திங்கள், 18 ஜனவரி, 2010

என் கவிதையின் கதை....


கவிதை எழுத வேண்டும்....
சரி! எதைபற்றி எழுதலாம்

‘காதல்..’வேண்டாம்! வேண்டாம்!
காகிதங்களே வெட்கும் அளவிற்கு
காதலித்துவிட்டார்கள்

‘இயற்கை..’வேண்டாம்! வேண்டாம்!
காலம்காலமாய் கவித்து அதையும்
காலாவதியாக்கிவிட்டார்கள்.

சரி! வேறு எதைப்பற்றி எழுத...

கவிதைக்கான கருவை யோசித்து
கண்கள் அயர்ந்தன...வார்த்தைகளை
தர மறுத்து தமிழும் என்னை
தனிமைபடுத்தியது.

நிலம் வாழும் மீனைப்போல்
என் நிலையானது.
கவிதை எழுத எடுத்த
காகிதமோ...
நான் வைத்த ‘ஒற்றை’ புள்ளியுடன்
என்னை கேலி செய்தது.

இயலாமை கோபமானது....
பேனாவையும்,காகிதத்தையும்
வீசி எறிந்தேன்!
கண்கள் மூடினேன்!
தூக்கம் பிடிக்கவில்லை.

திடீரென்று காற்றின் தாளம்
என் ஜன்னலில் கேட்டது
ஜன்னல் திறந்தேன்....

அங்கோ....

முகிலினங்கள் மாரியாய் மாறி
மண்ணை முத்தமிட்டு கொண்டிருந்தது...

இரை தேடிச் சென்ற எறும்பொன்று
மழையோடு போராடி
இரையோடு சுவரேறி கொண்டிருந்தது....

எனக்குள் ஏதோ ஒரு வெளிச்சம்!!!!

வேகவேகமாய் சென்று வீசியெறிந்த
பேனாவையும்,காகிதத்தையும்
கையிலெடுத்தேன்!

இப்போது....
அந்த ‘ஒற்றை’ புள்ளி....
“கவிதை எழுத வேண்டும்...”
என உருமாற துவங்கியது.

சனி, 9 ஜனவரி, 2010

படிங்க....சிரிங்க...


கீழ் கண்டவைகள் படிப்பதற்கும்....சிரிப்பதற்கும் மட்டுமே!!!!!!!!! சமீபத்தில் எனக்கு வந்த ஒரு சில குறுஞ்செய்திகளின் தமிழாக்கத்தை நீங்கள் சிரிப்பதற்கு மட்டுமே தருகிறேன்.அநூபவித்து சிரியுங்கள்.....ஆராய்ச்சிகள் வேண்டாம்!!!!!!!!

****மனைவி: என்னங்க...! முதல்ல நம்ம கார் டிரைவரை(driver) வேலையை விட்டு நிறுத்துங்க.அவன் கார் ஓட்டுறேன் சொல்லி என்னை இரண்டு தடவ கொலை பண்ணப் பாத்துட்டான்...

கணவன்: சரி விடுமா! அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்....

****வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடன் ஒருவன் வாடிக்கையாளர்களை நோக்கி,”இங்க நான் திருடுனதை யாராவது பாத்ததா சொன்னீங்க உங்கள கொன்னுடுவேன்...” என்று மிரட்டியபடி வாடிக்கையாளர் ஒருவரை பார்த்து,”ஏய்! நான் திருடுனதை நீ பாத்ததா சொல்லுவியா...?”

வாடிக்கையாளர்:”நான் சொல்ல மாட்டேன் ஆனா பயந்து போய் எம் பொண்டாட்டி சொன்னாலும் சொல்லுவா...”

****ரங்கா:”நீ ஏன் லாரிய பாத்தாலே பயப்படுற?”

சங்கர்:”நீ வேற...போன மாசம் எம் பொண்டாட்டிய ஒரு லாரி டிரைவர் கடத்திட்டு போயிட்டான்.எங்க அவன் திரும்பி வந்து எம்பொண்டாட்டிய எங்கிட்டயே விட்டிட்டு போயிருவானொன்னு ஒரே பயம்மா இருக்கு...அதான்...”

****ராஜா நடுராத்திரியில் எழுந்து தன் மனைவியிடம் கேட்டான்,”ஏம்மா! கொஞ்சம் கொஞ்சமா வலிய அனுபவிச்சு சாவுறது நல்லதா இல்ல...பட்டுன்னு போயிடுறது நல்லதா...?”

மனைவி:”சாவுன்னா பட்டுனு போயிடனுமுங்க...”

ராஜா:”அப்ப சரி நீ உன் இன்னொரு காலையும் தூக்கி எம்மேல போடு....”

****மனைவி:”ஏங்க! எப்படி உங்களால மட்டும் கவலையே இல்லாம இருக்க முடியுது...?”

கணவன்:”நான் எப்ப பிரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சுப்பன் எங்கவலை எல்லாம் பறந்து போயிடும்.”

மனைவி:”எம்மேல அவ்வளவு பிரியமா உங்களுக்கு...?”

கணவன்:”அதெல்லாம் ஒண்ணுமில்ல...உன்னவிட வாழ்க்கையில என்ன பெரிய பிரச்சனை எனக்கு வந்திட போவுதுன்னு நினைச்சுப்பேன்...”

****மனைவி:என்னங்க...! நான் இந்த சாமி படத்துக்கு பின்னால பத்திரமா வச்சிருந்த நூறு ருபாய எடுத்து என்ன செஞ்சீங்க?

கணவன்:அத எடுத்து எனக்கு ஒரு ஜட்டி வாங்குனேன் இது தப்பா?

மனைவி:இப்படித்தான் நீங்க எப்பவும் ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் செலவு செஞ்சு வைப்பீங்க....

கணவன்:..........???

****நீங்க எப்படி உங்க கணவரை இத்தனை பேருக்கு மத்தியில இந்த கப்பல்ல கண்டுபிடிச்சீங்க???

மனைவி:ரொம்ப சுலபம்ங்க!!! அந்த வெண்ண மட்டும்தான் முதுகுக்கு பின்னால பேராசூட் கட்டி இருந்துச்சு!!!!!

****டிராபிக் போலிஸ்:ஏம்பா!!! உன் பொண்டாட்டி உன் பைக்கில இருந்து விழுந்தது கூட தெரியாமலா வண்டி ஓட்டின?

கணவன்:அடக் கடவுளே!!!! எனக்கு தான் திடீர்ன்னு காது கேட்காம போயிருச்சோன்னு நினைச்சேன்!!!!

****மனைவி:நேற்று கூட்டத்துல உங்க பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க...

தலைவர்:நான் நல்லா பேசி என்ன செய்ய அங்க வந்திருந்தவனுங்க எல்லாம்
முட்டாப்பயலுகளால்ல இருந்தானுங்க..

மனைவி: ஓ!!! அதான் என் அருமை உடன்பிறப்புகளே-ன்னு உங்க பேச்சை ஆரம்பிச்சீங்களோ!!!!!!

தலைவர்:..........!!!!!!!!!!!!!!!!!!!!

****ஜக்கு:ஏண்டா எப்பவுமே கல்யாண போட்டோல ஆம்பளைங்க வலது பக்கமாவும் பொம்பளைங்க இடது பக்கமுமாகவே இருக்குறாங்க????????

பப்பு:அது ஒண்ணுமில்லடா...வரவு செலவு நோட்டுல சொத்துக்கள் வலது பக்கமாவும் செலவினங்கள் எப்பவும் இடது பக்கமாவும் இருக்குறதில்லையா அது மாதிரி தான்....

****தோழி 1:ஏண்டி உன் இரண்டு புள்ளைகளுக்கும் ஒரே பெயரை வச்சிருக்கியே உனக்கு கூப்பிடுறதுக்கு கஷ்டமா இல்லை?????

தோழி 2:இதுல என்ன கஷ்டம் அதான் இரண்டு பேருக்கும் வேற வேற இன்ஷியல் வச்சிருக்கேனே!!!!!!

சனி, 2 ஜனவரி, 2010

அக்கினிக் குஞ்சுகள்....


எங்கள் தொழிற்சங்க வாழ்வின் முக்கியமான அத்தியாயங்கள் எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) நிர்வாகத்தின் உதவியால் வரையபட்டுக்கொண்டிருக்கிறது......

நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு பெயர் நிர்வாகம்.சரி! நிர்மூலமாக்குவதற்கு என்ன பெயர்....? தெரிந்து கொள்ள வேண்டுமா?அகராதியை தேடி ஓட வேண்டாம்.வாருங்கள்...! விருதுநகரில் உள்ள எங்கள் வங்கியின்(பாண்டியன் கிராம வங்கி) தலைமை அலுவலகத்திற்கு....

“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்பது சாத்திரமாகும்” என்று சொல்வார்கள்.இப்போது எங்கள் வங்கியில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.தனிமனித சர்வாதிகாரத்தால் பொதுத்துறை நிறுவனமான எங்கள் வங்கி வீழ்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக எல்லா வங்கித்தலைவர்களும் வங்கியின் வணிகம் குறித்தும்,வளர்ச்சி விகிதம் குறித்தும் ஒப்பந்தமிட்டு பணியாற்றுவர்.ஆனால் எங்கள் வங்கியின் நிர்வாகியோ ஊழியர் விரோத போக்கை அதிகரிப்பது குறித்தும்,தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது குறித்தும் ஒப்பந்தமிட்டு உழைத்து வருகிறார்.

தோழர்களே! சுமார் இருபத்தி ஆறு மாதங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் சேர்மேனாக(CHAIRMAN) எங்கள் தாய் வங்கியான ஐ.ஓ.பியால் அவர் நியமிக்கப்பட்டார்.அவர் ஒரு பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்.அப்போது எங்கள் வங்கியில் ஒரு பார்ப்பனர் சேர்மேனாக இருந்தார்.அவருக்கோ எங்கள் வங்கியின் சேர்மேன் நாற்காலியை காலி செய்வதில் துளியும் விருப்பம் இருக்கவில்லை.புதிதாக நியமிக்கப்பட்ட இப்போதைய எங்கள் சேர்மேனுக்கோ அப்போது இருக்கைகள் கூட ஒதுக்கப்படவில்லை.

ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட தொழிற்சங்கமாதலால் எங்களால் இந்த கொடுமையை காண சகியாமல் இப்போதைய சேர்மேனுக்காக நாங்கள் போரட்ட களம் கண்டோம்.அப்போது அவருக்காக எங்கள் நிர்வாக அலுவலகம் முன்பாக எங்கள் ஊழியர்களையும் தோழமை சங்கங்களையும் ஒன்றிணைத்து ஓரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம்.

அதன்விளைவாக எங்கள் தாய் வங்கியும் ஒரு மாபெரும் பதட்டத்தை தவிற்கும் விதமாக அப்போதைய சேர்மனை உடனே திருப்பி அழைத்துக்கொண்டது.மாபெரும் போராட்டத்தின் விளைவாக எங்கள் வங்கி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பட்டியலினத்தவர் சேர்மேனாக பொறுப்பேற்றார்.

ஒரு சில மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி வங்கிப் பணிகள் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது.அப்போது ஊழியர்கள் சார்பாக சில கோரிக்கைகளை கொண்டு நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.பேச்சுவார்த்தையும் சுமூகமாகவே இருந்தது.எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை உடனே நிறைவேற்றி தருவதாகவும்,சிலவற்றை எங்கள் தாய் வங்கியிடம் அனுமதி பெற்று நிறைவேற்றி தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.ஆனால் அவர் அனைத்தையுமே ஒப்புக்குத்தான் ஒப்புக்கொண்டாரே ஒழிய அவர் அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

நாங்கள் தொடர்ந்து நினைவுபடுத்தும் போதும்,வலியுறுத்தும் போதும் அப்போதைக் அப்போது தலையாட்டுவாரே ஒழிய அவர் எதையும் நிறைவேற்றவில்லை.அதேவேளையில் சாமர்த்தியமாக காலம் தாழ்த்தியும் வந்தார்.ஒரு கட்டத்தில் எங்கள் பொறுமை எல்லையை கடந்தது.நாங்கள் போராட்ட களம் புகுவதை தவிற்க முடியாமல் போகும் என நிர்வாகத்தை எச்சரித்தோம்.அவர் தனது சுயரூபத்தை மெல்லமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்.எந்த அவசியமும் இல்லாமல் தொழிற்சங்க தலைவர்களை டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடினார்.நாங்கள் வேறு வழியின்றி போராட்ட களம் கண்டோம்.அதன் விளைவாக நிர்வாகம் பணிந்தது.எங்கள் போராட்டம் வென்றது.

இப்படியாக நிர்வாகம் அப்போதைக்கு அப்போது முருங்கை மரம் ஏறுவதும் நாங்கள் அதை போராட்டத்தின் மூலமாக இறக்குவதும் தொடர்கதையானது.இதற்கிடையில் நாங்கள் எங்கள் வங்கியில் பணிபுரியும் நிரந்தரமாக்கப் படாத தோழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினோம்.அந்த மாபெரும் போராட்டங்களையும்,அதன் அவசியத்தையும் விளக்கி நானும்,தோழர்.காமராஜ்(அடர் கருப்பு) அவர்களும் எழுதிய கட்டுரைகளுக்காக வங்கி நிர்வாகத்தால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டோம்.அதை காணச் சகியாத எங்கள் தோழர்களும்,வங்கி சார்பற்ற மற்ற தொழிற்சங்கங்களும் எங்களுக்காக போராட்ட களம் கண்டார்கள்.அதன் விளைவாக மூன்றே நாட்களில் நாங்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டோம்.எங்கள் போராட்டம் மீண்டும் வென்றது.

இப்போது ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்த சேர்மேன் பல கிளைகளுக்கு போன் செய்து அந்தந்த கிளை மேலாளர்களை தனது அதிகார மமதையால் மிகவும் மோசமான முறையில் வசைபாடியுள்ளார்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வங்கியின் வளர்ச்சியை தவிற வேறு எதையும் அறிந்திராத உழைப்பின் சின்னங்கள் அவர்கள்.இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் மொத்த வணிகமே ஒரு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.ஆனால் இன்றோ மொத்த வணிகம் 3000கோடி ரூபாய்க்கும் மேல் ஆகிவட்டது.ஆனால் இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இப்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை குறைவானதே!

அதற்கு காரணம்.....

எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காக தங்களது உடல்நலனைப் பற்றியோ அல்லது நேரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைபடாமல் உழைத்ததால் இன்று எங்கள் வங்கியிலிருந்து முறைப்படி பணிமூப்பு அடைந்து சென்றவர்களை காட்டிலும் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம்.(அப்படி உயிர் நீத்தவர்களில் என் தாயாரும் ஒருவர்! என்பது என் பெருமிதம்).வங்கியின் வளர்ச்சியும் தங்கள் வளர்ச்சியும் வேறு வேறானதாக பிரித்தரியாத உழைப்பின் சிகரங்களால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி இது.அப்படிப்பட்டவர்களைத் தான் இந்த சேர்மேன் “வேலையை ராஜினாமா செய்து விட்டு போ...”என தடித்த திமிர் மிகுந்த வார்த்தைகளை கொண்டு பரிகாசம் செய்துள்ளார்.

அதேபோல் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட பெண் தோழர் ஒருவருக்கு அவரது சொந்த மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறையால் இயங்க முடியாமல் இயங்கி வரும் எங்கள் வங்கியின் கிளை ஒன்றிற்கு பணி மாறுதல் கேட்டோம்.(அவர் புதிதாக திருமணம் ஆனவரும் கூட.)அதற்கு இந்த சேர்மேன் சொன்ன வார்த்தைகள்...”இப்ப ஊர் பக்கத்துல மாறுதல் கேப்பீங்க அந்தப் பொண்ணு போய் அவ புருஷன் கூட சேர்ந்து வாழும்,பிறகு மெட்டர்னிட்டி லீவ்(maternity leave) கேப்பீங்க இது தேவையா..?”என்றார்.

அதேபோல் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு பெண் தோழர் நிறைமாத கர்ப்பினியாக இருந்தார்.அவருக்கு கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிளைக்கு பணி மாறுதல் வழங்கினார்.அதற்கு அந்த பெண் தோழர் தான் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த கிளைக்கு செல்வதாகவும் அதுவரை தான் தற்போது பணிபுரியும் கிளையிலேயே பணிபுரிய அனுமதி வழங்க கோரி கேட்டார்.ஆனால் இந்த சேர்மேனோ எந்தவித இரக்கமும் இல்லாமல் அதை நிராகரித்து விட்டார்.அதனால் இப்போது அந்தப் பெண்ணின் கருகலைந்துவிட்டது.ஆனாலும் இன்றுவரை அந்தப் பணிமாறுதலை நிர்வாகம் திரும்ப பெறவில்லை.

மேலும் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சு வார்த்தையின் போது அவர் வங்கி ஊழியர்களை thick skinned people என குறிப்பிட்டுள்ளார்.அதாவது ”எருமைமாடுகள்” என்று.
.
தோழர்களே!

சுயமரியாதைக்காக மானம் போற்றும் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டும்,நடத்தப்பட்டும் வரும் தொழிற்சங்கத்தால் எப்படி இந்த அக்கிரமங்களையும்,ஆணவத்தையும் கண்டு அமைதிகாக்க முடியுமா?இப்படி குறைந்த பட்ச மனித மாண்புகளே இல்லாமல் ஊழியர்களை ஏதோ ”மாக்கள்” போல் கருதி வருபவருக்கு எதிராக ஒன்று திரண்டோம்! போராட்ட களம் புகுந்தோம்!

PGBEA-PGBOU-PGBOA(PANDYAN GRAMA BANK- Employees Association-Officers Union-Officers Association) என்ற எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் கூடி எங்கள் சுயமரியாதைக்காகவும், நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராகவும் இந்த நிர்வாகத்தை கண்டித்து “நெல்லை பிரகடனம்” ஒன்றை அறிவித்தோம்.அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பம்மாயின......

முதற்கட்டமாக 30/11/09 முதல் 04/12/09 வரை எங்கள் தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் கண்டோம்.மாபெரும் எழுச்சி மிக்க துவக்கத்தை அது தந்தது.ஆம் தோழர்களே! எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர்களின் சராசரி வயது ஐம்பதுக்கும் மேல்.உடலளவில் ரத்தகொதிப்பு முதல் சர்க்கரை நோய்வரை பல உடற்கோளாறுகள் இருந்த போதிலும் தோழர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி மிகுந்த உற்சாகத்தோடு பட்டினிப் போராட்டம் கொண்டது என் போன்ற இளம் தலைமுறையினருக்கு “தொழிற்சங்கம்” என்ற மந்திரச் சொல்லின் வீரியத்தை உணர்த்துவதாய் அமைந்தது.

அந்தப் பேரெழுச்சியோடு அடுத்த கட்ட போராட்டங்களுக்கான திட்டமிடல்களோடு எங்கள் தொழிற்சங்கங்கள் பயனித்து கொண்டிருந்த போது எங்கள் தோழமை சங்கத்தின் தலைவர் ஒருவரை(தோழர்.முத்துவிஜயன்) எந்தவித விளக்கமும் இன்றி இடைக்கால பணிநீக்கம் செய்து தனது பழிவாங்கல் நடவடிக்கைகளை துவக்கி வைத்தது எங்கள் நிர்வாகம்.அந்த சமயத்தில் தான் தாய்வங்கியான ஐ.ஓ.பி-யின் பொதுமேலாளர்களில் ஒருவர் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எங்கள் வங்கியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் சந்திக்க விரும்புவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.நாங்கள் சென்றோம்.எங்கள் குறைகளை கேட்டார்.நம்பிக்கை அளித்தார்.எங்களது சேர்மேனோடு மறுதினம் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியும் வாங்கி தந்தார்.

நம்பிக்கையோடு சென்ற தலைவர்களை கொஞ்சமும் நாகரீகமின்றி பேச்சுவார்த்தைக்கு அனுமதி தர மறுத்து அவமதித்தார் இந்த சேர்மேன்.இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டதால் தோழர்.முத்துவிஜயனுக்கு(PRESIDENT-PGBOA)பேச்சு வார்த்தையில் அனுமதி இல்லை என்றார்.தொழிற்சங்கம் தான் தனது பிரதிநிதிகளை முடிவு செய்யும்.அதுவே மரபு.ஆனால் இந்த சேர்மேனோ அதையெல்லாம் தெரிந்திருந்த போதும் வேண்டுமென்றே அப்படி சொன்னார்.

பொறுமையிழந்த எங்கள் தலைவர்களில் இருவர்(தோழர்.சோலைமாணிக்கம் மற்றும் தோழர்.செல்வகுமார் திலகராஜ்) அங்கேயே காலவரையற்ற பட்டினி போராட்டம் அறிவித்தார்கள்.காவல்துறை வருவிக்கப்பட்டது.நாங்கள் எங்கள் நிலையை எடுத்துச் சொன்னோம்.எங்கள் தரப்பு நியாயங்களை புரிந்து கொண்ட காவல்துறை நிர்வாகத்தோடு எங்களுக்காக பேசியது.வேறு வழியின்றி காவல்துறை ஆய்வாளர் முன்னிலையிலே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார் இந்த சேர்மேன்.

தோழர்.முத்துவிஜயன் தலைமையில் தலைவர்கள் சேர்மேனோடு பேச்சுவார்த்தை நடத்த சென்றார்கள்.ஆனால் பேச்சுவார்த்தையையே அவமதித்தார் சேர்மேன்.கோபமாக தொழிற்சங்க தலைவர்கள் வெளியேறினர்.தோழர்கள்.சோலைமாணிக்கமும்,செல்வகுமார் திலகராஜும் தங்களது பட்டினிப் போரை தொடர்ந்தார்கள்.இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்டு விருதுநகர் மாவட்டத்து எங்கள் வங்கித் தோழர்கள் எங்கள் தலைமை அலுவலகம் முன்பு குவியத் துவங்கினார்கள்.

எங்கள் சேர்மேனோ அதிகார செறுக்கோடு பட்டிப்போர் இருந்த தலைவர்களை கைது செய்யச் சொல்லி காவல்துறையை கேட்டுக்கொண்டார்.வேறு வழியின்றி காவல்துறையும் எங்கள் தலைவர்களை தங்கள் வண்டியில் ஏற்றினார்கள்.இதைப் பார்த்த எங்கள் தோழர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.காவல்துறை முன்னேறியது.அவசரக் கூட்டம் எங்கள் தொழிற்சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான காவல்துறை ஏவலை கண்டித்தும்,தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு மறுமொழி கொடுக்கும் விதமாகவும் மறுநாளே oneday lightening strike-ஐ அங்கு கூடிய கூட்டுச் செயற்குழு உறிப்பினர்கள் அறிவித்தார்கள்.அப்போது மணி சுமார் இரவு 8.00மணி இருக்கும்.

எங்களுக்கு வெறும் பனிரெண்டு மணி நேர அவகாசமே இருந்தது.எங்கள் வங்கிக்கு ஏறத்தாழ 200கிளைகள் ஒன்பதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவிக்கிடக்கிறது.விருதுநகரில் இருந்தபடியே அங்கு கூடியிருந்த சொற்ப ஊழியர்களின் துணையோடு வேலைநிறுத்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.அந்த இரவு மகத்தானது.மாபெரும் சரித்திரத்திற்கான விடியலை நோக்கி அந்த இரவின் நாழிகைகள் கடக்க ஆரம்பித்தது.

விடிந்தது டிசம்பர் 10....

தொழிற்சங்க பாரம்பரியம் மிக்க அக்கினிக் குஞ்சுகள் தங்கள் தலைவர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை தங்களுக்கு ஏற்பட்டதே என்றுணர்ந்தார்கள்.கொதித்தெழுந்தார்கள்.ஏறத்தாழ 125-கிளைகளின் கதவுகளுக்கு பூட்டுக்களே பகலிலும் காவல் காத்தது.விருதுநகரின் வெப்பம் அன்று வழக்கத்திற்கும் அதிகமானது..

ஆங்கிலேய படையெடுப்பின் போது இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இரவோடு இரவாக எழுந்து நின்றதை கண்டு மிரண்டு போன பரங்கியர் கூட்டத்தைப் போல் எங்கள் நிர்வாகம் எங்கள் தொழிற்சங்கத்தின் எழுச்சியை கண்டு மிரண்டது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் எங்கள் சங்க அலுவலகத்தில் குவிந்தார்கள்.அங்கு முந்தைய தினம் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப் பட்டிருந்த தலைவர்களை கண்ட பிறகே கொஞ்சம் தணிந்தார்கள்.

பிறகு எங்கள் தொழிற்சங்க அலுவலகத்திலிருந்து பேரணியாக எங்கள் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே தோழர்கள் ராணுவ மிடுக்கோடு நடைபோட்டது வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.மாபெரும் எழுச்சியை கண்டு பயந்த எங்கள் நிர்வாகம் எங்கள் நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டது.

தோழர்கள் மிகவும் நாகரீகத்தோடு தங்கள் எதிர்பை அந்த பூட்டிடப்பட்ட வாயலில் நின்றே உரக்க கர்ஜனை செய்தார்கள்.ஆம்! இந்திய தொழிற்சங்க வரலாற்றின் அசாத்தியமான விடியலை அன்று எங்கள் தோழர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்.அதிகாரவர்க்கங்களும்,அடிவருடி சங்கங்களும் அந்த விடியலின் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஓரிரு நாள் செய்வதறியாது திகைத்த எங்கள் நிர்வாகம் தனது கடைசி அஸ்திரமாக இதுவரை 51ஆபிஸர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது.அதோடு நில்லாமல் நூற்றிற்கும் மேற்பட்ட எழுத்தர் மற்றும் மெஸஞ்சர் தோழர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கிவருகிறது.எரிமலைகளை நோக்கி கையில் உள்ள கூலாங்கற்களை எறிந்துவிட்டு காத்திருக்கிறது எங்கள் நிர்வாகம்.

எங்கள் தோழர்களோ இடைக்கால பணிநீக்க உத்தரவை தங்களது தொழிற்சங்க வாழ்வின் அங்கீகாரமாய் பார்க்கிறார்கள்.இத்தனை சஸ்பென்ஷன்கள்,குற்றப்பத்திரிகைகள் அதுவும் தொழிற்சங்க நடவடிக்கைக்காக கொடுக்கப்பட்டது சமீபகால இந்திய பொதுத்துறை வங்கிவரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

தோழர்களே!

வருகிற 11ஆம் தேதி விருதுநகரில் வைத்து எங்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும்,தொழிற்சங்க விரோத போக்கையும் கண்டித்து பொதுமக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம்.

இது ஏதோ எங்கள் நிர்வாகத்திற்கும்,எங்கள் வங்கி தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை அல்ல.இது அதிகாரவர்க்கத்தின்,தொழிற்சங்க ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். தனியார்மயம் தழைத்தோங்கி வளர முதலாளித்துவ சிந்தனையாளர்களின் முதல் எதிரியாய் தொழிற்சங்கங்கள் மாறிபோயிருக்கும் காலமிது.அதிகாரவர்கத்தின் துணையோடு முதலாளித்துவம் செழித்தோங்க அஸ்திவாரங்கள் ஆழமாக பதியமிடப்பட்டு வரும் இந்த சூழலில் இது போன்ற போராட்டங்கள் அவசியமாகிறது.அடுத்த தலைமுறையினருக்கு தொழிற்சங்க வாடையே இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறது.

இவைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களின் அவசியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.அதனடிப்படையில் முற்போக்கு சிந்தனையுள்ள அத்துணை வெகுஜன அமைப்புகளும் எங்களோடு தோளோடு தோள் சேர்ந்து விருதுநகர் வீதியில் வருகிற 11ஆம் தேதி அதிகாரவர்கத்திற்கு எதிரான தொழிற்சங்க அரைகூவலை ஒரே குரலாய் ஒலிக்க அணிதிரண்டு வாருங்கள்!

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

சனி, 21 நவம்பர், 2009

ஞமலிபோல் வாழேல்....


”ஞமலிபோல் வாழேல்” என்கிறான் பாரதி.’ஞமலி’ என்றால் நாய் என்று பொருள்.நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படுவதல்லவா நாய் பின்பு ஏன் பாரதி ’ஞமிலிபோல் வாழேல்’ என்கிறான்? என்று குழப்பமாய் உள்ளதா? ஆம்! நாம் எதையும் மேலோட்டமாய் பார்த்து பழகியவர்களல்லவா? நமக்கு அப்படித்தான் தோன்றும்.ஆனால் நாய்களின் குணாதிசயங்களை உற்று நோக்கினால் உண்மை புலப்படும்.

பொதுவாக நாய்கள் சுதந்திரமாய் செயல்படும் பிராணி அல்ல.அவைகளுக்கு உணவு வழங்குபவர்களே எஜமானர்கள்.அத்தகைய எஜமானர்கள் எதை சொன்னாலும் அது செய்யும்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒருவேளை உணவுக்காக வாலையும் ஆட்டி,காலையும் நக்கும் கீழ்தரமான நடவடிக்கைகளை கொண்டது.அதேசமயம் போலிதனமாய் பாசாங்கு செய்து கொஞ்சி குழையும் குணமும் அதற்கு உண்டு.மொத்ததில் நாய்கள் அடிமைதனத்தின் சின்னங்கள்.

மனிதனும் ஆடு,மாடு,கோழி போன்ற உயிரனங்களை தனது அன்றாட பயன்பாட்டிற்காகவும்,தேவைக்காகவும் வளர்த்தான்.ஆனால் நாய்களை அவன் வளர்த்ததோ மற்ற உயிரனங்களை கண்கானிக்கவும்,வேட்டையாடவுமே.ஆக மனிதனின் ஆதிக்க வெறிக்கு முதலில் வாலாட்டியது நாய்களே! அதன் பரிணாம வளர்சியே இன்று அடியாட்களாகவும்,கூலிப்படையாகவும் மாற்றம் கண்டுள்ளது.

அடியாட்களுக்கும்,கூலிப்படையினருக்கும் எந்த அடிப்படை சித்தாந்தமும் கிடையாது.அவர்களை பொறுத்த வரையில் காசு கொடுப்பவரே எஜமானன்.அந்த எஜமானன் எதை சொன்னாலும் அவர்கள் செய்வார்கள்.இன்று ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களும் இவர்களே!

இதில் கொடுமை என்னவென்றால் அடியாட்களாகவும்,கூலிப்படையினராகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிதட்டு வகுப்பினராய் இருப்பவர்களே!(இருந்தவர்களே).இவர்களுக்கோ தாங்கள் யாருக்கு எதிராய் செயல்படுகிறோம்....?தங்களைப் போன்றோர் உருவாவதற்கு யார் காரணம்...?தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன....? என்று கூட தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

அப்படிப்பட்டவர்களால் கொடூரமாய் அழிக்கப்பட்டு இன்றும் தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாய் இருக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.....

1967ஆம் வருடம்...அறிஞர் அண்ணாவின் ஆட்சிகாலமது..... தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலமது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்ச் சிறிய விவசாய கிராமம் கீழவெண்மணி...அங்கே அப்போது விவாசாய கூலிகள் கொத்தடிமைகளாய் நடத்தப்பட்டனர்.சிறு தவறுகளுக்கு கூட சவுக்கடியும்,சாணிப்பாலும் ”பரிசளக்கப்பட்ட” காலமது.தூரத்தெரியும் விடிவெள்ளியாய் கம்யூனிச தலைவர்கள் அந்த விவசாய தோழர்களுக்கு மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வந்தார்கள்.அதன் விளைவாக விவசாயச் சங்கம் ஒன்று உருவானது.ஒற்றுமையாய் ஒருகுரலில் தங்களது உரிமைகளை கேட்க தொடங்கினார்கள் விவசாயிகள்.அதை கண்டு அதிர்ந்த பண்ணையார்களும்,நிலச்சுவாந்தார்களும் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’என்று ஒன்றை உருவாக்கி ஆதிக்க வெறியை ஒருங்கிணைத்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் விவசாயிகள் வெறும் அரை லிட்டர் நெல்லை தங்கள் படியில் உயர்த்தி கேட்டனர்.அதற்காக அன்றைய ’அரசியல்வாதியான’ ராஜாஜியும், ”தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது” என விவசாயிகளை பரிகசித்தார்.ஆனால் விவசாயிகள் படி உயர்த்தி கேட்டதால் பண்ணையார்களுக்கும்,நிலச்சுவாந்தார்களுக்குமே பேய் பிடித்தது.அதன் விளைவாக அதே ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள்.கிறிஸ்துமஸ் தினத்தன்று.பண்ணையார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழவெண்மணியில் நுழைந்து தங்களது விசுவாச வெறியை கட்டவிழ்த்து விட்டார்கள்.உயிரை கையில் படித்தபடி விவசாயிகள் தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது அங்கு ஒரு தெருவின் மூலையில் ராமைய்யா என்ற விவசாயின் குடிசை இருந்தது.அந்த சின்னன்ஞ் சிறு குடிலில் 48 பேர் அடைக்கலம் கொண்டார்கள்.அதையறிந்த அந்த வெறியாட்கள் அந்த குடிசைக்கு தீவைத்தனர்.வெப்பம் தாளாமல் மரண ஓலமிட்டபடி தகித்து கொண்டிருந்த நெருப்பையும் மீறி ஆறு பேர் வெளியே ஓடினர்.அப்படி தப்பியோட எத்தனித்தவர்களில் இருவரை பிடித்து மீண்டும் உள்ளே தள்ளியது அந்த வெறிபிடித்த கும்பல்.

அப்போது ஒரு தாய் தனது மரணத்தருவாயிலும் தனது குழந்தையை வெளியே வீசியிருக்கிறாள்.ஆனால் அந்த வெறிபிடித்த கூலிப்படையினரோ குழந்தை என்று கூட பாராமல் அதை மீண்டும் எடுத்து நெருப்பில் வீசியிருக்கிறார்கள்.கடைசியாக அவர்களது வெறியாட்டத்தில் வெந்து கருகியது 44 பேர் உயிர். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர்.

கூலியாக உயர்த்தி கேட்ட அரை லிட்டர் நெல்லுக்காக ஆதிக்க வெறியர்களின் கண்ணிசைவுக்கு கூலிப்படையினர் 44 உயிருக்கு வாய்கரிசி போட்டனர்.இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கிடைத்த தீர்ப்பு என்னவென்றால்....”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது.

இன்னும் கீழவெண்மணிகள்...பாப்பாபட்டியாகவும்,கீரிப்பட்டியாகவும்,மேலவளவாகவும்,உத்தப்பபுரங்களாகவும் தமிழக மண்ணில் உயிர்போடு தான் உள்ளது.நாமோ இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவராய் சொல்லப்படும் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடுவோம் ஆனால் நம் அண்டை மாவட்டத்தில் சாதி வெறிக்கு வெறும் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பலியான அந்த உயிர்களுக்கு துக்கம் அனுசரிக்க மாட்டோம்.உண்மையில் ஏசுநாதர் என்றொரு தேவமைந்தன் இருப்பாரேயானால் அவர்கூட நம்மை இதற்காக மன்னிக்க மாட்டார்.

தோழர்களே!

தனது உதிரம் கொடுத்து நமக்கு உயிர் கொடுத்த நம் அன்னைக்கே நமது உயிரை பலிகேட்க உரிமையில்லாத போது நாம் யார் அடுத்தவர் உயிரெடுக்க?சகமனிதனை அழித்து நாம் அடைவதற்கு இங்கு எதுவுமில்லை.இந்தச் சமூகம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது.நாம் சிரித்தால் அது சிரிக்கும்...நாம் அழுதால் அது அழும்....நாம் அதனை அடித்தால் அது நம்மை திருப்பியடிக்கும்.செய்யும் எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டென்பது உலக நியதி....ஆதலால் ஞமிலி போல் அல்லாமல் உள்ளார்ந்த அன்போடு சக உயிரை காதல் செய்வீர்.....!

புதன், 18 நவம்பர், 2009

ஆண்மை தவறேல்....


”ஆண்மை தவறேல்” என்றான் பாரதி.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என கும்மியடித்த பாரதியா இப்படிச் சொன்னான்? என வினா எழுப்ப தோன்றுகிறதா? நிச்சயம் தோன்றும்.

காரணம்...

இந்த ஆணாதிக்க தமிழ்ச் சமூகத்தில் ‘ஆண்மை’ ஆண்களுக்குரியது என்றும் ’பெண்மை’ பெண்களுக்குரியது என்று தான் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது சரியல்ல.

“ஆண்மை” என்பது ஒரு பெயர்ச்சொல் தான்.ஆனாலும் அதற்கு பாலின பேதமில்லை.ஏனென்றால் ”ஆண்மை” என்பது ’வீரம்’ என்று பொருள் படும்.’வீரம்’ எல்லோருக்கும் பொதுவானது.

சரி ‘வீரம்’ என்றால் என்ன?

ஒன்றை பயம் இல்லாமல் எதிர் கொள்வதே வீரமாகும்.இதைத்தான் பாரதி சொன்னான்.”ஆண்மை தவறேல்” என்று.இன்று நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.இன்று தற்கொலை செய்திகளை தாங்கி வராத நாளிதழ்களே இல்லை.தேர்வெழுதி தோற்றுப் போனால் உடனே தற்கொலை....காதலில் தோற்றால் தற்கொலை....வறுமையில் வாடினால் தற்கொலை....என்று சிறு தோல்விகளுக்கும் வாழ்வை முடித்துக் கொள்ளும் அபத்தங்கள் நமது சமூகத்தில் தொடர் கதையாகவே உள்ளது.வாழ்வை எதிர் கொள்ளும் மன தைரியம் நம்மிடம் குறைந்து வருவதே இதற்கு காரணம்.

வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய உண்டு.அவற்றுள் ஒன்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

1955ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் தனது பணி முடிந்து மாலையில் பேருந்தில் ஏறி கறுப்பினர்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தாள் ரோசா பாக்ஸ்.மாண்ட்கோமரியிலிருந்து (MONTGOMERY) தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச் சீட்டு பெற்றுக் கொண்டு பயணித்தாள்.அது அமெரிக்காவில் இனவெறி அதிகாரப்பூர்வமாய் அரங்கேறிக் கொண்டிருந்த காலம்.வெள்ளையர்கள் பேருந்தில் ஏறும் போது கறுப்பினத்தவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை காலி செய்து தர வேண்டுமென்பது எழுதப் படாத விதியாகவே இருந்தது.

ஒரு நிறுத்தத்தின் போது மூன்று ,நான்கு வெள்ளையினத்தவர்கள் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.அப்போது இருக்கைகள் எதுவும் காலியாக இருக்கவில்லை.இதை பார்த்த பேருந்தின் நடத்துனர் அவளையும்,அவளுடன் அமர்ந்திருந்த மற்றவர்களையும் எழுந்து வெள்ளையர்களுக்கு இடம் கொடுக்க சொன்னார்.மற்றவர்கள் முதலில் சிறிது தயக்கம் காட்டினாலும் எழுந்து கொண்டார்கள்.ஆனால் ரோசா பாக்ஸோ சிறிதும் பயமின்றி மெல்ல நகர்ந்து சன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு எழுவதற்கு மறுத்தாள்.நடத்துனரின் மிரட்டல்களை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது இருக்கையிலே தன்னை இருத்திக் கொண்டாள்.அப்படி அவள் உறுதிபட மறுத்ததற்கு காரணம்...ஒரு உயிரினமாக...ஒரு தேசத்தின் குடிமகளாக...அவள் தனது பிறப்புரிமைகளை அறிந்து கொள்ள விரும்பியதேயாகும்.

அவளது அந்த மறுப்பு அவன் சற்றும் எதிர்பாராதது.அவளுடன் அதுவரை அமர்ந்து பயணித்த ஆண்களே மறுப்பேதும் சொல்லாமல் எழுந்த பிறகும் அவள் எழுவதற்கு மறுத்தது அந்த நடத்துனரை கோபம் கொள்ள செய்தது.அவன் காவல்துறையினரை வருவித்தான்.அவர்களிடத்தும் அவள் உறுதியாய் மறுத்தாள்.அதனால் அவள் அங்கு கைது செய்யப்பட்டாள்.அவளது கைது அங்கு அதுவரை அடிமைதனங்களை சகித்து கொண்டு வாழ்ந்த கறுப்பின சகோதிரர்களை எழுச்சி கொள்ள செய்தது.அதன் தொடர்சியாக ’மாண்ட்கோமரி எழுச்சி இயக்கம்’(MONTGOMERY IMPROVEMENT ASSOCIATION) மார்டின் லூதர் கிங் என்னும் பாதிரியாரின் தலைமையில் உருவாக்கப்பட்டது.அந்த இயக்கம் ‘மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு’ என்னும் வரலாற்று சிறப்புமிக்க அறப்போராட்டத்தை அறிவித்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல நூறு ஆண்டுகளாக நிறத்தின் பெயரால் தாங்கள் இழந்து வந்த உரிமைகளை மீட்டெடுக்கும் எழுச்சியுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.அதன் விளைவாக பேருந்துகள் காலியாகின.போராட்டம் தொடர்ந்தது.....அந்தப் பேரியக்கத்தின் விளைவாக 1956ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அமெரிக்க உச்சநீதிமன்றம் ”பேருந்திகளில் நிறவெறி பிரிவினைகள் சட்டத்திற்கு புறம்பானது” என்ற அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்பை வழங்கியது.

அதுவரை எந்த ஆண்மகனுக்கும் வராத துணிச்சலோடும்,ஆண்மையோடும் தனது உரிமைக்காக போராடிய ரோசா பாக்ஸின் நெஞ்சுறுதியே அந்த மாபெரும் எழுச்சிக்கான முதல் பொறி.அந்த வீர மங்கை 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ஆம் தேதி தனது 92ஆவது வயதில் காலமானார்.அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 27ஆம் தேதி மாண்ட்கோமரியிலும்,டெட்ராய்டிலும் இயங்கிய அத்துணை பேருந்துகளிலும் முன் இறுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு கறுப்பு கொடிகளை தாங்கி பயணித்தது....வெள்ளை இனத்தவர் மரியாதையுடன் அதன் அருகில் நின்றபடி பயணித்தனர்.....

தோழர்களே!

கோடிக்கணக்கான விந்தணுக்களை போராடி வென்றதனாலே தான் நாம் உயிரினமாய் ஜெனித்தோம்.ஆகவே போராட்டங்கள் நமக்கு புதிதல்ல....நாம் நமது சிறகுகளை மறந்துவிட்டு சிகரங்களை கண்டு மலைக்கிறோம்.ஆகவே ந்மது சிறகுகளை விரிப்போம்!சிகரங்கள் நம் வசமாகும்!

புதன், 4 நவம்பர், 2009

வேற்றுமையில் ஒற்றுமை....



ஊனமுற்றவன்....

லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...

கல்வித்தந்தை...

பெயர் போன தனது மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டிய ஏழை மாணவனுக்கு அவனது குடும்ப நிலை உணர்ந்து.....!!!!
இருபது லட்ச ரூபாயை இரண்டு தவனையில் கட்டுவதற்கு தாராளம் காட்டினான்.....
அந்த அறக்கட்டளை நிர்வாக குழுமத்தின் தலைவன்.

பட்டதாரி....

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனது தந்தையின் உதிரத்தில் விளைந்த விளைநிலத்தை அடகுவத்தான்.
வந்த பணத்தில் விசா வாங்கி விமானம் ஏறினான்.
வானில் பறக்கையில் அவனுக்கு பூமி சிறுக்கத் தொடங்கியது.....

கைமாறும் காந்தி....

காந்தி சிரிக்கும் நோட்டை கொடுத்து ஓட்டுவாங்கினான்.
கோட்டைக்குப் போனான்.
ஓட்டு போட்டவன் மனு கொடுக்க கோட்டைக்கு போனான்.
மனுவை பெற்றவன் அவன் கையிலிருந்த சிரிக்கும் காந்தியை சுட்டிகாட்டினான்.
காந்தி சிரித்தபடி மீண்டும் கைமாறினார்.

என்னைப் போல் ஒருவன்....

விபத்துக்குள்ளாகி ரத்த சகதியில் விழுந்த கிடந்தவனை கண்டு
படபடப்போடு வேகமாக விரைந்து சென்றான்......வீட்டிற்கு!

செவ்வாய், 3 நவம்பர், 2009

இனி தடையேதும் இல்லை....


விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.

தூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீரச்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.

காரணம்...........

எனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....

எங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.

(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)

அந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

வங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.

எமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது என ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....

இது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....

ஆம் தோழர்களே!

நாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....!