத்து பெருமிதம் கொள்ள....ஒருவரை ஒருவர் சீண்ட என எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு அந்த மந்திர சொல் வழிவகை செய்திருந்தது.
மேலாளர்..எழுத்தர்...கடைநிலை ஊழியர்....என எல்லா பதங்களும் மருவி தோழர் என்ற ஒற்றை சொல்லாய் அவர்களிடம் நிலை பெற்றிருந்தது. அது எனக்கு அவர்கள் மீதும்....எங்கள் தொழிற்சங்கத்தின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ரயில் பயணத்தை ஏதோ தங்களது இளமை காலத்தை நோக்கிய பயணமாய் அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சீட்டு கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது....உற்சாக பானம் தந்த துணையோடு அவர்கள் அடித்த கொட்டம் அவர்களது நரைத்த மயிரை கூட கருக்க செய்வதாய் இருந்தது. கேலியும்,கிண்டலுமாய் தொடர்ந்த பயணம் மறுநாள் காலை புவனேஸ்வரில் இறங்கி வேறு ரயில் மாறிய பின்பும் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்தது.
ஒருவழியாக நாங்கள் பீகார் ரயில் நிலையம் சென்று சேர்ந்த போது அதிகாலை 4.00மணி இருக்கும். அங்கு எங்களை வரவேற்க பீகார் மாநிலத்தின் கிராம வங்கி தோழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தார்கள்.
பீகார் ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நிமிடங்களிலிருந்து நாங்கள் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அந்த மாநிலத்தின் நிலையையும்,அந்த மக்களின் அவல நிலையையும் எடுத்துச் சொல்வதாய் இருந்தது.....
எங்களை ரயில் நிலையத்தின் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமரச் சொன்னார்கள். அந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு அரைமணி நேர பயணமாவது ஆகும் என்றும் அதற்கு விடிந்த பின்பே பயணிப்பது பாதுகாப்பானது என்றும் எங்களை வரவேற்க வந்த தோழர்கள் கூறினார்கள். நாங்களும் அந்த மூத்திர நெடி சூழந்த கட்டிடத்திற்குள் ஒரு இரண்டு மணி நேரம் முடங்கிக்கொண்டோம். ஒருவழியாக 6.00மணி அளவில் இரண்டு வேன்களில் எங்களை புத்தகயாவிற்கு அழைத்து சென்றார்கள்.
---தொடரும்....